அத்தியாயம் 17
“ஒரு நிமிசம்.” என்று நிரோஜனைப் பாராமல் சொல்லிவிட்டு எழுந்து, அவனோடு நடந்தாள்.
அவ்வளவுதான். அவ்வளவு நேரமாக இவள் என்ன செய்யப்போகிறாள் என்று கவனித்துக்கொண்டிருந்த நிரோஜன், ஐஸ் அருந்திக்கொண்டிருந்த கரண்டியைத் தூக்கி எறிந்துவிட்டு, முகம் திருப்பித் தன் சினத்தை அடக்க முயன்றான்.
நவீனுக்கு நண்பனின் மனநிலை விளங்கிற்று. “டேய்! சும்மாவே உங்களுக்க ஒண்டும் சரியா இல்ல. திரும்பவும் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு அண்டைக்கு மாதிரி எதையாவது செய்து வைக்காத. நிதானமா அவளோட கதை.” என்று எடுத்துச் சொல்லி, அவனை நிதானப்படுத்த முயன்றான்.
தள்ளிச் சென்றதும் எதிர்பார்ப்பாய் அவள் முகம் பார்த்தான் நரேன். யாமினிக்கு முள்ளின் மேல் நிற்கும் நிலை. நிரோஜன் மட்டுமே அவள் சிந்தை முழுவதையும் சிறை செய்திருந்தான்.
“முடிவில ஏதும் மாற்றம்?” அவளின் அமைதியே பதிலைச் சொன்னாலும் வினவினான் நரேன்.
இல்லை என்று மறுத்துத் தலையசைத்தாள் அவள்.
“ஓகே. நானே வேற பாக்கச் சொல்லி வீட்டில சொல்லுறன். ஆனா… உங்கட முடிவை, பிளான நீங்க உங்கட வீட்டில தெளிவா கதைக்கிறதுதான் நல்லம் எண்டு நினைக்கிறன். என்னை மாதிரி இன்னொருத்தனும் ஆர்வமா வந்து, ஏமாற வேண்டாமே.” என்றதும் அவள் முகம் கன்றிப்போயிற்று.
“சொறி. உங்களக் குத்திக்காட்டச் சொல்லேல்ல. இப்பிடி வாற ஒவ்வொருத்தரிட்டயா நீங்க சங்கடப்பட்டுப் பதில் சொல்லுறதுக்கு உங்கட வீட்டில ஒரேயோருக்கா கதைக்கிறது எவ்வளவோ நல்லமெல்லா?”
விளங்குகிறது என்பதுபோல் தலையை அசைத்தாள் அவள்.
“நான் சொன்னதில பிழை ஒண்டும் இல்லையே.”
‘கதைச்சது போதும் போடா. அங்க ஒருத்தன் சாமியாட பாத்துக்கொண்டிருக்கிறான்.’ என்று உள்ளம் அலறியதில் கசியப் பார்த்த விழிகளைச் சிமிட்டி அடக்கிக்கொண்டு, சின்ன முறுவலோடு இல்லை என்று தலையசைத்தாள் அவள்.
சில விநாடிகளுக்கு அவள் முகத்தையே பார்த்தவன் ஒரு பெருமூச்சுடன் அவளிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.
யாமினிக்கு இங்கே திரும்பி வரவே கால்கள் பின்னின. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு வந்தாள்.
அவள் வருவதைக் கவனித்துவிட்டு, “நிதானமா கதை மச்சான். கோபப்படாத.” என்று அவன் தோளில் தட்டிச் சொல்லிவிட்டு மற்றவர்களோடு விலகிப்போனான் நவீன்.
நடுக்கத்துடன் வந்து அமர்ந்தாள் யாமினி. அவனைப் பார்க்கவே பயந்தாள். அவனும் நிமிரவே இல்லை. பௌலில் இருந்த ஐஸினை அருந்துவதையே முக்கிய வேலையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்தக் கனமான அமைதி இரும்புச் சட்டங்கள் இரண்டு மோதிக்கொள்வது போன்ற பிரமையை யாமினிக்குக் கொடுத்தது. சில கணங்களுக்கு மேல் அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல், “நி…ரோ” என்றாள் தவிப்புடன்.
“சொல்லு!” என்றான் நிமிர்ந்து பார்த்து.
புருவச் சுளிப்பும் அவன் பார்வையில் தெரிந்த கடுமையும் அவள் தொண்டையை உலர வைத்தன.
“சந்தேகப்படுறீங்களா?” மெல்லிய குரலில் வினவினாள்.
“சந்தேக…” பல்லைக் கடித்து முகம் திருப்பித் தன்னை நிலைப்படுத்த முயன்றான்.
