கோமதிப் பாட்டி என்ற பெயரைக் கேட்டதும் அவள் முகம் கன்றிச் சிறுத்து விட்டது. அப்படியே கமலத்தினருகில் சென்றமர்ந்தவள், அவரிடம் பிடிவாதமாகக் கேட்டு, அவர்கள் பேசிக் கொண்டிருந்தது என்ன என்பதை அறிந்து கொண்டாள்.
சற்று முன் தன்னிடம் அப்படியே நேசத்தில் உருகியவன், ‘ஏற்கனவே கல்யாணத்துக்கும் தலையாட்டிவிட்டா அப்படிச் செய்தான்?!’ என்று நினைக்கும் பொழுதே, வழமையாக அவர்கள் இடங்களில் நடக்கும் இப்படியான நிகழ்வுகள் போட்டி போட்டுக் கொண்டு அவள் நினைவில் வந்து போனது.
கல்யாணம், காதல், அன்பு, பாசம் என்பவற்றை ஒவ்வொருவரும் தத் தம் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப மாற்றி மாற்றி வரைவிலக்கணப்படுத்துவதை அன்றாடம் கண்டு வளர்ந்தவளுக்கு, எழிலின் இந்த விட்டேற்றியான செயல் மனதில் வெறுப்பையே ஏற்படுத்தியது.
அவனுக்கு கல்யாணம் பேசி வைத்திருக்கும் அந்தப் பெண்ணை நினைத்த மாத்திரத்தில், அவள் அடிமனதிலிருந்து எதுவோ ஒன்று திரண்டு வந்து அவள் தொண்டையை அடைக்கச் செய்தது.
“இல்லை; நிச்சயம் இல்லை. என்னால் ஒரு பெண்ணோ அல்லது இன்னொருவரோ கண்ணீர் விடத் தேவையில்லை. இன்னொருத்தியின் கலக்கத்துக்கு நான் நிச்சயம் காரணமாக இருக்க மாட்டேன்.
முதல் நான் அதற்காக இங்கு வரவும் இல்லை. என் மனச் சாந்திக்காக என்று வந்து விட்டு, மற்றவர்களைக் குழப்பத்தில் தள்ளி விட்டுப் போக மாட்டேன்.” சொன்னவாறே எழுந்தவள், ஒரு தீவிரத்துடன் தான் புறப்படுவதற்கான வேலைகளில் ஈடுபட்டாள்.
அவள் சொன்னதைக் கேட்ட கமலமும் மனோவும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளாது, “கடைசி நேர விமானப் பயணச் சீட்டு வாங்கி என்றாலும் நான் உடனே ஊருக்குப் போகிறேன்.” என்று இதோ புறப்பட்டுக் கொண்டிருகிறாள்.
****
ஏஞ்சலை இறக்கி விட்டு விட்டு நகைக் கடைக்குச் சென்ற எழிலால் கொஞ்சமும் நிம்மதியாக வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.
“நாம் கல்யாணம் செய்து கொள்வோமா?” என்று ஏஞ்சலிடம் திடீரென்று கேட்டுவிட்டவனுக்கு, அவள் பற்றியோ தன் மனம் பற்றியோ இனியும் பெற்றோர்களிடம் சொல்லாமல் இருப்பது பெரிய பிழையெனத் தோன்றி, கடையிலிருந்த தந்தையை நேராகப் பார்க்கவே மிகவும் சங்கடப்பட்டான்.
பெற்றோர்களுக்கும் அத்தைக்கும் தான் துரோகம் செய்வது போலத் தோன்றிய மறுகணம், எல்லாவற்றையும் இனியும் தாமதிக்காமல் சொல்வதே சிறந்தது என முடிவெடுத்து, மதியம் உணவருந்துவதற்காகச் சென்ற தந்தையுடன் தானும் வீட்டுக்குச் சென்றவன், அரையும் குறையுமாக உணவருந்தி விட்டு, ஓய்வாக அமர்ந்திருந்த தந்தையின் அருகில் சென்றமர்ந்தான்.
அப்போது அங்கே வந்த ஆர்த்தியிடம், “என்னம்மா நகைக்கடை திறப்பு விழா நல்லபடியாக நடந்தததா? என்னவாம் ராஜம்..ஏதாவது கதைத்தாவா?” எனக் கேட்க, அவளோ தந்தைக்குப் பதில் சொல்லாது தமையனைப் பார்த்தாள்.
