நீயென் சொந்தமடி 6 – 1

அத்தியாயம் 6.

செய்து முடிக்க வேண்டிய வேலைகள் அவன் முன்னால் வரிசையாக நின்றன. ஆனால், இந்த சில நாட்களாக எதிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறான் எழில். அதை விட ஏஞ்சல் அவன் நினைவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
“எழில், என்ன யோசனையாக இருக்கிறாய்? நானும் ஃப்ரான்ஸ் போய் வந்ததில் இருந்து அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஏதாவது பிரச்சனையா? அங்கு போன வேலைகள் எல்லாம் நல்லபடியாக முடிந்தது தானே?” கேட்டுக்கொண்டே தன்னெதிரில் வந்தமர்ந்த தந்தை ராஜசேகரை பார்த்தவன்,
“ஆங்.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லையப்பா. அங்கு ஒரு பிரச்சனையும் இல்லை..” சட்டென்று சமாளித்தான்.
தெளிவில்லாமல் குழம்பிக் கிடந்த மகன் முகத்தைப் யோசனையாகப் பார்த்துக் கொண்டே, “அப்போ வேறு என்ன?’’ அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் விடாமல் கேட்டார் தந்தை.
எந்த விடயம் என்றாலும் மிகவும் துல்லியமாக கணக்கிட்டு முறையாகச் செய்வதில் தன் சின்ன மகன் திறமைசாலி என்ற அசையாத நம்பிக்கை உடையவர் ராஜசேகர். அதனால் தொழில் சம்பந்தமான எந்த முக்கிய விடயங்களையும் சின்னமகனின் பார்வையில் நடத்திக் கொள்ளவே எப்போதும் விரும்புவார் அவர். அப்படிப்பட்டவனின் இந்தக் குழப்பம் மிகவும் புதியதாகத் தெரிந்தது அவருக்கு.
தன்னை ஆராய்ச்சிப் பார்வை பார்க்கும் தந்தையை சிறு புன்னகையுடன் நோக்கியவன், “அப்படியேதும் இல்லையப்பா. சும்மா தான்..” இழுத்தவன்,
“மங்களா ஜுவல்லரிக்காரர் கிளை ஒன்றைத் திறக்கிறார்கள் தானே, அதற்கு ஆர்த்தியை வரச் சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கிறாளாம் சுருதி.” சொல்லி நிறுத்தி தந்தையை ஏறிட்டவன் அவர் முகச் சுளிப்பை பார்த்து விட்டு,
“ஆர்த்தி உங்களிடம் கேட்கப் பயந்து என்னிடம் கேட்டாள் அப்பா, அதைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆசைப்படுகிறாள் போய் வரட்டுமே..” என்ற மகனுக்கு பதில் சொல்லாது மௌனம் காத்தார் ராஜசேகர்.
அவர்கள் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டே மாடியேறி வந்தார் எழிலின் தாய் பரிமளா.
“வந்ததிலிருந்து ஒழுங்காகச் சாப்பிடுவதும் இல்லை. மூன்று பேர் இருக்கிறீங்க. அதோடு மாமாவும் உதவிக்கு இருக்கிறார். ஆனால் கஷ்டமான வேலைகளையெல்லாம் என் பையன் தலையில் சுமத்தி விடுவீங்க. பாவம் அவனும் தான் என்ன செய்வான்? இடையிடையே பெரியவன் குடும்பகாரன் என்று சொல்லிச் சொல்லியே இவனை இலண்டன் ஃப்ரான்ஸ் என்றும் அலைய விடுவீங்க” அங்கலாய்த்த மனைவியைப் புன்னகையுடன் பார்த்தார் ராஜசேகர்.
“இவன் உங்க பிள்ளை சரி. அப்போ ஆதியும் ஆர்த்தி யார் பிள்ளைகள்??” விஷமமாகக் கேட்ட கணவரை முறைத்தவர்,
“நீ முதல் இந்தப் பாலைக் குடி ராஜா…முகமெல்லாம் சோர்ந்து போய்க் கிடக்கு.” கரிசனையுடன் சொல்லிக்கொண்டே தன் செல்ல மகனுக்கு பாலைக் கொடுக்க, புன்னகையுடன் வாங்கிக் கொண்டவன்,
“அப்போ, ஆர்த்தி போய் வரட்டும் என்னப்பா?” விடாது அதிலேயே நின்றான்.
