நீ வந்து தங்கிய நெஞ்சில் 18.1

அத்தியாயம் 18

அவன் பக்கம் அவனுக்கான நியாயம் இருந்தபோதும் தன் நண்பர்களின் முன்னே அவமானக் கன்றலுடன் அவள் கலங்கி நின்ற காட்சி நிரோஜனை விட்டு அகல மாட்டேன் என்றது.

முதலே அவர்களுக்குள் முறுகல் நிலை. இப்போது அவளிடமிருந்து சத்தமே இல்லை என்றதும் யோசித்துவிட்டுக் காவ்யாவுக்கு அழைத்தான்.

இன்னும் இரண்டு வாரத்தில் அஜந்தாவின் திருமணம் நடக்கவிருந்தது. அதையொட்டி வீட்டுக்கு வரப்போவதைச் சொல்லி, கொழும்பிலிருந்து அவளுக்கு ஏதாவது வேண்டுமானால் யாமினியிடம் சொல்லும்படி சொல்லிவிட்டு வைத்தான்.

காவ்யா திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறவள். வருங்காலக் கணவனோடு காணொளி அழைப்பில், நேரம் அமைந்தால் நேரில், கைப்பேசியில் என்று பேசுகிறவள். திருமணத்திற்கு முன்னான இந்தக் காலப்பகுதியில் தன்னை மிக மிக அழகாய் வைத்துக்கொள்ள ஆசைப்படுபவள். அப்படியானவளுக்கா தேவைகள் இருக்காது?

யாமினிக்கு அழைத்து, “அக்கா, உங்களுக்கு ஆக அரியண்டம்(தொல்லை) தாறனோ தெரியா. ஆனா எனக்குக் கொஞ்சம் உடுப்புகள் தேவையா இருக்கு. கௌரி விரதம் வேற வருது. வாங்கித் தருவீங்களா? அண்ணாதான் உங்களக் கேக்கச் சொன்னவர். அவருக்கு இதெல்லாம் பாத்து எடுக்கத் தெரியாதாம்.” என்றாள் நயமாக.

அவனுக்கா தெரியாது? அவளுக்கு எப்படிப் பார்த்து பார்த்து எடுத்துத் தருவான்? முறுக்கிக்கொண்டு நிற்கும் அவர்கள் இருவருக்குமிடையில் காவ்யாவை வைத்துப் பாலம் அமைக்க முயல்கிறான் என்று கண்டுகொண்டாள்.
காவ்யா அழைப்பைத் துண்டித்த இரண்டாவது நிமிடம் நிரோஜன் அழைத்தான். பணப் பிரச்சனை வந்த பிறகு இப்போதுதான் அவளுக்கு அழைக்கிறான். அது மெல்லிய வலியாய் அவள் உள்ளத்தினுள் ஊடுருவியது.

அழைப்பை ஏற்று, “ஹலோ!” என்றாள் தயக்கமான குரலில்.

அவனுக்கும் பேசுவது இலகுவாய் இல்லை. குரலைச் செருமிவிட்டு, “கவி கோல் பண்ணினவளா?” என்று கேட்டான்.

“ஓம். இப்பதான் கதச்சுப்போட்டு வச்சவா.”

அவள் குரலில் இருந்த அந்த மென்மையான நடுக்கத்தில் இவனுக்குள் என்னவோ உடைந்தது. மார்பை இலேசாக நீவி விட்டவன், “என்னவாம்?” என்று பேச்சுக் கொடுத்தான்.

அவள் ஏன் அழைத்தாள் என்று இவனுக்குத் தெரியாதா? தூண்டிவிட்டதே இவன்தானே. தன்னைப் பேச வைக்கவும் தன்னோடு பேசுவதற்கும் இதை அவன் பயன்படுத்த முயல்கிறான் என்று தெரிந்தும் காவ்யா சொன்னதைச் சொன்னாள்.

“எப்ப உனக்கு டைம் இருக்கும்?”

“நான் இப்பவும் ஃப்ரீதான்.”

“ஒபீஸ் இல்லையா?”

“மீட்டிங் மட்டும்தான். முடிஞ்சுது.”

“அப்ப நான் வரவா?”

அவள் தயங்கினாள். அவன் தங்கைக்கு என்பதால் அவனை எதிர்பார்க்கிறாள் என்று நினைத்துவிட மாட்டானா? தன் பணத்தைச் செலவழிக்காமல் அவனே வந்து செலவு செய்யட்டும் என்று அவள் நினைப்பதாக அவன் எண்ணிவிட்டால்? இன்றைய நிரோஜன் எதற்கு என்ன நினைப்பான் என்று அவளால் கணிக்க முடியவிலை.

அதில், “கட்டாயம் இல்ல. நானே போயும் வாங்குவன்.” என்றாள்.

“இப்ப என்ன, என்னை வர வேண்டாம் எண்டுறியா?” என்றான் அவன் மெல்லிய கோபத்தோடு.

“இல்ல. உங்களுக்கு வேலை இருந்தா…”

“அப்பிடி வேலை இருந்திருந்தா இன்னொரு நாளைக்குப் போகலாம் எண்டு சொல்லியிருப்பன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் சரியாக அரை மணி நேரத்தில் வந்து நின்றான்.

