நீயென் சொந்தமடி 6 – 2

ஆனாலும், அவளைப் பற்றி நினைத்ததும் மனதுள் தோன்றும் முன்னுக்குப் பின்னான எண்ணங்களைச் சரி வர அறிந்து கொள்ளாமல் பெற்றோர்களிடம் கதைப்பதில்லை என்றே இறுதியில் முடிவு செய்தான்.
‘சில வருடங்களாக அவள் மனோவுக்கு பழக்கமுடையவள் என்றால் அவனுக்கு அவள் பற்றி நிச்சயம் தெரிந்திருக்குமே!’ என்று நினைவில் வந்ததும் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தவன், கணமும் தாமதியாமல் மனோவை கைபேசியில் அழைத்தான்.
****
முணுமுணுத்துக் கொண்டே வந்து நண்பனின் அருகில் ஏறி அமர்ந்தான் மனோ.
“ஏன் மச்சான், உனக்கு இப்போ என்ன தான் பிரச்சனை? ஏன்டா, நான் கேட்கிறேன் என்று குறை நினைக்காதே…” என்று தொடங்கியவனை, ‘என்ன சொல்ல வருகிறாய்?’ என்ற பாவனையில் அசட்டையாக ஏறிட்டான் எழில்.
அவன் பார்வையைப் பார்த்து முறைத்த மனோ, “காலேஜ் முடிஞ்சு இவ்வளவு காலமாக என் வீட்டுப் பக்கம் வந்திருக்கின்றாயா? நான்கு வார்த்தைகள் ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் ஃபோனில் கதைப்பதோடு சரி. அப்படியிருக்க இப்போ மட்டும் என்ன புதிதாக என் வீட்டையே சுற்றிச் சுற்றி வருகிறாய்? அதுவும் நேரகாலம் இல்லாமல்…’’ ஒரு மாதிரிக் குரலில் கேட்ட நண்பனுக்கு, சட்டென்று பதில் சொல்லாது காரைச் செலுத்துவதில் கவனத்தைச் செலுத்தினான் எழில்.
சிறிது பொறுத்து, “ஆமாடா ஆமா. ஏஞ்சல் உன் வீட்டில் இருப்பதால் தான் உன்னிடம் வருகிறேன். அதற்கு இப்போ என்ன என்கிறாய்? வர வேண்டாம் என்று சொல்லப் போகின்றாயா?” திருப்பிக் கேட்டனை,
‘ஆங்…அப்படி வா வழிக்கு..’ என்ற பாவனையில் ஓர் பார்வை பார்த்தான் மனோ.
“மச்சான் வேண்டாம்டா. நீ அவளுக்காகத் தான் வருகிறாய் என்று எனக்குத் தெரியும்டா. ஆனால், நீ ஏன்டா இப்படி ஆகிவிட்டாய்??” வியந்தவனை முறைத்தவன், அடுத்து சொன்னதைக் கேட்டதும் மனோவின் கண்கள் தெறித்து விடுமளவுக்கு விரிந்தன.
“என்ன மச்சான் சொல்கின்றாய்?! உங்க மாமாவின் அம்மா கோமதிப் பாட்டியின் சாயலில் ஓவி இருக்கிறாளா?” மீண்டும் தானே கேட்டுக் கொண்ட மனோவின் உள்ளத்தில் ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகள் கொண்டு வெளிப்படுத்த முடியாது.
“மச்சான் அப்படியென்றால்…ஸ்வேதாவின் பாட்டியின் சாயலும் ஓவியாவின் சாயலும் ஒத்திருக்கு என்று சொல்கின்றாயா??” மீண்டும் அதிர்வுடன் சந்தேகம் கேட்டவனை, ‘ஆமென்பதாக’ தலையசைப்புடன் பார்த்திருந்தான் எழில்.
ஏஞ்சல் ஆரம்பத்தில் ஃப்ரான்ஸிலிருந்து அவள் பெற்றோர்களுடன் வந்து பெரியார் இல்லத்துக்கென பல உதவிகள் செய்த பொழுது, வசதியைக் கொடுத்த இறைவன் நல்ல மனதையும் கொடுத்திருக்கிறான் என்று நினைத்த மனோவிற்கு, எல்லோரையும் போலவே ‘இவர்கள் பெண்ணா இவள்?!’ என்ற சந்தேகமும் உடன் எழுந்தது.
