நீயென் சொந்தமடி 8 – 1

அத்தியாயம் 8.

சருமத்தின் நிறத்தை பளிச்சென்று எடுத்துக் காட்டும் அடர் மரூன் வண்ண டிசைனர் சல்வார் மிகக் கச்சிதமாக அவளுடலைத் தழுவியிருந்தது.
சல்வாரின் முன்புறம் செய்யப்பட்டிருந்த வேலைப்பாடுகளில் இருந்த சிறு சிறு கற்களில் சூரிய ஒளிபட்டுத் தெறித்ததில், அவள் வதனத்தின் யௌவனம் இரட்டிப்பாகத் துலங்கியது.
தலையை வாரி அப்படியே விரித்து விட்டிருக்க, தோளின் இருபுறமும் மிகவும் உரிமையுடன் தவழ்ந்து கொண்டிருந்தன முடிக் கற்றைகள்.
மெல்லிய அலங்காரத்தில் இதழில் வழமையாக ஒட்டிக் கொண்டிருக்கும் புன்னகையுடன் வந்தாலும், அவள் விழிகள் வருத்தத்தில் நனைந்து ஒளிமங்கிப் போயிருப்பதாகவே தோன்றியது எழிலுக்கு!
மனதில் படிந்திருந்த வலியின் சாயலை மறைக்கப் பிரயத்தனப்படுகிறாள் என்பதை, அவளின் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடியான விழிகள் அவனுக்கு மிகவும் தெளிவாக உணர்த்தி நின்றன!
அந்த விழிகளில், மகிழ்வின் ஊற்றை மட்டுமே காண வேண்டும் என்ற ஆவல் அவனுள்ளத்தில் பேரலையாக எழுந்து ஆர்ப்பரித்தது.
இதுவரை, ஜீன்சும் டாப்புமாகக் கண்டிருந்தவனுக்கு இன்றைய இந்த அலங்காரத்தில் அழகுச் சிலையாகவே தெரிந்தாள் ஏஞ்சல். தங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவள் காரருகில் வந்த பின்னரும், அவளில் நிலைத்த விழிகளை அகற்ற மறந்திருந்தவனை, “அண்ணா..” என்ற தங்கையின் அழைப்பு உலுக்கியது.
மெல்ல சுதாகரித்துக் கொண்டே கதவைத் திறந்து இறங்கியவன், “மனோ காலேஜ் போய் விட்டானா ஏஞ்சல்?” கேட்டுக் கொண்டே, மறுபுறமிருந்து இறங்கி முன்னால் வந்த தன் தங்கையை ஏஞ்சலுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
புன்னகைத்துக் கொண்டே, “ஹலோ” என்று சொல்லிக் கொண்டு கையை தன் புறம் நீட்டிய ஏஞ்சலை பார்த்த ஆர்த்தியோ, “ஹைய்யோண்ணா!! அப்படியே கோமதிப் பாட்டி….” தன்னை மறந்து வியந்து சொன்னவளை,
“ஆர்த்தி” என்ற எழிலின் அழைப்பு அவன் புறம் திரும்பிப் பார்க்க வைத்தது.
அப்போதுதான் தன் தவறை உணர்ந்தவள், “தமிழ் விளங்குமா அண்ணா? இல்லை தானே..” என்றதும்,
“தெரியும். கொஞ்சம்..கொஞ்சம்…” என்ற ஏஞ்சலை ஆச்சரியமாகப் பார்த்து சட்டென்று சமாளிப்பாகப் புன்னகைத்தவள், “ஹாய், எப்படி இருக்கிறீர்கள்?” என்றவாறே அவள் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.
“நீங்க ரொம்பவும் அழகாக இருக்கிறீங்க. அதுவும் இந்த சல்வாரில் அப்படியே தேவதை போல இருக்கிறீங்க என்று சொன்னேன்…” என்றவளை, மெல்ல அணைத்துக் கொண்டாள் ஏஞ்சல்.
ஆர்த்தி தன்னைப் பார்த்து “கோமதிப் பாட்டி..” என்று சொன்னது புரிந்தாலும், அந்தப் பெயரை இதுவரை கேள்விப்பட்டிராதவள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல்,
“நீங்களும் தான்.” என ஆர்த்தியிடம் சொன்னவள், “எழில் உங்க தங்கை ரொம்பவும் அழகு!” என்றவாறே தன்னையே பார்வையால் வருடுபவனைப் பார்த்தவளின் முகம் இலேசாகச் செம்மையைப் பூசிக் கொண்டது.
‘என்ன மாதிரிப் பார்க்கிறார்! நம்மை சைட் அடிக்கிறாரோ?’ நினைத்துக் கொண்டே, “எப்படி இருக்கிறேன் எழில்? இந்த சல்வார் எனக்கு நன்றாக இருக்கின்றதா?” தன் பார்வையை உணர்ந்து அவள் கேட்டதும் தடுமாறினான் எழில்.
