அவனும் சிறு புன்னகையுடன் அவர்களை ரசிக்க, “எனக்கு எப்ப நாங்க இப்பிடி இருப்பம் எண்டு இருக்கு நிரோ.” சிறு ஏக்கமும் ஆசையுமாகச் சொன்னாள் அவள்.
“இப்பவே நாங்க அப்பிடித்தான்!” என்றான் அவன்.
திரும்பி அவனைப் பார்த்தாள் யாமினி. பார்வைகள் இரண்டும் கவ்விக்கொண்ட அந்த நொடியில் அவள் உலகமும் அழகாயிற்று. அவன் சொல்வது உண்மைதானே.
அவன் விரல்கள் வேறு தேடிவந்து அவள் கரத்தைப் பற்றிக்கொண்டபோது, எப்படி உணர்கிறோம் என்று சொல்ல முடியாத ஒரு அழகான உணர்வு அவளைச் சூழ்ந்தது.
சுற்றியிருந்த அத்தனை பேரும் மாயமாகிவிட அந்த அரங்கில் அவனும் அவளும் மட்டுமே. அவன் வேறு, “நீ போட்டிருக்கிற ஜும்க்கா…” என்றுவிட்டுப் புருவங்களை மாத்திரம் அசைத்து, ஆளையே அசரடிக்கிறது என்பதுபோல் காட்டினான்.
அவள் முகம் பூரித்து மலர்ந்து போயிற்று. “நல்லாருக்கா?” என்றாள் ஆர்வமாக.
“கீழதான் என்ர ஒபீஸ் ரூம். வந்தாய் எண்டா எந்தளவு நல்லாருக்கு எண்டு சொல்லுவன்.” உதட்டினுள் ஒளிந்துகொண்டிருந்த விசமச் சிரிப்புடன் முணுமுணுத்தான் அவன்.
அவள் கன்னங்கள் கதகதத்தன. ஜும்க்கா வகைகள் அவளுக்கு மிகவும் பிடித்தமானவை. கழுத்துக்கு எதுவும் போடாமல் காதில் ஜும்க்கா சற்றுப் பெரிதாக அணிந்துகொள்வாள்.
அது அவனுக்கும் பிடிக்கும். தனிமை கிடைத்தால் அவள் காதோரத்தையும் கன்னக் கதுப்பையும் முத்தமிட்டே சிவக்க வைப்பான்.
இன்றும் அதற்கு அடிபோடுகிறான், கள்ளன் என்று அவள் நினைத்து முடிக்க முதலே, அவள் விரல்களைக் கோத்திருந்த அவன் கரம், அழுத்தம் கொடுத்துத் தன் ஆசையை இன்னொரு முறை சொல்லிற்று.
யாமினியால் அவன் புறம் திரும்பவே முடியாமல் போயிற்று. “நிரோ ப்ளீஸ்!” என்றாள் முணுமுணுப்பாக.
திடீரென்று நவீன் ஓடிப்போய் வாந்தி எடுத்தான். எல்லோரும் ஒரு கணம் பயந்துபோனார்கள். என்னவென்று விசாரித்தவர்களிடம் ஒன்றும் சொல்லாமல் அசட்டுத் தனமாகச் சிரித்தான். யாருக்கும் தெரியாமல் உள்ளே விட்டது வயிற்றைக் கலக்கியிருந்தது. நிரோஜனுக்குப் புரிந்துபோயிற்று.
பெண்கள் போனதும் ஆரம்பிக்கலாம் என்று சொன்னதைக் கேட்காமல் எடுத்துக் குடித்திருக்கிறான். இது தெரிந்தால் முதல் ஆளாக யாமினி சண்டைக்கு வருவாள். அதில், “அது அவன் நாலு மாதம். அதான்!” என்றான் பார்வை ஒரு முறை அசோகனைத் தொட்டு வர.
யாருக்கும் எதுவும் ஒரு நொடி புரியவில்லை. அசோகனுக்கு மட்டும் அந்தக் கட்டடமே இடிந்து தன் தலையில் விழுந்தாற்போலாயிற்று.
உடனேயே யாமினி பக்கம் திரும்பி, “பாத்தியாம்மா இவங்களை? கடைசில பிள்ளையப் பெத்து, கைல வச்சுக்கொண்டு நிக்க போறாங்கள். நீ அந்தப் பிள்ளைக்குப் பெயர் வைக்கிற நில வரும் பார்!” என்று சொன்னான்.
அப்போதுதான் அங்கிருந்த எல்லோருக்குமே ‘அவன் நாலு மாதம்’ என்று சொன்னதன் பொருளே புரிந்தது. புரிந்த கணம் விழுந்துவிழுந்து சிரித்தனர்.
யாமினிக்கு அசோகனை எண்ணிப் பாவமாகக் கூடப் போயிற்று. “ஐயோ அண்ணா! அவே ரெண்டு பேரும் உங்களோட விளையாடினம். அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல. சொல்லுங்க நிரோ. பாவம் எல்லா அவர்.” என்று சொன்னாள் அவள்.
“என்னத்த சொல்லுறது? இன்னும் அஞ்சு மாசத்துல ஒரு ஆம்பிளைப் பிள்ளையப் பெத்துக் கைல குடுக்கிறமா இல்லையா எண்டு பார்.” என்று நின்றான் அவன்.
இதற்குள் டிஜே ஒலிக்க ஆரம்பித்தது.
அதுவும்,
ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு
மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு
வருதே அலையாட்டம்
வாக்கிங் வரும் சாக்லேட் செலையாட்டம் என்று பாடவும் அவள் இடையை வளைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்திருந்தான் நிரோஜன்.
அதிர்ந்துபோனாள் யாமினி. எல்லோரும் சேர்ந்து ஆடுவதெல்லாம் நடக்கும்தான். என்றாலும் இப்படி அவர்கள் ஜோடியாக ஆடுவது? அதுவும் அவள் இடையில் கையைப் போட்டுக்கொண்டு?
“நிரோ ப்ளீஸ்!”
அவன் கேட்க வேண்டுமே. அவன் நண்பர்கள் கூட்டம் வேறு அவர்கள் இருவரையும் சுற்றி சுற்றி வந்து ஆட ஆரம்பித்தனர்.
உள்ளுக்குள் பூரிப்பும் ஆனந்தமும் பரவாமல் இல்லை. ஆனாலும் வெட்கமும் கூச்சமும் வந்து தாக்கியதில், “நிரோ விடுங்க ப்ளீஸ்.” என்று விலகினாள்.
இடையிலிருந்து கையை எடுத்தாலும் யாமினியையே சுற்றி சுற்றி வந்து ஆடிக்கொண்டிருந்தான் நிரோஜன்.
மற்றவர்களோடு சேர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தபடி பார்த்திருந்த திலினியால் அவர்களிடமிருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை.

