அத்தியாயம் 3.
தாய் தந்தையுடன் உரையாடிய பின் கைக்கடிகாரத்தைப் பார்த்த ஏஞ்சல், ‘லூகாஸ் வீட்டுக்குப் போய் இருப்பான். சோஃபி என்ன செய்கின்றாள் என்று எடுத்துக் கேட்போம்.’ என, நினைத்தவாறே அவனுக்கு அழைத்தாள்.
‘‘ஹாய் லூகாஸ், வீட்டுக்குப் போய் விட்டீர்களா?? சின்னவள் என்ன செய்கிறாள்? ஓஓ..அப்படியா?? அப்போ மகளுக்கு இலஞ்சம் கொடுத்து சமாளித்து விட்டாயா? ஹா..ஹா..சரி சரி எப்படியோ அவள் சந்தோசமாக இருந்தால் சரி.
இன்னும் இல்லை, இன்னமும் அரைமணி இருக்கு. சரி வைக்கிறேன். பாய்..’’ என, அவனுடன் கதைத்து விட்டு, முகநூலுக்குப் போய் அதில் மிகுதி அரை மணியை செலவிட்டுக் கொண்டிருந்தாள்.
வாயில் திறந்து பயணிகளை உள்ளே அனுமதிக்கத் தொடங்கினர்.
இவளும் உள்ளே சென்று ஜன்னல் புறமாக இருந்த தன் இருக்கையில் அமர்ந்து கொண்டவளுள், இதுவரை இருந்த பரப்பரப்பு இன்னமும் அதிகரிக்கத் தொடங்கியது.
‘எப்போதடா போய்ச் சேருவோம்? பாரதி அம்மாவைச் சந்திப்போம்?’ என்ற ஆவல் கட்டுங்கடங்காது அவளுள் எழுந்தது.
ஒருவாறு தன்னுள்ளத்தை அடக்கி, தன்னருகில் இருந்த சிறு கண்ணாடி வழியாக வெளிபுறத்தில் கவனம் பதித்திருந்தவள், அருகில் ஆள் வந்தமரவும் மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.
தன் இருக்கையை நாடி வந்த அந்த வாலிபன் அப்படியே சில கணங்கள் ஆச்சரியத்துடன் நின்று விட்டான். இவ்வளவு நேரமாக யாரை விழிகளால் தொடர்ந்தானோ, அப் பெண்ணின் அருகில் தான் சில மணிகளைக் கழிக்கப் போவதை நினைத்து மிகவும் வியப்பில் ஆழ்ந்தவன், மெல்லத் தன்னை மீட்டெடுத்து மேலே தன் கைப் பெட்டியை வைத்து விட்டு, அவளையே பார்த்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டவன், உள்ளே திரும்பிப் பார்த்தவளுடன் சிநேகமாக முறுவல் புரிந்தான்.
அவளோ, தலையசைத்து பதில் முறுவல் செய்து விட்டு மறுபடியும் கண்ணாடி வழியாக வெளியில் பார்க்கத் தொடங்கினாள்.
இவளைக் கண்டதில் இருந்தே அவனுள்ளம் இனம் புரியாமல் கிடந்தது தவித்துக் கொண்டிருந்தது.
மெல்லத் தன் விழிகளை பக்கவாட்டில் திருப்பி தன் பார்வையில் விழுந்த அவள் பட்டுக் கூந்தலைப் பார்த்தவன், அவளுடன் கதைக்கும் ஆவல் ஏற்பட்டதை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.
‘உலகில் ஒருவர் போல ஏழு பேர்கள் இருப்பதாக சொல்வார்களே! அது உண்மைதான் போல!’ தன்னுள்ளே வியந்து கொண்டான் எழிலரசன்.
‘கிட்டத்தட்ட பதின்நான்கு மணித்தியாங்கள் இவளின் அருகிலிருந்து பயணம் செய்யப் போகின்றேன்..’ எண்ணிக் கொண்டவன், ‘இறங்குவதற்குள் இவளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.’ என, நினைத்துக் கொண்டான்.
‘பார்த்தால் சின்னப் பெண் போல இருக்கின்றாள்; அதற்கிடையில் அவ்வளவு பெரிய பிள்ளை..ம்ம்ம்…’ அவன் மனம் முரண்டியது. அவன் பார்வையில் லூகாஸ் சோஃபியை இவள் கணவனும் பெண்ணும் என்றே நினைத்துக் கொண்டான்.
‘சின்ன வயதில் திருமணம் செய்து கொண்டிருப்பாள் போல. இல்லையென்றாலும் இங்கு தான் அதிகமாக திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்வார்களே..’
திரும்பவும் அவளைச் சுற்றியே பயணித்த தன் எண்ணங்களுக்கு கடிவாளம் போட முடியாமல் திண்டாடினான் அவன்.
