நீ வந்து தங்கிய நெஞ்சில் 16.1

அத்தியாயம் 16

யாமினி மொத்தமாகத் துவண்டு போயிருந்தாள். தெளிவாக எதையும் சிந்திக்க இயலவில்லை. அவ்வளவில் அவனுக்கும் தனக்குமான அந்தப் பந்தத்தை முன்னிறுத்தி அவன் பேசியது அவளை ஆழமாகக் காயப்படுத்தியிருந்தது.

அந்தளவில் அவர்கள் உறவு சாதாரணமானதா என்ன? பிடிவாதமாக நின்று அவள் பணத்தைக் கொடுத்திருந்தால் உறவை முடித்துக்கொண்டிருப்பானா?

அந்தப் பணத்தைக் கொண்டு அவள் நகையை மீட்கவில்லை. வங்கியில் அப்படியே கிடந்தது. அதன் பாரம் மட்டும் அவள் நெஞ்சை அழுத்தியது.

அன்று அவள் வேலை முடிந்து கிளம்புகிற நேரத்தில் ஆதவன் அழைத்தான். நரேன் என்று ஒரு வரன் வந்திருப்பதைச் சொல்லி, அவன் கொழும்பு வந்திருப்பதால் அவளை ஒரு முறை நேரில் சந்தித்துப் பேச விரும்புகிறான் என்றும் சொன்னான்.

யாமினிக்குத் திகைப்பு. என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் நிலையை உணர்ந்தாற்போல், “இன்னும் ஒண்டும் முற்றாகேல்ல யாமினி. போய்ப் பாருங்கோ. ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா மேல கதைக்கலாம். இல்லாட்டி இப்பவே நிப்பாட்டலாம்தானே. அதுதான் நானும் சரி எண்டு சொன்னனான். உங்கட நம்பர் குடுத்திருக்கிறன். மெசேஜ் பண்ணுவார்.” என்று சொல்லிவிட்டு வைத்தான் அவன்.

சில நொடிகளில் அவன் புகைப்படமும், அவன் பற்றிய தகவல்களும், கைப்பேசி இலக்கமும் இவள் கைப்பேசிக்கு வந்து விழுந்தன.

உடனேயே அன்னைக்கு அழைத்து, “ஒண்ட செய்றதுக்கு முதல் ஒரு வார்த்த சொல்ல மாட்டீங்களாம்மா? ஆர், எவர் எண்டு தெரியாம எப்பிடிப் போய்ப் பாப்பான்? முதல் நான் என்ன இஞ்ச வேலை வெட்டி இல்லாம சும்மா இருக்கிறேனா?” என்று தன் செய்வதறியா நிலையால் உண்டான கோபத்தை அவரிடம் காட்டினாள்.

“என்ன நடந்தது எண்டு தெரியாம சும்மா கோபப்படக் கூடாதம்மா. அவர் கொழும்புக்கு வந்திருக்கிறது எங்களுக்குத் தெரியாது. அவரின்ர அப்பா இப்ப கொஞ்சத்துக்கு முதல்தான் அத்தானுக்கு எடுத்துக் கேட்டவராம். அத்தானுக்குமே இப்பிடித் திடீரெண்டு கொழும்பில நிண்டுகொண்டு கேட்டது பிடிக்கேல்ல. ஆனா, இந்தக் காலத்தில சும்மா சந்திச்சுக் கதைக்கிறதில என்ன இருக்கு எண்டுபோட்டுத்தான் ஓம் எண்டு சொன்னவர். எங்கட பொம்பிளைப் பிள்ளைக்குப் பிடிச்சாத்தான் எதுவும் எண்டுறதையும் தெளிவா சொன்னவராம்.” என்று முறையான விளக்கம் தந்தார் அவர்.

கூடவே, “நீங்க படிச்ச பிள்ளை. வேலைக்கும் போறனீங்க. ஆம்பிளை பொம்பிளை வித்தியாசம் பாக்காம பழகிற ஆக்கள். ஒருக்கா நேர்ல போய்க் கதச்சுப்போட்டு வாறதில என்ன இருக்கு? போயிட்டு வாங்கோ!” என்றும் சொன்னார்.

