அத்தியாயம் 11
கூத்தும் கும்மாளமும் போடுவதற்குச் சிறு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று காத்திருக்கும் கும்பல் அவர்களது. அப்படியிருக்க இன்னும் ஒரு மாதத்தில் அஜந்தாவிற்குத் திருமணம் என்பதும், அவளின் வருங்காலக் கணவன் கொழும்பு வந்திருக்கிறான் என்பதும் எவ்வளவு பெரிய காரணங்கள்?
நிரோஜன் பணிபுரியும் அலுவலகத்தின் அலுவலக ஒன்றுகூடல்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த கூட்ட அரங்கினுள்(Meeting Hall) பேச்சுலர் பார்ட்டி ஒழுங்கு செய்திருந்தார்கள்.
அந்த ஒன்றுகூடல் மண்டபம் முழுவதும் அலங்காரம் செய்து, வரவேற்புப் பதாகை(Welcome Banner) கட்டி, டிஜே அமைத்து, கலர் கலர் விளக்குகளை ஒளிரவிட்டு என்று ஏற்பாடுகள் அத்தனையும் அருமையாக இருந்தன.
ஆர்வமும் படபடப்புமாக திவாகர் அஜந்தா ஜோடி அந்த அரங்கினுள் கால்களை வைத்ததுதான் தாமதம், எந்தப் பக்கமிருந்து என்று தெரியா வண்ணம் நாலா பக்கமிருந்தும் பார்ட்டி ப்ரோப்பர்(Party Propper)கள் சடார் சடார் என்று வெடித்தன.
அதிலிருந்து வந்த வண்ணக் காகிதங்கள், மின்மினிப் பொறிகள் பூக்களைப் போல பறந்து வந்து அவர்கள் தலைமீது விழுந்தன.
அது போதாது என்று பத்துப் பேர் கொண்ட கூட்டமாயினும் பலத்த கரகோசமும் சத்தமான வாழ்த்தொலிகளோடும் அவர்கள் வரவேற்ற அழகில் மணமாகப் போகும் ஜோடியின் முகங்கள் அன்றலர்ந்த மலர்கள் போன்று மலர்ந்து சிரித்தன.
கரகோஷம் மெல்ல அடங்கவும் “இனி என்ர சந்தோசம் மொத்தமா போச்சு மச்சான்!” என்று குரல் ஒன்று பெரும் சோகத்துடன் ஒலிக்க, அதன் பின்னே சோக வயலின் இசைக்க, அதற்கு இணையாக வடிவேல், ‘அவ்வ்வ்வ்வ்…… அவ்வவ்வவ்வ்வ்வ்வ்வ்…அவ்வ்வ்வ்’ என்று அழ ஆரம்பித்தார்.
முதலில் ஒன்றும் புரியாமல் அதிர்ந்து, குபீர் என்று சிரித்திருந்தான் திவாகர்.
ஒரு பார்ட்டி ஒழுங்கு செய்திருக்கிறார்கள், போக வேண்டும் என்று அஜந்தா சொன்னபோது அவனிடத்தில் மெல்லிய குறுகுறுப்பு. யாமினியைத் தவிர்த்து வேறு யாரையும் நேரடியாகத் தெரியாது. அவளின் எதிர்காலக் கணவன் என்று நிரோஜனைப் புகைப்படத்தில் பார்த்திருக்கிறான். அதில் எப்படி இருக்குமோ, எப்படி அணுகுவார்களோ என்கிற கேள்விகளோடுதான் வந்தான்.
வந்த நொடியிலேயே உன் தயக்கங்கள் அத்தனையும் அர்த்தமற்றவை என்று காட்டியிருந்தனர். முகம் முழுக்க நிறைந்த சிரிப்புடன் பெரிய மலர்க் கொத்து ஒன்றினைக் கொடுத்து வரவேற்ற நிரோஜன், அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான்.
அந்தச் சுவரில் பெரிதாக ஒட்டப்பட்டிருந்த பேனரில் ஒரு பக்கமாக அவர்கள் இருவரும் நிற்க, அதன் பக்கத்தில், “வாழ்த்துகள்! இன்னும் சில நாட்களில் உங்கள் வாழ்க்கையின் ‘Free Trial Version’ முடிந்து, ‘Premium Subscription’ ஆரம்பமாகிறது!” என்று பெரிதாக எழுதியிருந்தார்கள்.
அது மட்டுமல்லாது அந்த ஹோல் முழுக்க,
“இப்போது வரை உங்கள் செல்போனுக்கு மட்டும் Lock இருந்தது. இனி உங்கள் வாழ்க்கைக்கும் Lock வந்துவிடும்.”
