அத்தியாயம் 7.
ஏஞ்சலை மாயாஜாலுக்கு அழைத்து வந்திருந்தான் எழில்.
“ஏன் எழில் கட்டாயமாக சேலை தான் கட்டிக்கொண்டு போக வேண்டுமா? அதெல்லாம் என்னால் முடியவே முடியாது” என்று சொல்லி தன் சிறு விருப்பத்தை சட்டென்று மறுத்து விட்டாள் என்ற மனச்சுணக்கம் இருந்தாலும், அழகிய டிசைனர் சல்வாரும் அதற்குப் பொருத்தமான சிறு சிறு அணிகலன்களையும் வாங்கியவளின் அருகில் அமைதியாக நின்றிருந்தான் எழில்.
“எழில் உங்க சிஸ்டருக்கு ஏதாவது வாங்கப் போறீங்களா?” கேட்டவளுக்கு மறுப்பாகத் தலையசைத்தவன்,
பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியில் வந்து, “சரி அப்போ, தாகமாயிருக்கு ஏதாவது குடிப்போமா?’ என்றவளுடன் அருகில் இருந்த ரெஸ்ட்டாரன்ட்டினுள் சென்றமர்ந்தான்.
ஃப்ரான்ஸிலிருந்து வந்த அடுத்த நாளிரவு மனோவுடன் கதைத்ததில் இருந்து, இவன் மனம் அவளருகில் மிகவும் ஆசையாக செல்லத் துடிகின்றது.
இவளுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்பதையும், விமான நிலையத்தில் கண்டவர்கள் இவளின் சிறுவயதுத் தோழனும் அவன் மகளும் என்பதையும் மனோ வாயிலாக அறிந்து கொண்டவன், அதைத் தெரிந்து கொண்டது போல காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், முன்னர் அவளருகில் செல்லத் தடுமாறிய மனதுக்கு முயன்று தடை விதித்திருந்தவன், இப்போது அந்தத் தடையை இலாவகமாக நீக்கி விட்டிருந்தான்.
இப்படி, கண்ட கணத்திலிருந்து அவன் சிந்தை முழுவதும், வெவேறு வடிவங்களில் அக்கிரமித்திருந்த ஏஞ்சலின் மீதான இவனின் இந்த நெருக்கத்துக்கு கூடுதல் வலுச் சேர்த்தது இன்னுமொரு விடயம்!
அன்று இரவு தன் தாயிடம் இவள் குமுறியதை நண்பனிடம் கூறியிருந்தான் மனோ. பாரதி அம்மா அப்படி என்னதான் இவளிடம் சொன்னார் என்று எப்படி அறிந்து கொள்வது எனக் குழம்பித் தவித்த மனோவும் எழிலும், கோமதிப் பாட்டிக்கும் இவளுக்கும் எந்த விதத்தில் தொடர்பிருக்கலாம் என்று மாறி மாறிக் கேட்டுக் குழம்பிக் கொண்டிருந்தனர்.
மலர்வாக வந்தவளின் சோர்ந்து கலங்கிய தோற்றத்தில் வாடிய எழில், அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கையில் அவனெண்ணத்தில் மின்னலாக ஒரு விடயம் பளிச்சிட்டது.
அன்று கடற்கரைக்குப் போவோம் என்று புறப்பட்ட போது மிகவும் சோர்ந்திருந்தவளை இவன் கவனித்துக் கொண்டே தான் வந்தான். அப்பொழுது அந்த அழைப்பிதழைக் கண்டதும் இவள் முகத்தில் மாறி மாறி ஏற்பட்ட உணர்வுகளைப் பார்த்தவனுக்கு, அப்போது அதைப் பற்றி பெரிதாக ஆராயத் தோன்றவில்லை.
ஆனால் ஆறுதலாக யோசித்துப் பார்க்கும் பொழுது, ‘தனியே நடிகையை பார்ப்பதற்காகவா அங்கு போக நினைக்கிறாள்?!’ என்ற கேள்வி இவனுள் எழுந்தது. அதுவும் என்னதான் என்றாலும், ‘பெரிதாக தமிழ் புரியாதவள், முழு வெளிநாட்டுக்காரியாக வளர்ந்தவளுக்கு தமிழ் நடிகையைப் பார்ப்பதில் இவ்வளவு ஆர்வமா?!’ என்று வியப்பாக இருந்தது.
