நிரோஜனும் அந்தப் பார்வையில் தடுமாறிப்போனான். வேகமாகச் சமாளித்துக்கொண்டு, “எனக்குப் பிடிச்சிருக்கு. இதத்தான் நீ கட்டுறாய்.” என்று அதையும் வாங்கப்போகிறவற்றோடு எடுத்துவைத்தான்.
செய்வதை எல்லாம் செய்துவிட்டுச் சேலை எடுத்துத் தந்தால் ஆயிற்றா என்று அவளுக்கு மனம் புழுங்கிற்று. அல்லது, ஒற்றைச் சேலையை வாங்கித் தந்து, நடந்தவற்றை எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்க முயல்கிறானா? உள்ளே உள்ளம் குமுறினாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை அவள்.
அதன் பிறகும் காவ்யா சொன்ன மற்றப் பொருள்களை வாங்குவதற்கு ஃபேன்சி கடை முதற்கொண்டு பல கடைகளுக்கு ஏறி இறங்கினார்கள். போகிற இடமெல்லாம் பார்த்து பார்த்து அந்தச் சேலைக்குத் தோதாக அவளுக்குத் தேவையானவற்றையும் வாங்கினான். அவள் என்ன சொல்லியும் கேட்கவில்லை.
அந்தப் பொழுதுகளில் தவிர்க்க முடியாமல் சந்தித்துக்கொண்ட பார்வைகளைத் தவிர்த்து, அவளாக அவன் விழிகளோடு தன் பார்வையைக் கலக்க முயலவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கவனமெடுத்துத் தவிர்த்தாள்.
அந்தளவில் நேரமாக நேரமாக அவன் அண்மை அவளைப் பலகீனப்பப்டுத்திக்கொண்டே போயிற்று. அதுவும் ஆரம்பத்தில் அவளைப் போலவே இறுக்கமாக இருந்தவன் போக போக இலகுவாகிக் கண்ணால் சிரிப்பதும், இயல்பாகப் பேசுவதும், கரம் பற்றி நகர்த்துவதும் என்று நெருக்கத்தைக் காட்ட, காயங்கள் ஆறாத நிலையில், அவன் மீது கொண்ட தீராத நேசத்தையும், அவன் தட்டி எழுப்பும் அவன் பாலான உணர்வுகளையும் வைத்துக்கொண்டு தனக்குள் தத்தளித்தாள் யாமினி. சமாதானமும் ஆக முடியவில்லை. சண்டை பிடிக்கத் தெம்பும் இல்லை.
மனத்தில் இருக்கிற அனைத்தையும் கொட்டி, பேசி, அழுது, ஆத்திரப்பட்டு அத்தனை அழுத்தங்களையும் வெளியேற்றிவிட்டு அவன் தோளில் சாய வேண்டும் போலும் இருந்தது. அதே நேரத்தில் அதையெல்லாம் செய்ய முடியாதபடிக்கு ஒரு இறுக்கம் கவ்விப்பிடித்தது.
கடைகளைச் சுற்றி எல்லாவற்றையும் வாங்கி முடித்தபோது மொத்தமாகக் களைத்துப்போயிருந்தார்கள். இனிப் புறப்பட வேண்டும். அதற்கு நடுவில் ஏதாவது சொல்வானா என்கிற எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்தாள் யாமினி.
அதற்கு மாறாக, “வெளிக்கிடுவமா?” என்று அவன் கேட்டபோது, அவளது உலகம் ஒரு கணம் ஸ்தம்பித்தது. கண்கள் கண்ணீரில் பளபளத்தன. நொடி நேரம் அவனையே பார்த்துவிட்டுத் தலையசைத்தாள்.
அவனுக்குள்ளும் போராட்டம்தான். அவனுக்குள்ளும் அவளுக்குள் இருக்கும் அத்தனை தவிப்புகளும் கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருந்தன.
என்ன, நடந்தவை மீதான இருவர் நிலைப்பாட்டிலும் இருவரிடமும் எந்த மாற்றமும் இல்லை என்கையில் அதை மீண்டும் பேசினால் திரும்பவும் சண்டை மட்டுமே வரும் என்று அவன் ஆழமாய் நம்பினான்.
அதற்குப் பேசாமல் அதைக் கடந்து போவது நல்லது என்று நினைத்தான்.
அவளுக்கு அதைப் பேசித் தீர்க்க வேண்டும். அவனுக்கு முடிந்ததைக் கடந்துபோக வேண்டும்.
அவள் அறைக்கு விடாமல் கூல்பார் ஒன்றுக்கு அழைத்துப்போனான்.
இது எதற்கு? அந்தச் சேலை போல் இன்னொன்றா? மனம் குமுறிற்று. என்னையும் என் உணர்வுகளையும் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் என்று அவன் சட்டையைப் பிடிக்கும் வேகம் உண்டாயிற்று. அடக்கிக்கொண்டு போய் அமர்ந்தாள்.
இருவருக்கும் குளிர்பானம் வந்தது. எடுத்துப் பருகினர்.
அவர்களுக்கிடையிலான இந்த மௌனம், அவர்கள் ஒருவரை ஒருவர் காயப்படுத்திக்கொண்டதன் விளைவாக உருவானது. அதை எப்படிக் கடப்பது என்று தெரியாமல் நின்றான் நிரோஜன்.
