நீ வந்து தங்கிய நெஞ்சில் 2.2

“சரி, சிங்குக்க இருக்கிற பாத்திரங்களக் கழுவுங்க. அஞ்சு நிமிசத்தில கொத்து ரெடியாகிடும்.”

அவனும் அவற்றைக் கழுவ ஆரம்பித்தான். அப்போது அவளின் அன்னை அழைத்தார். அவன் புறம் திரும்பி, வாயில் விரலை வைத்துக் காட்டிவிட்டு, அழைப்பை ஏற்றாள்.

“என்ன பிள்ளை செய்றீங்க?” சோர்ந்து ஒலித்தது அவர் குரல்.

“சமைக்கிறன் அம்மா. நீங்க சாப்பிட்டீங்களா?”

“ஓம் பிள்ளை. பிரஷர் குளுசை போடோணுமே. இருக்கிற செலவுகள் போதாது எண்டு நானும் வீண் செலவை இழுத்து வைக்கேலுமா?” என்றார் அவர் மனம் விட்டுவிட்ட குரலில்.

“என்னம்மா கதை இது? உங்களுக்குச் செய்றது வீண் செலவாம்மா?” என்றாள் அவள் மனத்தாங்கலுடன்.

“போற போக்கப் பாத்தா அப்பிடித்தான் பிள்ளை இருக்கு.”

இன்னுமே கணவரின் இறப்பிலிருந்து முழுமையாக அவரால் மீள முடியவில்லை. அப்படியிருக்க அதன் பிறகு நடப்பவை எல்லாம் அதிர்ச்சியைத் தந்து, வாயடைக்க வைத்துக்கொண்டிருந்தன.

பார்வை ஒருமுறை நிரோஜனைத் தொட்டு வர, “அப்பிடி ஆர் என்ன சொன்னவே?” என்று விடயம் அறிய முயன்றாள் அவள்.

“ஆர் என்ன சொல்ல இருக்கம்மா? உங்கட அக்காதான்…” என்று இழுத்து நிறுத்தினார் அவர்.

அவள் தமக்கை மாதங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறாள். அவளின் அத்தான் ஆதவனும் அப்படித்தான். இவள் வீட்டினர் தற்போது இருக்கும் வீடு, காணி, போதுமான நகைகள் எல்லாம் அவளுக்குச் சீதனமாகக் கொடுத்தவை.

அதைவிட இத்தனை காலமும் அவர்களின் மகனையும் பார்த்துக்கொண்டு, சமையல், வீட்டு வேலைகள் என்று அனைத்தையும் கவனித்துக்கொண்டது அவள் அம்மாவும் அப்பாவும்தான்.

என்ன ஏது என்று இவளுக்கு முறையான விபரம் தெரியாதபோதும் கணிசமான சேமிப்பு அவர்களிடம் இருக்கும் என்பது யாமினியின் கணிப்பு.

ஆக, குறை என்று சொல்வதற்கு எதுவுமில்லை.

ஆனால், அப்படி இல்லையாம் என்றாள் மாதங்கி.

அவர்களின் தந்தை கற்கண்டு மிகச்சிறந்த மனிதர். ஒரு கெட்ட பழக்கம் இல்லை. இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்று வைத்திருக்கிறேன் என்று ஒரு நாள் சொன்னதில்லை. யார் கையிலாவது பிடித்துக் கொடுத்துக் கரையேற்றி, கடமையை முடித்துவிடுவோம் என்று நினைத்ததில்லை.

அவர்களுக்குப் பிடித்ததைப் படிக்க வைத்தார். வேலை பார்க்கப்போகிறோம் என்று சொன்னபோது அதற்கும் அனுப்பிவைத்தார்.

மாதங்கியினது காதல் திருமணம். அவள் காதல் என்று வந்து நின்றபோது, கண்ணை மூடிக்கொண்டு மறுக்காமல், யார் எவர் என்று விசாரித்து, ஆதவனும் அவன் குடும்பத்தினரும் நல்லவர்கள் என்று அறிந்து, அவள் திருமணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்திவைத்திருந்தார்.

அவர் மீதிருந்த நம்பிக்கைதான் நிரோஜன் வந்து நேசத்தைச் சொன்னபோது அவளையும் சம்மதிக்க வைத்தது.

