நீ வந்து தங்கிய நெஞ்சில் – 15

அத்தியாயம் 15

இரவிரவாக ஒரு பொட்டுத் தூக்கமில்லாமல் அழுததாலோ என்னவோ யாமினியின் கண் முகமெல்லாம் வீங்கிப்போயிருந்தன. காலையிலும் அவள் மனத்திலும் முகத்திலும் தெளிவென்பது மருந்துக்குமில்லை.

அதில் அன்று அவள் அலுவலகத்திற்குச் செல்லவில்லை. ‘வெர்க் ஃப்ரொம் ஹோம்’ கேட்டு எடுத்துக்கொண்டாள். காலையிலேயே மீட்டிங் இருந்தது. அதற்குத் தயாராகி, கூகுள் மீட்டினுள் நுழைந்து, காதில் வயர்லெஸ் ஹெட்போன்களை மாட்டிக்கொண்டாள்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களாக வைத்துக் கழுத்தறுத்தார்கள். அதன் முடிவில் அவளுக்கு நான்கு ப்ராஜெக்டுகள் வழங்கப்பட்டன.

அப்படியே இன்றே முடித்தாக வேண்டிய அசைன்மென்ட்டுகளை கடகடவென்று முடித்து, மெயில் அனுப்பிவிட்டு நிமிர்ந்தபோது, பொழுது பகலைத் தாண்டிக்கொண்டிருந்தது.

காலை உணவின் நினைவே இல்லை. பகலுக்கும் எதுவும் செய்யவில்லை. இனிச் செய்ய மனமுமில்லை. வேலையைத் தவிர்க்க முடியாது என்பதில்தான் இத்தனை நேரமாக ஒரு இடத்திலேயே இருந்து அதை முடித்தாள்.

இங்கே அணிவதற்கென்று கொண்டுவந்து வைத்திருந்த நகைகளில் சிலவற்றை அடகு வைப்பதற்காக இரவே எடுத்துவைத்தாள்.

அவற்றை எடுத்துக்கொண்டு அடகுக்கடை சென்று, அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு போய் வங்கியில் போட்டாள். அங்கேயே நின்று இணைய வாயிலாக அவனுக்குக் கொடுக்க வேண்டிய தொகையை அனுப்பிய பிறகுதான் அவள் உள்ளம் கொஞ்சமேனும் அமைதியாகிற்று.

இதை முதலே செய்திருக்கலாம். எல்லாம் பட்டுத் தெளியவேண்டியிருக்கிறது. ஒரு நெடிய மூச்சுடன் பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

அங்கே நிரோஜனும் இன்று அலுவலகம் செல்லவில்லை. ‘வெர்க் ஃப்ரொம் ஹோம்’ல்தான் இருந்தான். அவன் மனமும் ஒரு நிலையில் இலை. என்ன இருந்தாலும் அவள் முன்னே மது அருந்தியதும், அடிக்கக் கையை ஓங்கியதும் பெரும் தவறு என்று அவனுக்கே புரிந்தது.

ஆனால், அவனை அப்படியெல்லாம் செய்ய வைத்தது அவளாயிற்றே. இனி இதை எப்படி அணுகுவது என்று யோசித்துக்கொண்டிருக்கையில்தான் வங்கியிலிருந்து மெசேஜ் வந்து விழுந்தது.

எடுத்துக் பார்த்தவனின் முகம் கடுத்தது. அதை அப்படியே அவளுக்கு புலனத்தின் வாயிலாக அனுப்பி, “என்ன இது?” என்று எழுதிக் கேட்டான்.

அன்றைக்குச் சமைக்கும் உத்தேசம் இல்லாததால் வரும்போதே உணவுப் பார்சல் வாங்கி வந்திருந்தாள் யாமினி. அதை எடுத்துப் பிரித்துக்கொண்டிருக்கையில்தான் அவனிடமிருந்து குறுந்தகவல் வந்து விழுந்தது.

சற்று நேரத்திற்கு அதையே பார்த்திருந்துவிட்டு, “உங்களுக்கு நான் தரவேண்டிய காசு.” என்று பதில் அனுப்பிவிட்டாள்.

“நான் உன்னைக் கேட்டனானா?” கண்முன்னே நின்று சீறுவது போலவே அந்தக் கேள்வி மிக வேகமாகப் பறந்து வந்தது.

அப்படிக் கேட்டிருந்தால் கூட அவளுக்கு இந்தளவில் வலித்திருக்காதே. கண்ணோரங்கள் மீண்டும் கரிக்க, அந்தக் கேள்விக்குப் பதில் அனுப்பாமல் பேசாமல் இருந்துகொண்டாள்.

சற்று நேரத்தில் அவளுக்கு வங்கியிலிருந்து குறுந்தகவல் ஒன்று வந்து விழுந்தது. எடுத்துப் பார்த்தாள். அவள் அனுப்பிய பணத்தை அவன் திருப்பி அனுப்பியிருந்தான்.

