“நான் இங்கு கிளின் பண்ணுறேன், நீ டிஷ் வாசரில் பாத்திரங்களை வை.” எழுந்து அவள் கையிலிருந்த துண்டை வாங்க முயன்றவனின் கையைத் தட்டி விட்டவள், “எங்க வேலைகளைப் பார்க்க எங்களுக்குத் தெரியும் நீங்க விலகுங்க..” தானே மேசையைத் துடைக்கத் தொடங்கியவள், “நீங்க மட்டும் நாளைக்கு வரவில்லையோ கல்யாணத்துக்கு ஜீன்ஸ் தான் போடுவேன்.” மிரட்டல் விட்டாள்.
அவனோ பெரிதாகச் சிரித்தவன், “செல்லம், நீ எப்படி வந்தாலும் எனக்கு ஓகேடா.” அவளை வேலைகளைப் பார்க்க விடாது தொல்லை செய்தவன், “சரி சரி நாளை பத்து மணிபோல கடையடிக்கு வாங்க.” இறுதியில் எப்போதும் போல சம்மதம் சொன்னான்.
மேற்குலக நாடுகளில் எங்கும் காணாதவாறு, இலங்கைத் தமிழர்களாலும், பிரேஞ்சுக் கொலனியாக இருந்த பாண்டிச்சேரியில் இருந்து வந்த தமிழர்களாலும் நாடத்தப்படும், சிறு சிறு வணிகங்கள் குவிந்து கிடக்கும் இடமே ‘லா சப்பல்’ .
எந்தத் தமிழனும் இங்கு வந்து விட்டால் ஒரு ஆசுவாச மூச்சு வெளிப்படும். “அடடா நம்மூர் வந்து விட்டோமே!” என்ற உணர்வை நிச்சயம் ஒவ்வொருவரிலும் தோற்றுவிக்கும் உயிரோட்டத்துடன், வெகு சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது லா சப்பல் வீதி.
பாதையில் மிக நெருக்கமாக செல்லும் வாகனங்கள், நடைபாதைகளில் தாரளமாக இடம் பிடித்திருக்கும் பழவகைகளும் பொருட்களும், ஆங்காங்கே வேலை தேடியும் பொழுது போக்கவெனவும் சேர்ந்த இளைஞர் கூட்டம், அதன் ஊடே விசுக் விசுகென்று நடக்கும் மக்கள் கூட்டம் என்று எந்நேரமும் ஜே ஜே என்று காணப்படும் லா சப்பலுக்கு வந்த ஏஞ்சல்,
அருகில் பார்கிங்க் வசதிகள் மிகவும் குறைவு என்பதால் சிறிது தள்ளியே காரை நிறுத்தி விட்டு, சஜனையும் சாதனாவையும் அழைத்துக் கொண்டு தங்கள் கடைக்கு வர, அங்கு ஏற்கனவே வந்து காத்திருந்தாள் ஸ்வேதா.
பின்னர் எழிலையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டவர்கள் தாம் வழமையாக செல்லும் கடைகளுக்குச் சென்று தேவையானவற்றை வாங்கிக் கொண்டவர்கள், கடைசியாக புடவைகளை வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியில் வந்து தம் நகைக் கடையை நோக்கி நடக்க எத்தனிக்கையில், “எழில் அண்ணா!” வியப்புடன் கூவியது ஒரு பெண் குரல்.
சஜனைக் கைகளில் தூக்கியவாரே முன்னால் சென்று கொண்டிருந்த எழில் நடையை நிறுத்தி குரல் எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் அங்குமிங்குமாகப் பார்க்க, அவனருகில் நடந்து கொண்டிருந்த மற்றவர்களும் நின்று யார் அழைத்தார்கள் என்று விழிகளால் துளாவினார்கள் .
“அண்ணா, கொஞ்சம் நில்லுங்க இதோ வாரேன்.” மீண்டும் குரல் வந்ததும், அது வந்த பாதையின் எதிர்புறத்தைப் பார்த்த எழில் ஆச்சரியத்துடன் சட்டென்று ஏஞ்சலை ஏறிட்டான்.