அப்படியான தந்தை இறந்தபோது, எந்தக் குறையும் இல்லாமல் அவரின் இறுதிப் பயணத்தைச் செய்ய நினைத்தாள் யாமினி. மாதங்கிக்கு அதில் உடன்பாடில்லை. இறப்பு வீட்டுக்கான ஒவ்வொரு செலவிலும் பணக் கணக்குப் பார்த்தாள்.

இவளையும் தனியாக அழைத்துப்போய், “சும்மா சும்மா காச விசிற நிக்காத. இருக்கிற வரைக்கும் அப்பா நல்லாத்தானே இருந்தவர். செத்த பிறகு செய்றது அவருக்குத் தெரியவா போகுது?” என்று அவள் கேட்ட கேள்வியில் யாமினிக்கு மிகுந்த அதிர்ச்சி.

அவள் தர நினைக்கும் தொகையைப் பெற்றுக்கொண்டு மிகுதியை இவளே போட்டு, எந்தக் குறையும் இல்லாது அனைத்தையும் முடித்துவிட்டு வந்திருந்தாள்.

இப்போது அது நினைவில் வந்து போக, “இப்ப என்னவாம் அக்கா?” என்று கேட்டாள்.

இதற்குள் நிரோஜனுக்கான இடியப்பக்கொத்து முடிந்திருந்தது. சிங்கினுள் இருந்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்துவிட்டு அவன் விறாந்தைக்குப் போயிருந்தான். காதில் வயர்லெஸ் ஹெட்போன்களை கொழுவிக்கொண்டு, உணவைக் கொண்டுபோய் அவனிடம் கொடுத்தாள்.

அவளைக் கேள்வியாக ஏறிட்டான் அவன். தன் காதினைக் காட்டி, இன்னுமே கதைத்துக்கொண்டிருப்பதைச் சைகையில் சொன்னாள்.

“அப்பான்ர அந்தியேட்டிக்கு செலவழிக்கத் தன்னட்ட காசு இல்லையாம் எண்டு சொல்லுறா பிள்ளை. நீ செலவை நல்லா இழுத்து விட்டுப்போட்டு, அதில சரி பாதிய வை எண்டு நிப்பியாம். உன்னை மாதிரித் தான் என்ன லச்சத்தில சம்பளம் வாங்கிறவளோ எண்டு ஒரே புறுபுறுப்பம்மா. எனக்கு இது எங்கட மகளா எண்டு நம்பேலாம இருக்கு. அப்பாக்கே இந்த நிலமை எண்டா நாளைக்கு நான் படுத்த படுக்கையாகிட்டா என்ர நிலமை என்ன எண்டு நினைக்கவே பயமா இருக்குப் பிள்ளை. அப்பிடி ஒரு நிலை வர முதல் செத்திடோணும் எண்டுதான் இப்ப எல்லாம் கடவுளக் கேக்கிறன்.” என்றவரின் பேச்சைக் கேட்டு, ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டாள் யாமினி.

“அக்காக்குக் காசுப் பைத்தியம் பிடிச்சிட்டம்மா. அதான் அரை லூசு மாதிரிக் கதைக்குது. அப்பாக்கும் உங்களுக்கும் அவா மட்டுமா மகள்? நானும்தானே. நான் இருக்கிற வரைக்கும் உங்கள விடமாட்டன். நீங்க சும்மா இதையெல்லாம் நினைச்சுக் கவலைப்படாதீங்க. அவாவின்ர காசை அவாவையே பொத்தி வச்சிருக்கட்டாம் எண்டு சொல்லுங்க. அந்தியேட்டிச் செலவ நான் பாக்கிறன்.”

“எண்டாலும் பிள்ளை பெருசா எதையும் இழுத்துவிடாதீங்கோ. அக்கா சொன்ன மாதிரி வாழுற வரைக்கும் அந்த மனுசன் இது எதையும் அறியாம, நிம்மதியா இருந்திட்டுப் போய்ச் சேந்திட்டார். எனக்கு அதே போதுமாச்சி.” தழுதழுத்த குரலில் சொன்னவருக்காய் அவள் உள்ளமும் அழுதது.

ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் அவருக்குத் தைரியம் கொடுக்கும் விதமாகப் பேசி, அவரையும் மனத்தில் இருப்பதையெல்லாம் கொட்ட வைத்தபடி உணவை முடித்தாள்.

