நீ வந்து தங்கிய நெஞ்சில் 12.2

அவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. தம்மைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவனை நெருங்கி, “அதான் நவீனை நாலு மாசம் ஆக்கினீங்களா?” என்று கேட்டாள்.

நொடியில் அவன் மனநிலையே மாறிற்று. விசமச் சிரிப்புடன் என்னவோ சொல்ல வந்தவனை முந்திக்கொண்டு, “மூச்! வாயே திறக்கக் கூடாது. போங்க!” என்று துரத்தினாள்.

ஆனால், அவன் எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், அவன் விழிகளில் கசிந்த குறும்பிலேயே அவள் மொத்தமாகச் சிவந்துபோனாள்.

அதைக் கண்டு சத்தமாக நகைக்கப்போனவனின் வாயை மூடி, “போங்க பேசாம!” என்று துரத்தியவளின் விழிகளில் அத்தனை சிரிப்பு.

அப்படியே அவளை அள்ளிக் கொஞ்சும் ஆசை அவனுக்கு. சூழ்நிலை சரியாக இல்லை என்பதில் பேசாமல் போனான்.

அதுவரையில் தம்மை யாரும் கவனிக்கவில்லை என்றுதான் எண்ணியிருந்தனர். ஆனால், மற்றப் பெண்களோடு நின்றிருந்தாலும் திலினியின் பார்வை இவர்களிடம்தான். கவனிக்க வேண்டும் என்று நினைத்து அவள் கவனிக்கவில்லை.

அவர்களுக்குள் இருக்கும் அந்நியோன்யம் அவளைக் கவர்ந்ததென்றால், எத்தனை அடாவடியாக இருந்தாலும் அவளுக்கு அடங்கிப் போகும், அவளையே சுற்றி சுற்றி வரும் நிரோஜன் கவனிக்க வைத்தான்.

அப்படிப் பார்த்த வரையில் யாமினி கொடுத்துவைத்தவள் என்றே தோன்றிற்று. இத்தனை துள்ளலும் துடிப்பும் நிறைந்த ஒருவன் கிடைத்தால் வாழ்க்கை மொத்தமும் அழகாகிவிடாதா என்ன? தனக்கும் அப்படி ஒருவன் கிடைக்க மாட்டானா என்கிற ஏக்கம் அவளுக்குள் உண்டாயிற்று.

திவாகருக்குக் கொழும்பு புது இடம் என்பதும், இன்னும் மணமாகாத ஜோடியை இரவு நேரத்தில் தனியாக வெளியே அனுப்பியதும், பார்ட்டி என்கிற ஒற்றைச் சொல்லே கண்ட கண்ட கற்பனைகளை வளர்த்துவிடுவதிலும் நேரம் பன்னிரண்டைத் தொட்டதும், திவாகரின் அன்னை அழைத்து அவர்களை வரச் சொன்னார்.

அடுத்த நாள் ஊருக்குப் புறப்பட வேண்டும் என்பதும் சேர, எல்லோருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள். நிரோஜனும் யாமினியும் கீழே அவர்களுக்காக நின்றிருந்த கேப் வரைக்கும் கூடவே வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

திரும்பி வருகையில் உதட்டோரம் மலர்ந்திருந்த புன் சிரிப்புடன் நிரோஜன் அவளைப் பார்க்க, அவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. உள்ளம் படபடக்கப் பார்வையைச் சுழற்றினாள்.

நிரோஜனின் முறுவல் விரிந்துபோயிற்று. அலுவலக கட்டடத்தினுள் நுழைந்து, படியேறப்போனவளை விடாமல் தடுத்து, பக்கச் சுவரில் அவளைச் சாய்த்தான்.

“நிரோ!” என்றவளுக்குக் குரலே எழும்பவில்லை. எல்லோரும் மேலே இருக்கிறார்கள். அப்படியே யாரும் வந்தாலும் அவர்கள் பார்வையில் பட மாட்டார்கள் என்று புரிந்தாலும் ஒரு பதற்றம்.

அவன் பேசவே இல்லை. அவளின் இரு புறமும் கைகளை ஊன்றிச் சிறை செய்து, குறுகுறு என்று அவளையே பார்த்தான்.

இதே யாமினிதான் சற்று முன் அவனை அதட்டி, தன் சொல்லுக்கு அடங்கி நிற்க வைத்தாள். அவன் நெஞ்சுச் சட்டையைக் கொத்தாகப் பற்றி அவனை மிரட்டினாள். ஆனால் இப்போது, அவளால் அவன் பார்வையின் வீச்சை எதிர்கொள்ள இயலவில்லை. முகத்தைத் திருப்பி தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றாள்.

அவன் பார்வை அவள் காதில் ஆடிக்கொண்டிருந்த ஜும்காவில் நிலைக்க, “ஒய் ஜும்க்கா!” என்றான் இரகசியக் குரலில்.

அவள் உதடு கடித்தாள். ஜூம்காவை ஒற்றை விரலால் சுண்டி விட்டுவிட்டு, “இந்த ஜும்க்கா உனக்கு எவ்வளவு வடிவா இருக்கு எண்டு சொல்லவா?” என்று அவள் காதோரமாய்க் கிசுகிசுத்தான்.

அவள் பயந்துபோனாள். “ஒண்டும் வேணாம். தள்ளுங்க நீங்க!” என்று அவனைத் தள்ளி விட்டுவிட்டு ஓட முயன்றாள்.

அவன் விட வேண்டுமே. “நீதானே நல்லாருக்கா எண்டு கேட்டனி?” என்றான் குறும்புடன்.

