அத்தியாயம் 4.
ஏஞ்சலுடன் விமானத்தை விட்டிறங்கிய எழிலின் மனம், சொல்ல முடியாத உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்தது.
மிகச்சாதாரணமாக கலகலத்துக் கொண்டே இறங்குபவளைப் பார்க்கையில் அவனுள் ஒருவித கோபமே எழுந்தது. ‘அட நாம் உணர்வது போல இவளுக்கு இல்லையே!’ சிறுபையனாக அவன் மனம் சுணங்கிக் கொண்டது.
இதுவரை காலமும் உணராத வகையில், தனக்கு மிகவும் நெருக்கமானவளைப் பிரியப் போகின்றோமே என்ற தடுமாற்ற உணர்வு, அவனை நன்றாக அசைத்துப் பார்த்தது.
எவ்வளவு முயன்றும் அவனால் அதிலிருந்து வெளிவர முடியாமல் தடுமாறியவன், இறுதியில் தன் மீதே எரிச்சல் கொண்டான்.
வெளியில் வந்தவர்கள் வெவ்வேறாகப் பிரிந்து விமான நிலைய நடைமுறைகளைக் கவனித்துக் கொண்டாலும், எழிலின் பார்வை அடிக்கடி ஏஞ்சலை தொட்டுத் தொட்டு மீண்டு கொண்டிருந்தது.
இரயில் சிநேகிதம் போல இந்த விமானச் சிநேகிதத்தை அவ்வளவு சுலபமாக மறந்து தட்டிக் கழித்து விட அவன் மனம் கொஞ்சமும் ஒப்பவில்லை.
ஏனோ, ‘அவளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்.’ என, உள்மனம் அவனுக்கு கட்டளையிட்டுக் கொண்டே இருந்ததை இலகுவாகப் புறக்கணிக்க முடியவில்லை.
கடைசியாக, தங்கள் பயணப் பைகளையும் எடுத்துக் கொண்டு இருவரும் ஒன்றாகவே வெளியில் வந்தனர்.
இந்த சில மணிநேரங்களில் தன்னுடன் மிகவும் இலகுவில் பொருந்திப் போன எழிலை, ஏஞ்சலுக்கும் சகபிரயாணி என்ற வகையில் பிடித்து தான் இருந்தது.
அதுவும் தன் நண்பன் மனோவின் நண்பன் என்ற கூடுதல் தகுதியும் இருந்ததால், மிகவும் இலகுவில் நட்பு பாராட்டும் குணமுடையவள், அவன் மீதும் அதே நட்புணர்வை வளர்த்துக் கொண்டாள்.
‘‘இன்னும் இரண்டு கிழமைகள் இங்கு நிற்பேன் எழில்; முடிந்தால் சந்திக்கலாம்’’ இலகுவாகச் சொல்லி அழகாக புன்னகைத்தவளை, பதில் சொல்ல மறந்து நோக்கினான் எழில்.
‘முடிந்தால் தான் சந்திப்பாளாமே!’ மனதில் கடு கடுத்தவன், ‘‘ஹாய் ஹாய் வெல்கம்.. வெல்கம்’’ கலகல குரலைக் கேட்தும் சட்டென்று தன் பின்னால் திரும்பிப் பார்த்தான்.
அங்கே, கையில் பெரிய பூங்கொத்துடன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் மனோ. வந்தவனோ ஏஞ்சல் அருகில் எழிலைக் கண்டதும், ‘‘மச்சான்..!! எப்படிடா இருக்கின்றாய்? நீ என்ன இங்க..?” என்றவன், “ஓ! ஃப்ரான்ஸிலிருந்து வருகின்றாயா?’’ பதிலாக இன்னொரு கேள்வியைக் கேட்டான்.
பின்னர், தான் வரும் போது அவர்கள் இருவரும் கதைத்துக் கொண்டிருந்ததால், ‘‘அது சரிடா…ஓவியை உனக்கு முன்பே தெரியுமா?’’ ஆச்சரியமாக வினவினான்.
‘‘அது யாருடா ஓவி?’’ குழப்பமாகத் திருப்பிக் கேட்டான் எழில்.
நண்பன் அப்படிக் கேட்டதைப் பார்த்த மனோ, ‘‘ஓ! அப்போ ஓவியைத் தெரியாதா? நீ பக்கத்தில் பேசிக் கொண்டிருக்கவும் தெரியும் என்று நினைத்து விட்டேன்டா.’’ என்றவன் ஏஞ்சலிடம்,
‘‘ஓவி, இவன் என் நண்பன் எழிலரசன்.” என்றவன், அவளின் அமர்த்தல் நகையின் காரணம் புரியாமலேயே,
‘‘எழில்…ஓவி..ஓவியா, ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று எனக்கிருக்கும் ஒரே ஒரு கேர்ள் ஃப்ரெண்ட்..’’ புன்னகையுடன் நண்பனிடம் அறிமுகம் செய்து வைத்தான்.
அதைக் கேட்ட எழிலோ, பேச்சை மறந்து, அயர்ந்து போய், ஆச்சரியத்தால் ஆளப்பட்டு ஏஞ்சலின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான்.
‘ஓவி…ஓவியா…அப்போ இவள் தமிழா?! அப்படி ஒரு வித அடையாளமும் இல்லையே! இவளும் இவ்வளவு நேரமாக ஒரு வார்த்தை சொல்லவில்லையே! ஆங்கிலத்தில் தான் கதைத்தாள். இப்போதும் ஆங்கிலத்தில் தான் கதைக்கின்றாள். தமிழ் தெரியாதோ!? ஃப்ரான்ஸில் வாழும் தமிழ் குடும்பமோ?! அப்போ பிரான்ஸ்காரனைக் கல்யாணம் செய்திருக்கின்றாள் போல…’ மின்னலாக அங்கலாய்த்துக் கொண்டவனின் உள்ளத்தில், ஈசல்களாக புறப்பட்ட கேள்விகளையும் மேவி அவள் மணமானவள் என்பதே ஒருவகை கசப்புணர்வை பரவ விட்டது.