விமானம் மேலெழத் தொடங்க அவள் நிமிர்ந்து நேராக அமர்ந்து கொண்டாள். ஆனால், இவனை ஒரு பொருட்டாகப் பார்த்து கதைக்கவில்லை. விமானம் சீராகச் செல்லத் தொடங்கிய பின் தன் கைப்பையினுள் இருந்த மகஸினை எடுத்துப் பிரித்தவள் அதில் மூழ்கி விட்டாள்.
‘உப்ஸ்..இப்படியே இருந்தால் இவளைப் பற்றி அறிந்து கொண்ட மாதிரித் தான்..’ நினைத்துக் கொண்டே மெல்ல அவளைத் திரும்பிப் பார்த்தான் எழில்.
இவளைக் கண்டதும் அவள் முகச் சாயலைப் பார்த்து அதிர்ந்தவன், பின் அவள் நடவடிக்கைகளையே கவனித்துக் கொண்டிருந்ததில், அவள் சௌந்தர்யம் அவன் பார்வையில் பட்டாலும், மனதில் அவ்வளவாக பதியவில்லை.
இப்போதோ, இவ்வளவு அருகில் தெரிந்த அவள் அழகு முகத்தையும், உருவத்தையும் இமைக்கவும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அழகான பெண்களைப் பார்க்காதவனோ அவர்களுடன் நட்பாகப் பழகாதவனோ இல்லை அவன். ஏன், அவன் திருமணம் செய்யவிருக்கும் அத்தை மகள் ஸ்வேதா கூட நல்ல அழகி தான்.
இவளின் முகச் சாயல் தான் முதல் அவளைப் பார்க்க வைத்தது. இப்போது இவள் அழகு அவன் மனதை என்னமோ செய்தது.
‘சே..நான் ஏன் இப்படியெல்லாம் குழம்பிக் கொள்கிறேன்?! அதுவும் ஒரு பிள்ளையின் தாயைப் பார்த்து!’ தன்னைத் தான் கண்டித்துக் கொண்டவன், ‘‘உக்கும்..’’ மெல்லச் செருமினான்.
அவன் செருமலில் சட்டென்று அவன் புறம் பார்த்த ஏஞ்சல், அவன் தன்னையே பார்த்திருப்பதைப் பார்த்து, ‘‘ஹாய்…நீங்க இந்தியாவா?? அல்லது ஃப்ரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு விசிட் போகிறீர்களா??’’ எவ்வித தயக்கமும் இன்றி ஆங்கிலத்தில் கேட்டு, பேச்சுக்கு அழகாக பிள்ளையார் சுழி போட்டு வைத்தாள்.
‘‘நான்…நான் சென்னை…’’ அவள் திடீரென்று கதைத்ததும் சிறிது தடுமாறியவன் பின் சுதாகரித்துக் கொண்டு, ‘‘சென்னை சொந்த இடம். இங்கு எங்களுக்கு பிஸினெஸ் இருக்கு. அதனால் அடிக்கடி வந்து போவேன்.’’ என்றவன்,
‘‘நீங்க இந்தியாவைச் சுற்றிப் பார்க்கப் போறீங்களா??’’ கேட்டதும் மெல்லியதாக புன்னகைத்துக் கொண்டவள்,
‘‘இல்லை இல்லை. எனக்கு அங்கு கொஞ்சம் முக்கிய வேலைகள் இருக்கு அதனால் போகின்றேன். நானும் சென்னைக்குத் தான் போகின்றேன். இந்தியாவை சில வருடங்களுக்கு முன் அம்மா அப்பாவோடு வந்து சுற்றிப் பார்த்திருக்கின்றேன்.’’ சாதாரணமாக கதைக்கத் தொடங்கினாள்.
‘‘என்ன பிசினெஸ்?’’ கேட்ட ஏஞ்சல் பதில் சொல்லாது தன்னைப் பார்த்திருப்பவன் பார்வையில் சட்டென்று குழம்பிப் போனாள்.