“திருமணம் என்பது இருவர் ஒன்று சேர்வது அல்ல; ஒருவரின் ரிமோட் கண்ட்ரோல் இன்னொருவரிடம் ஒப்படைக்கப்படுவது!”
“இனி இரவு 11 மணிக்கு ‘எங்க நிக்கிறீங்க?’ என்கிற கேள்விக்கு GPSஐ விடத் துல்லியமான பதில் சொல்ல வேண்டிய காலம் தொடங்குகிறது!”
“இப்போது சிரித்துக்கொண்டே புகைப்படம் எடுங்கள்; திருமணத்திற்குப் பிறகு EMI, Bills, Grocery List எல்லாம் சேர்ந்து Group Photo எடுக்கும்!” என்று நிறைய அங்கங்கே எழுதப்பட்டிருந்தன.
அத்தனையையும் வாசித்தவர்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. யாமினியும் அவர்களோடு சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
அத்தனையும் நிரோஜனின் ஏற்பாடு. அவன்தான் இப்படிச் சிறு பிசகு கூட இல்லாமல், மிக நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் செய்வான். அது மட்டுமல்லாது எல்லாம் முடிந்த பிறகும் அத்தனை பேரையும் சேர்த்துக்கொண்டு ஒதுக்கியும்விடுவான்.
திவாகர் அஜந்தா இருவரையும் நடுவில் நிறுத்தி, நேசத்தைப் பகிரச் சொன்னார்கள். ஒருவரை மற்றவருக்கு ஏன் பிடிக்கும் என்று கேட்டார்கள். இருவரிடமும் ஒரே மாதிரியான கேள்விகளாகக் கேட்டு, யார் யாரை நிறையப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்று பரிசீலனை செய்கிறோம் என்று படாதபாடு படுத்தினார்கள்.
சிறு கூச்சம், சின்ன வெட்கம், மெல்லிய தடுமாற்றம் என்று மிக மிக அழகாக இந்தக் கும்பலுக்கு ஈடு கொடுத்தது மணமாகப்போகும் அந்த ஜோடி.
யாமினிக்கு அவர்களைப் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை.
அஜந்தாவிற்கு இவள் வயதுதான். மாதங்களால் மட்டுமே மூத்தவள். ஆனால், இவளை விடவும் பக்குவமானவள். அவளிடம் எப்போதுமே பொறுப்பு, நிதானம் எல்லாமே இவளை விட அதிகமாய் இருக்கும்.
அப்படியானவளே இன்று புதிதாகத் தெரிந்தாள். அவள் பார்வை அடிக்கடி திவாகரிடம் ஓடியது. அந்தக் கண்களில் இருந்த மின்னலும் முகத்தில் தெரிந்த பூரிப்பும் அவளைப் பேரழகியாகக் காட்டின. எதைச் செய்ய முதலும் அவனைப் பார்ப்பதும், அவன் கண்ணசைவில் நடப்பதும், அவனை ஒட்டியே நிற்பதும் என்று யாமினியால் பார்வையை அவர்களிடமிருந்து அகற்றவே முடியவில்லை.
திவாகரும் அதேதான். யார் கை கொடுத்துப் பேசினாலும் அவளின் ஒரு கையைத் தன் கைக்குள்தான் வைத்திருந்தான். அவள் பேசுகையில் பார்வையை அவள் முகத்தில் வைத்திருப்பதும், ஒன்றை ரசிக்கையில் அதைப் பார்வையாலேயே அவளிடம் பரிமாறுவதும், தோள் பற்றியோ கரம் பற்றியோ அவளை நகர்த்திச் செல்வதும் என்றிருந்தான்.
“விட்டா கண்ணாலேயே தின்னுவாய் போல.” அவளருகில் இலேசாகச் சரிந்து காதோரமாகக் கிசுகிசுத்தான் நிரோஜன்.
மென் முறுவலுடன் திரும்பி அவனைப் பார்த்து, “அந்தளவுக்கு வடிவா இருக்கினம் நிரோ. அவள் கதைக்கிறத வச்சு ரெண்டு பேருக்கையும் நல்ல புரிந்துணர்வு இருக்கு எண்டு நினைச்சிருக்கிறன். இப்ப நேர்ல பாக்கேக்க ரெண்டு பேரின்ர மனமும் ஒண்டுப்பட்டிருக்கிறது அப்பிடியே தெரியுது.” என்று அவன் குரலிலேயே அவளும் சொன்னாள்.
“பேச்சுக் கலியாணம்தானே? இல்ல, இந்தப் பக்கம் லவ் பண்ணிட்டு அந்தப் பக்கம் அரேஞ்ச் மேரேஜ் எண்டு மாத்திட்டினமா?” அவள் சொன்னதையும் அவர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல் பார்வை அவர்களில் இருக்க வினவினான் அவன்.

