‘‘சோஃபி …விளையாடியது போதும்டா. ஐ பாட்டை வைத்து விட்டு கொஞ்ச நேரம் புத்தகம் வாசிடா.’’ அன்பு கலந்த கண்டிப்புடன் வந்து விழுந்தன வார்த்தைகள்.
‘‘ஒ.கே…ஓகே. ஏஞ்சல், ஆனால், ப்ளீஸ்…ப்ளீஸ்…இன்னமும் பைஃ மினிட்ஸ்.’’ கண்களோ ஐ பாட்டில் அங்கும் இங்குமாக உருள, பதில் மட்டும் விரைவாக வந்தது.
‘‘இது தான் லாஸ்ட் சான்ஸ்ன்…ஒ.கே.” இத்தோடு இது நான்காவது பைஃப் மினிட்ஸ் என்பதால் கொஞ்சம் கண்டிப்புடன் சொல்லிக் கொண்டே தங்கள் இருவருக்குமாக இரவுணவைத் தயாரித்துக் கொண்டிருந்தாள் ஏஞ்சல்.
லூகாஸ் இன்று ஏதோ ஒரு பார்ட்டி என்று வெளியில் சென்று விட்டதால் மகளை இவளுடன் விட்டுச் சென்றிருந்தான்.
லூகாஸ் மிகவும் நல்லவன். மூன்று ஆண்குழந்தைகளில் கடைசியாகப் பிறந்த செல்வந்த வீட்டுப் பையன்.
தன் பதின்னெட்டாவது வயதில், தன்னை விட நான்கு வயது பெரிய பெண்ணை தன் நெஞ்சம் கவர்ந்த தோழி என்று எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அவன் வீட்டினருக்கு அந்தப் பெண்ணை அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றாலும், அழுத்தமாக மறுத்துக் கூற முடியாததால் ஓரளவுக்கு சந்தோசமாகவே அப் பெண்ணுடன் பழகினர்.
அப்போது பத்து வயதில் இருந்த ஏஞ்சலுக்கும் தன் நண்பனின் கேர்ள் ஃப்ரெண்டை மிகவும் பிடித்திருந்தது. பொன் கூந்தல் தோளில் புரள நீலக் கண்களும் சிவந்த அதரங்களுமாக பார்க்கும் போது மிகவும் அழகிய மெழுகுப் பொம்மை போலவே இருந்தாள் லூகாஸின் கேர்ள் ஃப்ரெண்ட்.
நாட்கள் செல்லச் செல்ல எல்லோரோடும் கலகலப்பாக பொருந்திப் போன அப்பெண்ணை, லூகாஸ் குடும்பம் தங்களுள் ஒருத்தியாக ஏற்றுக் கொண்டு விட்டது.
பின்னர் இரு வருடங்களில் லூகாஸ் அந்தப் பெண்ணுடன் தனியாக வசிக்க இங்கு வந்து விட்டான். அடுத்த மூன்று வருடங்களில் தன் படிப்பு முடிந்து இந்த வேலை கிடைத்தும், திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தவர்கள், சோஃபியை வயிற்றில் சுமந்து கொண்டே மிகவும் ஆனந்தமாக திருமணமும் செய்து கொண்டார்கள்.
அதன் பிறகு வந்த வருடங்களில் மிகவும் அந்நியோன்னியமாய் ஆனந்தமாகத் தான் வாழ்ந்தார்கள். ஆனால், தங்கள் காதல் வாழ்க்கைக்கு சட்டென்று ஒரு நாள் முற்றுப் புள்ளியும் வைத்துக் கொண்டார்கள் .
‘அது எப்படி முடிந்தது?? மனித மனம் என்ன அந்தளவுக்கு கேவலமானதா?? அன்பு, பாசம், காதல் என்ற வார்த்தைகளின் கனம் தான் என்ன??’
இப்படியான உறவுச் சிக்கல்களைக் காணும் போதெல்லாம் ஏஞ்சலின் மன ஆழத்திலிருந்து ஒரு குரல் கேள்வி எழுப்பி அவளை மிகவும் குழப்பும்.
இவைதான் அவளை அந்த அன்புக்குள்ளும் காதலுக்குள்ளும் எட்டிப் பார்க்க விடாமல் செய்கின்றனவோ என்னவோ!
ஒரு வருடத்துக்கு முன் ஒருநாள் இரவு பத்து மணியளவில், வெளியில் யாரோ பெரிய குரலில் கோபமாகப் பேசும் சத்தம் கேட்டு, யார் என்று பார்ப்பதற்காக முன் வாயிலை மெதுவாகத் திறந்த ஏஞ்சல், அங்கு லூகாஸ் மனைவியுடன் நிற்கவே கதவை நன்றாகத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
என்னவோ ஏதோ தன் உதவி தேவையோ என்ற எண்ணத்தில் வெளியே வந்தவள், அங்கு மேடிட்ட வயிற்றுடன் அருகில் இன்னமும் இரு சிறு பிள்ளைகளுடன் நின்ற பெண்ணைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள்.