அங்கிருந்தே எழிலை அழைத்துக் கைகாட்டிய அவ்விளம் பெண்ணும், அவன் தன்னைக் கண்டு விட்டான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு தன் கைபற்றியிருந்த இளைஞனையும் இழுத்துக் கொண்டு, ஊர்ந்து கொண்டிருந்த வாகனங்களுகிடையில் பாய்ந்து நெளிந்து வளைந்து இவர்களை நோக்கி ஓட்டமாக வந்து கொண்டிருந்தாள். எழில் சென்று விடக் கூடாதே என்ற தவிப்பு அவள் செய்கைகளில் நன்றாகப் புலப்பட்டது .
கணவன் பார்வையைத் தாங்கி நின்ற ஏஞ்சல், சலமனமற்ற முகத்துடன், தங்களை நோக்கி வருபவளையே நோக்கினாள். ஒரே ஒரு முறை சில நிமிடங்களே கண்டிருந்தாலும், ஏஞ்சலின் நினைவுகளில் இப்பெண்ணின் முகம் அழுத்தமாகப் பதிந்திருந்தது.
‘மறக்குமா இவர்களை!’ நினைத்துக் கொண்டவளை மீண்டும் ஒரு தவிப்புடன் நோக்கினான் எழில்.
வருபவளை யாரென்று தெரியாமல் யோசனையாக நின்றாள் ஸ்வேதா.
“யார் அத்தான்? எனக்குத் தெரியவில்லையே!” என்ற மைத்துனியிடம் “ஆர்த்தியின் ஃப்ரெண்ட் ஸ்வேதா, சுருதி… ஆர்த்தி ஏன் கதைப்பதில்லை என்று கேட்டு, என்னைப் இப்போ ஆட்டி வைக்கப் போகிறாள்.” முணுமுணுத்ததும் தான், ஸ்வேதாவுக்கு வருவது யார் என்று மெல்லப் புரிந்தது.
“சுருதி என் சிறுவயதுத் தோழி. அவளுக்கு இவ்வளவு பெரிய விடயத்தை மறைத்து என்னால் பழக முடியாது.” தீர்மானமாகச் சொன்ன ஆர்த்தி மெல்ல மெல்ல அவளை விட்டு விலகி விட்டாள்.
அதன் பின்னர் மேல்படிப்பு வேலை என்று அமெரிக்கா போன ஆர்த்தி அங்கேயே திருமணமும் செய்து தங்கிவிட, சுருதியுடனான நட்பு அந்தரத்தில் நின்றுவிட்டது .
ஸ்வேதாவுக்கு ராஜத்தின் முழுக் கதையும் தெரியுமே ஒழிய, இதுவரை சுருதியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. அதனால், இப்போது முதல் முதல் பார்த்ததும் அவள் முகம் சட்டென்று கருமையைப் பூசிக் கொண்டது.
அதைக் கவனித்த ஏஞ்சல் ஸ்வேதாவின் கரத்தைப் பற்றிக் கொண்டவள், “பேசாமல் நில்லு ஸ்வேதா, அவளுக்கு எதுவுமே தெரியாது. இனியும் தெரியத் தேவையில்லை, சின்னப் பிள்ளை..” அடிக் குரலில் சொன்னாள்.
“பச்…விடுங்க, நான் ஒன்றும் சொல்லவில்லையக்கா..நான் கொஞ்சம் வளையல்கள் வாங்க வேண்டும், சாதனா தனக்கும் கேட்டாள், நாங்க இருவரும் அதோ அந்தக் கடையில் வாங்கிக் கொண்டு நிற்கிறோம், நீங்க கதைத்துவிட்டு வாங்க.” சொன்ன ஸ்வேதா சாதனாவையும் அழைத்துக் கொண்டு விடு விடுவென்று அந்த இடம் விட்டகன்றாள்.
அவள் செல்வதையே பார்த்திருந்த ஏஞ்சலுக்கு ஏனோ சிரிப்புத் தான் வந்தது.
