அத்தியாயம் 21
“நிரோ.” பெரும் தயக்கத்தோடு அழைத்தாள் யாமினி.
அவளுக்கு எதிர்ப் புறத்தில் முகம் திருப்பியிருந்தவனின் தாடை இறுகுவது அப்பட்டமாகத் தெரிந்தது அவளுக்கு.
“சொறி நிரோ!” என்றாள் மீண்டும்.
“தயவு செய்து இஞ்ச இருந்து போ யாமினி. நான் நல்ல கோவத்துல இருக்கிறன்!” என்றான் அவன் எச்சரிப்பாக.
அப்படி எப்படிப் போவாள்? அவனையே கெஞ்சலாகப் பார்த்து நின்றாள். அவன் அசைவதாக இல்லை.
“நான் அப்பிடிச் சொன்னதின்ர அர்த்தம் நீங்க அப்பிடி நடக்கிற ஆள் எண்டுறது இல்லை நிரோ. விளையாட்டுத்தனமா நீங்க ஏதாவது செய்யப்போய், அது என்ர வீட்டு ஆக்களின்ர பார்வைல பிழையா பட்டுடுமோ எண்டுற பயத்தில சொன்னது. ஆனாலும் நீங்க அப்பிடி நடப்பீங்களா எண்டு நான் யோசிச்சிருக்கோணும். பிழைதான். ப்ளீஸ் கோவிக்காதீங்க.” குரலடைக்கக் கெஞ்சினாள்.
“உன்னைப் போகச் சொன்னனான்!” என்றான் அவன்.
“நிரோ ப்ளீஸ். என்னைக் கொஞ்சம் கதைக்க விடுங்க. என்ர பக்க விளக்கத்தச் சொல்ல விடுங்க. இது, விசாரணையே இல்லாம தண்டிக்கிற மாதிரி இருக்கு.” கண்ணீருடன் கெஞ்சினாள்.
“சொல்லு! என்ன விளக்கம் சொல்லோணும் உனக்கு!” என்று அவள் முன்னே வந்து நின்றான் அவன்.
அப்படி அவன் வந்து நின்ற விதமே பயமூட்டுவதாக இருக்க, “நிரோ.” என்றாள் தவிப்புடன்.
“சொல்லு!”
இப்படி விரைப்புடன் நின்று சொல்லு சொல்லு என்றால் எப்படிச் சொல்லுவாள்? ஆனால், பேசாமல் ஆகாதே.
“அத நான் வேணுமெண்டு சொல்லேல்ல நிரோ. அக்கா அத்தான்ர மனதில நீங்க நல்லவிதமா பதியோணும் எண்டுற பதட்டத்தில சொல்லிட்டன். பிழையா இருந்தா சொறி. ஆனா அதுக்காக நீங்க செய்தது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல. அதுவும் நான் சொல்லிட்டன் எண்டுறதுக்காகவே உடுப்பை எல்லாம் இழுத்துவிட்டு, தலையக் கலச்சுவிட்டு எண்டு என்ன இது? என்னோடதானே உங்களுக்குக் கோபம்? அது எல்லாருக்கும் தெரியிற மாதிரி நடப்பீங்களா? திவாகர் அண்ணா அடுத்த கலியாணம் உங்களுக்குத்தான் எண்டு சொல்லேக்க ஏன் அப்பிடி இறுக்கமா நிண்டனீங்க? அண்டைக்கு அவேக்கு வச்ச பார்ட்டில அவ்வளவு சந்தோசமா இருந்திட்டு, இண்டைக்கு இப்பிடிச் செய்தா என்ன நினைப்பார் எங்களைப் பற்றி? அவர் என்னைப் பாக்கிறார். அஜூ கூப்பிட்டு என்னடி எண்டு கேக்கிறாள். நான் என்ன சொல்லுறது?” என்றதும் அவன் சீறினான்.
