நீயென் சொந்தமடி 8 – 2

‘செய்வதெல்லாம் செய்து விட்டு, எந்தப் பாதிப்புமின்றி சந்தோஷமாக இருப்பவரின் முகத்திரையை எல்லோர் முன்பாகவும் கிழித்தெறிய வேண்டும். கொஞ்சமும் தயங்காதே ஏஞ்சல்.’ ஆங்காரமாகவும் ஆவேசமாகவும் அடங்க மறுத்து கூவியது அவள் மனசாட்சி.
அதைப் பார்த்து ஒருகணம் மிரண்டாள் ஏஞ்சல்.
‘இல்லை இல்லை… அது என்னால் எப்படி முடியும்?! நான் அதற்காக வரவில்லை.’ மனசாட்சியை அடக்க நினைத்தவளுக்கு கண்கள் கலங்கியது!
‘இப்போது இவர்களைப் பழிவாங்குவதாலோ, தண்டனை கொடுப்பதாலோ எனக்கு கிடைக்கப் போவது தான் என்ன?’ தீனமாகக் கேள்வியெழுப்பினாள் மனசாட்சியிடம்.
‘சந்தோசமா? நிம்மதியா? அல்லது சிறுவயதில் இருந்து நான் ஓர் அனாதை என்று என்னுள் வடுவாகிப் போன உணர்வு தான் அழிந்து போகுமா??’ அவளையே உற்று நோக்கும் மனசாட்சியைப் பார்த்து தொடர்ந்து கேட்டாள்.
‘இத்தனை வருடங்கள் அழியாதிருக்கும் அந்த வடுவை பழிவாங்கல் என்பது மறைந்து போகச் செய்து விடுமா??’ கேட்டவளை, இப்போது அன்பு கனியப் பார்த்தது அவள் மனசாட்சி.
‘முடியாது ஏஞ்சல், உன்னால் நிச்சயம் யாரையும் புண்படுத்த முடியாது. அப்படிச் செய்தால் அவர்களுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?! உன் மூலம் தண்டனை பெறுவதற்குக் கூட அவர்கள் தகுதியற்றவர்கள்.’ என்றவாறே அவளை இறுக அணைத்துக் கொண்டது அவள் மனசாட்சி.
அந்த நிமிடம் கொந்தளித்திருந்தவளுக்கும் அது மிகவும் தேவையானதாக இருந்து.
“இப்படியானவர்களுக்கு உரிய தண்டனையை, கடவுள் என்ற ஒரு சக்தி இருந்தால், நிச்சயம் கொடுக்கும்.’ முணுமுணுத்தது ஏஞ்சலின் உதடுகள்.
தன்னைச் சுதாகரித்திருந்தவளின் பார்வை, பயமும் பரிதாபமும் தவிப்புமாகத் தன்னையே பார்த்திருந்த ஆர்த்தியில் படிந்தது.
“ஆர்த்தி, நான்…எனக்கு கொஞ்சம் தலைவலிக்குதடா. நான் வீட்டுக்குப் போகிறேன்; நீங்க இருந்து விட்டு வாங்க..” என்றவாறே, அவள் கையை விட்டு விட்டு நடந்தவளை எட்டிப் பிடித்துக் கொண்ட ஆர்த்தி, எதுவும் பேசாது கூட நடந்தவாறே தமயனுக்கு அழைத்தாள்.
அவர்களை விட்டு விட்டு மனம் கேளாது அருகிலேயே சுற்றிக் கொண்டிருந்தான் எழில். ஏஞ்சல் தன் ஒவ்வொரு செயல்களிலும் தன் மனதைரியத்தை வெளிப்படுத்தினாலும், இப்போது அவள் அங்கு செல்லும் காரணத்தை நினைத்துப் பார்த்தவன், அவள் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டே தான் சுற்றிக் கொண்டிருந்தான்.
தங்கையின் அழைப்பு இவ்வளவு சீக்கிரமாக வரவே அவசரமாக ஏற்று தங்கை சொன்னதைக் கேட்டவன், உடனே காரை நகைக்கடை நோக்கித் திருப்பினான்.
அங்கே, முகம் கன்ற நின்றவள் ஏறிக் கொண்டதும், “ஆர்த்தி, உடனே வருவது சரியில்லை; கொஞ்ச நேரம் இருந்து விட்டு வா. டிரைவரிடம் சொல்கிறேன், உன்னை அழைத்துச் செல்ல அவர் வருவார்.” சொல்லிக் கொண்டே காரைக் கிளப்பினான் .