என்ன இது விளையாட்டு? நேற்று அப்படிக் கேட்பானாம். இன்று அவள் கொடுத்த பணத்தைத் திருப்பி அனுப்புவானாம். என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் அவளைப் பற்றி?

பிடிவாதத்தில் உதடுகள் அழுந்த திரும்பவும் அவனுக்கு அதை அனுப்பிவிட்டு, “அந்தக் காசை வாங்கேக்கையே திருப்பித் தருவன் எண்டு சொல்லித்தான் வாங்கினனான். நீங்களும் ஓம் எண்டு சொல்லித்தான் தந்தனீங்க. அதே மாதிரி நேற்று நீங்க அப்பிடிக் கேட்டபிறகும் அதைத் தராம இருக்கிற அளவுக்கு நான் இஞ்ச ரோசமானம் இல்லாம இல்ல நிரோஜன். திருப்பி அனுப்பியிருக்கிறன். நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ.” என்று வாயால் பேசி அனுப்பிவிட்டாள்.

சூடாக அவனிடமிருந்து பதில் வரப்போகிறது என்று சாப்பிடுவதையும் விட்டுவிட்டு அவள் காத்திருக்க, அவனிடமிருந்து பதிலும் இல்லை, பணம் திரும்பி வரவும் இல்லை.

ஏதோ ஒரு வகையில் அதுவும் வலித்தது. அதே நேரத்தில் அவள் செய்ததில் தவறு எதுவும் இருப்பதாகவும் அவளுக்குத் தெரியவில்லை. பசியும் மந்தித்துவிட்டதில் எழுந்துபோய்க் கையைக் கழுவிக்கொண்டு கட்டிலில் விழுந்தாள்.

உள்ளம் தந்தையின் அண்மைக்காக ஏங்கிற்று. அவர் இருந்திருக்க இதெல்லாம் நடந்திருக்காது. அவளும் எப்போதும்போல் நொடி நேரத்தையும் அனுபவித்து வாழும் பட்டாம் பூச்சியாக வாழ்ந்திருப்பாள்.

இரவு முழுக்க உறங்காதது, நடந்த சண்டை, அழுதது, நிறைய நேரமாக இருந்து கணனியில் பார்வையைப் பதித்து வேலை பார்த்தது என்று எல்லாம் சேர, கண்கள் சொக்கின அவளுக்கு. அந்த நேரத்தில் படபடவென்று அவள் அறையின் கதவு தட்டப்பட்டது. திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். நிரோஜனோ என்று தோன்றவும் வேகமாக எழுந்துபோய்ப் பார்த்தாள்.

அவன்தான். இறுகிய முகத்துடன் நின்றிருந்தான். அடுத்த சண்டையா? உள்ளம் படபடக்கக் கதவைத் திறந்தாள்.

உண்மையில் சண்டை பிடிக்கிற அளவு கோபத்துடன்தான் புறப்பட்டு வந்தான் நிரோஜன். ஆனால், கண் மடல்கள் தடித்து வீங்கியிருக்க, முற்றிலுமாகச் சோர்ந்து நின்றவளைக் கண்டு சற்றே அவன் கோபம் மட்டுப்பட்டது.

“என்ன நினைப்பில அந்தக் காசைத் திருப்பித் தந்திருக்கிறாய் யாமினி?” என்றான் கண்களில் கூர்மையுடன்.

“மெசேஜ்ல சொன்னதுதான். திருப்பித் தருவன் எண்டு சொல்லித்தான் வாங்கினனான். சொன்ன மாதிரித் திருப்பித் தந்திருக்கிறன்.” என்று பதிலிறுத்தாள் அவள்.

“ஆனா நான் அதத் திருப்பி வாங்கிற எண்ணத்தோட தரேல்ல எண்டு உனக்குத் தெரியுமா இல்லையா?”

ஏன் தெரியாமல்? என் நிரோஜன் அதை நான் திருப்பிக் கொடுக்கையில் கோபப்படுவான் என்று கூடத்தான் பெருமையாக நினைத்தாள். ஆனால் நடந்தது?

கண்களும் முகமும் அழுகைக்குத் தயாராகிச் சிவந்துகொண்டு வரவும் பெரும் பாடு பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்தினாள்.

“இப்ப என்ன நீயும் நானும் வேற வேற எண்டு சொல்லுறியா? உனக்காக நான் எதுவும் செய்யக் கூடாதா? அந்தளவுக்கு நான் ஆரோ என்ன உனக்கு?”

“நீங்களும் நானும் ஒண்டு எண்டு நினைச்சதாலதான் உங்களுக்காக உங்களிட்டையே சண்டை பிடிச்சனான். அப்பிடி இல்ல, நீ வேற நான் வேற எண்டு காட்டினது நீங்க. இப்ப வந்து இப்பிடிக் கேக்கிறீங்க?”