“என்ன என்ன சொல்லுறது? நான் நிரோவை நம்பேல்ல, அவன் குடிச்சுப்போட்டுக் கூத்தடிப்பானோ எண்டு பயந்தனான் எண்டு சொல்லு!” என்று சீறினான் அவன்.
இப்படி கொஞ்சமும் அவள் சொல்ல வருவதை விளங்கிக்கொள்ளவே மாட்டேன் என்று நிற்கிறவன் மீது அவளுக்கும் மெலிதாய்க் கோபம் வந்தது.
“சும்மா என்னில பழி போடாதீங்க. நான் அப்பிடிப் பயந்ததுக்கு நீங்களும் ஒரு காரணம். அண்டைக்கு என்னதான் எனக்கும் உங்களுக்கும் சண்டை எண்டாலும் உங்கட பிரண்ட்ஸும் நிக்கத் தக்கன எனக்கு முன்னால குடிக்கேல்லையா நீங்க? அவே என்னைப் பற்றி என்ன நினைப்பீனம்? இனி என்னை மதிப்பினமா? அப்பிடி இண்டைக்கும்…” என்றவளை முடிக்க விடவில்லை அவன்.
“அண்டைக்கு என்னைக் குடிக்க வச்சதே நீதான். கேனயன் மாதிரிக் கெஞ்சுறன், கேப் புக் பண்ணி போறாய் என்ன? அவ்வளவு திமிர் உனக்கு. அதுதான் குடிச்சனான். நீ போடுற வட்டத்துக்க நான் இல்லை எண்டு உனக்குக் காட்டத்தான் குடிச்சனான்.” என்றவனைக் கண்ணீருடன் பார்த்தாள் அவள்.
“இப்பிடி எல்லாம் கதைக்காதீங்க நீரோ.”
“ஏய் போடி!” என்றான் அவன் எரிச்சலுடன்.
அவளுக்கு முகம் கன்றியது. அவன் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து அவமானப்படுத்துவதாக, உதாசீனப்படுத்துவதாய் உணர்ந்தாள்.
“ஏன் நிரோ வர வர இப்பிடி முரட்டுத்தனமா மாறிக்கொண்டு வாறீங்க? நான் அறிஞ்ச, எனக்குத் தெரிஞ்ச என்ர நிரோ எப்பவும் சிரிச்ச முகத்தோட, என்னை விளங்கிக்கொண்டு, எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கொண்டு போறவர். இப்ப இருக்கிற இந்த நிரோ புதுசா இருக்கிறார். இப்ப இப்ப உங்களிட்ட என்ன கதைக்கவும் பயமா இருக்கு.”
“என்னை இப்பிடி மாத்தினதே நீதான். உன்னாலதான் அரைப் பைத்தியமாய் நிக்கிறன். உன்ர அப்பா செத்தாலும் செத்தார் நீ என்னை உயிரோட கொல்லுறாய்.” என்றதும் துடித்துப்போனாள்.
“என்னை கதைக்கிறீங்க நிரோ?” என்றாள் கண்ணீருடன்.
“என்ன கதைக்கிறனா? உண்மையச் சொல்லுறன். நீ அப்பிடித்தான் செய்றாய்.”
“நான் என்ன செய்தனான்?”
“செய்றதை எல்லாம் செய்துபோட்டு என்ன செய்தனான் எண்டு வேற கேப்பியா நீ? கொஞ்சம் கொஞ்சமா என்ர சந்தோசம், நிம்மதி எல்லாத்தையும் கெடுக்கிறாய். என்ன ஏழரைக்கு இந்தக் காதல் எனக்கு வந்தது எண்டு இருக்கு?” என்றதும் உடைந்துபோனாள் யாமினி.
அவளுக்குப் பேச்சே வரமாட்டேன் என்றுவிட்டது. வேதனையுடன் அவனை நோக்கினாள். அவன் அவள் புறம் திரும்ப வேண்டுமே. அவள் முகம் பார்க்கவே பிடிக்காதவன் போல் முகம் திருப்பி நின்றிருந்தான்.