‘இவர்கள் எல்லோரையும் பார்த்து நான் தான் முகம் திருப்பிக் கொள்ள வேண்டும். ஆனால், இவள் ஏன் சுருதியைப் பார்த்து இப்படி முகம் திருப்புகிறாள்?!! மனித மனம் விசித்திரமானது தான்.’ தன்னுள் சொல்லிக் கொண்டவள், தங்கள் அருகில் வந்து நின்ற சுருதியை புன்னகையுடன் ஏறிட்டாள்.
“அண்ணா எப்படி இருக்கிறீங்க? அடடா…இவர் யாரு உங்க பையனா?!” கேட்டுக் கொண்டே சஜனின் கன்னத்தை பாசத்துடன் வருடியவள், எழிலின் அருகில் உரிமையாக நின்ற ஏஞ்சலைப் பார்த்ததும், விழிகளில் கணத்தில் தோன்றிய சுவாரசியத்துடன் நெற்றி சுருக்கினாள்.
“வாம்மா சுருதி, எப்படி இருக்கிறாய்? அது யாருடா இங்கு என் பெயரை இப்படிக் கூவி அழைப்பது என்று ஒரு நிமிடம் திகைத்தே போய் விட்டேன்.” முறுவலுடன் சொன்ன எழில், அவளருகில் நின்ற ஆடவனைப் பார்த்துப் புன்னகைத்தவாறே, “நீ எப்படி இங்க, இங்கேயா இருக்கிறாய்?” வினவினான்.
அவளோ மீண்டும் ஏஞ்சலைப் பார்த்துக் மென்முறுவல் செய்தவள், “நான் நன்றாக இருக்கிறேன் அண்ணா. நாங்க இலண்டனில் இருக்கிறோம். இவர் என் கணவர். இவரின் அண்ணா வீட்டுக்கு இரண்டு கிழமைகள் விடுமுறையில் வந்திருக்கின்றோம்.” என்று அந்த இளைஞனை எழிலுக்கு அறிமுகம் செய்து வைக்க வரவேற்பாகக் கதைத்தவன்,
“இவள், என் மனைவி ஏஞ்சல்.” என்று சொல்ல விழிகள் விரித்து ஆச்சரியம் காட்டினாள் சுருதி.
“அண்ணா, எனக்கு இவங்களை நன்றாக நினைவிருக்கின்றது. எங்க கடைதிறப்பு விழாவிற்கு ஆர்த்தியுடன் வந்திருந்தது இவங்க தானே!” என்று வாய் கேட்டாலும், இலேசான சந்தேகம் அவள் விழிகளில் தெரிந்தது.
“ம்ம்…ஆமாம்மா, அவள் இவளே தான்.” சொல்லி நன்றாக முறுவல் செய்தவன்,
“அம்மாவுக்கு இப்போது எப்படி இருக்கு சுருதி? குணமாகி விட்டாரா?” தன்னையறியாமலேயே கேட்டவன், சட்டென்று மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சுருதியை ஏறிட்டவன், ‘சே..இப்போது இதைக் கேட்காமல் இருந்திருக்கலாம்.’ காலம் கடந்து மனதுள் நினைத்துக் கொண்டான்.
“அம்மாவுக்கு வருத்தம் என்று உங்களுக்கும் தெரியுமா அண்ணா?” என்றவளை இடையிட்டவன், “சிலமாதங்களுக்கு முன் இந்தியா போயிருந்த பொழுது கேள்விப்பட்டேன், ஏதோ வெளிநாடு வந்திருந்த பொழுதுதான் வருத்தம் வந்ததாக. மிச்ச விபரம் பெரிதாகத் தெரியாதம்மா. அதுதான் கேட்டேன்.” என்றான் எழில்.
“ஆமாம் அண்ணா. ஆறுமாதங்களுக்கு முன்னர் அப்பாவும் அம்மாவும் எங்களிடம் இலண்டன் வந்திருந்தார்கள். அப்போதுதான் ஒருநாள்..” என்று தொடங்கி தாயின் சுகயீனம் பற்றிச் சொல்லத் தொடங்கினால் சுருதி.
