நீ வந்து தங்கிய நெஞ்சில் 12.1

அத்தியாயம் 12

அவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அத்தனையும் ஒரு நிலைக்கு வருவதற்கே நடுச்சாமமாயிற்று. இதற்குள் அவர்களோடு சேர்ந்து தானும் ஆடும் அளவிற்கு வந்திருந்தான் திவாகர்.

அவரவரே எடுத்து உண்பதுபோல்தான் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமக்குப் பிடித்தவற்றைத் தட்டில் எடுத்துக்கொண்டு நின்றபடி, நடந்தபடி, பேசியபடி என்று சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அடிக்கடி மித்ரன், மகேஷ், அசோகன், நவீன் குழுவில் யாரோ ஒருவரோ இருவரோ காணாமல் போனார்கள். பிறகு வந்தார்கள். நிரோஜன் சாப்பிடுவதாக இல்லை.

இதையெல்லாம் கவனித்த யாமினி நிரோஜனை முறைத்து முறைத்துப் பார்த்தாள். அவன் இவள் பார்வையைச் சந்திக்க வேண்டுமே. தங்களைக் கண்டுகொண்டாள் என்று தெரிந்ததால் தப்பி ஓடிக்கொண்டிருந்தான்.

யாமினி விடவில்லை. “சாப்பிடேல்லையா?” அவனைத் தேடிப்போய் முறைப்புடன் கேட்டாள்.

ஒரு கணம் தடுமாறிவிட்டு, “நாங்களே பார்ட்டிய அரேஞ்ச் பண்ணிப்போட்டு நாங்களே முதல் ஆளா நிண்டு சாப்பிடுறதா? என்ன யமி நீ?” என்றான் அவன்.

“ஓ! அந்தளவுக்கு நல்லவன் நீங்க?”

“இல்லையா என்ன? உன்ர ஃபிரெண்ட் எண்டுதானே இத்தனை ஏற்பாடு.” என்று அவளைக் குளிர்விக்க முயன்றான்.

“நடிக்காதீங்க. முள்ளுக் கரண்டியாலயே தொண்டைல ஏத்தி விட்டுடுவன். டிரிங்க்ஸ் வாங்கி வச்சிருக்கிறீங்க என்ன? அதான் சாப்பிடாம திரியிறீங்க. உங்கட ஆக்கள் வேற அடிக்கடி காணாம போயினம். எல்லாரின்ர கண்ணும் மின்னுது. காரணமே இல்லாம அத்தனை பல்லையும் காட்டி இளிக்கிறது, கேக்க முதலே எதையாவது எடுத்துக்கொண்டு வந்து தாறது. இதையெல்லாம் பாத்த பிறகும் கண்டுபிடிக்க மாட்டன் எண்டு நினைச்சீங்களா?”

‘இவள் போன பிறகு ஆரம்பிங்கடா எண்டு சொன்னதைக் கேட்டாங்களா, ராஸ்கல்ஸ்!’ என்று இடுப்பில் கையை வைத்துத் தலையைக் கோதினான் அவன்.

“நீங்களும் குடிச்சனீங்களா?”

“இன்னும் இல்ல.” என்றான் அவசரமாக.

“இன்னும் இல்ல?”

நக்கலாக அவள் கேட்ட விதத்தில், ‘அடேய்! உளறாதடா!’ என்று உள்ளே அலறினாலும், “ப்ச் யமி! என்னை நம்ப மாட்டியா?” என்று அதட்டினான்.

“இல்ல, நம்ப மாட்டன்!” என்றாள் அவள் உடனேயே. “ஊதுங்க முதல், நாறுதா எண்டு பாக்கிறன்.”

“அடியேய் உன்னில சத்தியமா குடிக்கேல்ல நான்.”

“அப்ப ஊதுங்க.”

“யமி!”

“ஊதச் சொன்னனான்!”

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு இலேசாக அவள் முகத்தருகே நெருங்கி ஊதினான் அவன்.