இதை மனோவிடம் சொல்ல, “எனக்கு அது அப்போ தோன்றவில்லையேடா!” வியந்தவன், “ஆனால் ஓவி போன முறை வந்திருந்த பொழுது அந்த நடிகையின் படத்தை ஆவலாகப் பார்த்தாள்டா..” அப்போதும் சந்தேகமாக இழுத்தவன்,
“மச்சான், நீ சொல்வது சரி தான்டா! அவள் அந்த அழைப்பிதழையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்து, நான் தட்டி அழைத்த பிறகு தான் இறங்கினாள் இல்லையா? ம்ம்ம்…எதுவோ இருக்குடா..” நண்பனின் கூற்றை ஏற்றுக் கொண்டான்.
அதன் பிறகு எழில் கொஞ்சமும் ஓய்ந்திருக்கவில்லை. அடுத்த நாளே துப்பறியும் நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கும் தன் நெருங்கிய நண்பனை அணுகியவன், மங்களா ஜுவல்லரியினதும் கோமதிப் பாட்டியினதும் குடும்ப விபரங்களைக் கொடுத்து, அவர்களுக்குள்ளே ஏதாவது தொடர்பிருந்துள்ளதா என்று ஆராயச் சொல்லி இருந்தான்.
அதற்கான விடையை “எவ்வளவு விரைவாக முடியுமோ தருகிறேன்” என்ற இவன் நண்பன், தான் சேகரித்திருந்த தகவல்களையும் தன் ஊகங்களையும் இருநாட்களிற்கு முன்தான் இவனிடம் தெரிவித்திருந்தான்.
அதை அறிந்ததில் இருந்து முற்று முழுதான அதிர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்தான் எழில்.
கோமதிப் பாட்டிக்கு இருப்பதோ இரு பிள்ளைகள். அதிலும் அவன் மாமா வேணு ஒரு அப்பிராணி. தன் தாய் கீறிய கோட்டைத் தாண்டிப் பார்க்கலாமா என்பதைக் கனவில் கூட யோசிக்கப் பயப்படுபவர் அவர் என்பதை நன்கறிந்திருந்தவனால், அவர் மேல் சந்தேகம் கொள்ள முடியவில்லை. அதோடு தன் அத்தை ஸ்ரீமதி மீது வேணுவிற்குள்ள பிரியத்தின் அளவையும், மகள் ஸ்வேதா மீது வைத்துள்ள பாசத்தையும் மிக நன்றாக அறிந்திருந்தவன், தன் சந்தேக லிஸ்டிலிருந்தே அவரை நீக்கி விட்டிருந்தான்.
அதேவேளை வேணுவின் தங்கை ஷீலாவும் மிகவும் நல்ல அன்பான பெண்மணியே! அதனால் அவரையும் தப்பான கண்ணோட்டத்தில் அவனால் பார்க்க முடியவில்லை. ‘அப்போ, பாட்டியின் சொந்தங்களில் வேறு யாராவது ஏஞ்சலுடன் தொடர்பு பட்டிருப்பார்களோ?! என்றே அவன் மனம் நினைத்துக் குழம்பியது.
அப்படியிருக்குமோ இப்படியிருக்குமோ என்று பாதகங்களை விலக்கி சாதகமாகவே சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு, நண்பன் தந்த தகவல்கள் ‘உன் நம்பிக்கை பொய், இதுதான் உண்மை.’ என்று நெற்றியில் அடித்துச் சொன்னதில், இப்போது மனதில் கோப அலைகள் முட்டி மோதி ஆர்ப்பரிக்கத் தொடங்கியிருந்தன.
