“ஹே…ஹே…இங்க பாருடா! நம்ம சாதனாக் குட்டி என்னமா சொகுசா கிடக்கிறாங்க. இது நல்ல பழக்கம் இல்லையே! ம்ம்ம்…குட்டி இங்க பாருங்க.” சொல்லிக்கொண்டே குழந்தையின் கன்னத்தை வருடியவன் மெல்ல ஓவியாவை ஏறிட்டான்.
‘வரும் போது எத்தனை சந்தோஷமாக வந்தாள்; இப்போது இப்படி இருளடைந்து போய் இருக்கின்றாளே!’ நினைத்துக் கொண்டவன்,
“ஓவி, இப்படியே வெளியே போய் வருவோமா?” அம்மாவும் கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டும் என்றார்.” என்றதும்,
“ம்ம்ம்..போவோம். இருங்க, இவளை உள்ளே விட்டு விட்டு வருகிறேன்.” எழுந்து செல்பவளையே விழிகளால் தொடர்ந்தவனை, அவன் கைபேசி தன் பக்கம் பார்க்கச் சொன்னது.
சிறு ஆச்சரியத்துடன் கைபேசியை இயக்கி காதில் வைத்தவன், “சொல்லுடா மச்சான், என்ன இந்தப் பக்கம் திடீரென்று காற்று வீசுது?! அதுவும் இத்தனை நாட்கள் இல்லாமல்…” கேலி செய்தான் நண்பனை.
“அப்படியா? எங்கே?” கேட்டுக்கொண்டே திரும்பியவனின் பார்வையில், இல்லத்தின் வாயிலருகில் வந்து நிற்கும் எழிலின் கார் தென்பட்டதும், முகம் சிரிப்பில் நிறைந்தது.
“வாடா மச்சான்…ஓஹ் அப்படியா? அப்போ உள்ளேயே வா.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே காவலாளி கேட்டைத் திறந்து விட காரை உள்ளே விட்டான் எழில்.
நண்பனைப் பார்த்து புன்னகைத்தவாறே இறங்கியவன் காரின் பின்புறத்தில் இருந்து சில பெட்டிகளை இறக்கி வைக்க, “என்னடா இதெல்லாம்?” கேட்டுக் கொண்டே அருகில் வந்த மனோவிடம்,
“பிள்ளைகளுக்கு கொஞ்சம் பழங்களும், ஸ்வீட்சும்…” என்றவனின் முதுகில் ஒன்று போட்டான் மனோ.
“என்ன மச்சான் திடீரென்று?” அவன் மீண்டும் கேட்ட தோரணையில் அவனை முறைத்த எழிலின் பார்வையில், அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த ஏஞ்சல் பட்டாள்.
நண்பனின் பார்வையைத் தொடர்ந்த மனோ நமுட்டுச் சிரிப்புடன், “மச்சான் வேண்டாம்டா. அவள் புருஷன் தேடி வந்து மென்னியை முறுக்குவான்…” அடிக் குரலில் சொன்னதும், எழிலின் முகம் வேப்பஞ் சாற்றைக் குடித்தது போல் அஷ்டகோணலாகியது.
“டேய் என்ன பேச்சுப் பேசுறாய்? ஒரு வேலை விடயமாக இந்தப் பக்கம் வந்தேன். அதே கையோடு உன்னையும் பார்த்து விட்டுப் போகலாம் என்று நினைத்தேன். வரும் போது எப்படி வெறுங்கையுடன் வருவது என்று..” என்றவனை இடைமறித்தான் மனோ.