தான் அறிமுகம் செய்து வைத்த பின்னும், மௌனமாக குழப்பத்துடன் நிற்கும் நண்பனை புதிதாகப் பார்ப்பவன் போல் புரியாத பார்வை பார்த்தான் மனோ.
பின் மெல்லச் சிரித்துக் கொண்டே ஓவியாவை நோக்கியவன், ‘‘நானும் இதுவரை எத்தனையோ பேருக்கு உன்னை அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன் ஓவி. ஆனால், இப்படி ஒரு ரியாக்ஷனை யாருமே தரவில்லை என்ன? குறை நினைக்காதே; அவன் இயல்பிலேயே இப்படித்தான்.’’ சமாளிப்பாகச் சொன்ன படி நண்பனைக் கேலியாகப் பார்த்தான்.
அதைக் கேட்ட ஒவியாவோ கலகலத்துச் சிரித்தாள்.
‘‘ஹைய்யோ மனோ, அவர் அதிர்ச்சியில் நிற்கின்றார்.’’ சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஏன் ஏஞ்சல்…நீங்களும் தமிழா? சொல்லவேயில்லை. எத்தனை கதைத்தோம், இதை மறைத்து விட்டீங்களே!’’ குற்றம் சாட்டும் குரலில் சொன்னவனை ஆச்சரியமும் ஆர்வமுமாகப் பார்த்தான் மனோ.
‘‘டேய் மச்சான், அப்போ, தெரியாத மாதிரி யார் என்று கேட்டாய்.’’ என்றவனை, இப்போது நன்றாக முறைத்தான் எழில்.
“ஓவி யாரென்று தெரியாதுடா; ஏஞ்சலைத் தெரியும்.’’ கடுப்பாக வந்ததோ அவன் குரல்!?
‘‘மச்சான்…ஏஞ்சல்? யாருடா அப்படிச் சொன்னது? அல்லது உனக்கு முன்னமே ஓவியைத் தெரியுமா?’’ இன்னும் அதிகமாக வியந்தான் மனோ.
ஏஞ்சல் என்பது அவளின் செல்லப் பெயர். சிறுவயதில் செல்லமாக அழைத்த பெயர் நெருக்கமான குடும்பத்தினருக்கிடையில் அப்படியே நிலைத்து விட்டது. மற்றும்படி அவளை ஓவியா..ஓவி என்றே அனைவரும் அழைப்பார்கள். இது தெரிந்ததால் ‘இவனுக்கு எப்படி செல்லப் பெயர் தெரிந்தது?!’ என்ற குழப்பத்தில் வினவினான் மனோ.
“எல்லாம் இப்போ விமானத்தில் ஏறுவதற்கு முதல் தான் தெரியும்.’’ நண்பனிடம் சொன்னாலும் விழிகளோ, ஏஞ்சலை முறைத்தன!
“பக்கத்து இருக்கையில் இருந்து வருபவர்களிடம் எல்லாம் பெயரைச் சொல்வார்களாடா? இது இவங்க கணவரும் மகளும் கதைக்கும் பொழுது என் காதிலும் விழுந்தது; அவ்வளவும் தான்.’’
நண்பன் சொன்னதைக் கேட்டு வாய் பிளந்த மனோ, மறுத்துக் கூற முனைகையில் முந்திக் கொண்டாள் ஓவி.
‘‘உங்களிடம் சொல்லக் கூடாதென்று இல்லை எழில். நீங்க பார்த்ததும் ஏஞ்சல் என்று பேச்சை ஆரம்பிக்கவும் நான் அப்படியே விட்டு விட்டேன். ஆனால், நான் தமிழ் இல்லை. என் பெயர் மட்டும் தான் தமிழ் பெயர்.’’ இந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சொன்னவள்,
‘‘நாங்க போய் வருகிறோம் எழில். போவோமா மனோ?’’ கேட்ட படி தன் ட்ரொலியை உருட்டத் தொடங்கினாள்.
‘சரியான ராங்கி பிடித்த ரங்கம்மா. அப்போ நீ தமிழ் இல்லை ஆனால் பெயர் மட்டும் தமிழ்…ம்ம்ம்…எங்கேயோ இடிக்குதே!’ நினைத்துக் கொண்ட எழில், “சரி மனோ, பிறகு சந்திப்போம்.’’ சொல்லி, தானும் விறு விறுவென்று நடக்கத் தொடங்கினான்.
****
அண்ணா நகரில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஃப்ளாட்டில் ஒன்றில் கமலம் தன் ஒரே மகனுடன் வசித்து வருகிறார் .
மூன்று படுக்கையறைகளுடன் கூடிய அந்த மாடிக் குடியிருப்பில் ஓவியாவுக்கென ஒரு அறையைத் தாயார் படுத்திக் கொடுத்திருந்தார் அவர்.
இருபக்க உறவுகளின் எதிர்ப்புக்கும் மத்தியில் காதல் திருமணம் புரிந்த கமலா, மனோ கைக்குழந்தையாக இருக்கும் பொழுதே எதிர்பாராத விபத்தொன்றில் கணவனைப் பறி கொடுத்து அநாதரவாக நிற்கையில், தள்ளி வைத்த உறவுகள் எவருமே மனமிரங்கி அவர்களை ஏற்க முன் வரவில்லை.
அப்போது, திக்குத் தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றவரை இருகரம் நீட்டி அரவணைத்துக் கொண்டது பெரியார் ஆச்சிரமம்.