அதனிடையில் தனக்கும் ஸ்வேதாவுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்ற பெரியவர்களின் ஆர்வமான பேச்சு நினைவில் வந்து மெல்ல எட்டிப் பார்த்தது. திருமணம் பேசி முடித்ததும் ஒருவித கர்வத்தில் மின்னிய கோமதிப் பாட்டியின் முகம் அவனுள் கொந்தளித்துக் கொண்டிருந்த கோப அலைகளுள் சிக்கித் தத்தளிக்கத் தொடங்கியது. அதே நேரம் ஏஞ்சல் விடயத்தில் தான் இவ்வளவு ஆழமாக ஈடுபட்டதன் காரணமும் அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புலப்பட்டது.
இத்தனை நாட்களில் ‘காதல்’ என்ற உணர்வு அவனைத் தீண்டியதில்லை. அவனும் தீண்டிப் பார்க்க முயலவில்லை. ஆனால் இந்த சில நாட்களாக அந்த உணர்வில் தன்னைத் தானே தொலைத்து நின்றதை உணர்ந்து கொண்டான் எழில்.
காதல்…கொஞ்சமும் எதிர்பாராமல் அவன் வழியில் திடீரென்று குதித்து விட்டதையும், தன்னில் இரண்டறக் கலந்து விட்டதையும் தெளிவாக உணர்ந்து கொண்டதும், இதுவரை சொல்லிக் கொண்ட சாட்டுக்களையும் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டதையும் மீறி, ஏஞ்சலைத் தன்னுடையவள் என்று எண்ணத் தொடங்கி விட்டது அவன் மனம்.
அதற்கு அவளின் ஒப்புதலையே அவன் மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. அப்போ மற்றவர்கள்??
அவளைக் கண்டது முதல் தடுமாறிக் கொண்டிருந்த அவனுள்ளம் இப்போது தன்னை முழுவதுமாக உணர்ந்து கொண்டதில் மெல்ல மெல்ல அமைதி அடைந்து, இனிச் செய்ய வேண்டியது என்ன என்பதை நிதானமாக யோசிக்கத் தொடங்கியிருந்தது.
தான் அவளைப் பற்றி அறிந்து கொண்டதை அவளுடன் பகிர நினைத்தாலும் கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது அவனுக்கு. மனதால் அவளை நெருங்கியிருந்தாலும் உண்மையில் அவள் குணத்தைப் பற்றி தனக்கு அவ்வளவாகத் தெரியாது என்பதால், ‘இதையெல்லாம் அவள் எந்த மாதிரி எடுத்துக் கொள்வாளோ?’ என்று நினைத்துக் கொண்டவன், தன் காதலையும் அவளிடம் சொல்லத் தயங்கினான் என்று தான் சொல்ல வேண்டும்.
பார்த்து இவ்வளவு குறுகிய நாட்களில் தினமும் சில மணிநேரங்கள் பழகியதில், ‘உன்னை உயிராக காதலிக்கிறேன் என்று நான் உண்மையச் சொன்னாலும், அவள் அதை எப்படி எடுத்துக் கொள்வாளோ! அவள் மனம் பற்றிச் சிறிதும் தெரியாது, எப்படிக் கதைப்பது?’ என்று மிகவும் குழம்பி நிற்கின்றான் இவன்.
அதோடு தன் வீட்டில் இவள் பற்றியும் தன் மனதைப் பற்றியும் சொல்லிவிடத் துடித்தாலும், அவர்களிடம் சொல்வதற்கு முன் இன்னமும் இந்த விடயத்தை ஐயமற அறிந்து கொள்ள விரும்பினான்.
அதையும் நகைக் கடைத் திறப்புவிழாவிற்கு முனைப்புடன் போக இருக்கும் ஏஞ்சலை வைத்தே தெரிந்து கொள்ள முடிவு செய்திருந்தவன்,
தமையனிடம் உடனேயே பகிர்ந்து கொள்ளத் துடித்தான். ஆனால் ஆதியோ இருநாட்களாக வெளியூர் சென்றிருந்தவன் இன்று மாலை தான் திரும்ப இருக்கிறான். ‘வந்ததும் சொல்லிவிட வேண்டும்,’ என்று நினைத்துக் கொண்டே அண்ணனுக்காகக் காத்திருக்கிறான் எழில்.