அதன் பின்னர், இதே இல்லத்திலிருந்து ஃப்ரான்ஸ் தம்பதியினர் கைகுழந்தையாக இவளை தத்தெடுத்துச் சென்றதை தன் தாயின் மூலம் அறிந்து கொண்டான் அவன்.
அதோடு, தன்னைப் பெற்றவர்கள் யார் என்று அறியும் ஆவலில் அவள் இந்தியா வந்துள்ளதை அறிந்த போதும், அதனைத் தொடர்ந்து அவள் எவ்வளவோ முயன்றும் அதனை அறிய முடியாமல் போன போதும், அவளுள்ளே இருந்த ஏக்கத்தை ஒரு நண்பனாக அறிந்து கொண்டவன், ‘அவளைப் பெற்றவர்கள் கிடைக்க மாட்டார்களா?’ என்று எவ்வளவோ ஏங்கியிருக்கிறான்.
எவ்வளவு நட்புடன் உரிமையாகப் பழகினாலும், ஒரு எல்லை வைத்தே பழகும் ஏஞ்சலின் மனதில் உள்ளதை முழுமையாக அறிந்து கொள்ள முடியாவிட்டாலும், அவள் மனதில் வாடுவதைப் புரிந்திருக்கிறான் மனோ.
அந்த வாட்டம் பாசத்துக்காக ஏங்கியது போல அவனுக்குத் தெரியவில்லை என்றாலும், தான் பிறந்த சூழலையும், தன்னை ஒதுக்கிய காரணத்தையும் அறிந்து கொள்ளவே அவள் விரும்புகிறாள் என்பதை நன்கறிந்திருந்தான்.
ஒரு குழந்தை அநாதை ஆக்கப்படும் பலவேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தன்னை பொருத்திப் பார்த்து, ‘என்னைப் பெற்றவள், எந்த மனநிலையில் என்னை தூக்கிப் போட்டிருப்பாள்?’ என்று அறிந்து விட வேண்டும் என்று அவள் துடிப்பதை உணர்ந்திருந்தான்.
இப்போதும் பாரதி அம்மா எதுவோ சொல்லி அவள் வேதனையில் வாடுவதை இயலாமையுடன் பார்த்திருந்தவனுக்கு, நண்பன் சொன்னதைக் கேட்க மிகவும் மகிழ்வாக இருந்தது.
‘ஆனால்?’
அடுத்த கணம் அவன் முகத்தில் கரு நிழல் படிந்தது.
‘இவன் குடும்பமே பெரிய செல்வந்தகுடும்பம். இவனின் அத்தை கல்யாணம் செய்த கோமதிப் பாட்டி குடும்பமும் இப்போது மிகவும் நல்ல நிலையில் தான் இருக்கிறார்கள். எப்பவோ அவர்கள் குடும்பத்தில் அப்படியேதும் நடந்திருந்தாலும், குழந்தையை தூக்கிப் போட்டவர்கள் இனி இதைக் கேள்விப்படும் போது எப்படி எதிர் கொள்வார்கள்? இவற்றை நினைத்துப் பார்க்காமலேயே ஏஞ்சலைப் பற்றி அறிய நினைக்கின்றானா இவன்?!’ தன்னுள்ளே கேட்டுக் கொண்டவன், தன்னையே பார்த்திருக்கும் நண்பனை ஏறிட்டான்.
தான் சொன்னதும் மனோவின் முகத்தில் வந்து போன உணர்வுகளை உன்னிப்பாகப் பார்த்திருந்த எழில், “சொல்லுடா மனோ, ஏஞ்சல் யார்? அவள் அம்மா அப்பா யார்? அவளைப் பற்றி உனக்குத் தெரிந்தவற்றை மறைக்காமல் சொல்லுடா மச்சான். என்னை உனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். என்னால் அவளுக்கு ஒரு கெடுதலும் வாராது.” சொல்லி நிறுத்தியவன், யோசனையாகப் பார்த்திருக்கும் நண்பனிடமிருந்து எப்படி அவளைப் பற்றி அறிவது என்று தடுமாறினான்.
“மனோ, அவளைக் கண்ட அந்தக் கணத்தில் இருந்து நான் என்ன பாடு படுகிறேன் தெரியுமா? வேண்டும் என்றால் கோமதிப் பாட்டியின் ஃபோட்டோ காட்டுகிறேன்டா, அவர் அப்படியே இளம் வயதில் ஏஞ்சலைப் போலவே இருந்திருப்பார்டா.” என்றவனிடம் அவளைப் பற்றிச் சொல்ல முடிவெடுத்தான் மனோ.