“அஜந்தா கலியாணத்துக்குப் பிறகும் இஞ்சதான் வேலை செய்யப்போறாவா?”
“ஆரம்பத்துக்கு அப்பிடித்தான். வவுனியால வேலை கிடைச்சதும் அங்க போயிடுவாள்.”
“நீ எப்ப ஊருக்குப் போறாய்?”
“கலியாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முதல்.”
அவள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். வாங்கியவற்றைக் கொண்டுவந்து அவள் அறையில் வைத்தான் அவன். “போறதுக்கு முதல் வீட்டுத் திறப்பைத் தந்திட்டுப் போ. நான் வெளிக்கிடேக்க வந்து எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போறன்.” என்றான் அவன்.
திருமணத்திற்கு முதல் நாள் நேராகத் திருகோணமலை சென்றுவிட்டு, திருமண நாள் அன்று வவுனியா வருவான் என்பதில் சொன்னான்.
அவள் சரி என்று தலையை அசைத்தாள்.
“உன்ர பிளவுஸ் போய் எடுத்திட்டியா?”
ஆம் என்று இப்போதும் தலையைத்தான் அசைத்தாள்.
வேறு என்ன? அவனுமே சாதாரணமாகப் பேசத் திணறினான். கடைசியில், “வரட்டா?” என்று அவன் கேட்டபோது, கண்ணில் மல்கிவிட்ட கண்ணீருடன் தலையை அசைத்தவள், “சாப்பாடு?” என்றாள் கேள்வியாக.
“இருக்கா?”
“இருக்கு. விடியவே சமச்சிட்டன்.”
“அப்ப போடு!” என்றுவிட்டுப் போய்க் கையைக் கழுவிக்கொண்டு வந்தான்.
இருவருமே சாப்பிட்டார்கள். இருவருமே அந்த உணவின் சுவையை உணரவில்லை. யாராவது ஒரு வார்த்தை பேசினால், அது பெரிய வெடிப்பைத் தந்துவிடுமோ என்கிற பயம் இருவருக்கும்.
அவன் சாப்பிட்டு முடித்துவிட்டுத் தன் கைகளைக் கழுவிக்கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவள் நடுங்கும் இதழ்களை அழுத்தி மூடியபடி நின்றிருந்தாள். “வாறன் போயிற்று!” என்றுவிட்டு வாசல் நோக்கி நடந்தவன் நின்று திரும்பிப் பார்த்தான். அவள் வழிந்த கண்ணீரைத் துடைப்பது தெரியவும் ஒரு வேகத்துடன் வந்து அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
யாமினி எதிர்க்கவெல்லாம் இல்லை. எதிர்க்கும் தெம்பு அவளுக்கு இருக்கவில்லை. அவன் தந்த காயத்தை அவனால் மட்டுமே ஆற்ற முடியும் என்கையில் அவளும் என்ன செய்வாள்? அவன் மார்பில் முகம் புதைத்துச் சத்தமில்லாமல் கண்ணீர் உகுத்தாள்.
அணைத்து, ஆறுதல்படுத்தி, முதுகை வருடிக்கொடுத்து, உச்சி முத்தம் பதித்து என்று அவளை ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்கு நிறைய நேரமாயிற்று.
“என்னடி நீ இப்பிடி அழுறாய்?” என்று அவள் முகம் தாங்கிக் கண்களைத் துடைத்துவிட்டான் அவன்.
அப்போதும் அவள் மூக்கு நுனி சிவந்து கண்களில் நீர் சேரவும், “யமி!” என்று அவள் உதட்டில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான் அவன்.
அவள் அதிர்ந்து பார்க்க என்னவென்று புருவங்களை உயர்த்தினான் அவன். ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள் யாமினி. அந்த விசைக்கு ஏற்ப அவள் விழிகளில் இருந்து கண்ணீர்த் துளிகள் உருண்டன. அவற்றைத் தன் உதடுகளாலேயே ஒற்றி எடுத்தான் அவன். முகம் தாங்கி முத்து முத்தாக முத்தமிட்டான்.
அவளை ஒருமுறை பார்த்துவிட்டு இதழ்களைச் சிறை செய்தான். அப்படி அவர்கள் இதழ்களில் முத்தமிட்டுக்கொண்ட தருணங்கள் மிக மிகக் குறைவு. இருவருமே தவிர்த்துவிடுவார்கள்.
இன்று இருவராலும் முடியவில்லை. பெரும் ஆறுதல் ஒன்று தேவையாய் இருந்தது. வார்த்தைகள் அற்ற மொழி ஒன்றினால் ஒருவர் மற்றவருக்கு ஆறுதல் சொல்லவும் அன்பைப் பரிமாறவும் இதைத் தவிர சிறந்த வழி ஏதுமில்லை என்றே நினைத்தனர்.
அவன் அணைப்பு இறுகி, இன்னுமின்னும் அவளில் ஆழ்ந்துபோகவும் அவள் பயந்துபோனாள். பதறிப்போய் வேகமாக அவனிடமிருந்து விலகியவளாள் அவன் முகம் பார்க்க முடியவில்லை.
முதலில் திகைத்தாலும் அவனும் தடுமாறிப்போனான். சட்டென்று முதுகு காட்டித் திரும்பித் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, “வாறன்!” என்று அவளைப் பாராமலேயே சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