மங்களா ஜுவல்லரி, இவர்களின் துர்கா ஜுவல்லரி அளவிற்கு பெரிதானதும் பழமையானதும் இல்லையென்றாலும், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. அது தவிரவும் ரியல் எஸ்டேட்டிலும் அவர்கள் நன்றாகவே உழைக்கிறார்கள்.
தொழிலில் இவர்களுடன் போட்டி போடுமளவிற்கு அவர்கள் இல்லையென்றாலும், ஒரே இடத்தில் இருக்கும் இரு குடும்பங்களுக்கும் ஒருவகைப் பனிப்போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது தொடங்கி பல வருடங்களாயிற்று.
ஆனால் சிறுவயதில் இருந்து ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்து வரும் ஆர்த்தியும், மங்களா ஜுவல்லரி வீட்டு சிறிய மகள் சுருதியும், பெரியவர்களின் முகம் திருப்பல்களை உணர்ந்து கொள்ளக் கூடிய வயது வருமுன்னே நட்பினால் இணைந்து விட்டார்கள்.
சின்னஞ் சிறுவயதில் தொடங்கிய அவர்களின் நட்பு, இன்று வரை மிகவும் அழகாக போய்க் கொண்டிருக்கின்றது .
ஆரம்பத்தில் அதைத் தடுத்துப் பார்த்த இரு பகுதிப் பெரியவர்களுமே, ஒரு கட்டத்துக்கு மேல் அமைதியடைந்து விட்டார்கள்.
ஆனால் வீடுகளுக்கு விஷேசங்களுக்கு என்று தத்தம் பிள்ளைகளை அனுப்புவதில்லை.
சாதாரணமாக எதையும் மனதில் வைத்துச் சாதிக்கும் குணமற்ற ராஜசேகரும் பரிமளாவும், நாட்கள் செல்லச் செல்ல அவர்களுடன் பழகியும் இருப்பார்கள். அந்தளவுக்கு பகைமை பாராட்டக் கூடியவாறு அவர்களுக்கும் இவர்களுக்கும் மனஸ்தாபம் எதுவும் நேரடியாக இல்லை.
ஆனால், அங்கு ராஜம் அதற்கு கொஞ்சமும் தயாரில்லை. ராஜத்தின் கணவர் சேகர் ஒரு அப்பாவி மனுஷன். நகைக் கடை முழுமையாக மனைவியின் மேற்பார்வையில் நடக்க, அவர் தன் ரியல் எஸ்டேட் தொழிலில் கவனம் செலுத்தி வந்தார். இவர்களை காணும் இடங்களில் மென் முறுவலுடன் நகர்ந்து விடுவது அவர் வழக்கம். ஆனால் ராஜம் தான் ஒருவகை இகழ்ச்சிப் பார்வையை இவர்கள் மீது வீசி விட்டுப் போவார். அப் பார்வையை எதிர்கொள்ளும் போதெல்லாம் ராஜசேகருக்கு இரத்தம் கொதித்து அடங்கும்.
மகனுக்குப் பதில் கூறாமல் அமைதியாகி விட்ட கணவனைப் பார்த்த பரிமளா, “பாவம்பா சுருதிப் பொண்ணு. நல்ல பிள்ளை. பெரியவர்கள் ராங்கிக்கு சின்னவள் என்ன செய்வாள்? சும்மா உப்புச் சப்பில்லாத காரணங்களுக்காக அந்தம்மா சிலுப்பிக் கொண்டால்..” சொன்னவரை ராஜசேகரின் விழிகள் முறைத்தன.
ஆனால் அதைப் பொருட்படுத்தாத பரிமளா, “ராஜத்தின் இரு பெண்களுமே நல்ல பிள்ளைகள் தான்.” என்ற மனைவியை இப்போது கூர்மையாகப் பார்த்தவர் ,
“நான் இப்போது அந்தப் பெண்கள் நல்லவர்களில்லை என்று சொன்னேனா? இல்லையே! ஆர்த்தி அங்கு போனாலும் அந்தம்மா ராஜம் இவளைப் பார்த்து முறைக்கும், அது நம்ம பொண்ணுக்குத் தேவையா சொல்லுங்க பார்ப்போம்?” தன் விருப்பமின்மையை வெளிப்படுத்தினார்.
இரு குடும்பங்களுக்கும் முகம் திருப்பிக் கொள்வதன் காரணம் சில வருடங்களுக்குப் பின்னரே பரிமளாவுக்குத் தெரிய வந்தது.
