நீ வந்து தங்கிய நெஞ்சில் 1.2

 

மற்றவர்கள் அறியா வண்ணம் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவன் கார்ட்டை எடுத்துத் தேய்த்தாள் யாமினி. 

உணவை முடித்துக்கொண்டு கார்ட்ஸ் விளையாடினார்கள். நேரம் பதினொன்றைத் தாண்டும் பொழுதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்று தனித்தனியாக அடித்திருந்த கூடாரங்களுக்குள் அடைக்கலமாகினர். 

உள்ளே செல்ல முதல், “கண்டதையும் யோசிக்காம ஒழுங்கா நித்திரை கொள்ளோணும்!” என்று மிரட்டல் போன்று சொல்லிவிட்டுப் போனான் அவன். 

கூடாரத்தினுள் வந்து அவரவர் அவரவர் இடத்தில் சரிந்ததும், “நிரு நல்ல டைப் என்ன?” என்றாள் திலினி.

நிருவா? இலேசாக முகம் மாற அவளைப் பார்த்தாள் யாமினி. 

அவன்தான் எனக்கு ஒபீஸ்ல எல்லா ஹெல்ப்பும் பண்ணுவான். இப்ப வரைக்கும் பெஸ்ட் ஃபிரெண்டும் அவன்தான்.” என்று சொன்னாள் அவள். 

இரத்தினபுரி அவளது சொந்த இடமாக இருந்தாலும் அவளின் அம்மம்மாவோடு கொழும்பில், அதுவும் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் ஏரியாவில் வளர்ந்தவளுக்கு நன்றாகவே தமிழ் பேச வந்தது. 

யாமினியின் கைப்பேசியில் குறுந்தகவல் வந்ததற்கான ஒலி கேட்டது. கூடாரத்தினுள் கரையாகப் படுத்திருந்தவள் எடுத்துப் பார்த்தாள். 

“ஒய் ஜும்க்கா!” என்று மெசேஜ் அனுப்பியிருந்தான் நிரோஜன். 

“ம்?”

“ஆர்?” என்று இடையிட்டுக் கேட்டாள் திலினி. 

நிரோஜன் என்று சொல்லப் பிடிக்கவில்லை யாமினிக்கு. “அம்மா!” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டாள். அது நிரோஜன்தான் என்று அஜந்தாவிற்குத் தெரியுமென்றாலும் அவள் காட்டிக்கொள்ளவில்லை. 

“நீ ஓகேயா?” என்று கேட்டான் அவன்.  

“ம்!” 

“என்ன?” 

திலினியைப் பற்றி இப்போது இவனிடம் பேசுவதா என்று யோசித்தாள். வேண்டாம் என்று முடிவெடுத்து, “என்ன என்ன?” என்று கேட்டு அனுப்பினாள். 

“நித்திரை கொள்ளேல்லையா?” 

“ம்கூம்.”

“இண்டைக்கு ஐயான்ர பெர்போமன்ஸ் எப்பிடி இருந்தது?”

“ஒழுங்கான ஒரு பாட்டுக்குக் கூட ஆட வராத உங்களுக்கு?”

“நாளைக்கு ரூம்ல நீயும் நானும் மட்டும் ஆடுவம் ஓகேயா?”  

“ஒண்டும் வேண்டாம்!” 

தந்தை இறந்ததிலிருந்து அவள் இன்னுமே இயல்புக்குத் திரும்பவில்லை என்று அவனுக்குப் புரிந்தது. என்னதான் அவள் மனத்தை மாற்ற என்று அழைத்துவந்திருந்தாலும் அதற்கென்று ஒரு காலமும் தேவையாயிற்றே. 

“வாறியா ஒரு நடை நடந்திட்டு வருவம்?” 

“இப்பயா?” அவளுக்கும் ஆசை எழுந்தாலும் பன்னிரண்டை நெருங்கும் நேரத்தை எண்ணி யோசித்தாள். அதோடு, மற்றவர்கள் விழித்திருக்கையில் அப்படி அவர்கள் இருவரும் மட்டும் நடப்பது சாத்தியப்படுமா என்ன?

“நாளைக்கு விடிய நடப்பம். இப்ப குட்நைட்!”

“குட்நைட்!” முத்தமிடும் ஸ்மைலி ஒன்றுடன் அவனும் தன் பேச்சை முடித்துக்கொண்டான். 

சொன்னதுபோலவே இருள் விலகாத பொழுதிலேயே எழுந்து, அவளுக்கு ஒருமுறை கைப்பேசியிலிருந்து அழைத்துவிட்டு நிறுத்தினான் நிரோஜன். 

அவள் வெளியே வந்தபோது தோளில் துவாயும், இரவு அவன் கட்டி ஆடிய பெட்சீட்டும் தொங்கின. பல்லுத் தேய்த்து முகம் கழுவுவதற்காக அத்தனை பொருள்களையும் மாற்றுடையையும் கையில் வைத்திருந்தான். அவளுடைய துவாயையும் வாங்கித் தன் தோளில் போட்டுக்கொண்டு அவளோடு நடந்தான். 

அடிக்கடி இங்கே வருவதால் அந்த மரங்களின் கூடல் முடிகிற இடத்தில் சிற்றோடை ஓடுவது அவர்களுக்குத் தெரியும். அங்கே யாரும் யாரையும் கவனித்துப் பார்ப்பதில்லை என்றாலும், பகல் பொழுதுகளில் அப்படி எல்லோரும் பார்க்கக் குளிப்பதற்கு யாமினி மிகவுமே கூச்சப்படுவாள். அங்கே வந்தால் இப்படித்தான் அதிகாலையிலேயே எழுந்து, இருவருமாகப் போய்க் குளித்துவிடுவார்கள். 