அவளுக்கு அதுவா பிரச்சனை? அதே நேரத்தில் அவர் சொன்னது போன்று ஒருமுறை நேரில் சென்று பேசுவதில் என்ன இருக்கிறது, இதன் பொருள் எதற்கும் அவள் சம்மதிப்பதாக ஆகாதே என்று அவளுக்கும் தோன்றியது.

ஆனாலும் மனத்தில் ஒரு கலக்கம். சாதாரணமாக ஒருவனைச் சந்திப்பது வேறு, திருமணத்திற்குப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற அடிப்படையின் கீழ் சந்திப்பது வேறாயிற்றே.

அவள் அவரோடு கதைத்துக்கொண்டிருக்கையிலேயே தான் யார் என்று சொல்லி, “உங்களைச் சந்திக்கலாமா?” என்று கேட்டு நரேன் அனுப்பிய குறுந்தகவல் அவளுக்கு வந்து விழுந்தது.

அதைத் திரையில் பார்த்தாலும் உடனேயே பதில் சொல்லவில்லை அவள். அன்னையின் அழைப்பைத் துண்டித்துவிட்டுக் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். சந்தித்துவிட்டு வருவோம் என்று முடிவெடுத்திருந்தாலும் அதைச் செயலாற்றக் கையும் வரவில்லை காலும் வரவில்லை.

நிரோஜன் இதை எப்படி எடுப்பான், அவனிடம் இதை எப்படிச் சொல்வது என்று அது வேறு ஓடிற்று. சாதாரண நேரமாக இருந்தால் கூட வேறு. இப்போது அவர்களுக்குள் நிலவும் சீரற்ற உறவுநிலையில் என்னாகும் என்று யோசிக்கவே முடியவில்லை.

கடைசியில் மனத்தை ஒருநிலைப்படுத்திக்கொண்டு, அவனுக்குப் பதிலை அனுப்பிவிட்டுப் புறப்பட்டுப் போனாள்.

அது ஒரு ஐஸ் கஃபே. அங்கே எந்த இடையூறும் இல்லாமல் பேசுவதற்கு ஏற்ப, ஒதுக்குப்புறமான பனையோலைக் குடையின் கீழ் அமர்ந்திருந்தான் நரேன்.

அவளைக் கண்டதும் அவன் கண்களில் வந்தமர்ந்துகொண்ட ஆர்வத்தைக் கண்டு சங்கடப்பட்டுப்போனாள் யாமினி. கை தந்து வரவேற்று அவளுக்கு இருக்கையைக் காட்டினான் நரேன். இயல்பாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் கொடுத்தான். அனாவசிய அலட்டல்கள் இல்லாது, அதே நேரத்தில் நீ எனக்கு விசேசமானவள் என்பதை அவளுக்கு உணர்த்தினான்.

அதில், “சொறி, கலியாணம் பேசுறது, நீங்க கொழும்புக்கு வந்தது எதுவும் எனக்குத் தெரியாது. அத்தான் சொல்லியிருப்பார், இப்ப கொஞ்சக் காலத்துக்கு முதல்தான் அப்பா மோசம் போனவர்(இறந்தவர்). அதால இப்ப கலியாணம் செய்ற எண்ணமே எனக்கு இல்லை. அத்தான் எடுத்துத் திடீர் எண்டு சொல்லவும் திகைச்சுப்போனன். சரி, சும்மா ஒருத்தரைப் பாத்துக்கொண்டு வாறதில என்ன இருக்கு எண்டுதான் வந்தனான்.” என்று தன்மையாகச் சொன்னாள் யாமினி.

இதை அவன் எப்படி எடுப்பானோ என்கிற பதற்றம் இருந்தாலும் எந்தவிதமான தவறான நம்பிக்கையையும் அவனுக்குக் கொடுத்துவிடக்கூடாது என்பதில் முதலிலேயே தன் மனத்தை அவனிடம் வெட்டவெளிச்சமாக்கினாள் அவள்.