இலண்டன் வந்திருந்த பெற்றோர்களை அழைத்துக் கொண்டு, இலண்டன் வேல்சில் ஒரு மலைக் கிராமத்தில் அமைந்துள்ள ‘ஸ்கந்தவேல்’ என்கின்ற கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பியிருந்தனர் சுருதியும் அவள் கணவரும்.
மகாகாளி, விஷ்ணு, முருகன் கோவில்களை உள்ளடக்கிய ஆச்சிரமமாக விளங்கும் அக் கோவிலில் இருநாட்கள் தங்கி நின்று வந்திருந்தவர்கள், வந்த களைப்புத் தீர இலகுவாக இரவுணவை முடித்துக் கொண்டு தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்திருந்தனர்.
ராஜத்தின் செல்ல மகளான சுருதி, தாயின் தோளில் சலுகையாகச் சாய்ந்திருந்து செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது செய்தியில் சொல்லிக் கொண்டிருந்த ஒரு விடயம்,. இடையிடையில் தங்களுள் பேசிக் கொண்டே அமர்ந்திருந்தவர்களின் கவனைத்தைக் கவர, அமைதியாக அதை செவிமடுக்கத் தொடங்கினார்கள்.
பிறந்து இருமாதங்கள் இருக்கும், அழகான ஆண்குழந்தை ஒன்று. அதை அணைத்துத் தூக்கி வைத்திருந்தவர்கள், ‘குழந்தையின் பெற்றோர்களோ..’ என்று பார்த்ததும் நினைத்துக் கொண்டாள் சுருதி. ஆனால், செய்தியிலோ வேறு சொன்னார்கள்.
“இரண்டு மாதங்களுக்கு முன்னர் இளம் பெண்ணொருத்தி, பிறந்து இரண்டே கிழமைகள் கடந்திருந்த தன் குழந்தையை, இலண்டன் புறநகர்ப் பகுதியொன்றில் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு ஓட எத்தனிக்கையில், பிள்ளை வீரிட்டு அழுததால் பாதையால் சென்ற இருவர் உடனடியாக என்னவென்று பார்த்ததில் பிள்ளையும் காப்பாற்றப்பட்டு, பிள்ளையைப் போட்டு விட்டு ஓடப் பார்த்தவளையும் பிடித்து விட்டார்களாம்.” என்று கூறிய செய்தி வாசிப்பவர்,
குழந்தையை வீசிய தாய் இப்போது சிறையில் இருப்பதாகவும், அக் குழந்தையை இத்தம்பதியினர் தத்தெடுத்திருப்பதகாவும் கூறியவர், இவர்களின் செயலைப் பாராட்டிய அக்கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, இருபதாயிரம் பவுண்டுகளைச் சேர்த்துக் குழந்தையின் எதிர்காலதிற்காக வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு சென்றார்.
அதைக் கேட்டிருந்த சுருதி, தாயின் தோள்களில் இருந்து நிமிர்ந்து அமர்ந்தவள், அருகிலிருந்த கணவனைப் பார்த்து, “என்னங்க இது அநியாயம்!? இலண்டனில் கூடவா இப்படி நடக்கும்.?!” அதிர்ச்சியும் அருவருப்பும் ஆத்திரமுமாகக் கேட்டாள்.
“அதென்ன இலண்டனில் கூடவா? இப்படி எத்தனையோ நடக்கும் சுருதி. அதுவும் இப்படிக் குழந்தைகளை விட்டுச் செல்ல இங்கு இடங்களே இருக்கு. அப்படியிருக்க இப்படியும் செய்கின்ற ஈனப் பிறப்புக்களும் இருக்கிறார்கள்.” தானும் அருவருத்தான் அவள் கணவன்.
“கேடுகெட்டதுகள்.” என்று மகள் சொன்னதும், சேகரின் பார்வை தவிப்புடன் மனைவியைத் தொட்டது.