அடுத்த நொடி, விருப்பமே இல்லாமல் அவள் மீது ஒட்டிக் கொண்டிருந்த தன் பார்வையை விலக்கிக் கொண்டவன், “ம்ம்…நன்றாக இருக்கு. சரி வாங்க போவோம்.” நேரத்தைப் பார்த்துக் கொண்டே முன்னால் ஏறிக் கொள்ளப் போனவன்,
ஒரு கணம் நிதானித்து, மீண்டும் அவளை ஏறிட்டான்.
“ஏஞ்சல், ஆர் யு ஒ.கே?” அவன் குரலில் சட்டென்று அவனைப் பார்த்தவளின் விழிகள் இலேசாகக் கலங்கியதோ என்ற எண்ணம் வர முன்னரே, “ம்ம்ம்” முனகிக் கொண்டே ஆர்த்தியின் அருகில் ஏறி அமர்ந்து கொண்டாள் அவள்.

திறப்புவிழா நடக்கவிருக்கும் புது நகைக் கடைக்கருகில் சென்று காரை நிறுத்தி, “சரி ஆர்த்தி, இங்கு முடிந்ததும் எனக்கு கால் பண்ணு.” என்றவன், தலையசைப்பால் ஏஞ்சலிடமும் விடைபெற்றவாறே காரைக் கிளப்பினான்.
இந்த சில நாட்களாக எழிலின் பார்வை வீச்சைத் தாங்கிக் கொள்ளும் பொழுது தன்னுள்ளே நிகழும் மாற்றங்களை ஒருவித இதத்துடன் உணர்ந்து கொள்ளும் ஏஞ்சல், ‘இதெல்லாம் இப்போது தேவையா? முதல் நமக்குப் பொருத்தமாக இருக்குமா?’ என்ற கேள்வி எழுந்ததும் அதைப் பற்றி கணக்கெடுக்காது அசட்டையாகவே இருந்து வந்தாள்.
ஆனாலும், அவன் தனக்காக நேரத்தை ஒதுக்கி ஒவ்வொரு இடத்துக்கும் அழைத்துச் செல்வதிலும், பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்வதையும், இப்போது தன்னிடம் தலையசைப்பால் போய் வருகிறேன் என்று சொல்லிச் சென்றதிலும் நிச்சயம் ஒருவகை நெருக்கத்தையே உணர்ந்திருந்தாள்.
இது, இங்கு வந்ததிலிருந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மனப்புழுக்கத்தை விரட்டியடிக்கும் இதமான தென்றலாக அவளுள் ஊடுருவியது.
ஆர்த்தியுடன் உரையாடியவாறே, ஒருவித தேடலுடன் தன் விழிகளை அலைய விட்டுக் கொண்டே கடையை நோக்கிச் சென்றவர்களை, ஓடி வந்து வரவேற்றாள் சுருதி.
“வாடி ஆர்த்தி வா. உன்னைத் தான் பார்த்துக் கொண்டே நிற்கிறேன். எங்கே வராமல் விட்டு விடுவாயோ என்று நினைத்தேன்!” தோழியின் கரங்களைப் பிடித்துக்கொண்டே மகிழ்வாகச் சொன்னவள், ஏஞ்சலைப் பார்த்ததும் நெற்றி சுருங்க, நண்பியை கேள்வியாக ஏறிட்டாள்.
“சுருதி இவங்க ஏஞ்சல், எழில் அண்ணாவின் ஃப்ரெண்ட். ஃபிரான்ஸிலிருந்து வந்திருக்கிறார்.” அவளை அறிமுகம் செய்ததும், “ஹாய் அக்கா, வாங்க” அன்பாக வரவேற்றாள் சுருதி.
“இல்லையடி, அவங்களுக்கு தமிழ் தெரியாது, ஆங்கிலத்தில் பேசு!” என்றவள் ,
“இன்றைக்கு கடை திறக்க வரும் நடிகையை பிடிக்குமாம். அதுதான் அவரைப் பார்ப்பதற்காக வந்தார்.” என்றவள், ஏஞ்சலிடம் சுருதியை அறிமுகம் செய்து வைக்க, அவள் முகம் கணத்தில் இருண்டு சகஜ நிலைக்குத் திரும்பியதைக் கண்டாள் ஆர்த்தி.
சுருதியோ, தன் சுபாவப்படி அன்பாகக் கதைத்து, “எவ்வளவு அழகாக இருக்கிறீங்க!’’ வெளிப்படையாகப் பாராட்டியவள், “வாங்க, அதோ நம்ம ஃப்ரெண்ட்ஸ் நிற்கிறார்கள்” என, அவர்களை அழைத்துக் கொண்டு செல்லும் போது, அந்தப் பக்கமாக வந்தார்கள் சுருதியின் பெற்றோர்களான ராஜமும் சேகரும்.
