அத்தியாயம் 2.
வங்கியில் வீட்டுக் கடன்கள் வழங்கும் பிரிவில் வேலை செய்கின்றாள் ஏஞ்சல்.
இன்றும் வீட்டுக் கடன் பற்றிய விபரங்களை அறிவதற்காக வந்திருந்த ஒரு ஜோடியுடன் கலந்தாலோசித்து, அவர்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து, கடைசியில் அவர்களுக்கு கடன் எடுப்பதற்கான வழிவகைகளை செய்து கொடுத்தனுப்பியவள், தன் இருக்கையில் வந்தமரவும் அவள் கைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது.
இவள் அழைப்பை ஏற்க முன் அது நின்று விடவே யார் என்று எடுத்துப் பார்த்தவள், முகத்தில் மென்னகையுடன் அவ் எண்ணிற்கு திருப்பி அழைப்பை ஏற்படுத்தினாள்.
‘‘ஹாய் ஆன்ட்டி, எப்படி இருக்கிறீங்க? மனோஜ் எப்படி இருக்கிறார்?’’ நலம் விசாரித்தவள்,
‘‘ஓ! முதலும் எடுத்திருந்தீங்களா?’’ என்றவள், அவர் அந்தப் பக்கமாக கதைக்கக் கதைக்க, மெல்ல மெல்ல முகத்தில் சிறு பரபரப்பும் வருத்தத்தின் சாயலும் வந்து போக அவர் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்தாள்.
‘‘அம்மா அப்பா ஹாலிடே போய் இருக்கிறார்கள். ம்ம்ம்…நான் உங்களுக்கு ஒரு அரை மணியில் திருப்பி எடுக்கிறேனே.’’ சொல்லி வைத்தவள், அப்படியே தன் இருக்கையில் சாய்ந்தமர்ந்து கொண்டாள்.
முகத்திலோ ஏகப்பட்ட சிந்தனை ரேகைகள் !
சிறிது நேரத்தில் கணனியையும் நேரத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டவள், ‘இல்லை டிக்கெட் எடுத்து விட்டே டாடியிடம் சொல்வோம்.’ என்ற முடிவுடன், தான் பயணம் செய்வதற்கான விமானப் பயணச் சீட்டை ஆன்லைனில் வாங்கியவள், அதைப் பிரின்ட் எடுத்து வைத்து விட்டுத் தன் தந்தைக்கு அழைத்தாள்.
‘‘ஹாய் டாடி…’’ பெற்றவர்களுடன் கதைக்கும் பொழுது என்ன மனநிலையில் இருந்தாலும் அவள் குரல் குழைந்தே வரும். அந்தளவுக்கு அவர்களுக்குள் ஒரு இறுக்கமான பிணைப்பு!
அவள் குரலுக்கு கொஞ்சமும் குறையாமல் அந்தப் பக்கமிருந்து பதில் வந்தது. மகளையும் வா என்று அழைத்தும் அவள் மறுத்து விட, அவர்கள் இருவருமாக ஹாலிடே சென்றவர்கள், இன்னமும் இரு கிழமைகளில் திரும்பி வந்து விடுவார்கள்.
‘‘டாடி, இப்போ கொஞ்ச முதல் கமலம் ஆன்ட்டி கதைத்தார்..’’ என்று தொடங்கி அவர் சொன்ன விபரத்தைச் சொன்னதும், மறுபுறம் கண நேரம் அமைதி நிலவியது.
‘‘அப்போ… நீ என்ன செய்யப் போகின்றாய் ஏஞ்சல்? போகப் போகின்றாயா?’’
‘‘ஆமாம் டாடி…நான் டிக்கெட் எடுத்து விட்டேன். என் நல்ல நேரம் ஒரே ஒரு டிக்கெட் பிஸ்னெஸ் க்ளாசில் இருந்தது, அதை எடுத்து விட்டேன். நாளை காலை இங்கிருந்து புறப்படுகிறேன்.’’
மகள் சொன்னதும் மீண்டும் மௌனம்!
‘‘அப்போ…நாங்களும் இங்கிருந்தே அங்கே வரவாம்மா?’’ தந்தை ஸ்பீக்கரில் போட்டு உரையாட, பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த இவளின் அன்னை கேட்டார்.
‘‘மாம், பக்கத்திலா இருக்கிறீங்க? வேண்டாம் வேண்டாம். நீங்க உங்க பிளானை மாற்றிக் கொள்ள வேண்டாம். ஆன்ட்டி, மனோஜ் எல்லோரும் இருக்கிறார்கள் தானே. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை.’’ சமாதானமாகச் சொன்னவள்,
சிறிது நேரம் அவர்களின் இன்றைய நாளைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்து விட்டு, ‘‘சரி… எனக்கும் இங்கு கொஞ்ச வேலைகள் இருக்கு. இனிமேல் தான் லூகாஸிடம் சொல்லி லீவுக்கும் அரேஞ் பண்ண வேண்டும்.’’ என்றவள், பெற்றவர்களிடம் விடை பெற்று லூகாஸின் அறையை நோக்கிச் சென்றாள்.
மகளுடன் கதைத்து முடித்த ஹெர்மன்ட் எம்மா தம்பதிகள், முகத்தில் சிந்தனைக் கோடுகளுடன் ஒருவர் ஒருவரைப் பார்த்திருந்தனர்.
‘‘நாம் ஒரு தரம் கமலத்தோடு எடுத்துக் கதைப்போம்.’’ முடிவில் சொன்ன எம்மா தன் கைபேசியில் கமலத்திற்கு அழைத்தார்.
