வாலிபமும் தான் சீராட்டி வளர்த்த பிள்ளைகளும் கைவிட்டதாலோ என்னவோ செய்த பிழைகளை உணர்ந்து, கண்ணீரோடு, ‘மகனே!’ என்று இவனைக் கொஞ்சினார் அந்த மனுஷன். அந்த ஊரிலும் அத்தனை வருடங்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணை ஏற்றுக் கொண்டார்கள்.” என்றவள்,
“அதைப் பார்த்த போது தான் முதல் முதல் எனக்கும் என் பிறப்பை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் வந்தது.
எந்த மாதிரி நிலையில் நான் அனாதையானேன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் படிப்படியாக வளர்ந்து கொண்டே போய், ஒருகட்டத்தில் அது கட்டாயம் என்றாகி விட்டுது. என் பிறப்புப் பற்றித் தெரிந்து கொண்ட பின்னர் தான் எனக்கு நிம்மதி என்றாகி விட்டுது எழில்.” நீளமாகச் சொல்லிக் கொண்டு வந்தவள் சற்று நிதானித்தாள்.
“என்னைப் பெற்றவர்களும் அந்த வயோதிபர்கள் போல இப்போது கஷ்டத்தில் இருந்தால் உதவலாம் என்று கூட நினைத்தேன் எழில். ஆனால்.. சே..” கோபமும் அருவருப்பும் சமவிகிதத்தில் போட்டி போட்டுக் கொண்டு வெளிப்பட்டது அவள் முகத்தில்.
“பாரதி அம்மா எவ்வளவோ சொன்னார்கள். நீ ஒரு விபத்தில் பிறந்து விட்டாய் மகளே. நீ பிறக்கக் காரணமானவர்கள் அந்த விபத்தை மறந்தும் விட்டார்கள் என்று. நான் தான்…அது எப்படி எழில்??” அடிபட்டு அநாதரவாக வலியில் தள்ளாடும் குழந்தையாக அவனை ஏறிட்டாள் ஏஞ்சல்.
“தங்கள் குழந்தைகள் என்று மற்றவர்களுக்கு பெருமையாக அறிமுகம் செய்து கொஞ்சும் போது…என் நினைவு…கொஞ்சம் கூடவா…வராது..” வேதனையில் முகம் சுருங்கத் தடுமாறியவளை அதற்கு மேல் பார்த்திருக்கும் சக்தியின்றி தோள் பற்றி அணைத்துக் கொண்டான் எழில்.
அவளோ அவன் நெஞ்சில் சாய்ந்து குமுறினாள்.
“ஏஞ்சல், இதோ பார், நீ அனாதையா? அப்படி யார் சொன்னது? உனக்கு நான் இருக்கிறேன்மா!” என்றவன்,
“ஏஞ்சல், நாம இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்வோமா?” திடீரென்று கேட்டதும் விலுக்கென்று நிமிர்ந்தாள் அவள்.
“எ..ழில்!” விழிகள் விரித்து அதிர்ந்து போய்க் கேட்டவளிடம்,
தலையசைத்து “ஆம்” என்றவன்,
“ஐ லவ் யூ டா. உன்னைப் பார்த்த நேரத்திலிருந்து என்றே சொல்லலாம். ஆனால் கல்யாணம் செய்த ஒரு பிள்ளையின் தாய் நீ என்று நினைத்து அதை நானே அடக்கிக் கொண்டேன்.” சொன்னவன், அவள் தலையை மீண்டும் தன் நெஞ்சில் சாய்த்து அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தியவன், “இந்த வேண்டாத கதைகள் இப்போது ஏன்? சொல்லு, கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதமா?” குரலில் உரிமையும், விழிகளில் காதலுமாகக் கேட்டதும், அவளுள்ளத்தில் ஆனத்தச் சாரல் அடித்தது .
இத்தனை நாட்களாக எந்த ஆண்மகனாலும் கொஞ்சமும் பாதிப்படையாத அவளுள்ளம், அவன் வார்த்தைகளாலும் செய்கைகளாலும் மெல்ல மெல்ல மலர்ந்து மயங்கத் தொடங்கியது.