“யமி!”

“ம்!”

“இப்ப கொஞ்சம் பரவாயில்லையா உனக்கு?” 

“சில நேரங்கள்ல அப்பா இல்லை எண்டுறத இன்னுமே நம்பேலாம இருக்கே தவிர மற்றும்படி ஓகேதான்.”

“அன்ட்ரி எப்பிடி இருக்கிறா?”

“கவிக்குட்டியோட அவாக்குப் போகுது.”

அவளுக்கு ஒரு தமக்கை மட்டுமே. திருமணமாகி கவிரன் என்று மூன்று வயதில் மகன் இருந்தான். மகள், மருமகன், பேரன் என்று இருப்பதில் அவள் அன்னை நாகேஸ்வரிக்குப் பரவாயில்லை. 

மீண்டும் அமைதியாகிவிட்டவளைத் திரும்பிப் பார்த்து, “யம்மு என்னடி?” என்று அவளை இடையோடு சேர்த்து அணைத்தான் அவன். அவள் பயந்துபோனாள். “என்ன செய்றீங்க?” என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். 

“இந்த இருட்டுக்க எவன் பாக்கப்போறான் எங்கள?” என்றான் அவள் கண்களுக்குள் பார்த்து. 

“அதுக்கெண்டு இப்பிடித்தான் பப்ளிக் பிளேஸ்ல செய்வீங்களா?”

“இன்னும் செய்வன்!” என்றவன் அவள் கன்னத்தில் உதடுகளை அழுத்தி ஊற்றினான். 

“உங்கள…” என்று அவள் அடிக்கப்போக, அவன் விலகி ஓடினான். அவனைத் துரத்திக்கொண்டு அவள் ஓடினாள். 

சிற்றோடையின் முன்னேதான் இருவரும் சென்று நின்றார்கள். அங்கேயே பல்லைத் தீட்டி, ஓடையில் இறங்கிக் குளித்தார்கள். முதலில் அவன் வெளியே வந்து உடை மாற்றினான். அங்கே ஓரளவு நெருக்கத்தில் நின்றிருந்த மூன்று மரங்களைச் சுற்றி, கையோடு கொண்டுவந்த விரிப்பைக் கட்டிவிட்டு, அவளை அழைத்தான். 

அவளும் வந்து அதற்குள் புகுந்து, உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள். 

இதற்குள் நன்றாகவே பொழுது புலர ஆரம்பித்திருந்தது. தோளில் கிடந்த துவாயினால் தலையைத் துவட்டியபடி திரும்பி அவளைப் பார்த்துவிட்டு, “நல்லாருக்கே இந்த ஜீனும் டொப்பும். புதுசா?” என்றான் அவளிடம்.

“இது நீங்க வாங்கித் தந்ததுதான்.” சின்ன முறைப்புடன் சொன்னாள் அவள். 

“அதுதான் நல்லாருக்கு!” என்று சொல்லி, அப்போது தவறவிட்ட அடியையும் சேர்த்து இப்போது அவளிடமிருந்து வாங்கிக்கொண்டான். 

அவர்கள் திரும்பி வந்தபோது திலினி எதிரில் வந்துகொண்டிருந்தாள். அதுவும் இரவு படுக்கும்போது அவள் அணிந்திருந்த தொடைக்கு மேலே மட்டுமான ஷோர்ட்ஸ் வகை ஒன்றும், தொப்புளுக்கு மேலே நிற்கும் குட்டை பிளவுஸையும் கண்டு முகத்தைச் சுருக்கினாள் யாமினி. 

“என்ன இது இவள் இப்பிடி இருக்கிறாள்?”

“அதுக்கென்ன, கண்ணுக்குக் குளிர்ச்சிதானே.” வேண்டுமென்றே கண்ணில் சிரிப்புடன் சொன்னான் நிரோஜன் 

“ஓ! அப்ப நானும் போடட்டா?” 

“தாராளமா. நான் மட்டும் பாக்க!” என்றான் அவன் உடனே. 

இதற்குள் இவர்களைக் கண்டுவிட்டு ஓடி வந்த திலினி, “நானும் முகம் கழுவோணும். அதுவரைக்கும் நிக்கிறீங்களா?” என்று கேட்டாள்.

“குளிக்கிறது எண்டாலும் குளி. மறைப்பு மாதிரி கட்டினது இன்னும் இருக்கு.” என்று சொன்னான் நிரோஜன். 

அவள் போனதும், “அவே கொஞ்சம் அப்பிடித்தான் எண்டு உனக்குத் தெரியாதா? இதையெல்லாம் பெருசா எடுப்பியா நீ?” என்றான் அவன். 

“பெருசா எங்க எடுத்தனான். என்னவோ பிடிக்கேல்ல.” 

“என்ன பிடிக்கேல்ல?”

என்னவென்று சொல்வாள்? குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்குப் பெரிதாக எதுவும் நடக்கவில்லையே. 

இதற்குள் திலினியும் குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்தாள். யாமினியின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டபடி நின்றிருந்த நிரோஜனை அவள் பார்க்க, “என்ர வருங்காலம்.” என்று யாமினியைக் காட்டிச் சொன்னான் அவன். 

“உண்மையாவா?” என்று முகம் மலர்ந்தவள் அவர்கள் இருவரையும் வாழ்த்தினாள்.

 

error: Alert: Content selection is disabled!!