அவனோ தாயையும் தந்தையும் மாறி மாறிப் பார்த்தவன், “அப்பா, உங்களிடம் ஒரு முக்கியமான விடயம் சொல்ல வேண்டும்!” தயக்கமாக ஆரம்பித்தான்.
எதுவென்றாலும் சட்டென்று கதைக்கும் மகனின் தயக்கத்தைப் பார்த்த ராஜசேகர் நெற்றி சுருங்க, “என்ன விஷயம் எழில்?” கூர்மையாகப் பார்த்தவாறே கேட்க, மெல்லத் தாயின் அருகில் வந்தமர்ந்து கொண்டாள் ஆர்த்தி.
“அப்பா, அது வந்துப்பா…” மீண்டும் தயங்கியவன்,
“நான் சொல்வது சிலவேளை உங்களுக்கும் தெரிந்திருக்குமோ என்ற ஐயம் எனக்கு இருக்கு.” சொன்னவன், இப்போது பெற்றோரைக் கூர்மையாக அளவிட்டான்.
பின்னர், ஏஞ்சலை தான் முதன் முதல் பார்த்ததில் இருந்து, இப்போது காலையில் நகைக் கடைத் திறப்பு விழாவிற்கு அவளும் ஆர்த்தியும் சென்றது வரை சொல்லிக்கொண்டு வந்தவன், பெற்றோர்களின் முகமாற்றத்தை உணர்ந்ததும் அப்படியே நிறுத்த,
ஆத்திரத்தால் உடல் நடுங்க இருந்த இடத்திலிருந்து சட்டென்று எழுந்து கொண்ட ராஜசேகர், “இவ்வளவு நடந்திருக்கு, நீ இப்போது வந்து சாவகாசமாக கதை சொல்கிறாய்.” கர்ஜித்தார்.
“உன்னைப் போய் மிகவும் புத்திசாலி என்று நினைத்தேன் எழில்.” தொடர்ந்து சொன்னவருக்கு, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தது .
ஆனால் அவனோ, “அப்போ நான் நினைத்தது சரி. உங்களுக்கு இதெல்லாம் முன்னரே தெரிந்த விடயம். அதுதான் ராஜம் ஆன்டிக்கு நம்மைக் கண்டாலே ஆகாது என்ன? எவ்வளவு அப்பாவி போல இருக்கும் சேகர் அங்கிளும் நம்ம ஷீலா ஆன்ட்டியும்..” தொடங்கியவனால் அதைச் சொல்லவே மிகவும் சங்கடமாக இருந்தது.
அவன் சொன்னதைக் கேட்ட தாய் பரிமளா, ”எழில்..” மிகவும் கடுமையாக அழைத்துக் கொண்டு எழ, கலக்கத்துடன் தானும் எழுந்தாள் ஆர்த்தி.
“அம்மா, எனக்கும் இதைக் கதைக்கவே சங்கடமாகத்தான் இருக்கு. ஆனால் நம்ம ஷீலா ஆன்ட்டியா இப்படி என்று நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கும்மா. பாவம்மா ஏஞ்சல்; செல்வந்த வீட்டில் வளர்ந்தாலும் தான் ஒரு அநாதை என்ற வலி அவள் அடி மனதில் இன்னமும் இருக்கு. இன்று அப்படிச் சொல்லி அவள் கண்ணீர் விட்ட பொழுது பார்த்திருந்த எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?” என்றவன், செய்வதறியாது தொய்ந்து போய், மனைவியையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்த தந்தையைப் பார்த்து,
“என்னப்பா செய்யுது?” அவசரமாக அவரருகில் சென்றான்.
அவரோ மகனை வெறித்தவர், எதுவும் சொல்லாது கண்களை மூடிக் கொண்டார்.
“அப்பா, அவர்கள் செய்த பாவ காரியத்துக்கு நீங்க ஏன் கலங்குறீங்க?! அந்த கோமதிப் பாட்டிக்கு எப்போதுமே காசு தான் பிரதானம். காதலித்த மகளை மெல்ல பிள்ளையைப் பெற்று அதை ஆச்சிரமத்தில் கொடுத்து விட்டு, அமெரிக்க மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்திருக்கிறார். சே..” என்றவன், சற்று நிதானித்து தன்னுள் எழுந்த கோபத்தை அடக்கப் பெரும்பாடு மாட்டான்.
“எழில் வேண்டாம்டா, இப்படியெல்லாம் கதைக்காதேடா. பழியோரிடம் பாவமோரிடம் என்று வாய்க்கு வந்ததைக் கதைக்காதே தம்பி.” பதறினார் பரிமளா.
