“எங்களைப் பற்றிச் சொன்னா ரெண்டு விஷயம் நடக்கும். ஒண்டு, அத்தான் உடனேயே உங்கட வீட்டில கதைக்க நிப்பார். ரெண்டாவது எப்பிடியும் எங்கட கலியாணம் நடக்க இன்னும் ரெண்டு வருசமாவது ஆகும் எண்டேக்க, என்னை கொழும்பை வீட்டுக் கட்டாயம் வரச் சொல்லுவினம். அதுவும் நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம் எண்டு தெரிஞ்ச பிறகு, ஆரும் ஏதும் கதைக்கிற மாதிரி இருக்கக்கூடாது எண்டு அம்மா விடவே மாட்டா. நான் என்ன செய்ய?” என்றாள் திரும்பவும்.
ஒரு கணம் யோசித்துவிட்டு, “இப்போதைக்கு நீயும் நரேனைப் பிடிக்கேல்ல எண்டு மட்டும் சொல்லு. வேற சம்மந்தப் பேச்சு வந்தா சொல்லு, ரெண்டு வீட்டிலயும் கதைப்பம்.” என்றான் அவன்.
தங்கையின் திருமணம் முடிந்த பிறகு தம்மைப் பற்றி வீட்டில் சொன்னால் அத்தனையும் சுமூகமாகப் போகும் என்று எண்ணியிருந்தான். அதற்கென்று அவசியம் வருகையில் பேசாமல் இருக்க முடியாது.
சரி என்று தலையாட்டிக் கேட்டுக்கொண்டாள் அவள்.
அவ்வளவுதான். அதைத் தாண்டி வேறு பேச வராமல் இருவருமே தடுமாறினர். என்னதான் இருவருமாகச் சேர்ந்து ஒரு முடிவை எடுத்திருந்தாலும் இருவர் உள்ளத்திலும் மற்றவர் பால் இருந்த மனத்தாங்கல் அப்படியேதான் இருந்தது.
ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்ட யாமினி, பணியாளரை அழைத்து பில் கொண்டுவரச் சொன்னாள்.
“எல்லாம் சேர்த்தா?” என்று கேட்டான் அவன்.
அவள் ஆம் என்று சொல்வதற்கிடையில் அங்கே ஒரு மேசை தள்ளி அமர்ந்திருந்த நவீன், “இல்லையில்ல. நாங்க தனித்தனியாகவே பே பண்ணுறம்.” என்றான் வேகமாக.
யாமினி கேள்வியாக நிரோஜனைப் பார்த்தாள். அவன் திரும்பி நவீனை ஒரு பார்வை பார்ப்பதைக் கண்டதும் அவளுக்கு அனைத்தும் புரிந்துபோயிற்று.
அவர்களைக் குறித்து அவனிடம் அவள் சொன்னதை அவர்களிடம் சொல்லியிருக்கிறான். அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்? மிகுந்த அவமானமாக உணர்ந்தாள் யாமினி.
கலங்கிச் சிவந்துவிட்ட விழிகளோடு ஒரு நொடி நிரோஜனையே பார்த்தவள் ஒரு முடிவுடன் நிமிர்ந்து, “நானும் என்னோட வந்தவரும் சாப்பிட்ட பில் மட்டும் கொண்டுவாங்க.” என்று சொல்லி, அதற்கு மட்டும் பணம் செலுத்திவிட்டுப் புறப்பட்டாள்.
தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான் நிரோஜன்.
எல்லோரும் நல்ல நண்பர்கள் என்றாலும் நவீனும் நிரோஜனும் நெருங்கிய நண்பர்கள். அன்று பார்ட்டியில் நடந்த பிரச்சனைகளால் தனியாகக் கேட்ட நவீனிடம் எதையும் மறைக்காமல் சொல்லியிருந்தான். அவனுக்கும் ஆறுதலும் ஒரு தெளிவும் தேவையாய் இருந்தன. உற்ற நண்பனிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வான்.
யாமினி சொல்வதில் இருக்கிற நியாயம் நவீனுக்குப் புரியாமல் இல்லை. அதே நேரத்தில் எல்லாவற்றுக்கும் அவனே முன்னின்று செலவழித்து, அதுவே அவர்கள் எல்லோருக்கும் பழகியிருந்தது. அதில் அது ஒரு விடயமாகக் கருத்தில் பதிந்ததில்லை.