அடுத்து, திறப்பு விழாவிற்கு ஏஞ்சலை அழைத்துப் போகப் போகும் தங்கையிடம் இவளை அறிமுகம் செய்ய விரும்பினான் எழில். ‘ஏஞ்சலை கண்டதும் என்னைப் போலவே அவளும் அதிர்ந்து பின்னர் கேள்விக் கணைகளை என்னை நோக்கி வீசத் தொடங்கி விடுவாளே!’ என்று எண்ணிக் கொண்டவன், ஆர்த்தியிடம் எப்படிச் சொல்வது என்று குழம்பிக் கொண்டிருக்கிறான்.
“என்ன என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறீங்க எழில்? உங்க ஐஸ் உருகுது.” புன்னகையுடன் சொன்னவளை விட்டுத் தன் விழிகளை விலக்கிக் கொள்ள நினைக்கவில்லை அவன்.
அவனின் நேரான பார்வையைத் தாங்கிக் கொள்ள சஞ்சலப்பட்டு மெல்லத் தன் பார்வையை பக்கவாட்டில் திருப்பிக் கொண்டாள் ஏஞ்சல்.
‘இப்போ ஏனிப்படி ஒரு மாதிரி பார்க்கிறார்? இடைக்கிடையில் இப்படிப் பார்த்து வைக்கிறார்!’ மனதில் நினைத்துக் கொண்டிருந்தவளை அவன் குரல் மீண்டும் அவனை நோக்க வைத்தது .
“உங்க கணவரும் மகளும் சுகமாக இருக்கிறார்களா ஏஞ்சல்?” திடீரென்று மிகவும் சாதாரணமாக அவன் கேட்டதும் புரையேறியது அவளுக்கு.
“லூகாஸ் நினைக்கிறார் போல.” அவனின் கேலியைப் புரிந்து கொள்ளாமலேயே சிரிக்கத் தொடங்கியிருந்தாள் அவள்.
‘முதன் முதல் விமானத்தில் இவள் கலகலத்துச் சிரித்த போதிருந்த உயிர்ப்பும் துடிப்பும் இப்போது நிச்சயமாக இல்லை தான்.’ இவன் மனமோ கணத்தில் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டது.
அந்த அழகிய விழிகளின் ஆழத்தில் படர்ந்துள்ள வலியின் சாயலைத் துடைத்து விட இவன் மனம் ஆவல் கொண்டது.
வெகுவாக முயன்று இயல்பாக இருப்பது போல காட்டிக் கொள்கிறாள் என்பதை அவனால் நன்றாக உணர முடிந்து, அவள்பால் உள்ள அவன் நேசத்தை அது அதிகரித்தது.
“ஹைய்யோ எழில்! அவன்…அது தான் லூகாஸ் என் சிறுவயது நண்பன். அவன் மகள் தான் சோஃபி. அன்று நீங்களாகவே அவர்களை என் கணவர் மகள் என்றதும் நானும் பேசாது விட்டு விட்டேன்.” என்று வெள்ளையாகச் சிரித்தவளை இமைதட்ட மறந்து பார்த்திருந்தான் எழில்.
“ஒஹ்…அப்போ உங்க பாய் ஃப்ரெண்ட் நினைக்கிறார் போல.” என்றவன் மனதில், ‘ஆமாம் என்று சொல்லி விடாதே!’ என்று தனக்குத் தெரிந்த தெய்வங்களை எல்லாம் கணப் பொழுதில் வேண்டி வந்தானோ என்றளவுக்கு, ஒருவகை பதற்றம் ஓடியது .
“ஹா..ஹா…அப்படியே என்னை நினைக்கும் பாய் ஃப்ரெண்ட்ஸ்..ம்ம்ம்… லூகாஸ் தான் அவனை விட்டால், மனோ மை ஸ்வீட் பாய் ஃப்ரெண்ட்…” சொன்னவளுக்கு ‘அடிப்பாவி’ என்று இவன் மனம் அலறியது கேட்காமல்,
“அடுத்து… ஏன் எழில் நீங்களும் தான் என் பாய் ஃப்ரெண்ட்.” இப்போது அவள் விழிகளில் நன்றாக குறும்பு வெளிப்பட்டு, சோர்ந்திருந்த அவள் முகத்துக்கு சோபை சேர்த்தது.