அவன் இன்னும் மது அருந்தவில்லை என்று அவளுக்கு முதலே தெரியும். ஆனாலும், கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட மனமில்லை. இப்படித் தன் முன்னே அடங்கி, தவறு செய்த குழந்தை போல் நிற்கும் அவனை அவளுக்கு மிக மிகப் பிடிக்கும். அதனாலேயே சும்மா மிரட்டினாள்.

“லைட்டா நாறுற மாதிரி இருக்கே.” உதட்டுக்குள் சிரிப்பை அடக்கியபடி வேண்டுமென்றே சொன்னாள்.

“சேட்டை உனக்கு? தொட்டுக் கூடப் பாக்காதவனிட்ட நாறுது?”

“நான் என்ன பொய்யா சொல்லுறன்?” என்று ஓரமாக அவனை இழுத்துப்போய், மணந்து பார்க்கிறேன் என்று வாசம் பிடித்தாள்.

அந்தக் கள்ளியைக் கண்டுகொண்டான் நிரோஜன். “என்னடி வேணும் உனக்கு இப்ப? கிஸ்ஸா ஹக்கா?” என்றான் சிரிப்புடன்.

“ரெண்டும்!” கண்ணைச் சிமிட்டிச் சொன்னாள் யாமினி.

அவன் தம்மைச் சுற்றிப் பார்வையைச் சுழற்ற, அந்த அரை இருளுக்குள் பெருசாகத் தெரியாதுதான் என்றாலும், “கொன்றுவன் ராஸ்கல். பேசாம நிக்கோணும்.” என்று மிரட்டினாள் அவள்.

“தனியா மாட்டு நீ. அப்ப இருக்கு உனக்கு!” என்றான் அவன்.

புன்னகை உண்டானாலும், “இன்னும் சாப்பிடாம என்ன செய்றீங்க நீங்க?” என்று கேட்டாள்.

“இப்ப என்ன உனக்கு? நான் சாப்பிடோணும். அவ்வளவுதானே? நீயே தா!” என்றான் அவன்.

அவள் முறைத்தாள்.

“இந்த நேரம் எங்களைக் கவனிக்க ஆருமே இல்ல. நீ தா!”

அவளும் பார்வையைச் சுழற்றினாள். யாரும் இவர்களைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. அவள் ஆசை மனதும் உந்த, தன் தட்டில் இருந்த ஃபிரைட் ரைஸை கரண்டியில் அள்ளி, அவனுக்குக் கொடுத்தாள்.

“இப்ப சந்தோசமா? போகவா?” அந்த ஒற்றை வாயோடு தப்பியோட முயன்றான் அவன்.

அவள் விடவில்லை. அவன் நெஞ்சுச் சட்டையிலேயே பிடித்து அவனைச் சுவரோடு சுவராகச் சாற்றினாள்.

அதில் அதிர்ந்து, “ஏய் என்னடி இது? ஒரு ஆம்பிளைய இப்பிடிக் கொடுமப் படுத்திப் பழகாத!” என்று சட்டையை நேராக்கிவிட்டவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அடுத்தடுத்து உணவை அள்ளி அவன் வாய்க்குள் அடைந்தாள்.

அவனைப் போதும் என்று சொல்வதற்குக் கூட விடவில்லை. தட்டில் இருந்த முழுவதையும் அவன் வாய்க்குள் அடைந்துவிட்டே விட்டாள்.

ஒற்றை பியர்தான் என்றாலும் அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது. சாப்பிட்டுவிட்டால் மது அருந்த மாட்டான். அதில் வயிற்றை முழுமையாக நிரப்பிவிட்டாள்.

கடைசி வாயையும் விழுங்கிவிட்டு, “பொம்பிளையாடி நீ?” என்றான் அவன், போட்டுவைத்த அத்தனை திட்டங்களும் வீணாகிப்போன கடுப்புடன்.

error: Alert: Content selection is disabled!!