‘ஏன் இப்படிப் பார்க்கின்றான்? முதல் எந்த வகைப் பார்வை இது?! ம்ம்…கெட்டவன் போலவும் தெரியவில்லை. என்றாலும் இந்தக் காலத்தில் யாரையுமே நம்ப முடியாது. நல்லவன் மாதிரியே வேஷம் போட்டு கழுத்தறுப்பவர்கள் மலிந்து போய் இருக்கும் காலம். உருவத்துக்கும் நடத்தைக்கும் கூட தொடர்புகள் குறைந்து வரும் காலம்!’ எச்சரிக்கையாக நினைத்துக் கொண்டவள்,
‘‘பரவாயில்லை…நான் சும்மா தான் கேட்டேன்; விருப்பம் இருந்தால் சொல்லுங்க.’’ என்றதும்,
தன்னைச் சுதாகரித்துக் கொண்ட எழில், ‘‘இதிலென்ன இருக்கு… எங்களுக்கு இங்கு நகைக்கடை இருக்கு. இங்கு மட்டும் இல்லை இலண்டனிலும் இருக்கு. இரு இடங்களிலும் பொறுப்பாக பார்த்துக் கொள்ள ஆட்கள் இருந்தாலும், நான், அப்பா, அண்ணன் என்று மாறி மாறி பார்க்க வருவோம்.’’ என்றவன்,
‘‘ஓ! ஜுவெல்லரி ஷாப்! எங்கே? என்ன பெயர்?’’ ஏதோ அவளுக்கும் அவனைப் பற்றி ஆராய வேண்டும் போலவே தோன்றியது.
‘‘’லா சப்பலில்’… துர்கா கோல்ட் அன்ட் டையமண்ட்..’’ அவன் கூறியதும், அவள் வெளிப்படையாகவே ஆச்சரியம் காட்டினாள்.
‘‘அட..அந்த ஷாப்பிற்கு நான் ஒரு தடவை வந்திருக்கிறேன். கல்லூரியில் படித்த என் இந்திய நண்பியுடன் வந்தேன்..’’ என்றவள், தான் போட்டிருந்த இளநீலநிற ஷர்ட்டின் முழுக்கையை கொஞ்சமாக விலக்கி,
‘‘இங்க பாருங்க, இந்த பிரேஸ்லெட் அங்கு தான் வாங்கினேன்.’’ என்று ஒரு அழகிய மெல்லிய வைர பிரேஸ்லெட்டைக் காட்டியவள், தன் கழுத்திலிருந்த மெல்லிய டைமண்ட் பென்டனுடன் கூடிய தங்கச் சங்கிலியையும் வெளியே எடுத்து, ‘‘இதையும் சேர்த்து அப்படியே செட்டாக வாங்கினேன். எனக்கு மிகவும் பிடித்த செட்..’’ அவள் வாய் பேசியது ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து கதைப்பது போலக் கேட்டது இவனுக்கு. அந்தளவுக்கு தன் முன்னால் தெரிந்த அவள் சுந்தர வதனத்தில் இவன் தொலைந்து கொண்டிருந்தான்.
எவ்வளவு நேரம் இமைக்க மறந்து அவள் முகத்தைப் பார்த்திருந்தானோ தெரியாது, ‘‘சார் நீங்க என்ன குடிக்கிறீங்க..கூல் ஓர் ஹாட்…’’ தேனாக வந்து விழுந்த விமானப் பணிப்பெண்ணின் குரல், அவனை இயல்பு நிலைக்கு இழுத்து வர வைத்தது.
‘‘ஆங்…எனக்கு..ஒரு கிளாஸ் ஆரெஞ் ஜுஸ்..’’ மீண்டும் தடுமாறியவன், ‘டேய் எழில் வேண்டாம் டா. அவள் ஒரு பிள்ளைக்குத் தாய், அதுக்கும் மேல அவள் புருசனைப் பார்த்தாலே தெரியுது, இவளை சும்மா தப்பாப் பார்த்தாலே வெட்டிப் போட்டு விடுவான் போல. அப்படிப் பார்வையாலேயே உருகிக் கொண்டு நின்றான். நீ அடங்கு; அதுதான் உனக்கு நல்லது.’ நன்றாக நங்கு நங்கு என்று தனக்குத்தானே குட்டிக் கொண்டவன், தன்னைத் தானே வெகுவாக மனதுள் கடிந்தும் கொண்டான்.
விமானப் பணிப்பெண் தந்த ஜூசை வாங்கி அருந்தத் தொடங்க, அவளும் ஜூசை அருந்திக் கொண்டே மகஸினைத் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினாள்.
இவன் வாயோ அவளுடன் பேசாமல் இருக்க மாட்டேன் என்று அடம் பிடித்து சண்டித்தனம் செய்தது.
‘‘ஏஞ்சல், உங்களுக்கு இந்த ஜுவல்ஸ் மிகவும் அழகாக இருக்கு.’’ சொன்ன பின் தான், ‘ஹைய்யோ, நட்ட நடு வானத்தில ஒருத்தி கையால அடி வாங்கப் போகிறேனோ? ஏன்டா எழில், நீ இப்படி மாறிப் போனாய்? வலியக் கதைக்கும் பெண்களை மதித்து பதில் சொல்லவே மாட்டாயே! இப்போ இவளோடு கதைப்பதற்கு இப்படித் துடிக்கின்றாயே!!’ லேசான கலக்கத்தில் தொடங்கி தன்னைத் தானே ஆச்சரியமாக நினைத்துக் கொண்டான்.