****
இலக்கின்றி கடலையே வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருப்பவளை அப்படியே அள்ளி அணைத்து ஆறுதல் படுத்த உள்ளம் துடித்தாலும், அதைச் செய்யத் துணியாது பேசாதிருந்தான் எழில்.
காரில் ஏறும் போதே அவள் முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு ஆத்திரத்தில் ஜொலித்ததைப் பார்த்தவன், மனதில் ஒருவகைத் திடுக்கிடலுடன் தான் அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
அப்படியே மனோ வீடு நோக்கி காரை விட எத்தனித்தவனிடம், “எழில், பீச் வரை சென்று விட்டு போவோமா?’’ கேட்டதும், இதோ வந்து நிற்கிறான்.
அவளோ, அப்படியே இறுக்கத்துடன் கடலையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தவனுக்கு, அவளுடன் எப்படி, எதை கதைப்பதென்று குழப்பமாக இருந்தது.
தன்னளவில் மனதில் அவளுடன் மிக மிக நெருக்கமாக உணர்ந்தவனால், வெளியில் சட்டென்று அவளுடன் நெருங்க முடியாமல் இருந்து.
அவளின் தோற்றம் ஏற்படுத்திய வேதனையுடன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனை மெல்லத் திரும்பிப் பார்த்தாள் ஏஞ்சல்.
“அதெப்படி எழில், நடந்ததை எல்லாம் சுலபமாக ஒருவரால் மறந்து விட முடிகின்றது? என்ன ஒரு கல் நெஞ்சம்!” திடீரென்று சொன்னவளை ஏறிட்டவன், பதிலுக்கு வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கையில்,
“நான் என்றால் என் மம்மி டாடிக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா எழில்? ஒரு நாள் கூட என்னைக் கடிந்து பேசியிருக்க மாட்டார்கள். இல்லை, முடியாது என்றெல்லாம் அவர்கள் என்னிடம் சொன்னதாகவே நினைவில்லை.” சொல்லி நிறுத்தி, முன்னால் வெறித்தாள்.
“மாம் சிலசமயங்கள் கண்டிப்பார்; ஆனால், அதையும் கூட மிகவும் அன்பாகவும் பொறுமையாகவும் என்னை இருத்தி வைத்துச் சொல்லுவார்!” என்றவள், அந்த நினைவுகளில் மௌனம் காத்தாள். பெற்றோர் பற்றிக் கதைத்ததே அவள் முகத்தை மென்மையுறச் செய்தது.
“அப்படி வளர்ந்த போதும், கொஞ்சம் நினைவு தெரியத் தொடங்கியதிலிருந்து நான் அவர்களைப் போல இல்லையே என்று என் மனதில் அப்பப்போ சந்தேகம் வந்தது எழில். அதை அவர்களிடமும் கேட்டேன். அவர்களும் ஏதேதோ சொல்லி நான் கேட்டதையே மறக்கச் செய்து விடுவார்கள்.” சொல்லி நிறுத்தியவளின் விழியோரங்கள் நனைந்தன.
“ஆனால், கொஞ்சம் வளர வளர என்னுடன் படிக்கும் பிள்ளைகளே என்னிடம் அந்த சந்தேகத்தைக் கேட்கத் தொடங்கி விட்டார்கள் எழில்.” சொல்லிக் கொண்டே, கலங்கும் விழிகளுடன் தன் முகத்தை ஏறிட்டவளை வார்த்தைகளின்றிப் பார்த்திருந்தான் எழில்.
‘அவள் மனதின் வேதனையை தன்னால் சரியாக உணர முடியுமா?’ நினைத்தவனுக்கே சந்தேகமாக இருந்தது.
என்னதான் வாய் வார்த்தைகளால் சொல்வதைக் கேட்டு சமாதானம், ஆறுதல், தேறுதல் சொன்னாலும், அவரவர் வலி அவரவருக்கே புரியும்.
அதன் கனத்தை உரியவர் மட்டுமே மொத்தமாக உணர முடியும்.
‘கேட்போரும் பார்போரும் அதை அப்படியே புரிந்து கொள்வது என்பது இலகுவானதா?!’ தன்னையே கேட்டுக் கொண்டவனின் மனதில், இவள் துன்பத்துக்கு காரணமானவர்கள் மீது கட்டுங்கடங்காத வன்மமும் கோபமும் எழுந்து.
அவர்களை கலங்கடிக்க வேண்டும் என்ற வெறியே ஏற்பட்டது.
மீண்டும் வெளிப்புறத்தை வெறித்தாள் ஏஞ்சல்.