அவனுக்கு முகம் இலேசாக வாடிற்று. ஆனாலும் வேகமாகச் சமாளித்துக்கொண்டு முறுவலித்தான். இதற்குள் ஆர்டர் கொடுத்த ஐஸ்கஃபே வந்தது. அதை அருந்தியபடி அவன் மெல்ல விசயத்திற்கு வந்தான்.

“யாமினி, இந்தக் கலியாணப் பேச்சு உங்களுக்குத் தெரியாது எண்டு எனக்குத் தெரியாது. இந்தக் கொழும்புப் பயணமும் திடீர் எண்டு அமஞ்சதுதான். இவ்வளவு தூரம் வந்தனான் அப்பிடியே பாத்திட்டே போவமே எண்டு நினைச்சன். அதுதான் கடைசி நேரத்தில உங்களிட்டச் சொல்லுற மாதிரி ஆயிட்டுது.” என்று, அவனும் தன்மையாகவே தன்னை விளக்கினான்.

“அதே நேரம் இந்தக் கலியாணப் பேச்சே தெரியாம இருந்த உங்களிட்டஎன்னைப் பிடிச்சிருக்கா எண்டு எப்பிடிக் கேக்கிறது எண்டும் எனக்குத் தெரியேல்ல.” என்று சொன்னவனைக் கண்டு அவள் கட்டுப்பாட்டையும் மீறி அவளிடத்தில் முறுவல் உண்டாயிற்று.

அதைக் கணடவனிடத்திலும் விரிந்த புன்சிரிப்பு. “என்ன, எப்பிடிக் கேக்கிறது எண்டு கேட்டே கேட்டுட்டன் எண்டு நினைக்கிறீங்களா? என்ன செய்ய, எப்பிடியாவது கேக்கோணும்தானே?” என்றான் அவன்.

இப்போது தாராளமாகவே சிரித்தாள் அவள். அதனோடே,
“உண்மையைச் சொல்லோணும் எண்டா, இப்போதைக்கு எனக்குக் கலியாணத்தில பெரிய ஆர்வம் இல்ல. இப்பவே ஒரு குடும்பப் பொறுப்ப ஏற்கிற மனப்பக்குவம் எனக்கு இருக்கா எண்டும் தெரியேல்ல. எனக்கு… இன்னும் ரெண்டு வருசமாவது போகோணும். ப்ளீஸ் இதைப் போய் வீட்டில சொல்லாதீங்கோ. அப்பாவும் இல்லாம, எனக்கு ஒரு நல்லதைச் செய்ய நினைக்கிற அத்தன் எப்பிடி எடுப்பார் எண்டு தெரியாது. அதால நீங்களே ஏதாவது சொல்லிச் சமாளிக்கிறீங்களா? உங்களுக்கும் கட்டாயமா என்னை விட நல்ல பிள்ளை கிடைப்பா.” என்று தன் மறுப்பைத் தெளிவாகச் சொன்னாள்.

அவனது முகத்தில் மெல்லிய ஏமாற்றம் நிழலாடியது. “இது உறுதியான முடிவுதானா? இல்லை யோசிக்க டைம் வேணுமா?” என்று கேட்டான்.

“இல்ல, உறுதியான முடிவுதான்.” ஏமாற்றம் நிறைந்த அவன் பார்வையைச் சந்திப்பது பெரும் சவாலாக இருந்தபோதிலும் சொன்னாள்.

புரிகிறது என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டுச் சிறிது நேரம் அமைதியாகவே இருந்தான் அவன். அவளின் மறுப்பை உள்வாங்கிக்கொள்ள முயல்கிறான் என்று புரிந்து அவன்பால் அவளுக்குள் இரக்கம் சுரந்தது. ஆனால், அவளும் என்ன செய்வாள்?

அவள் இதயத்தைக் கொய்தவன் அவளின் அழகிய பொல்லாதவனாயிற்றே. அவனுக்கு ஆயுசு நூறு போலும். அவள் நினைத்து முடிக்க முதலே நண்பர்கள் குலாத்துடன் எதிரில் வந்துகொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் யாமினியின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

error: Alert: Content selection is disabled!!