அதையே ஒரு விளையாட்டாக்கி, அவனையே எல்லாவற்றுக்கும் கொடுக்க வைப்பார்கள். தவறுதான். அதற்கென்று திட்டமிட்டு, அவன் நன்றாக வந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தோடு செய்ததில்லை.
அந்த லோன் நவீனுக்குத்தான் எடுத்துத் தந்திருந்தான்.
அவனுக்கு ஏற்கனவே ஒரு லோன் இருந்ததில் தமக்கையின் மகளுக்குக் கண்ணில் சத்திரசிகிச்சை செய்யவேண்டும், பணத்திற்கு வழியில்லை என்றதும் எதைப் பற்றியும் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்திருந்தான் நிரோஜன்.
அதை முடிந்தவரை விரைவாகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும், இனிக் கவனமாக இருந்து, எல்லோரும் செலவழிப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவன் நினைத்திருந்தான்.
கூடவே, சரி தவறுகளைத் தாண்டி, நண்பர்கள் அவர்களுக்கு நடுவில் அவள் மூக்கை நுழைகிறாள் என்று தோன்றுவதை அவனால் தவிர்க்க முடியாமல் போயிற்று.
அதுதான் இன்று அவசரமாக வெளிவந்திருந்தது. அதுவே அவர்களுக்குள் நடந்தவை தனக்குத் தெரியும் என்று காட்டிக்கொடுத்துவிட்டதை அவனும் பிறகுதான் உணர்ந்தாள்.
“சொறி மச்சான்!” என்றான் சங்கடத்துடன்.
“ஆனா ஒண்டடா. ஆளாளுக்கு என்னை வச்சு நல்லா செய்றீங்க.” என்றுவிட்டு எழுந்து அவளிடம் விரைந்தான் நிரோஜன்.
அங்கே அவள் பேருந்திற்காகக் காத்திராமல், மனத்தின் வேதனைகள் மட்டுப்படுவதற்காக விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்திருந்தாள்.
வேகமாக பைக்கை கொண்டுபோய் அவள் முன்னே நிறுத்தி, “ஏறு!” என்றான் அவன்.
வேண்டாம் என்பதுபோல் மறுத்துவிட்டு அவள் தொடர்ந்து நடந்தாள். அப்போதுதான் அன்று தான் கேபிலேயே போ என்று சொன்னது அவனுக்கு நினைவு வந்தது. “அப்ப என்ன இனி என்ர பைக்ல ஏறவே மாட்டியா நீ?” என்றான் அவன் நின்ற இடத்தை விட்டு பைக்கை சிறிதும் அசைக்காமல்.
அப்படியே நின்றாள் யாமினி. ஒவ்வொரு முறையும் வார்த்தைகளால் அடிக்கிறான். ஒரு கணம் விழிகளை மூடித் திறந்துவிட்டு வந்து ஏறிக்கொண்டாள்.
எப்போதும் அவன் தோள் பற்றிக்கொண்டு அமர்கிறவள் இன்று அளவுக்கதிகமான இடைவெளியில் அமர்ந்து பைக்கையே பிடித்துக்கொண்டாள்.
அதையெல்லாம் அவன் கவனிக்காமல் இல்லை. கடுப்புடன் பைக்கை விரட்டினான்.
பயணம் முழுக்க இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவள் வீட்டு வாசலில் கொண்டுபோய் நிறுத்த, “தேங்க்ஸ்!” என்று முணுமுணுத்தபடி இறங்கினாள்.
‘தேங்க்ஸா?’ சுர்ரென்று எதுவோ ஏற, “அவன் என்ர பெஸ்ட் ஃபிரெண்ட். உன்னைப் பிழையா சொல்ல நினைச்சு அவனிட்ட சொல்லேல்ல. எனக்கு ஒரு தெளிவு வேணுமா இருந்தது. நான் செய்றது சரியா பிழையா எண்டும் தெரியவேண்டியிருந்தது. அதுதான் சொன்னனான். ” என்றான் அவன்.
கலங்கிய கண்களோடு அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனாள் அவள்.

