உண்மையில் அவளுக்கு அந்த அணைப்பும் அவன் தரும் அரவணைப்பும் தேவையாய் இருந்தன. அதை அனுபவித்து உள்ளம் தெளிந்தவள் நிமிர்ந்து, “நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இலை.” என்றாள்.
அவளை முறைத்தான் அவன். “அந்தக் கேள்வியே விசர்க் கேள்வி. இதில உனக்கு நான் பதில் வேற சொல்லோணுமா? அப்பிடி உன்னை வெறுக்கிறவன் இப்பிடி உன்னத் தேடி வந்து, உன்ர கையால சாப்பிட்டு, உன்னை இப்பிடி வச்சிருப்பனா?” என்றான் தாம் இருக்கும் நிலையைக் காட்டி.
அவளுக்கும் புரியாமல் இல்லை. ஆனாலும், பாதுகாப்பை இழந்து தவிக்கும் மனது உறுதியான வார்த்தைகளைத் தேடிற்று.
அவள் அவனையே பார்க்க, “இனியும் எங்களுக்க நிறையச் சண்டைகள் வரலாம் யமி. இந்த முறை மாதிரியே நான் முறுக்கிக்கொண்டு நிக்கலாம். ஆனாலும் திரும்ப உன்னட்டத்தான் வந்து நிப்பன். நீ இல்லாம எனக்கும் வாழ்க்கை ருசிக்காது.” என்று அவளை அணைத்துக்கொண்டான் அவன்.
அடுத்த நாள் காலையில் வழமைபோன்று அலுவலகத்தினுள் நுழைந்த நிரோஜன், கையில் மல்லிகைச் சரத்தைச் சுற்றியிருந்தான். அதை ஒருமுறை மூக்குக்குக் கொண்டுபோய் வாசம் இழுத்துவிட்டு, நவீனை அழைத்தான்.
“என்னங்க?” என்று கேட்டுக்கொண்டு எழுந்துபோனான் நவீன்.
“என்னது… என்னங்கவா?” விழிகள் பிதுங்க அவர்களைப் பார்த்தான் அசோகன். சுற்றியிருந்தவர்கள் வெடித்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, தம் முன்னே இருந்த கணணிக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டனர்.
அங்கே நிரோஜன் தன் அறையில் நவீனைப் பிடித்துத் திருப்பி நிறுத்திவிட்டு, கையில் சுற்றியிருந்த மல்லிகைச் சரத்தை எடுத்து, அவன் தலையில் சூட்டிவிட முயன்றான்.
அது நிற்கமாட்டேன் என்று நின்றது.
“என்ன மச்சான், கிளிப் ஏத்தியும் நிக்குது இல்ல.” அவர்கள் பேசுவது அசோகனுக்குக் கேட்காது என்பதில் சொன்னான்.
“நீட்டு முடி இருக்கிற பொம்பிளைகளுக்கே நிக்காதாம். எனக்கு எப்பிடியடா நிக்கும். நீ உச்சில குத்து.”
அவனும் உச்சியில் மல்லிகைச் சரத்தை வைத்துக் குத்திவிட்டு நவீனின் இரண்டு புறமும் வழிய விட்டான்.
இதையெல்லாம் பார்த்திருந்த அசோகனுக்குத் தன் இதயம் வெடித்துச் சிதறிவிடுமோ என்று பயமாயிற்று. அந்தளவில் அதிர்ந்துபோனான்.
அடுத்த காட்சியாக நவீனைத் திருப்பி நன்றாக அழகு பார்த்துவிட்டு, “கன்றாவியா இருக்கு மச்சான்!” என்றான் நிரோஜன் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
“பாக்கிறாரா?” என்ற நவீனுக்கும் தன்னை நினைத்துச் சிரிப்புத்தான்.
“ம்ம்!” என்றவன் நவீனின் இடுப்பைப் பின்னிருந்து கட்டிக்கொண்டு, தோள் பட்டையில் தன் தாடையைப் பதித்து, கன்னத்தோடு கன்னம் உரச நிற்க, அதை செல்ஃபி எடுத்த நவீன், அசோகன் மட்டும் பார்ப்பதுபோல் புலனத்தின் ஸ்டோரியில் வைத்துவிட்டான்.
இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிராது. “என்ன கன்றாவி இது? பாவம் அசோகன் அண்ணா.” என்று, யாமினியிடமிருந்து நிரோஜனுக்குப் புகைப்படத்தோடு குறுந்தகவல் வந்தது.
பார்த்த நண்பர்களுக்குச் சிரிப்பு. அன்றிலிருந்து அவர்களின் அலுவலகத்தில் ஒருவர் மற்றவருக்கு ‘என்னங்க’தான்.
அடுத்து வந்த நாள் ஒன்றில் யாமினியையும் அழைத்துக்கொண்டு புடவைக்கடைக்குப் போனான் நிரோஜன். அங்கே அவளுக்குப் பட்டுச் சேலை அவன் பார்க்க, அவளுக்கு ஒரு மாதிரியாகிற்று.
“நிரோ, எனக்கு வேண்டாம்.” கோபப்படுவான் என்று தெரிந்ததால் அவள் குரல் உள்ளே போயிற்று.
“ஏன்?” ஒற்றைச் சொல் கேள்விதான். அவள் எதிர்பார்த்தது போலவே புருவங்களைச் சுருக்கி, அந்த ஒற்றைச் சொல்லிலேயே தன் சூட்டைத் தாராளமாகக் காட்டினான் அவன்.
“நிரோ ப்ளீஸ்!”
“ஏன் எண்டு சொல்லு. இதுக்கு முதல் நான் எடுத்துத் தந்தது இல்லையா? இல்ல, நான் உனக்கு எடுத்துத் தரக் கூடாதா?”
என்ன சொல்லுவாள்? பணம் என்கிற ஒன்று அவர்களுக்கு நடுவில் வந்து, அதனால் ஒரு பிரச்சனை உண்டாகியது காரணமா, இல்லை, அவன் பணத்தை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை என்கிற எண்ணம் காரணமா தெரியவில்லை.
மனம் கூசியது. பணத்தைச் சேமி, வீண் விரயம் செய்யாதே என்று அவனுக்குப் பாடம் எடுத்துவிட்டு, அவளுக்கு என்றதும் சந்தோசமாகப் பெற்றுக்கொள்வாளா?
இதையெல்லாம் அவனிடம் சொல்ல முடியாமல், “நீங்க செலக்ட் பண்ணித் தாங்க. நான் பே பண்ணுறன்.” என்று சொன்னாள்.
அவன் முறைத்தான். “நானும் நீயும் வேற வேறயா யமி?” என்றான் பார்வையில் கூர்மையோடு.
“ப்ச் என்ன கதைக்கிறீங்க?” என்றாள் அவள் வேகமாக.
“விளங்குது எல்லா!” என்றுவிட்டு அவளுக்குப் பிடித்த வகையில் தங்க நிறத்தில் ஜரி வேலைப்பாடு Zari work) நிறைந்த, அடர் நாவல் உடலுக்கு முந்தானைப் பகுதி மிக மென்மையான கடல் பச்சை நிறத்தில் உள்ள பட்டுச் சேலை ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
அன்றே பிளவுஸ் தைக்கக் கொடுத்தார்கள். அப்படியே சேலைக்குத் தோதான அணிகலன்கள், முக்கியமாக அவளுக்குப் பிடித்தது போன்ற அழகான பெரிய ஜும்க்கா, கைப்பை, காலணி என்று அவள் எப்படி ஒரு திருமணத்திற்குத் தயாராவாள் என்று தெரிந்திருந்தவன் அத்தனையையும் அவளைக் கேளாமல் வாங்கிக்கொடுத்தான்.
“வீண் செலவு நிரோ. ஹாண்ட் பாக் வேண்டாம்.” என்று ஒவ்வொன்றுக்கும் மறுத்தவளைப் பொருட்டிலேயே கொள்ளவில்லை.
என்னதான் இதெல்லாம் வேண்டாம், அநியாயச் செலவு என்று உள்ளே ஓடினாலும், அவள் விருப்பம் என்ன, அவள் ரசனை என்ன, அவள் எப்படித் தயாராவாள் என்று அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொண்டு, அத்தனையையும் அவன் பார்த்து பார்த்து வாங்கித் தந்தபோது, அவள் உள்ளம் நிறைந்து தளும்பியது.