“மச்சான், ஒவியாவைப் பற்றி நான் இப்படிக் கதைப்பதே பிழை.” சொல்லி நிறுத்தியவன், சிறிது நேரம் மௌனம் காத்தான். ஆனால் அதைப் பொறுக்க முடியாத எழில், “என்னடா பிழை? இப்போ என்ன சொல்ல வருகின்றாய்?” பதற்றத்துடன் வினவினான்.
நண்பனின் பதற்றத்தை மனதில் குறித்துக் கொண்டே, “என்றாலும் நீ என் நண்பன். அதையும் விட இதன் மூலம் அவளுக்கு ஒரு நன்மை நடந்து அவள் மனநிம்மதியோடு சந்தோசமாக வாழ்ந்தால், அதைப் பார்த்து மகிழும் ஆட்களில் நானும் ஒருத்தன்டா.” என்றவன் மீண்டும் அமைதி காத்தான்.
“டேய் மச்சான், சொல்ல வருவதை சொல்லி விட்டு இருடா..” அவசரப்பட்ட எழிலைத் தீர்மானமாக ஏறிட்டவன், “நீ சொல்வதைப் பார்த்தால்…மச்சான் நீங்க பெரிய..” தடுமாறியவன், “இப்போ இதைத் தெரிந்து என்ன செய்யலாம் என்று எண்ணுகின்றாய்?” அவள் பற்றி அவனிடம் சொல்ல நினைத்தாலும், மிகவும் தயங்கினான் மனோ.
“என்னடா இப்படிக் கேட்கிறாய்? நான் தான் சொல்கிறேனே, அவள் உருவம் எப்படி கோமதிப் பாட்டியோடு ஒத்துப் போகும்?! எனக்கு அது தெரிய வேண்டும் மச்சான். நீ விளையாடாதே! மறைக்காமல் உண்மையைச் சொல்லவில்லையோ, நான் அவளிடமே நேரில் கேட்டுக் கொள்கின்றேன்.” உன்னிடம் கெஞ்சிக் கொண்டிருக்க விருப்பமில்லை, அதேவேளை அறியாமலும் விடமாட்டேன் என்றவகையில் வந்தது எழிலின் பதில்.
அதன் பின் தனக்குத் தெரிந்ததை மறைக்க நினைக்கவில்லை மனோ. அவள் பற்றிய விபரங்களைச் சொன்னவன், கொசுறாக அவளுக்கு இன்னமும் திருமணமே நடக்கவில்லை என்பதையும், அதையும் கூட தன்னைப் பெற்றவர்கள் பற்றி அறிந்து கொண்ட பின்னரே தன்னால் திருமணம் பற்றி நினைத்தே பார்க்க முடியும் என்று அவள் சொல்லி இருப்பதையும் சொல்ல, கேட்டிருந்த எழிலோ அதிர்ந்து தான் போய் விட்டான்.
“மச்சான், உரிமை கொண்டாடவோ ஏன் என்னைத் தூக்கிப் போட்டாய் என்று சண்டை போடவோ தேடவில்லையடா. ஒருதரம் பார்த்து விட வேண்டும் என்று மனம் துடிப்பதாகச் சொன்னாள். அதோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் தான் உதவலாம் என்றும் சொன்னாள்.” என்று சொன்ன மனோவையே வெறித்துக் கொண்டிருந்தான் எழில்.
அவன் மனமோ ‘ஏஞ்சல் யார்?’ உரத்துக் கேள்வியெழுப்பியது.
‘வேணு மாமா வீட்டுக்கும் இவளுக்கும் எப்படித் தொடர்பு? கோமதிப் பாட்டிக்கு இரண்டே பிள்ளைகள் தான். ஒன்று வேணு மாமா அடுத்தது ஷீலா ஆன்ட்டி. இவர்களில் யாருக்கு இவள் சொந்தம்? இல்லையென்றால்…எந்தவித சொந்தமும் இல்லாமலேயே இவர்களுள் உருவ ஒற்றுமை இருக்கின்றதா? முதல் அது சாத்தியமா? அதுவும் இந்தளவுக்கு!’ கேள்வி மேல் கேள்வியாக உள்ளத்தில் எழ குழம்பிப் போனவன், தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே இருந்து விட்டான்.

error: Alert: Content selection is disabled!!