“சரிடா மச்சான் சரி. நம்பிட்டேன்டா. எதற்கும் நான் சொன்னதை நினைவில் வைத்திரு. கோடிஸ்வரன் வீட்டுப்பிள்ளை; அது மட்டுமில்லை கோடீஸ்வரனின் பெண்டாட்டி.” தன் முழியை உருட்டி பத்திரம் காட்டிக் கொண்டே மனோ சொல்லிக் கொண்டிருக்க,
தன் கைப்பையில் எதையோ வைத்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்திருந்த ஏஞ்சல், அப்போது தான் மனோவின் அருகில் நின்ற எழிலைக் கண்டாள்,
“ஹாய் எழில், எப்படி இருக்கிறீர்கள்? என்ன இந்தப் பக்கம்? வழமையாக வருவீங்களா?” எதிர்பாராமல் சட்டென்று அவனைக் கண்டவளுக்கும் சந்தோசமாகவே இருந்து.
ஆனால், கேட்டவளுக்குப் பதில் சொல்லாது அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான் எழில்
சில கணங்களின் பின், “நான் பெரிதாக வருவதில்லை ஏஞ்..ஓவி..ஓவியா.” தடுமாறியவன், “இல்லை…நான் ஏஞ்சல் என்றே சொல்லலாம் தானே?” அவன் தடுமாற்றத்தையும் கேட்ட தொனியையும் பார்த்து மெலிதாகச் சிரித்துக் கொண்டாள் ஏஞ்சல்.
“எப்படி வேண்டும் என்றாலும் சொல்லுங்க எழில். என்னை அழைப்பதற்கான ஒரு அடையாளம், அதை விட இந்தப் பெயர்களில் வேறெந்த பெருமையும் எனக்கில்லை” அப்பட்டமான சலிப்புடன் சொன்னவளை நெற்றி சுருங்க ஏறிட்டான் எழில்.
‘முகமெல்லாம் வாடிக் கிடக்கு! இவளுக்கு என்ன நடந்தது? நன்றாகத் தானே வந்தாள்!’ நினைத்தவாறே, கூர்மையாக அவளை அளவிட்டவனின் விழிகள் சட்டென்று மனோவைப் பார்த்தது.
எதையும் அறிய முடியாத பாவனையில் நின்ற மனோவைப் பார்த்ததும் ‘எதுவோ நடந்திருக்கு! என்னவாக இருக்கும்?’ மனதுள் எழுந்த கேள்வியுடன் ,
“எங்கேயாவது வெளியில் போகப் போறீங்களா?” பொதுவாகக் கேட்டான்.
“ஆமாம்டா. கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டும். அதோடு ஓவியை வெளியே அழைத்துப் போகலாம் என்று நினைத்தேன்.” என்றதும்,
“அப்படியா? அப்போ வாங்க என் காரிலேயே போகலாம். முதல் கடற்கரைக்குப் போய்விட்டு ஷாப்பிங் போகலாம்.” என்றதும் தன்னைப் பார்த்த மனோவிடம்,
“எனக்கு எதுவென்றாலும் சரி மனோ. வாங்க சேர்ந்தே போகலாம்.” என்றாள் ஏஞ்சல்.
காரைச் செலுத்திக் கொண்டிருந்தாலும் எழிலின் பார்வை முன்பக்க கண்ணாடியில் தெரிந்த ஏஞ்சலின் முகத்தையே அடிக்கடி சுற்றி வந்தது.
வெளிபுறத்தை இலக்கின்றி பார்த்திருப்பவளின் சோர்வின் காரணம் அறிய அவன் மனம் மிகவும் ஆவல் கொண்டது.
நேற்று விமானநிலையத்திலிருந்து அவள் அவ்வளவு சாதாரணமாக விடை பெற்ற போது, தன்னுள் எழுந்த உணவுகளை அடக்கிக் கொண்டே தான் வீடு சென்றான் எழில்.
‘எந்த வகையான உணர்விது!?’ தனக்குத் தான் கேட்டுக் கொண்டவன் மனமோ விடைகான முயலவில்லை. ஆனால் அந்த உணர்வுகள் தந்த ஒருவகை இதத்தை தன் மனம் மிகவும் விரும்பியதோ என்ற ஐயம் அவனுள் எழுந்ததும், அவள் இன்னொருவர் மனைவி ஒரு குழந்தையின் தாய் என்ற நினைவு வந்து அவன் மனவோட்டத்துக்கு கடிவாளமிட மிகவும் முயன்றது.