கோபம் வந்தது உண்மை. இப்போதும் அதே கோபம் கொஞ்சமும் குறையாமல் உண்டு. அதற்கென்று அவளைச் சந்தேகப்படுவானா? “இதப் பற்றி ஏன் என்னட்ட நீ சொல்லேல்ல?” என்று கேட்டான்.
உன் மீதிருந்த மனத்தாங்கலும் கோபமும் சொல்ல விடவில்லை என்று சொல்ல முடியாமல், நடந்த அனைத்தையும் விபரமாகச் சொல்லி, வந்த நிமிடமே இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்று நரேனிடம் சொன்னதையும் சொன்னாள்.
“வீட்டில உனக்கு அவனைப் பேசினதோ, அவனப் பாக்க நீ வந்ததோ பிரச்சினை இல்ல. இப்ப சொன்னதை நீ ஏன் எனக்கு முதலே சொல்லேல்ல? மெசேஜ் போடுறதுக்குக் கூடவா உனக்கு நேரம் இருக்கேல்ல?”
சொல்லியிருக்க வேண்டும்தான். அதற்கென்று வேண்டுமென்றே மறைத்திருக்கிறாள் போன்று அவன் கேட்ட விதம் பிடிக்காமல் போய்விட, “நான் ஏன் சொல்லேல்ல எண்டு உங்களுக்குத் தெரியாதா?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
“எங்களுக்க என்ன பிரச்சினை இருந்திருந்தாலும் இத நீ எனக்குச் சொல்லியிருக்கோணும். விருப்பமில்லாட்டி ஃபோன் கோலிலேயே இந்த விசயத்தை நீ முடிச்சிருக்கலாம். அத விட்டுப்போட்டு நேர்ல வந்தது காணாது எண்டு அவன்ர கண் பாத்து நடக்கிறாய். இதையெல்லாம் என்ன எண்டு நான் எடுக்கிறது?” என்று அடக்கப்பட்ட குரலில் ஆத்திரப்பட்டான் அவன்.
அவன் கண் பார்த்து நடந்தாளா? என்ன அர்த்தத்தில் சொல்கிறான்?
“என்னவோ நான் ஆசைப்பட்டு வந்த மாதிரிச் சொல்லுறீங்க. போய்ப் பார் எண்டு அத்தான் சொல்லேக்க எப்பிடிக் கேக்காம இருக்கிறது? பிறகு அவருக்கு நான் பதில் சொல்லுறேல்லையா? நாங்க கதைச்சு முடிக்க முதல் நீங்க வந்திட்டீங்க. அதால கடைசியா என்ர முடிவு என்ன எண்டு கேக்கிறதுக்குத்தான் பாத்தவர். நானும் போய் அதத்தான் சொல்லிப்போட்டு வந்தனான். அதுக்குக் கண் பாத்து நடக்கிறன் எண்டு சொல்லுவீங்களா?” என்று அவளும் கோபப்பட்டாள்.
“இத நீ முதலே என்னட்ட சொல்லியிருந்தா இந்தப் பிரச்சினையே வந்திருக்காது.”
“சரி, சொல்லாம விட்டது பிழையாவே இருக்கட்டும். அதுக்கெண்டு இப்பிடித்தான் கதைப்பீங்களா? உங்களுக்குச் சந்தேகம். அதுதான் அத மறைச்சு இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க.”
“லூசாடி நீ?” என்றவனுக்குத் தன் மனத்தை உணர்த்தும் வகை தெரியவில்லை. “இன்னொருத்தனோட உன்னைப் பாக்கப் பத்திக்கொண்டு வந்தது.” என்றான் அவளைப் பாராமல்.
‘எரியுதடி மாலா’வா? உள்ளே குளுகுளுவென்று இருந்தது அவளுக்கு. மனநிலை கூட மாறிவிட்டதால், “என்ன செய்ய?” என்று கேட்டாள் யாமினி.
“ரெண்டு வருஷம் கழிச்சுப் பாருங்கோ எண்டு வீட்டில சொன்னா காரணம் கேப்பினம். நரேனிட்ட சொன்ன மாதிரி கலியாணத்தில இப்ப விருப்பம் இல்லை எண்டு சொல்லேலாது. அதுவும் அப்பாவும் இல்லாத நேரம் அம்மா கேக்கவே மாட்டா. அத்தானும் முறையான காரணம் சொல்லச் சொல்லுவார்.”
கணவர் இல்லாத நேரத்தில், மருமகனே முனைப்பாக இருக்கையில் மகளின் திருமணத்தை நாகேஸ்வரி முடித்துவிட நினைப்பது புரிந்து அவனும் அமைதியாகவே கேட்டுக்கொண்டான்.

