நீயென் சொந்தமடி 2 – 2

பாரீஸ் சர்வதேச விமான நிலையம், மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
‘‘நான் டாக்சியில் போய்க் கொள்வேன்.’’ என்று புறப்பட்ட ஏஞ்சலை தாம் கொண்டு வந்து விடுவதாகச் சொல்லி அழைத்து வந்திருந்தனர் லூகாஸும் சோஃபியும்.
காலை ஒன்பதுக்கு புறப்படும் விமானத்தில் இவள் செல்லவிருந்ததால், அதிகாலையிலேயே அவனை ஏன் தொந்தரவு செய்வான் என்று இவள் எவ்வளவோ தடுத்தும் கேட்காதவன், மகளையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.
‘‘இப்படியெல்லாம் பள்ளிக்கு லீவு எடுக்கலாமா சோஃபி? இதென்ன பழக்கம்!’’ கடிந்து கொண்ட ஏஞ்சலை, நித்திரை பாதி கலக்கம் மீதியாக முறைத்துப் பார்த்தாள் சோஃபி. காலையில் இவள் புறப்பட்டத்தில் இருந்து இதே முறைப்புடன் மௌன விரதம் இருக்கின்றாள் சின்னவள்.
‘‘அவள் என்னவோ பெரிய படிப்புப் படிக்கின்ற மாதிரி இப்படிச் சொல்கின்றாய்! அதெல்லாம் ஒருநாள் போகவில்லை என்றால் ஒன்றும் ஆகிவிடாது. நீ இந்தியா போகின்றாய் என்று நான் நேற்றுச் சொன்னதிலிந்து இவள் இப்படித்தான் இருக்கின்றாள்.’’ சிடுசிடுத்தான் லூகாஸ்.
‘‘ஹா..ஹா…உன் மகள் அப்படி இருக்கின்றாள் என்று சொல்லி, நீ ஏன் முகத்தை இப்படித் தூக்கி வைத்திருக்கின்றாய் லூகாஸ்?! இந்த இரண்டு கிழமைகளில், நான் திரும்பி வரும் போது நீ எமிலியுடன் கதைத்து ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். இது உன் நண்பியின் கட்டளையாகவே நீ எடுத்துக் கொள்ளலாம்.’’ நண்பனிடம் தன்மையாகவே சொன்னாள்.
லூகாஸ் மனதில் என்ன நினைக்கின்றான் என்று அவனின் ஒவ்வொரு செய்கைகளும் அவளுக்கு உணர்த்தவே, அவன் நட்பை என்றும் போல் மகிழ்வுடன் தொடர நினைத்தவள், அவனும் புரிந்து கொள்வான் என்ற எண்ணத்தில் தன்னை அவனுக்கு உணர்த்த முயன்றாள்.
அத்தோடு அவன் வாழ்க்கையும் அமைதியாக அமைய வேண்டும் என்று விரும்பினாள், முக்கியமாக சோஃபியின் எதிர்காலத்துக்காக.
எமிலி மிகவும் நல்ல பெண். அவளுடன் நட்பாகப் பழகிய இந்த சிலமாதங்களில், அவள் சோஃபியை நிச்சயம் தன் மகளாகப் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை வந்திருந்தது இவளுக்கு. அவளும் லூகாஸிடம் எப்படித் தன்னை வெளிப்படுத்துவது என்றே ஏங்கிக் கொண்டிருப்பது இவளுக்கு தெரிந்திருந்ததால் இவளே சொல்லி விட்டாள். இனி அவன் பார்த்துக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில்.
‘‘கட்டாயம் போகத் தான் வேண்டுமா ஏஞ்சல்?’’ இதுவரை காத்த மௌனத்தைக் கலங்கும் குரலால் கலைத்தாள் சிறுமி.
‘‘என்னடா செல்லம்…இங்க பார், உனக்கு பள்ளி மட்டும் இல்லையென்றால் உன்னையும் அழைத்துச் சென்றிருப்பேன்மா.’’ சொல்லிக் கொண்டே சிறுமியை அணைத்துக் கொண்டாள் ஏஞ்சல்.
அவள் இந்தளவுக்கு ஏங்குவதைப் பார்த்ததும் அவள் தாயின் மீது எப்போதும் போல கோபம் எழுந்தது.
பெற்றவர்கள் கொடுக்க வேண்டிய பாசம் பரிவைக் அவர்கள் சரிவரக் கொடுத்தால், பிள்ளைகள், அதை இன்னொரு இடத்தில் தேடித் திரிவார்களா?? அப்படித் தேடித் திரிந்து அதனாலேயே எத்தனை சிறுவர்களின் வாழ்வு திசைமாறி சின்னாபின்னமாகின்றது?!
தன் கொந்தளித்த மனதை ஒருவாறு அடக்கித் தன்னைச் சமாளித்துக் கொண்டவள்,
‘‘நீ பெரிய பெண் தானே? நான் என்ன சொல்கின்றேன் என்று நன்றாக விளங்கிக் கொள்ளக் கூடிய ஸ்மார்ட் கேர்ள் தானே..’’ கேட்டதும், கண்கள் கலங்க ஏஞ்சலைப் பார்த்த சிறுமி ‘ஆமாம்’ என்பதாக தலையை அசைத்தாள்.