ராஜத்தின் விழிகள் மிகவும் அசட்டையாக ஆர்த்தியில் பதிந்து அப்பால் சென்றது.
“ஏஞ்சல், இவர்கள் தான் சுருதியின் அப்பாவும் அம்மாவும். இந்தக் கடையின் சொந்தக்காரர்கள்.” மெல்லிய குரலில் சொன்ன ஆர்த்தி ஏஞ்சலின் முகத்தையே ஆராய்ச்சிப் பார்வை பார்த்தாள்.
ஆர்த்தி சொன்னதைக் கேட்டதும் கணத்தில் திகைக்க, அவர்களையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள் ஏஞ்சல். அவள் முகத்தில் மாறி மாறி வந்து போன உணர்வுகள் ஒவ்வொன்றும் அவள் மனநிலையை, ஆர்த்திக்கு தெள்ளத் தெளிவாகக் காட்டி நின்றன.
எல்லாவற்றுக்கும் தயாராக வந்திருந்தும், அக்கணம், மாறி மாறி உள்ளத்தில் கொந்தளித்த உணர்வுகளை அடக்கப் பெரும் பாடுபட்டாள் ஏஞ்சல்.
தன் இத்தனை வருடத் தேடலுக்காண விடை கண் முன்னால் நிற்பதை கண்ணுற்ற அக்கணமே அவள் விழிகள் மெல்ல மெல்ல வியப்பால் விரிந்து, கண்முன்னால் தெரிந்த உருவத்தைத் தன்னுள் நிரப்ப முயன்றது.
கூடவே ஒருவகையிலான இதமும் தவிப்பும் அவள் இதயத்தை ஊடுருவிச் சென்று அவள் உடலை நடுங்க வைத்தது.
ஆனால் அடுத்த கணமே, ‘என் வரவை எந்தளவு வெறுத்திருந்தால், என் வாழ்வில் இடம்பெறத் தகுதியற்றவள் நீ! என்று என்னை ஒதுக்கித் தள்ளி இருப்பார்!’ நினைத்துக் கொண்டதும், எள்ளளவும் சந்தோசமின்றி ஒருவகை விரக்தியுணர்வு மனதில் பரவி, நெஞ்சத்தை முறுக்கிப் பிழிந்ததை தடுக்க முடியாது அவள் திணறிக் கொண்டிருக்கும் போதே,
சேகரும் ராஜமும் தம் மகள்கள் இருவரையும் அருகில் அழைத்து, அவர்களை பெரியவர்கள் சிலருக்கு அறிமுகம் செய்து வைத்து, பெருமை பொங்க வந்தவர்களுடன் அளவளாவத் தொடங்கினர்.
அதைக் கண்ணுற்றதும், இத்தனை நேரமும் இல்லாதவகையில் ஏஞ்சலின் விழிகளில் வெறுப்புணர்ச்சியை உமிழ்ந்தன! அவள் உடல் ஆத்திரத்தால் கிடு கிடுத்தது.
ஓரெட்டில் அவர்களை அணுகி, ‘என் வாழ்வைத் தீர்மானிக்கும் பொறுப்பை உனக்குத் தந்து யார்?’ என்று உரத்துக் கூவும் ஆவேசம் அவளை ஆட் கொண்டது.
அவளை அப்படிப் பார்த்தும் ஆர்த்திக்கு உள்ளே குளிர் பிறந்தது.
‘வந்த இடத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை ஏஞ்சல் உருவாக்கி விட்டால்!’ மிகவும் பயந்து போய் தவிப்புடன் ஆர்த்தி நிற்க, அவள் கரத்தைச் சட்டென்று இறுகப் பற்றிக் கொண்டாள் ஏஞ்சல். ஏஞ்சலின் இரும்புப் பிடியில் சிக்கிய தன் கரத்தை ஒருவித பயத்துடன் பார்த்து நின்றாள் ஆர்த்தி.
ஏஞ்சலோ, ‘உன்னை அடக்கிக் கொள் ஏஞ்சல். இந்த நிமிடம் தான் உன் வாழ்விலேயே நீ மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம்.’ தனக்குத் தானே கடுமையாக கட்டளை இட்டுக் கொண்டாள்.
‘எவரின் பரிதாபமோ அனுதாபமோ உனக்குத் தேவையே இல்லை! உன்னை வேண்டாம் என்று உதறியவர்களை நீ தேடியதே மிகப் பெரிய பிழை.’ தன்னைத் தானே கண்டித்தாள்.
அவள் கண்டிப்பை உணர்ந்ததும், அதுவரை தனியே ஒரு பார்வையாளராக அவளைக் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த அவளின் மனசாட்சி கொதித்தெழுந்து, ‘இப்படிப்பட்ட ஜன்மங்களுக்குரிய உச்ச கட்டத் தண்டனையை எப்படியும் நீ வழங்கியே தீர வேண்டும்.’ சீறியது.

error: Alert: Content selection is disabled!!