கதைத்து முடித்தவர், ‘‘இப்போதும் வைத்தியசாலையில் தான் இருக்கிறாராம். ஆனால் ஒன்றும் அபாயம் இல்லை என்று சொல்லி விட்டார்களாம். நெஞ்சுவலி அதுவும் இரண்டாம் தடவை என்றதும் அவர் கொஞ்சம் பயந்து விட்டார் என்கிறார் கமலம். ஏஞ்சலை ஒரு தரம் பார்த்து விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருகிறாராம்.’’ என்றவர்,
‘‘ஏஞ்சல் போய் வருவது தான் நல்லது ஹெர்மன்ட். அவர் ஏதாவது தகவல் சொல்லி இவள் ஆசை நிறைவேறினால் தான், இவளும் தன் வாழ்கையை முழுமனதுடன் பார்த்துக் கொள்வாள். இல்லையென்றால் இப்படித் தான் தேவையில்லாமல் குழம்பிக் கொண்டு நிற்பாள்.’’ என்று தம் மகளின் தேடுதலுக்கான விடை இந்த முறை சரி கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், மகள் தனியே போவதில் அவ்வளவு விருப்பம் இல்லாமல் இருக்கும் கணவரைத் தேற்றினார் எம்மா.
இதென்ன ஏஞ்சல், இப்படித் திடீரென்று அதுவும் டிக்கெட்டையும் எடுத்து விட்டு வந்து லீவு கேட்கின்றாய்! அதுவும் இரண்டு கிழமைகள்.’’ சிறு கண்டிப்புடன் வந்தது லூகாஸின் குரல்.
‘‘அப்படி லீவு எடுப்பது கடினம் என்றால், நான் வேலையை விட்டு விட்டு போய்க் கொண்டே இருப்பேன் லூகாஸ். ஏன் நான் அவசரப்படுகிறேன் என்பதும் உனக்கு நன்றாகத் தெரியும்.’’ ஏஞ்சலிடமிருந்து, தன்னியல்பு மாறமால் பட்டென்று பதில் வந்தது.
‘‘அதற்கில்லை ஏஞ்சல். நீ இதற்கு முன் அங்கு போய் இருந்தாலும், அப்போது உன் பெற்றோரும் கூட வந்தார்கள். ஆனால், இப்படித் தனியே போவது எனக்கு சரியாகப்படவில்லை. அடுத்த கிழமை போவோமே. நானும் வருகிறேன்.’ என்று அக்கறையுடன் சொன்னவனை இப்போ அன்போடு பார்த்தாள்.
‘‘ஹா..ஹா..நான் என்ன உன் மகள் சோஃபியா லூகாஸ்? அவளுக்குத் தான் உன் துணை தேவை. அவளை நீ கவனமாகப் பார்த்துக் கொள். முறைக்காதே லூகாஸ். எனக்கு அங்கு கமலம் ஆன்ட்டி என் ஃப்ரெண்ட் மனோஜ் இருவரும் இருக்கிறார்கள்.’’ என்றதும், லூகாஸின் முகம் சுருங்கி விட்டது.
‘நான் ஏன் இவளையே திருமணம் செய்து கொள்ளக் கூடாது!?’ என்ற கேள்வி, இப்போது கொஞ்சம் நாட்களாக இவன் மனதில் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றது.
சோஃபிக்கும் ஏஞ்சல் என்றால் மிகவும் பிரியம். ஏஞ்சலும் சின்ன வயது என்றாலும் மிகவும் பொறுப்பானவள். அதை விட சிறு வயதிலிருந்து பழகிய தோழி. இதையெல்லாம் நினைத்துப் பார்ப்பவனால், அவளிடம் தன் விருப்பை நேராகச் சொல்ல முடிவதில்லை. அவளிடம் உள்ள ஏதோ ஒன்று இதுவரை அவளின் ஆண் நண்பர்களை ஒரு இடைவெளி விட்டுத் தள்ளி நிறுத்தியது போலவே, இவனையும் இந்த விடயத்தில் தள்ளி நிறுத்துகின்றது.
‘அப்படி என்ன வைராக்கியம் இவளுக்கு? என்றோ யாரோ செய்தவற்றை இன்று அறிய நினைக்கிறாள். இதெல்லாம் எந்தளவுக்குச் சாத்தியம் என்று இவளுக்கு புரியுதில்லையே!’ தன்னுள் அலுத்துக் கொண்டவன்,
அவள் முடிவை மாற்றும் சக்தி தனக்கு இல்லை என்று தெரிந்ததால், ‘‘சரி போய் விட்டு வா. நீதான் சொல்வதைக் கேட்க மாட்டாயே!’’ சலிப்புடன் சொன்னவனை, அவளோ முறுவலோடு பார்த்தபடி எழுந்தாள்.
‘‘நானும் சோஃபியும் உன்னை மிகவும் மிஸ் பண்ணுவோம் ஏஞ்சல்.’’ சட்டென்று சொன்னவனின் குரல் மாற்றத்தை அவளால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
புன்னகை மாறாமல் அவனைப் பார்த்தாள் ஏஞ்சல்.
‘‘விரைவாக யாராவது உனக்குப் பொருத்தமான ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள் லூகாஸ். அப்போது இப்படி உனக்குத் தோன்றாது. பார், என்னுடன் வேலை செய்யும் எமிலி உன்னை அப்படியே தன் காதலால் குளிப்பாட்ட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறாள். அவள் சோஃபியையும் நன்றாகப் பார்த்துக் கொள்வாள். விரும்பினால் முயன்று பார்.’’ சொல்லிக் கொண்டே அந்த இடம் விட்டு நகர, அவனோ, தொங்கிப் போன முகத்துடன் அமர்ந்திருந்தான்.
****

