நீ வந்து தங்கிய நெஞ்சில் 16.2

இப்படி அவளை இன்னொருவானொடு பார்ப்போம் என்று நிரோஜன் எதிர்பார்க்கவில்லை. பார்த்த கணத்தில் புசுபுசு என்று ஒரு கோபம் பொங்கிக்கொண்டு வந்தது.

மித்ரன் வேறு, “டேய், ஆர் அது யாமினிக்குப் பக்கத்தில?” என்று விசாரித்தான்.

“எனக்கென்ன தெரியும்? நானும் உங்களோடதானே வாறன்!” என்று கடுகாடுத்தான் அவன்.

“உன்னை பிரேக்கப் பண்ணிட்டு வேற செட் பண்ணிட்டாளாடா?”

அப்படிச் சொன்னவனைச் சரக்கென்று திரும்பிப் பார்த்து முறைத்தான்.

“இல்ல மச்சான், நீ வேற குடிச்சு, எங்களுக்கு முன்னால கைய ஓங்கி எண்டு பல சிறப்பான சம்பவங்களைச் செய்திருக்கிறாய். அதான்.” என்று இழுத்தான் அவன்.

“வாங்கடா விசாரிப்பம்.” என்றபடி எல்லோருமாக அவர்களை நோக்கிச் சென்றனர்.

“ஹாய் யாமினி!” என்றான் மித்ரன் ஆர்ப்பாட்டமாக.

“ஹாய்!” அவளுக்குக் குரல் எழும்பவே இல்லை. பார்வை தடுமாற்றத்துடன் நிரோஜனிடம் சென்று வந்தது. கைகால்களில் மெல்லிய நடுக்கம்.

“ஹாய் டூட்! நாங்க எல்லாரும் யாமினின்ர ஃபிரெண்ட்ஸ்.” என்று நரேனுக்குக் கையை நீட்டினான் மித்ரன்.

நரேனும் புன்னகை முகமாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் கைலாகு கொடுத்தான் நரேன்.

நிரோஜன் மட்டும் நெருங்கிய நண்பர்கள் சத்தம் எழுப்பும் வண்ணம் கைகளை அடித்துக்கொண்டு குலுக்குவது போன்று செய்தான். நிச்சயம் அது நட்பின் வெளிப்பாடில்லை. கோபத்தின் வெளிப்பாடு. அது நரேனுக்குப் புரியாதபோதும் யாமினிக்குப் புரிந்தது.

நண்பர்கள் நால்வரும் இவர்கள் இருவரையும் சுற்றி அமர்ந்தார்கள்.

“ஓகே! உங்களப் பற்றிச் சுருக்கமா சொல்லுங்க பாப்பம்.” என்றான் நவீன்.

“ஏற்கனவே சொன்னதுதான். நான் நரேன்.” என்று புன்னகைத்தான் நரேன்.

“இது கொஞ்சம் ஓவர் சுருக்கமா இருக்கே.”

அளவான முறுவல் ஒன்றுடன் யாமினியைப் பார்த்தான் நரேன். திருமணத்திற்கு அவனை மறுத்துவிட்டாள் அவள். அப்படியிருக்க அவளுக்குப் பேசப்படும் வரன்தான் தான் என்று சொல்வது பொருந்தாது என்பதில் அவளே எதையாவது சொல்லட்டும் என்று நினைத்தான்.

அவளுக்குத் தொண்டைத் தண்ணீர் வற்றிப்போயிற்று. “அது… வீட்டில கலியாணம் பேசினம். அதான்… பாத்துக் கதைச்சிட்டுப் போக வந்தவர்…” பார்வை நிரோஜனிடம் பாய்ந்துவிட்டு வரத் தவிப்புடன் திக்கித் திணறினாள் அவள்.

நிரோஜனின் முகம் இறுகிற்று. அவளைப் பாராமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான். அவன் மூச்சுக் காற்றில் கூடக் கோபம் தெறித்தது. மற்றவர்கள் அறியாமல் அவனைத் தட்டி இலகுவாக்க முயன்றான் நவீன்.

யாமினி மிடறு விழுங்கினாள். முகம் மாறாமல் காக்க மிகவுமே சிரமப்பட்டாள். அப்போதுதான் அவனிடம் சொல்லாமல் வந்தது எங்கே வந்து நிற்கிறது என்று புரிந்தது.

“பிறகு சொல்லுங்க. எப்ப மட்டில கலியாணம் வச்சிருக்கிறீங்க?” என்று கதை கேட்டான் நிரோஜன்.

“இல்ல இல்ல. அது பேச்சளவிலதான் இருக்கு.” நரேனையும் வைத்துக்கொண்டு அவனை மறுத்துவிட்டேன் என்று சொல்ல ஒரு மாதிரியாக இருந்ததில் தடுமாறினாள்.

நிரோஜனுக்கு உள்ளே புகைந்துகொண்டிருந்ததின் மேலே யாரோ பெட்ரோலை ஊற்றினார்கள். அவனைப் பார்த்த நவீன் குபீர் என்று வெடித்த சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

இதற்குள் அவர்கள் எல்லோருக்கும் ஐஸ் வந்தது. நவீன் கிண்டலாக அவனைப் பார்த்த கடுப்பில், “இந்த டைம்ல நீ ஐஸ் சாப்பிடக் கூடாது. வயித்தில இருக்கிற பிள்ளைக்குக் கூடாது.” என்றுவிட்டு இரண்டையும் தானே அருந்தினான்.

‘வயித்தில இருக்கிற பிள்ளையா?’ வாய் விட்டு அலற முடியாமல் அவர்களை மாறி மாறிப் பார்த்தான் நரேன்.

“அது அவன் ஏழு மாசம்!” என்றான் நிரோஜன் கடுப்புடன்.

நரேனின் விழிகள் இரண்டு வெளியே வந்துவிடும் போலாயிற்று. பார்வை வேறு நவீன் வயிற்றைத் தொட்டு வந்தது.

“டேய் என்னடா, ரெண்டு நாளைக்கு முதல்தான் நாலு மாதம் எண்டு சொன்னாய்.” என்று நடுவில் வந்தான் மித்ரன்

“அது எங்கட பிள்ளை அசுர வேகத்தில வளந்துகொண்டு இருக்கு.”

“அப்ப என்ன இன்னும் ரெண்டு நாளில உன்ர கைல பிறந்த குழந்தை இருக்குமாடா?” என்றான் மகேஷ்.

“எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்!” என்று பாடினான் மித்ரன்.

முதலில் அதிர்ந்தாலும் விளையாடுகிறார்கள் என்று புரிந்து விழுந்து விழுந்து சிரித்தான் நரேன். அந்தச் சிரிப்புடனேயே எழுந்து, தனக்கு நேரமாகிவிட்டதைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டவன் எதிர்பார்ப்பாய் அவளையே பார்த்து நின்றான்.

என்னவோ தனியாகப் பேச நினைக்கிறான். நிரோஜனை எண்ணிப் பயந்தாலும் அவளால் அவன் எதிர்பார்ப்பைப் புறக்கணிக்க முடியவில்லை.

error: Alert: Content selection is disabled!!