‘சே! நான் இந்தளவு தானா?’ தன் மீதே அவனுக்கு எரிச்சல் எழுந்தது.
‘நான் ஒன்றும் அவளைப் பற்றித் தப்பாக நினைக்கவில்லையே! ச்சே…ச்சே நிச்சயம் தப்பான கண்ணோட்டத்திலும் பார்க்கவில்லை. அவள் முகத்தைப் பார்த்ததும் என்னுள் எழுந்த உணர்வுகளின் தாக்கம் தான் இது.’ இறுதியில் முடிவு செய்தவன்,
‘அவளைப் பற்றி இன்னமும் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அப்பா அம்மாவுக்கும் அவளை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட அதே உணர்வு அவர்களுக்கும் வரும்.’ என்று நினைத்துக் கொண்டே தான் இன்று இல்லத்துக்கு வந்திருந்தான்.
ஆனால், இப்போது மீண்டும் அவளால் அவனுள்ளம் பாதிப்படைந்ததோ?! இது பற்றி வரையறுத்துக் கூற முடியவில்லை. ஆனால் நிச்சயமாகத் தடுமாறித் தான் போனான்.
முன்னிருக்கையில் அமர்ந்திருந்து கலகலத்துக் கொண்டு வந்த மனோவின் பேச்சை அரையும் குறையுமாகக் கேட்டு கொண்டே, கண்ணாடியில் பின்புறத்தை நோட்டம் விட்டுக் கொண்டு வந்தவனின் விழிகளுடன், திடீரென்று உள்ளே திரும்பிய ஏஞ்சலின் விழிகள் சில கணங்கள் கலந்து பிரிந்தன.
அடுத்த கணம் விமான நிலையத்தில் கண்ட லூகாஸும் சோஃபியும் எழிலின் நினைவில் அழையாமலேயே வந்து சென்றனர். அவன் மனமோ கலங்கிய குட்டையானது.
மெல்லத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டவன், பெசன்ட்நகர் கடற்கரைச் சாலையினுள் காரைத் திருப்பினான்.
அப்போது தன்னருகில் இருக்கையில் இருந்த ஒரு அழைப்பிதல் ஏஞ்சலின் பார்வையில் பட்டது. முதலில் சுவாரசியமின்றியே அதைப் பார்த்து விலக நினைத்த அவள் விழிகள், மீண்டும் ஒரு அதிர்வுடன் அந்த அழைப்பிதழில் நிலைத்தன.
மெல்ல அதை எட்டி எடுத்து அந்த உறையையே சிலகணங்கள் பார்த்திருந்தவள், உறையினுள் இருந்து அழைப்பிதழை உருவி வெளியில் எடுத்தாள்.
அவளிடம் எதையோ கேட்டுப் பதிலின்றிப் போகவே திரும்பிப் பார்த்த மனோ, அவள் கையில் அழைப்பிதழைப் பார்த்ததும், “என்ன இன்விடேஷன் ஓவி?” வினவ, மெல்லத் திரும்பிப் பார்த்தவாறே காரை அதற்குரிய இடத்தில் நிறுத்தினான் எழில்.
“அது ஆர்த்தியின் ஃப்ரெண்ட் தங்கள் கடைதிறப்பு விழாவுக்கு அவளை அழைத்திருக்கிறாள். தன் ஃப்ரெண்ட்ஸோடு காரில் வந்தவள் விட்டு விட்டு இறங்கிவிட்டாள்.” சொல்லிக்கொண்டே இறங்கியவன், அப்போதும் அந்த அழைப்பிதழையே பார்த்துக் கொண்டிருக்கும் ஏஞ்சலை நெற்றி சுருங்க யோசனையாக ஏறிட்டான்.
“ஓவி இறங்கவில்ளையா? ஓவியா..” கேட்டுக்கொண்டே மனோ கதவில் தட்டிய பின்னரே காரிலிருந்து இறங்கியவள்,
“ஆர்த்தி யார்? உங்கள் சிஸ்டரா? இவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களா எழில்?” கையிலிருந்த அழைப்பிதழைக் காட்டி வினவினாள்.