ஆனால் இப்போ யோசித்துப் பார்க்கையில் தேவையில்லாமல் எப்பவோ நடந்ததைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதாகவே அவருக்கு தோன்றியது.
“என் பெண்ணை அங்கு விட எனக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை தான், சரி அதைப் பற்றி பிறகு யோசிப்போம் எழில்.” சொல்லிக்கொண்டே ராஜசேகர் எழுந்து செல்ல, அதுவரை மறைந்து நின்று இவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஆர்த்தி, “அப்போ போக முடியாதாண்ணா…” கேட்டுக் கொண்டே கூம்பிய முகத்துடன் தமயனருகில் வந்தமர்ந்தாள்.
“ஒரு பிறந்தநாள், ஒரு விஷேசம் எதற்குமே நீங்க விடமாட்டீங்க என்று தானே நாங்களும் கேட்பதில்லை. இது அவர்கள் வீட்டிலும் இல்லையண்ணா, முதல் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் வருவார்கள்..நான் மட்டும்..” கண்கள் கலங்கிய தங்கையை ஆதரவாகப் பார்த்தவன்,
“இன்னமும் வேண்டாம் என்று அப்பா சொல்லவில்லையே ஆர்த்தி! அதற்குள்…” கடிந்து கொண்டவனின் நினைவில் ,
“நானும் உங்க தங்கையுடன் அங்கு போகலாமா எழில்? ப்ளீஸ் எழில். ஏற்பாடு செய்யுங்களேன். உங்களைத் தான் மலை போல நம்பி இருக்கிறேன்.” கிட்டத்தட்ட தன் இயல்பையும் மீறித் திரும்பத் திரும்பக் கேட்ட ஏஞ்சலின் முகம் வந்து சென்றது.
“போகலாம் ஆர்த்தி. நான் அப்பாவிடம் பேசி அனுமதி வாங்கித் தருகிறேன்டா. நீ போய்ப் படிக்கின்ற வேலையைப் பார்.” முடிவாகச் சொன்னவன் தாயிடம் திரும்பி,
“அப்படி என்னம்மா அவர்களுக்கும் நமக்கும் பிரச்னை?! அவர்கள் பேச்சு வந்ததும் அப்பாவின் முகம் மாறியதை நானும் கண்டேன். ஏதாவது பிரச்சனையா? உங்களுக்குத் தெரியுமாம்மா?” கேட்கும் போதே தாயின் முகமாற்றத்தைப் பார்த்தவன்,
“சொல்லுங்கம்மா என்ன விஷயம்?” கொஞ்சம் அழுத்தமாகவே கேட்டான்.
“ச்சே ச்சே…அப்படியெல்லாம் ஒன்றுமில்லையடா. அவர்கள் யாரோ நாம் யாரோ. எல்லாம் தொழில் போட்டி தான், வேறு என்ன?” என்றவர்,
“அட, மறந்தே போனேன். ஆதி பிரஷர் மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வந்தான். அதை அத்தையிடம் கொடுக்க மறந்து விட்டேன். அவர்களும் நாளை ஊருக்குப் போக இருக்கிறார்கள். நேரத்தோடு படுத்து விடுவார்கள். நீ நிறைய நேரம் முழிகாது படு ராஜா.” என்று மகனிடம் சொல்லிக்கொண்டே, மகன் குடித்து முடித்து வைத்த பால் கப்பையும் எடுத்துக்கொண்டு எழுந்தவர், அப்போதும் முகம் சிணுங்க அங்கே அமர்ந்திருக்கும் மகளைப் பார்த்து,
“நீயும் தான் போம்மா, படிப்பதென்றால் படித்து விட்டு படு.” மகளுக்கும் சொன்னவர் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
“போடா போ..நீ கட்டாயம் அங்கு போகலாம்.” தங்கையின் தலையை பாசமாக வருடிச் சொன்னவன், அவள் எழுந்து சென்றதும் கண்களை இறுக மூடிக் கொண்டு இருக்கையில் சாய்ந்தமர்ந்து கொண்டான்.
ஏஞ்சலைக் கண்ட கணத்தில் இருந்து தன் மனதில் உருவாகும் பல்வகை உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருப்பவனுக்கு, அவளைப் பற்றித் தன் பெற்றோர்களிடம் சொல்லி விட வேண்டும் போல மனதுள் பரபரப்பாக இருந்து.

error: Alert: Content selection is disabled!!