“நீயும் நானும் வேற வேற எண்டு நான் சொல்லேல்ல. என்னைக் கொஞ்சம் ஃபிரியா விடு எண்டு சொன்னனான். என்னவோ எனக்கு ஒன்றுமே தெரியாது மாதிரியும், நீ கை பிடிச்சுக் கூட்டிக்கொண்டு போற குழந்தை மாதிரியும் என்னை நடத்தாத எண்டு சொன்னனான். அதுக்கு இப்பிடித்தான் செய்வியா?”

“எப்பிடியும் இந்தக் காசைத் திருப்பித் தரத்தான் இருந்தனான். நேற்று நீங்க அப்பிடிக் கேட்ட பிறகு அதைத் தராம என்னால இருக்கவே ஏலாது நிரோ.” என்றவள் விழிகளில் மெல்லிய கண்ணீரின் படலம்.

அதிலேயே அவள் எந்தளவிற்குக் காயப்பட்டிருக்கிறாள் என்று விளங்க, ஒன்றும் சொல்லாமல் தலையைக் கோதினான் அவன்.

“அது கோவத்துல கேட்டது, பிழை எண்டு சொல்லுறேன்தானே. மன்னிக்க மாட்டியா?” என்று தழைந்து வந்தான் அவன்.

சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு மன்னிப்புக் கேட்டால் ஆயிற்றா எண்டு அவள் மனம் புழுங்கிற்று.

“நீயும்தான் என்னை என்னென்னவோ வார்த்தை எல்லாம் சொல்லிப் பேசினாய். நானும் அதையெல்லாம் பிடிச்சுத் தொங்கட்டா?”

அதுதான் தொங்கி மொத்தமாக அவள் உள்ளத்தை உடைத்துவிட்டானே.

“யமி!”

முகம் திருப்பி நின்றவளைத் தன்னை நோக்கித் திருப்பி, “இந்தக் காசைத் திருப்பித் தந்து கணக்கை முடிக்கிறதில உறுதியாய் இருக்கிறாய் எண்டா, எனக்கும் உனக்குமான உறவை முறிக்கிறதில உறுதியா இருக்கிறாய் எண்டு நான் அர்த்தம் எடுக்கவா யாமினி?” என்றவனின் கேள்வியில் துடித்து நிமிர்ந்தாள் யாமினி.

உறவை முறிப்பதா? என்ன பேசுகிறான் இவன்? அவளுக்கு மூச்சடைத்து இருட்டிக்கொண்டு வந்தது.

இங்கே நடுவில் அகப்பட்டு நசிப்படுவது அவளின் சுயமரியாதை. அவனானால் அதைக் கொன்றுவிட்டு அவனுக்கும் அவளுக்குமிடையிலான உறவைத் தக்கவைத்துக்கொள் என்கிறான்.

அதன் பிறகு அவள் வாயைத் திறக்கவில்லை. திறக்க முடியவில்லை. அவன் அனுப்பிய பணம் வந்து சேர்ந்துவிட்டதாக அவள் கைப்பேசி ஒலி எழுப்பிச் சொல்லிற்று.

அவனாலும் இலகுவாக அங்கிருந்து போக முடியவில்லை. அவனால் என்றைக்குமே அந்தப் பணத்தை அவளிடமிருந்து வாங்க முடியாது. அதுதான் உண்மையாகவே அவள் வேறு அவன் வேறு என்று பிரித்துச் சொல்லும். அது இதைவிடப் பெரிய காயமாகத் தங்கிப்போகும். அதனால்தான் எப்படியாவது அவளுக்கு அதைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று அவளிடம் அப்படிச் சொன்னான்.

அவள் அதிர்ந்து நின்றதும், அதன் பிறகு ஒன்றுமே பேசாமல் விட்டுவிட்டதும் அவனை என்னவோ செய்தன. திரும்பி அவளைப் பார்த்தான். அடக்கிய கண்ணீருடன் நின்றவளைப் பார்க்க முடியவில்லை.

ஒரு வேகத்துடன் அவளை இழுத்து அணைத்து, அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அவனுக்குள்ளும் ஹோ என்று என்னவோ பொங்கிக்கொண்டு வந்தது. உள்ளத்திலிருந்து அத்தனை பரிதவிப்புகளையும் அவளிடம் கொட்டிவிட வேண்டும் போலொரு உந்துதல். ஆனால், வாய் வார்த்தையாக ஒன்றுமே வரவில்லை. நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். அழுகையை அடக்கியதில் உதடுகள் துடிக்க, விழிகளை இறுக்கி மூடிக்கொண்டு நின்றிருந்தாள் அவள்.

நேற்று அவள் செய்தது போன்று அவள் முகம் முழுக்க ஒரு வேகத்துடன் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டுப் புறப்பட்டிருந்தான்.

error: Alert: Content selection is disabled!!