“ம்ம்.. ஆர்த்தி என் தங்கை தான்.” என்றவன்,
“தெரிந்தவர்கள் தான். அவர்களும் நகைக்கடை தான் வைத்திருக்கிறார்கள். எங்கள் வீட்டுக்கருகில் தான் இவர்கள் வீடும் இருக்கின்றது. என்றாலும் பெரிதாக குடும்பமாக பழகுவதில்லை. அவர்களும் நகைக்கடை வைத்திருப்பதாலோ என்னமோ அந்த வீட்டு அம்மாவுக்கு எங்களுடன் பெரிதாக பழக விருப்பமில்லை. ஆனால் என்ன விசித்திரம் என்றால் அவர்கள் இரண்டாவது மகளும் என் தங்கை ஆர்த்தியும் நெருங்கிய நண்பிகள். அந்தம்மா சின்னவயதில் இருந்து சொல்லிச் சொல்லிப் பார்த்து பிறகு பேசாமல் விட்டு விட்டார்.” என்றவன், கடலை நோக்கி நடந்து கொண்டே,
“இப்போது தங்கள் புதுக் கடை திறப்புவிழாவுக்கு ஆர்த்தியை கட்டாயம் வரச் சொல்லி இந்த அழைப்பிதழைக் கொடுத்திருக்கிறாள் சுருதி.” என்றவன், அப்போதுதான் ‘இதை ஏன் இவள் கேட்கிறாள்?’ என்ற யோசனையுடன் தன்னருகில் வந்து கொண்டிருக்கும் ஏஞ்சலை ஏறிட்டான்.
“ஏன் ஏஞ்சல் இவர்களை உங்களுக்குத் தெரியுமா?” கேட்டவனைப் பார்த்த அவள் விழிகளில் என்ன இருந்தது என்பதை எழிலால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், புரியாதவகையில் சட்டென்று ஒருவித உணர்வு அவள் விழிகளில் தோன்றி மறைந்தது.
தன்னையே பார்த்துக் கொண்டு தன் பதிலுக்காக எழில் காத்திருக்கவும், “இல்லையில்லை. இவர்களை எப்படி எனக்குத் தெரிய வரும் எழில்?” மெலிதாகச் சிரித்துக் கொண்டவள்,
“இந்த கடை திறப்பதற்கு யார் வருகிறார்கள் என்று பாருங்க மனோ!” சொல்லி அழைப்பிதழை மனோவிடம் நீட்டினாள்.
வாங்கிப் பார்த்தவனும், “அட ஆமா..” என்றவன்,
புரியாமல் பார்த்த நண்பனிடம், “இந்த நடிகையை ஓவிக்கு பிடிக்கும்.” என்றதும், ஓவியாவையும் மனோவையும் அப்பட்டமான கேலியுடன் ஏறிட்டான் எழில்.
“இதென்ன கதையடா மச்சான்!? அப்போ ஃப்ரான்ஸ் நாட்டுக்காரர்கள் கூட நம்ம தமிழ்படங்கள் பார்க்கிறார்களா என்ன?? அதுவும் தமிழ் பேசத் தெரியாத நம்ம ஏஞ்சல்??” நக்கலாகக் கேட்டவனை முறைத்தாள் ஓவி.
“அது யாருக்குத் தெரியும்?! ஆனால் ஓவியா இங்கு வந்திருந்த பொழுது இந்த நடிகையின் படமொன்றைப் பார்த்து விட்டு பிறகு ஒன்றிரண்டு படங்கள் கேட்டு வாங்கிப் பார்த்தாள்.” என்றவனை இடையிட்ட ஓவியா,
“ஏன் எழில் உங்க தங்கை இந்த திறப்பு விழாவுக்குப் போவார்களா? அப்போ நானும் அவர்களுடன் போகலாமா?” சிறுமியாக கெஞ்சியது அவள் குரல்.