இந்த ஐ லவ் யூ என்பது அவளுக்கு புதிதல்ல. எத்தனையோ தடவைகள் ஒரு காதால் கேட்டு மற்றதினால் வெளியில் விட்டுவிட்டு, பத்தோடு பதினொன்றாக ஒரு சாதாரணச் சொல் என்பது போல அசட்டையாகச் சென்றிருக்கிறாள்.
ஆனால், இப்படி விழிகளில் காதலைத் தேக்கி, “கல்யாணம் செய்து கொள்வோமா?” என்று எந்த ஆடவனும் அவளிடம் இதுவரை கேட்டதில்லை. இவளும் எவரையும் தன் கணவன் என்ற ஸ்தானத்தில் நினைத்துப் பார்த்ததில்லை.
இங்கு வந்ததில் இருந்து இவனின் இதமான கரிசனையால் அவன்பால் மெல்லச் சாய்ந்த தன் மனதை உணர்ந்த போதும், அதை வளர்த்து, தொடர்ந்து தன் சிந்தையை அதில் செலுத்தும் மன நிலையில் அவள் இருக்கவில்லை.
தன்னுள்ளத்தில் இவனால் எழுந்த இதத்தை அசட்டை செய்தவள், இப்போதோ தன்னருகில் இருப்பவன் மேல் ஆசையும் உரிமையுமாக சாய்ந்து கொள்ளவே ஆவல் கொண்டாள்.
சிறிது நேரம் அமைதியாக அவனில் ஒன்றியிருந்தவள் மெல்ல எழுந்து தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். இத்தனை நேரமாக கொதிப்பையும் கோபத்தையும் காட்டிய அவள் முகம், மெல்ல மெல்ல அமைதியடைந்து கொண்டிருந்து.
அவளுள்ளத்தில் சுடர்விட்டெரிந்த கோபாக்கினியோ, எழில் விசிறியடித்த காதல் என்ற பன்னீரால் குளிர்ந்து போகத் தொடங்கியிருந்தது.
மெல்லத் திரும்பி தன்னையே ஒரு எதிர்பார்ப்போடு பார்த்திருப்பவனை நிதானமாக ஏறிட்டாள் ஏஞ்சல். அவள் விழிகளில் இருந்த கண்ணீரையும் வலியையும் மெல்ல ஓரம் கட்டி, மகிழ்வு சிறிதாக மொட்டு விடவா வேண்டாமா என்று எட்டிப் பார்த்தது.
“எழில் நான்… என்…என்னைப் பற்றி முழுமையாக உங்களுக்குத் தெரியாது. நான் அதை முழுவதும் சொன்ன பிறகு…” தொடங்கியவளை கையமர்த்தியவன்,
“தெரியும் ஏஞ்சல். மிகவும் நன்றாகத் தெரியும். அதுவும் நீ இங்கு வந்து சில நாட்களில்..” என்றவனை மிகவும் அதிர்வுடன் நோக்கினாள் ஏஞ்சல்.
“முதல் முதலாக உன்னை ஃப்ரான்ஸ் விமான நிலையத்தில் வைத்துப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்டது துல்லியமான அதிர்ச்சி தான். காரணம் என் மாமாவின் அம்மாவை அதாவது என் அப்பாவின் ஒரே தங்கையின் மாமியின் உருவத்தை, அப்படியே நீ பிரதிபலித்தாய்.” என்று தொடங்கி அடுத்தடுத்து சொன்னவன், பின்னர் தான் அவள் பற்றி துப்பறியும் நிறுவனம் மூலம் அறிய முயன்றதைச் சொன்னான்.