“சேகர் அங்கிள் அப்போது சாதாரண நிலையில் இருந்திருப்பார். பிறகு எப்படி அவருக்கு கட்டிக் கொடுக்க முடியும்? என்ன மனிசியோ! வேணு மாமாவும் ஒரு தலையாட்டிப் பொம்மை; தாய் கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார். தங்கையின் விடயம் தெரிந்திருந்தாலும் மௌனச்சாமி வேடம் போட்டிருப்பார்.”
தாயின் பதற்றத்தைக் கவனிக்காது, அவர் சொன்னவற்றைக் காதில் வாங்காது சலித்தவனைப் பார்த்து, பேச்சற்று அமர்ந்திருந்தனர் ராஜசேகரும் பரிமளாவும்.
அவனோ, சொல்ல வந்தவன் முழுவதையும் சொல்லி விடும் வேகத்தில், “அவருக்கு இப்போ நம்ம சொத்தில் கண். அத்தைக்காக பார்த்தேன் அப்பா, இனி அதெல்லாம் பார்க்க முடியாது. எனக்கு எப்போதுமே ஸ்வேதாவில் அப்படி ஒரு எண்ணம் இருந்ததில்லை. அது உங்களுக்கே தெரியும். என்றாலும் பேசாமல் இருந்தேன். ஆனால், இனி அப்படி இருக்க மாட்டேன். ஏனென்றால்…,” சொன்னதை நிறுத்தி, நிமிர்ந்தமர்ந்த தந்தையை நேராகப் பார்த்தான்.
அவன் தன் மனதில் உள்ளதைச் சொல்ல முயலுகையில் மீண்டும் குறுக்கிட்டார் பரிமளா.
“நீ ஏன்டா உன் பங்கிற்கு பிரச்சனையைக் கிளப்புகின்றாய்? ஸ்வேதா பாவம்டா…தங்கமான பிள்ளை.” என்றார்.
“இப்போ இல்லை என்று சொன்னேனா அம்மா. ஆனால் நான் ஏஞ்சலை காதலிக்கிறேன்.” இதைக் கேட்ட பெற்றோர் இருவருமே ஏதோ புரியாத பாஷையில் அவன் பேசியது போல விழித்தனர்.
ஆர்த்தியோ அண்ணனை அதிர்வாகப் பார்த்தாள்.
காலையில் தமையன் பார்வையிலேயே இலேசாக அவளுக்கு இந்தச் சந்தேகம் வந்திருந்தாலும், தன் அண்ணன் அப்படிச் செய்வாரா என்று அச் சந்தேகத்தை வளர்க்க நினைக்கவில்லை. ‘ஆனால் இப்போது..!? அப்போ ஸ்வேதா??’ உள்ளத்தில் கேள்வியும் குழப்பமுமாக தமையனைப் பார்த்திருந்தாள்.
“என்னய்யா சொன்னாய்?” மீண்டும் அதிர்வோடு கேட்டார் அவன் அன்னை.
“எல்லாம் சரியாகத் தான் கேட்டீங்கம்மா, நான் ஏஞ்சலைத் தான் கல்யாணம் செய்யப் போகிறேன்; அதை அவளிடமும் சொல்லி விட்டேன்.” என்றதும், அதிர்வோடு எழுந்த ராஜசேகர்,
“இங்க பார் எழில், நீ உன் விருப்பப்படியே எல்லாவற்றையும் செய்து விடுவாயா? அப்போ என் தங்கை பெண்ணின் நிலை?” கர்ஜித்தார்.
அவருக்கு பதில் சொல்லப் போனவனை கைபேசியின் செல்லச் சிணுக்கம் அதைப் பார் என்று அவசரப்படுத்தவே நெற்றி சுருங்க எடுத்தவன்,
“சொல்லுடா மச்சான்..” கேட்டவன் முகம் கணத்தில் இறுகிச் சுருங்கியது.
“நான் இதோ வருகிறேன்…” அடுத்த நொடி விருட்டென்று வெளியேறினான்.
இடியாக அடுத்தடுத்து செய்திகளை அள்ளி வீசிவிட்டு தன் பாட்டில் வெளியேறும் மகனையே வெறித்த பார்வை பார்த்து நின்றார் ராஜசேகர்.
பரிமளாவோ, என்ன செய்வதென்றே புரியாது தவிப்புடன் கணவனை நோக்கினார்.