‘‘செல்லம்டா.. அது தான் எனக்குத் தெரியுமே. ஸோ…அப்பாவோடு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும். ஏஞ்சல் போவதும் வருவதுமாக வந்து விடுவேன். அடம் பிடிக்காமல் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். எந்த நேரமும் ஐபாட் விளையாடக் கூடாது.’’ சொல்லிக் கொண்டே தான் செல்ல வேண்டிய விமானதுக்குரிய பயணிகள் வரிசையில் இணைந்து கொண்டவள்,
‘‘மறக்காமல் அப்பா வீட்டுக்குள் சிகிரெட் பிடித்தால்…’’ சொல்லி விட்டு லூகாஸை ஏறிட்டவள் குறுஞ் சிரிப்புடன், ‘‘நான் சொன்ன மாதிரி செய்ய வேண்டும்.’’ அவள் சொல்லச் சொல்ல மெல்லிய புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டாள் சோஃபி.
லூகாஸ் வீட்டினுள் வைத்து சிகிரெட் பிடித்தால் தலையில் இறுக்கிக் கொட்டும் படி சொல்லிக் கொடுத்திருந்தால் இவள். அதைக் கேட்டதும் சிறுமிக்கு சிரிப்பு வந்து விட்டது. சிரித்த சிறுமியை அப்படியே அள்ளி அணைத்துத் தூக்கியவள் அவள் பட்டுக் கன்னத்தில் இறுக்கி முத்தம் கொடுக்க, சிறுமியும் மாறி மாறி அவளுக்கு முத்தம் கொடுத்தாள்.
தாய் பிரிந்து சென்றதில் இருந்து இந்தச் சின்னப் பெண் மெல்ல மெல்ல ஏஞ்சலில் தங்கியிருக்கத் தொடங்கி விட்டாள். ஏஞ்சலும் அவளை மிகவும் விருப்பமாகவே கவனித்துக் கொண்டாள். அதுதான் லூகாஸ் மனதையும் இவள் புறமாகத் திருப்பியதோ என்னவோ?
செக் இன் முடிந்து இவள் உள்ளே செல்லும் வரை இவளை ஒட்டிக் கொண்டே நின்றாள் சோஃபி. இவள் உள்ளே செல்ல முன், ‘‘இனி நீ போ லூகாஸ். நான் போய்க் கொள்ளுவேன். உன் வேலையில் விடுப்பெடுத்து கொண்டு வந்து விட்டதுக்கு மிக்க நன்றி.’’ என்றவளை அவனோ நன்றாக முறைத்தான்.
‘‘கவலைப்படாதே, நான் பத்திரமாகப் திரும்பி வருவேன். நான் சொன்ன எமிலி விடயத்தை மறந்து விடாதே.’’ சொல்லி, கண்ணடித்தவள், அவனை அணைத்து அவனிடமிருந்து விடைபெற, மெல்லிய முறுவலுடன் அவளுக்கு விடை கொடுத்தவன் மகளின் கையைப் பிடிக்க, அவளோ ஏஞ்சலின் கரத்தைப் பற்றியவாறே உள்ளே நுழைய முயன்றாள்.
அதில் நின்று சோஃபியை சமாளித்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அவளோ, இதழ் பிதுக்கி அழவே தொடங்கி விட்டாள்.
அவளை அப்படியே தூக்கிக் கொண்டு, ‘‘போனதும் எனக்கு மறக்காமல் எடுத்துச் சொல்லு ஏஞ்சல். எத்தனை மணி என்றாலும் நான் காத்துக் கொண்டிருப்பேன். கவனமாக போய் வா..’’ சொல்லிக்கொண்டே மகளுடன் விரைவாக அப்பால் நகர்ந்தான் லூகாஸ்.
அவர்களையே திரும்பித் திரும்பி பார்த்து கைகாட்டிக் கொண்டே ஏஞ்சலும் உள்ளே நகர்ந்தாள். சோஃபியின் இந்த செய்கை அவளை மிகவும் பாதித்து விட்டது. மிகவும் உறுதியான மனம் கொண்டவளின் இலேசில் கலங்காத கண்களே இப்போது கலங்கியிருந்தது.
மெல்லிய ஏக்கப் பெருமூச்சுடன் நடந்தவள், தான் செல்ல வேண்டிய போர்டிங் கேட்டருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
ஏஞ்சல் வெளி வரிசையில் வந்து நின்ற போது, மிகத் தற்செயலாக அவள் மேல் பட்ட ஒரு ஜோடி விழிகளின் பார்வை, அடுத்த கணம் அதிர்ச்சியில் விரிந்து அப்படியே திகைத்து நிற்க, பார்வைக்குரியவனோ அதன் பின் அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினான்.
தன்னைத் தொடரும் விழிகளையும், அவற்றின் உடமையாளனுள் தன்னைப் பற்றி எழும் குழப்பங்களும் கேள்விகளும் தெரியாமலேயே சோஃபியை நினைத்துக் கொண்டிருந்த ஏஞ்சல், வாயில் திறக்க இன்னமும் நேரமிருக்கவே தன் கைபேசியை எடுத்து பெற்றோருடன் கதைக்கத் தொடங்கினாள்.
அப்போது, அவளை நோக்கி வந்த அந்த விழிகளுக்குச் சொந்தமானவன், மெல்ல வந்து சக பயணியாய் அவளருகில் அமர்ந்து கொண்டான்.

error: Alert: Content selection is disabled!!