“என் நண்பன் சொன்னதை வைத்துப் பார்க்கும் போது என் வேணு மாமாவின் ஒரே தங்கை, அது தான் உன்னைப் போலவே உருவம் உள்ள எங்கள் கோமதிப் பாட்டியின் மகளும், மங்களா ஜுவல்லரி உரிமையாளர் சேகர் அங்கிளும் ஒரே கல்லூரியில் படித்தது தெரிய வந்தது. வேறு எந்த வகையிலும் அந்த இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தொடர்புகள் இருந்த மாதிரித் தெரிய வரவில்லை. அதே நேரம் எங்கள் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் ஏதோ ஒன்று சரியில்லை என்றும் எங்களுக்குத் தெரியும்.” சொல்லி நிறுத்தியவன்,
“அதன் பிறகு ஊகிப்பது கஸ்டமாக இருக்கவில்லை ஏஞ்சல். என்றாலும் சின்னதாக ஒரு சந்தேகம் தான், என்னால் இன்னமும் நம்பவே முடியாமல் இருக்கு…ஷீலா ஆன்ட்டியா இப்படி என்று!” சொன்னவன்,
அப்படியே அதிர்ந்து இமைக்கவும் மறந்து தன்னை நோக்கிக் கொண்டிருப்பவளைப் பார்த்து ,
“என் நண்பன் கேட்டான், இன்னும் கொஞ்சம் நாட்கள் எடுத்து விரிவாக விசாரித்துப் பார்க்கலாமா என்று. நான் தான் உன்னிடம் நேரிலேயே இனிக் கேட்டுக் கொள்ளலாம் என்று பேசாமல் இருந்து விட்டேன்.” கனிவாகச் சொன்னவன்,
“பாரதி அம்மா உன் அப்பா யார் என்று மட்டும் தான் சொன்னார்களா ஏஞ்சல்? அம்மாவைக் கை காட்டவில்லையா? அல்லது இருவரையும் சொன்னார்களா? அப்படியென்றால் நீ எனக்கு உறவென்றும் உனக்குத் தெரியுமா?” கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டவன், அவள் முகக் கன்றலைப் பார்த்துக் கொண்டே,
“உன் அம்மா அமெரிக்காவில் இருக்கும் மாமாவின் தங்கை ஷீலா ஆன்ட்டி, தந்தை சேகர் அங்கிள்…என்ன அப்படித் தானே ஏஞ்சல்?” என்றவன் தன்னையே வெறித்துப் நோக்குபவளின் கரத்தை அன்புடன் பற்றிக் கொண்டே,
“இனியும் நீ அனாதை என்று சொல்வாயா ஏஞ்சல்? அவர்கள் அந்த நேரம் எந்த நிலையில் உன்னை விலக்கத் துணிந்தார்களோ எனக்குத் தெரியாதம்மா. ஆனால், இனி உனக்கு நான் இருக்கிறேன்!” உறுதியாகச் சொன்னான்.
கேட்டவள் முகமோ திரும்பவும் கொந்தளிப்பைக் கடன் வாங்கிக் கொண்டது.
அதை அவதானித்தவன், ‘பழைய கதைகளினால் மனம் நோகின்றாள், இனி இதைப் பற்றிக் கதைக்கவே கூடாது.’ என்று மனதில் உறுதியே செய்து கொண்டான்.
அவளோ மெல்ல மெல்ல தன் கரத்தை அவன் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டவள், “இவ்வளவு செய்திருக்கிறீங்க, என்னிடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று தோன்றவே இல்லையா?’’ அந்நியப் பட்டு ஒலித்தது அவள் குரல்.
“உங்க கோமதிப் பாட்டி..” என்று தொடங்கி, எவ்வித உணர்ச்சியும் இன்றி அவரைப் பற்றி முழு விபரங்களையும் தெளிவாகத் தெரிந்து கொண்டவளின் பார்வை, மெல்ல விலகி கடலையே வெறித்தது.
சிறிது நேரத்தின் பின்னர் எழிலை ஏறிட்டவளின் முகம், சற்று முன் வெளிப்படுத்திய அனைத்துப் பாவங்களும் மறைந்து, விழிகளில் வெறுமையை மட்டுமே தாங்கி நின்றன.
“என்னை மனோ வீட்டில் விட்டு விட முடியுமா?” திடீரென்று மிகவும் தூரமாகத் தள்ளி நின்று வினவுவது போல ஒரு அந்நியத்தன்மை அவள் குரலில் துலங்கியது.