நேரம் பத்தைக் கடந்த இரவு வேளையில், வெளியில் கொட்டிக் கிடக்கும் பனியையும் பொருட்படுத்தாது, ‘இது யாரு? முதல் ஏன் இப்படிக் கோபமாகக் கதைக்கின்றாள்?’ எண்ணிக் கொண்டே லூகாஸைப் பார்த்தவள் திடுக்கிட்டுப் போனாள். கொந்தளிக்கும் உலைக்களமாக கோபத்தில் இறுகிச் சிவந்து பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது அவன் முகம் .
‘இங்கு நான் நிற்பதா உள்ளே போவதா?!’ அவளுக்கு குழப்பமே வந்து விட்டது. சட்டென்று முடிவெடுத்தவள், பேசாமல் கதவை முடிக்கொண்டு உள்ளே வந்து விட்டாள். ஆனால் அந்த சிறு இடைவெளியில் அவள் செவிகளில் விழுந்த சேதியைத் தான் அவளால் ஜீரணித்துக் கொள்ளவே கடினமாக இருந்து.
அதாவது “என் புருஷனை நீ கவர்ந்து விட்டாய்.” என்ற பலத்த குற்றச் சாட்டுடன் லூகாஸின் மனைவியைப் பார்த்து இரைந்து கொண்டு நின்றாள் அப்பெண்.
விடு விடுவென்று நடந்து சென்று குளிர்சாதனப் பெட்டியில் இருந்து சில்லிட்ட நீரை எடுத்து அப்படியே தன் வாயினுள் கவிழ்ந்தாள் ஏஞ்சல் .
அவளுக்கு உடலெல்லாம் நடுங்கி என்னமோ செய்தது.
‘அது எப்படி? பொய்யாக இருக்குமோ!? லூகாஸும் அவன் மனைவியும் எவ்வளவு நெருக்கம். சோஃபிக்குட்டி கூட..’ நினைத்துக் கொண்டவள்,
‘‘இல்லை.. அப்படியெல்லாம் இருக்கவே இருக்காது.’’ என்று தலையை குலுக்கிக் கொண்டாள்.
ஆனால்??? அதுதான் உண்மையாக இருந்து.
அப்பெண் கத்திவிட்டுச் சென்ற பின், இறுகிப் போய் கேள்வியாக மனைவியைப் பார்த்த லூகாஸுக்கு இறுக்கி ஒரு முத்தம் கொடுத்த அவன் மனைவி, தன்னை விலக்கிய கணவனின் கரங்களைப் பற்றிக் கொண்டே, அவனிடம் தன்னை எப்படியும் விளங்க வைக்கும் முயற்சியில் இறங்கினாள்.
‘‘நான் ஒரு வருடத்துக்கும் மேல் ஸ்டீவைக் காதலிக்கிறேன் லூகாஸ். அவனும் தன் மனைவியிடம் விரைவில் விவாகரத்து வாங்கி விடுவதாகத் தான் சொல்லி இருக்கிறான். இதை எப்படி உன்னிடம் சொல்வது என்று… தயங்கிக் கொண்டிருந்தேன். எனக்கு இனி அவனை விட்டு வாழ முடியாது.’’ என, வேகமாகச் சொல்லிக்கொண்டு வந்தவளை அருவருப்புடன் வெறித்துக் கொண்டே விருட்டென்று உதறி விலகினான் லூகாஸ்.
‘‘சே… உனக்கு கொஞ்சமும் வெட்கமாக இல்லையா?’’ சீறியவன், அடுத்த நிமிடம் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.
போகும் போது, மறக்காமல் தன் உள்ளக் கொதிப்பை முன் வாயில் கதவில் காட்டி விட்டுச் சென்றான்.
அதற்கும் மிஞ்சி தன் கோபத்தை வேறு மாதிரிக் காட்டி வீணாக சட்டதிட்டங்களுக்குள் மாட்டி அல்லற் பட அவன் என்ன முட்டாளா??
இப்படியான தருணங்களில், நம்பிய துணையினால் வஞ்சிக்கப்படும் வேளைகளில் மனம் வேதனையில் புழுவாகத் துடித்தாலும், சிறுவயதிலிருந்தே இப்படியான செயல்களைப் பார்த்தும் கேட்டும் பழகியவர்கள் என்பதாலோ என்னவோ, இவர்கள் பலரின் கோப வெளிப்பாடு கூட வரையறைக்குட்பட்டதாக இருக்குமோ?!
அதன் பின், அவன் இரு நாட்கள் வீட்டுப் பக்கமே வராமல் தன் பெற்றவர்களுடன் போய்த் தங்கிக் கொள்ள, இரு பகுதிப் பெரியவர்களும் மிகவும் நெருங்கிய நண்பர்களும் வந்து பேசிப் பார்த்தவர்கள், பயனில்லை என்றதும் இருவருக்கும் விவாகரத்து என்று முடிவு செய்து கொண்டனர்.