“அதற்குப் பிறகு எனக்கு எட்டு வயதிருக்கும் போது தான், நான் தங்கள் தத்துப்பிள்ளை என்று என்னிடம் சொன்னார்கள். அப்போதும் தாங்கள் தவித்திருந்த போது தங்களுக்கு சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் கொட்டிக் கொட்டித் தந்தது நான் தான் என்று சொல்லி, என் மாம் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டார் தெரியுமா?” சொன்னவளின் பட்டுக் கன்னங்களை அவள் விழிநீர் வருடிச் சென்றது. அதைத் துடைக்க எழுந்த தன் கரத்தை கட்டுப்படுத்த பெரும் பாடுபட்டான் எழில்.
“அவர்கள் என் பெற்றோர்கள் இல்லை என்று இதுவரை ஒரு கணம் கூட நான் நினைத்து ஏங்கியது இல்லை ஏழில். நான் ஒரு அநாதை என்ற எண்ணம் என் மனதில் வந்ததேயில்லை.” என்றதும்,
“போதும் ஏஞ்சல். இதென்ன பேச்சு அநாதை அது இது என்று! இந்தப் பேச்சே இப்போது வேண்டாம்.” அவசரமாகச் சொன்னவனை விரக்திப் புன்னகையும் விழிகளில் நீருமாகப் பார்த்தாள் அவள்.
“அது தானே! ஏன் இப்போது இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன்! தெரியவில்லையே எழில்! ஆனால் நான் இதுவரை இப்படி யாருடனும் என் மனதில் இருந்ததை பகிர்ந்து கொண்டதில்லை. இன்றைக்கு எனக்கு முடியவில்லை எழில். மூச்சு முட்டுது. அதனால் சொல்லி விடுகிறேன்.” அதரங்கள் துடிக்கச் சொன்னவள் ,
“அதன் பிறகு நான் தத்துப்பிள்ளை என்பதை நினைத்துக் குழம்பாது அமைதியானாலும், என் மன ஆழத்தில் அந்த விடயம் இருந்திருக்கு போல எழில். அனாதைகள் ஆதரவற்றோர் பற்றி சிறு செய்தி கேள்விப்பட்டாலும் அது என்னை ஏதோ ஒருவகையில் மிகவும் பாதிக்கத் தொடங்கியது” என்றவள், ஆழ்ந்த மூச்செடுத்து விட்டுக் கொண்டாள்.
“இப்படியிருக்கும் பொழுது சிலவருடங்களுக்கு முதல் ஒரு நாள், எங்க தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. இப்படித் தத்துப் பிள்ளைகளாக ஃப்ரான்ஸ் வந்தவர்கள், தங்கள் உண்மைப் பெற்றோர் யார் என்று தேடித் போய்ப் பார்ப்பது போல வரும்.
அதில் இந்தோனேசியாவில் இருந்து வந்த இளைஜன் ஒருவன் தன் பெற்றோர்களை தேடிச் சென்று பார்ப்பான்.” சொல்லிக் கொண்டு வந்தவள் விழிகளில் சினம் ஏறத் தொடங்கியிருந்தது.
“அவன் முறை தவறிப் பிறந்த பையன் எழில். பிறந்ததும் அவனைப் பெற்றவளை அவன் பிறக்கக் காரணமான ஊர்ப் பெரிய மனிதனே ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவான்.
அவள் குழந்தை உன்னுடையது தான் என்று சொல்ல, உன் பிள்ளைக்கு ‘கேவலம்’ என்று பெயர் வைத்து வளர்த்தெடு என்று சொல்லி திட்டி விடுவான் அந்தப் பெரிய மனிதன். அதன் பின் அந்தக் குழந்தையை வளர்க்க வழி தெரியாது தடுமாறிய அந்தப் பெண், தத்துக் கொடுப்பாள்…” இப்போது அவள் முகம் கோபத்தால் கோவைப் பழமாகச் சிவந்துவிட்டது.
“அந்த இளைஞன் கல்யாணம் செய்து தன் இரு குழந்தைகள் மனைவி என்று குடும்பமாக அங்கு சென்று, அப்போதும் ஊரின் ஒதுக்குப் புறமாக வாழ்ந்து கொண்டிருந்த, எண்பது வயது மூதாட்டியான அவனைப் பெற்றவளையும், உள்ளுரில் நோயின் பிடியில் சிக்கித் தனிமையில் வாடிய தான் பிறக்கக் காரணமானவனையும் சந்திக்கிறான்.

error: Alert: Content selection is disabled!!