உள்ளே வலிக்க, “ஏன் நிரோ இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க? என்னை நோகடிக்கோணுமா உங்களுக்கு?” என்றாள் வேதனை துலங்க.
“தயவுசெய்து இஞ்ச இருந்து போ யாமினி. எதையாவது கதைச்சு எரிச்சலக் கிளப்பாத! உன்னோட கதைக்கிற மனநிலைல நான் இல்ல.” என்றான் அவன் திரும்பவும்.
“அப்பிடி எப்பிடிப் போவன் நிரோ? உங்களுக்குத் தெரியுதா இல்லையா எனக்குத் தெரியேல்ல. ஆனா இப்ப இப்ப நீங்க வார்த்தையால என்னை நல்லா நோகடிக்கிறீங்க. வலிக்குது நிரோ. இப்பிடி எல்லாம் கதைக்காதீங்க ப்ளீஸ்!”
“அப்ப போ. எனக்கு முன்னால நிக்காத!” என்றான் அவன் மீண்டும்.
“ப்ளீஸ் நிரோ. நான் என்ன சொன்னாலும் அது உங்கட நல்லதுக்குத்தான்…” என்று அவள் முடிக்க முதலே, “இத சொல்லாத முதல் நீ!” என்று சீறியிருந்தான் அவன்.
“என்ர நல்லது பாக்க எனக்குத் தெரியும் எண்டு இன்னும் எத்தின தரம் உனக்குச் சொல்லுறது?” இப்போதெல்லாம் உன் நல்லதற்குத்தான் சொல்கிறேன் என்று அவள் சொல்லும் வசனம் அவனை நிலையிழக்க செய்தது.
“நானும் நீங்களும் ஆரோ இல்ல நிரோ. உங்களை நீங்களே பாப்பீங்க எண்டு பேசாம இருக்க. ரெண்டு பேரும் சேந்து ஒரு வாழ்க்கை வாழப்போறம். உங்கட நல்லது கெட்டதில எனக்குப் பங்கு இருக்கு. அதே மாதிரி…”
“தயவு செய்து நிப்பாட்டு. நீ எடுக்கிற பாடத்தக் கேக்கிற மூட்ல நான் இல்ல!”
“என்ன நீரோ இது? எல்லாத்துக்கும் இப்பிடியே கதைச்சா எப்பிடி?”
“நீ முதல் போ!”
“நிரோ!”
“ஏய் போடி!”
“அப்பிடி எல்லாம் போகேலாது நிரோ. ஒரு பிரச்சினை எண்டு வந்தா உங்களை மாதிரி என்னால தப்பி ஓடேலாது. எனக்குக் கதைச்சுப் பேசித் தீர்க்கோணும். அப்பதான் ஒரு தெளிவும் முடிவும் கிடைக்கும். அத விட்டுப்போட்டு ஒரு சாறியை வாங்கித் தந்து, கிஸ் பண்ணினதும் எல்லாம் முடிஞ்சிடும் எண்டு நினைக்கேலாது.”
“ஏய்!”
“என்ன ஏய்? எனக்கும் உங்களுக்கும் இடைல எவ்வளவு பெரிய சண்டை நடந்தது? அதக் கதைச்சுப் பேசித் தீக்கிறதுதானே முறை. அதை விட்டுப்போட்டு என்ன செய்தனீங்க? கேவலமான டெக்னிக் பயன்படுத்தி…” என்று அவள் முடிக்கவில்லை. பளார் என்று அறைந்திருந்தான் நிரோஜன்.
அவனுக்கு அப்போதும் ஆத்திரம் அடங்குவதாக இல்லை. தேகம் மொத்தமும் நடுங்கியது. அன்று ஆசையாகவும் ஆத்மார்த்தமாகவும் கொடுத்த முத்தம் அது. இன்னும் சொல்லப்போனால் நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்று சொல்ல நினைத்துக் கொடுத்த முத்தம். அதைப்போய்….