அதற்கு இப்படித்தான் வம்பு செய்வானா? அவன் நெற்றியில் புருவங்களைத் தொடுமளவுக்குப் புரண்டு கிடந்த சுருள் கேசங்களை அப்படியே கொத்தாகப் பற்றி, அவன் முகத்தைப் பின்னே சாய்த்து, “என்ன சேட்டையா?” என்றாள் கோபம்போல்.

இதழில் வழிந்த புன்சிரிப்புடன் கண்ணைச் சிமிட்டினான் அவன். அவள் மயங்கிப்போனாள். அந்தச் சுருள் கேசம், சிரிக்கும் கண்கள், அளவாக நறுக்கிவிடப்பட்ட மீசை, ட்ரிம் செய்யப்பட்ட தாடி என்று அவள் மனத்தைப் பறித்தான் அவன்.

அன்று முழுக்க அவன் தன்னையே சுற்றி வந்ததும் சேர, அவனைத் தன்னிடம் இழுத்து, அந்த முகம் முழுக்க ஒரு வேகத்துடன் தன் ஈர முத்தங்களைப் பதித்துவிட்டு, அவனிடமிருந்து தப்பித்து ஓடி வந்திருந்தாள்.

ஐஸ் கட்டிகளாக அவன் முகம் முழுவதிலும் பதிந்தெழுந்த அவள் இதழ்கள் தந்த தடுமாற்றத்திலிருந்து நிரோஜனால் கொஞ்ச நேரத்திற்கு மீளவே முடியவில்லை.

அங்கே மேலே ஆண்கள் தமக்கான கச்சேரியை ஆரம்பித்திருந்தார்கள். மேலே வந்த நிரோஜனைத் திரும்பிப் பார்த்து யாமினி முறைத்தாள்.

“உனக்கு நான்தானே குடிக்கக் கூடாது.” என்றான் அவன்.

“நேரமாச்சு நிரோ. எல்லாத்தையும் ஒதுக்கிப்போட்டுப் போக வேண்டாமா?”

“அதெல்லாம் போகலாம், இரு.” என்றுவிட்டு நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு அவன் அந்தப் பக்கம் ஒதுக்க ஆரம்பிக்க, இவளும் மற்றப் பெண்களோடு சேர்ந்து உதவ ஆரம்பித்தாள்.

அப்போது மகேஸுக்கு ஒரு அழைப்பு வந்தது. ஏற்றுப் பேசியவன் யாருக்கோ இந்த அரங்கிற்கு வரும் வழியைச் சொல்லிவிட்டு வைத்தான்.

சில நிமிடங்களில் ஒருவன் மேலே வந்தான். அவன் அணிந்திருந்த மேற்சட்டையும், கொண்டுவந்த பெரிய பையிலிருந்து வந்த கொத்துரொட்டி வாசமும் உணவகம் ஒன்றிலிருந்து வருகிறான் என்று சொல்லின.

பார்சலை வாங்கிய மகேஷ் பணம் கொடுக்க நிரோஜனை அழைத்தான்.

உள்ளே வேலையாக நின்ற நிரோஜனுக்கு ஒலித்துக்கொண்டிருந்த பாடலுக்கு மத்தியில் கேட்கவில்லை. அதில் அவன் வரவில்லை. தானே பணத்தைக் கொடுக்காமல் நிரோஜனை அழைத்த மகேஷின் செய்கையில் யாமினியின் முகம் மாறிற்று.

“அவருக்கு கேக்கேல்லை போல. நீங்களே குடுக்கலாமே.” என்றாள் நைச்சியமாக.

உள்ளே சென்றிருந்த மதுவும் சேர, “என்னது? நான் பே பண்ணுறதா? பிறகு என்ர மானம், மரியாதை எல்லாம் என்னாகிறது? வாங்கின காசையே திருப்பிக் குடுக்காத பரம்பரை என்ர பரம்பரை.” என்று மார் தட்டினான் அவன்.

வாங்கிய பணத்தையே கொடுக்கவில்லையா? தந்துவிட்டதாக நிரோஜன் சொன்னானே. உள்ளே போன மதுவில் உளறுகிறானா, இல்லை, உண்மையைச் சொல்கிறானா என்று அவள் திகைத்து நிற்கையிலேயே வேகமாக வந்தான் நிரோஜன்.

தவிப்பும் தடுமாற்றமுமாக அவளில் படிந்த அவன் பார்வையே அவனும் மகேஷ் சொன்னதைக் கேட்டுவிட்டான் என்று சொல்லிற்று.

“வா மாச்சான் வா. நீ சொல்லு, நீதானேடா எங்கட பேங்க். எண்டைக்காவது உன்னட்ட வாங்கின காசை திருப்பித் தந்திருக்கிறமா? இல்ல, எண்டைக்காவது நீ இருக்கேக்க நாங்க காசு குடுத்து உன்னை அவமானப்படுத்தியிருக்கிறமா? இதையெல்லாம் உன்ர ஆளிட்டச் சொல்லி வைக்க மாட்டியா?” என்று வந்தான் மகேஷ்.

“மகி பேசாம இரு!” வாய்க்குள் அவனை அதட்டிவிட்டு, வந்தவனுக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பினான்.

யாமினி அவன் முன்னே கையை நீட்டினாள். நிரோஜனுக்குள் சின்ன தடுமாற்றம். வேண்டாமே என்று அவன் பார்க்க அவள் விடவில்லை. பிடிவாதமாக நீட்டிய கையை நீட்டியபடியே நின்றாள்.

வேறு வழியற்றுத் தன் கைப்பேசியை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டுப் போனான் அவன்.

error: Alert: Content selection is disabled!!