தம் பதினொரு வருட காதல் வாழ்கையில் கிடைத்த மகள் நான்கு நாட்கள் தாயுடனும், மூன்று நாட்கள் தந்தையுடனும் தங்கிக் கொள்ளலாம் என்ற தீர்ப்புடன், தங்கள் பந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டார்கள் சோஃபியின் பெற்றோர்கள்.
லூகாஸின் வாழ்க்கை பற்றி நினைத்துக் கொண்டே இரவுணவைத் தயாரித்து மேசையில் எடுத்து வைத்த ஏஞ்சல், சமத்தாக புத்தகம் வாசிக்கும் குழந்தையின் அருகில் சென்றமர்ந்து கொண்டாள்.
சோஃபியைப் பார்க்கும் போதெல்லாம் ஓர் இனம் புரியாத பாசம் அவளுள்ளத்தில் அவளையும் அறியாமல் எழும்! தன் கண் முன்னால் பிறந்து மிகவும் சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பட்டவள், இப்போ அங்கும் இங்குமாக அலைவதைப் பார்த்து அவள் மேல் ஒருவித இரக்கம் சுரந்தது.
அதுவும், அடிக்கடி தந்தையுடன் சண்டை போட்டுக் கொள்வாள் சோஃபி. காரணமில்லாமல் கத்திக் கூச்சல் போடுபவள், அதே வேகத்தில் கலங்கிச் சிவந்த விழிகளுடன் ஏஞ்சலின் வீட்டு வாயிலில் வந்து நிற்பாள்.
‘‘ஏஞ்சல், எனக்கு அம்மாவும் அப்பாவும் வேண்டும். அவர்கள் இப்படி இருப்பது பிடிக்கவில்லை. அங்கே அம்மா வேறு இப்போ தம்பிப் பாப்பா வரப் போவதாகச் சொல்லி என்னை அப்பாவுடன் இரு என்று சொல்கின்றார். எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை…’’ கண்கள் கலங்கி விம்மும் சிறுமியை அணைத்து ஆறுதல் சொல்வாள் ஏஞ்சல்.
பெரியவர்கள் தங்கள் மனதின் மகிழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் அதில் மடியும் சின்னஞ்சிறு உள்ளங்களின் துடிப்பை ஏன் மறந்து விடுகிறார்கள்.
சிறுவர்கள் என்றாலும் அவர்களும் உணர்வுகள் உள்ளவர்கள் தானே!!
தன்னைப் பற்றிச் தீர்மானிக்கும் போதெல்லாம், தன் இரத்தில் உதித்த உயிரை அசட்டை செய்து விடுகின்றார்களே!
‘தம் சொந்தக் குழந்தைகளின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பு கொடுக்க மறுப்பது ஏன்? அவர்களை மறந்து தங்கள் சுகத்தை, நிம்மதியை பார்ப்பது ஏன்?’ கரங்கள் சோஃபியின் கண்ணீரைத் துடைக்க, ஏஞ்சலின் மனமோ கோபத்தில் குமுறும்.
‘எந்தக் குழந்தை தான் என் பெற்றோர் பிரிந்து விட்டார்கள் என்பதை மகிழ்வாகச் சொல்கின்றது? இந்த விடயத்தில் மட்டும் மேலைத்தேயம் கீழைத்தேயம் என்ற பாகுபாடோ, சாதி, இன, மத பாகுபாடோ, ஏழை, பணக்காரன் என்பதோ குறுக்கிடுவதில்லை.’ என நினைத்துக் கொள்வாள் ஏஞ்சல்.
‘தம்மைச் சீராட்டும் பெற்றோர் வெவ்வேறாகப் பிரியும் போது, முடியாத கட்டத்தில் ஏற்றுச் சகித்துக் கொள்ளப் பழகி, பின்னாளில் தானும் அதே வேலையைச் செய்கின்றனரோ!’ என்ற எண்ணம் எழும் போதெல்லாம், ‘இப்படியானவர்களுக்கு ஏன் குழந்தைச் செல்வம் கிடைக்கின்றது?’ ஒருவித ஆத்திரத்துடன் நினைத்துக் கொள்வாள் இவள்.
இப்படியான நேரங்களில் அவளுக்குத் தன் பெற்றோர் மீது பாசமும் மதிப்பும் உயர்ந்து செல்லும். ‘ஒருவகையில் நான் மிகவும் கொடுத்து வைத்தவள்.’ கடவுளுக்கு முழுமனமாக நன்றி சொல்லிக் கொள்வாள்.
‘‘சாப்பிடுவோமா ஏஞ்சல்? பசிக்குது..’’ சோஃபியின் கொஞ்சல் குரல் இவள் மனகுமுறலுக்கு தடங்களாக வர,
‘‘பசிக்குதா சோஃபி? சரி வா சாப்பிடுவோம்..’’ என்றவாறே அவளையும் அழைத்துக் கொண்டு சாப்பாட்டறை நோக்கிச் சென்றாள் .