தட்டு முழுவதையும் வழித்துச் சாப்பிட்டது போதாது என்று இன்னொரு முறையும் போட்டுச் சாப்பிட்ட நிரோஜன், உணவு அருமை என்று உண்ட கையினாலேயே அபிநயம் பிடித்துக் காட்டிவிட்டுப் போனான்.

இங்கே அன்னையோடு பேசிவிட்டு வைத்த யாமினி, உடனேயே தன் வங்கிக் கணக்கை ஆராய்ந்தாள். அங்கே பெரிதாக எதுவும் இல்லை. அவள் தந்தை இருந்த வரை மாதா மாதம் தன் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அவருக்கு அனுப்பி வைத்துவிட்டு, மிகுதியைச் செலவுக்கு வைத்துக்கொள்வாள்.

புதிது புதிதாக வரும் கைப்பேசிகளை வாங்குவது, அவர்கள் போகிற பார்ட்டிகள், சுற்றுலாக்கள், தியேட்டர்கள், உணவகங்கள், மாதா மாதம் வாங்கும் உடைகள், அவளுக்கான அலங்காரச் செலவு, வீட்டுக்குப் போகையில் அக்கா குடும்பத்திற்கு, சின்னவனுக்கு, அம்மா அப்பாக்கு என்று ஒவ்வொரு முறையும் கை நிறைய வாங்கிக்கொண்டு போவது என்று அதற்கே மொத்தமும் செலவாகிவிடும்.

இதுவரை காலமும் அதைக் குறித்தெல்லாம் அவள் பெரிதாகக் கவலையுற்றதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவள் அனுப்பிய பணத்தைச் சேர்த்து வைத்து, அவள் தந்தை நான்கு பரப்பில் நிலம் ஒன்றை வாங்கிப் போட்டபோது பெருமிதமாகவே உணர்ந்திருக்கிறாள்.

தந்தைக்கு இப்படியானதும் அதனால் உண்டான செலவுகளும் முற்றிலும் எதிர்பாராதவை. வைத்தியசாலைச் செலவு, இறுதிக் கிரியைகளுக்கான செலவு என்று அனைத்தையும் மிகுதியாக இருந்த சேமிப்பிலிருந்து எடுத்துச் செய்திருந்தாள்.

இப்போது அந்தியேட்டிச் செலவை அவள் மட்டுமே பார்ப்பதென்றால் சேமிப்பில் மிகுதியாக இருப்பது போதுமா தெரியவில்லை. அவர்களின் அடுத்த மாதச் சம்பளம் வர முதல் கற்கண்டு அய்யாவின் 31வது நாள் காரியம் வந்துவிடும்.

என்ன செய்வது என்று ஒரு கணம் யோசித்துவிட்டு, நிரோஜனின் கைப்பேசியை எடுத்து, அவன் வங்கிக் கணக்கை ஆராய்ந்தாள். இருவரிடமும் எந்த ஒளிவு மறைவும் இல்லாததால் இது அவ்வப்போது நடப்பதுதான்.

அவன் கணக்கைப் பார்த்தவள் அதிர்ந்துபோனாள். அவனும் அவளைப்போல்தான். மாதா மாதம் குறிப்பிட்ட தொகையைத் தன் சம்பளத்திலிருந்து வீட்டுக்குக் கொடுத்துவிட்டு, மிகுதியைத் தன் செலவுக்கென்று வைத்துக்கொள்வான்.

ஆனால் என்ன, அவன் சம்பளம் அவளுடையதைப் போன்று இரண்டு மடங்கு. ஆனால், அவள் கொடுக்கும் தொகைதான் அவனும் தன் வீட்டுக்குக் கொடுப்பது. அப்படி இருந்தும் அவன் கணக்கில் பெரியளவில் பணமேயில்லை. நேற்றும் இன்றும் நடந்த செலவுகளைத் தவிர்த்து மித்ரனுக்கும் இன்னும் யாருக்கோ எல்லாம் பணம் கொடுத்திருந்தான்.

கோபம்தான் வந்தது அவளுக்கு. அதெல்லாம் கோயில் உண்டியலில் போட்ட பணம். திரும்பி வராது. இருந்தால் தருவார்கள்தானே என்று இவனும் கேட்க மாட்டான். இப்படிக்கு கொடுக்காதே என்று பலமுறை சொல்லியிருக்கிறாள். கேட்கவே மாட்டான்.

error: Alert: Content selection is disabled!!