அவளும் தயாராகிக் கீழே இறங்கி வந்தாள். அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே அழுகை வந்து தொண்டையை அடைத்தது. இயல்பாக அவன் விழிகளைச் சந்தித்துப் பேச முடியவில்லை. அவன் மீதுதான் அத்தனை ஆதங்கமும். ஆனால், அவனைக் கண்டதும் அவன் கைகளுக்குள் அடங்கி, மார்பில் சாயவே துடித்தாள். பேசாமல் சென்று அவன் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

எப்போதும் அவர்கள் போகும் புடவைக்கடைக்கே விட்டான். கடைசியாக இங்கேதான் அழைத்து வந்து, அஜந்தாவின் திருமணத்திற்குச் சேலை எடுத்துத் தந்தான். அன்று அவர்களுக்குள் இருந்த நெருக்கமும் உரிமையும் இன்று எங்கோ தொலைந்த நிலை.

ஜீன்ஸ், அதற்குத் தோதான மேற்சட்டைகள், சில சுடிதார் செட்ஸ், சேலை என்று பார்த்தாலும் அவளால் அவற்றை முடிவாகத் தெரிவு செய்ய முடியவில்லை. தான் பார்க்கும் விலையில் எடுக்கலாமா, இல்லை, மலிவு பார்த்து எடுக்கிறாள் என்றுவிடுவானா என்று தடுமாறினாள்.

ஒரு கட்டத்துக்குமேல் முடியாமல், “என்ன மாதிரி விலைல பாக்க?” என்று அவனிடமே கேட்டாள்.

அவ்வளவு நேரமாக அவனும் அவளைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். இப்போது அவள் கேள்வி வேறு கோபமூட்ட, “என்ன பிரச்சினை உனக்கு?” என்றான் கோபமாக.

உன் சம்மந்தப்பட்ட ஒன்றை முன்னர் போன்று உரிமையாகச் செய்ய முடியாமல் நிற்கிறேன் என்று எப்படிச் சொல்லுவாள்? பார்வையை அவனிடமிருந்து அகற்றிக்கொண்டு நின்றாள்.

“யமி.”

அவள் இதழ்கள் நடுங்க ஆரம்பிக்க, தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று.

நிரோஜனும் அவளை அப்படிப் பார்க்க முடியாமல் முகம் திருப்பித் தலை கோதினான்.

“கவிக்கு எதெல்லாம் நல்லாருக்கும் எண்டு நினைக்கிறியோ அதை எடு. சும்மா கண்டதையும் யோசிச்சு மனதைப் போட்டுக் குழப்பாத.” என்றான் சமாதானக் குரலில்.

அதாவது அன்று அவன் விட்ட வார்த்தைகளை எல்லாம் மறந்துவிட்டு எடு என்கிறான். அது எப்படி என்று மனம் முணுமுணுத்தாலும் தனக்குத் தெரிந்த வகையில் தெரிவு செய்தாள்.

காவ்யாவிற்கு அளவாக இருக்குமா என்கிற சந்தேகம் வந்த ஒரு உடையை அவனிடமும் கேட்டுப் பார்க்கலாம் என்று அவன் புறம் திரும்பியவள், அவன் பார்வை பெண்களின் உள்ளாடைகள் கொழுவி இருந்த பக்கம் போய்வரக் கண்டு பயங்கரமாக முறைத்தாள்.

அவன் பயந்துபோனான். “அடியேய்! பிழையா எல்லாம் பாக்கேல்லை. எதேற்சையா கண்ணில பட்டுட்டுது.” என்றான் அவசரமாக.

நொடியில் அவர்களுக்குள் இருந்த பிணக்குகள் எல்லாம் மறந்துவிட, அவன் கண்களில் தெரிந்த பதற்றத்தில் சிரித்துவிடப் பார்த்தாள் யாமினி. கேட்க வந்ததைக் கேளாமல் மீண்டும் தன் முன்னே பரப்பட்டிருந்த உடைகள் மீது கவனம் பதிக்க, “உனக்கு வேணுமெண்டா தாராளமா எடு. நான் பே பண்ணுறன்.” என்று அவள் காதோரம் சொல்லிவிட்டு ஓடிவிட்டான் அவன்.

அவளுக்குக் காது மடல்கள் வரை முகம் இரத்தமாகச் சிவந்துபோயிற்று. உடைகளைக் கைகள் ஆராய்ந்தாலும் ஒன்றும் கருத்தில் பதியவில்லை. அவன் காதோரமாக வந்து கிசுகிசுத்த விதமும், சொல்லிவிட்டு ஓடிய அழகும் நெஞ்சுக்குள்ளேயே நின்றன.

திரும்பி வந்தவன் கையில் சேலை ஒன்று இருந்தது. அதைக் காட்டி, “நல்லாருக்கா?” என்று கேட்டான்.

அது திருமணத்திற்கு அணியும் பட்டுச் சேலை. இதை யாருக்கு எடுத்திருக்கிறான் என்று உள்ளே ஓடினாலும் தலையை அசைத்தாள்.

“கவின்ர கலியாணத்துக்கு நீ கட்டுறதுக்கு.” என்றான் அவன்.

அவளுக்குச் சட்டென்று முகம் மாறிப்போயிற்று. மூக்கு நுனி முதற்கொண்டு முகமெல்லாம் சிவந்து, கண்கள் கரித்தன. “இல்ல…” என்று ஆரம்பித்தவளை அவன் பார்வை அடக்கிற்று.

வந்து அவள் மீது வைத்து அழகு பார்த்தான். “பிடிச்சிருக்கா?” என்றான் திரும்பவும். கரிக்கும் விழிகளால் அவனையே பார்த்தாள் அவள்.

error: Alert: Content selection is disabled!!