நீ வந்து தங்கிய நெஞ்சில் – 22.1

அத்தியாயம் 22

திருமண மண்டபத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தாலும் அவன் அறைந்த அதிர்விலிருந்து யாமினியால் வெளிவர முடியவில்லை. அந்தப் பக்கத்துக் கன்னம் இன்னுமே இழுத்து வலித்தது.

அவள் உயிராய் நேசிக்கிறவன் தந்த பரிசு அது. பெண்களுக்கான ஓய்வறைக்குச் சென்று கன்னத்தை ஆராய்ந்தாள். அந்தப் பக்கம் தடித்துச் சிவந்திருந்தது. சட்டென்று சுரந்துவிட்ட கண்ணீரை வேகமாகத் துடைத்துக்கொண்டு, கைப்பையில் கொண்டுவந்திருந்த பவுடரை எடுத்துக் கன்னத்தில் ஒற்றி, அடித்த தடத்தை மறைத்தாள்.

தண்ணீர் அருந்தி, கண்களில் அழுத தடம் தெரிகிறதா என்று கவனித்து, ஆழ்ந்த மூச்சை வாயால் இழுத்துவிட்டுத் தன்னைக் கொஞ்சம் சமன்படுத்திக்கொண்டு வெளியே வந்தாள்.

அன்றே ரிசப்ஷனும் வைப்பதால் மேடையில் அதற்கான அலங்காரம் மாற்றப்பட்டுக்கொண்டிருக்க, மணமக்கள் உடை மாற்றப் போயிருந்தார்கள்.

இவளைக் கண்டுவிட்டு, “பிரெண்ட்ஸை தேடிக்கொண்டு கொழும்பு வரைக்கும் போயிட்டீங்களோ எண்டு நினைச்சன் யாமினி.” என்று சிறு கேலியுடன் சொன்னான் ஆதவன்.

“எங்களைத் தனியா விட்டுட்டு ஓடுறதையே இண்டு முழுக்க வேலையா பாக்கிறாள் அவள்.” என்றாள் மாதங்கி.

தமக்கை சொன்னதற்கு ஒன்றும் சொல்லாமல், “ஆக்களைக் காணவே இல்ல அத்தான். தேடிக்கொண்டு போனா மண்டபத்துக்குப் பின்னால இருக்கிற பூங்கால நிக்கினம். நடந்து நடந்து எனக்குக் கால் வலி வந்ததுதான் மிச்சம்.” என்று அவனுக்குப் பதில் சொன்னபடி தாயின் அருகில் அமர்ந்தாள்.

“இப்ப எங்க ஆக்கள்?”

“போ வாறம் எண்டு சொன்னவே. வருவினம்.” என்றவளுக்கு வருவார்களா என்கிற பதைப்பு.

ஆனால், நவீன் சொன்னது போன்று ஐந்து நிமிடத்தில் எல்லோரும் வந்தார்கள். நிரோஜனை மட்டும் காணவில்லை. கேள்வியாக அவர்களை ஏறிட்டாள்.

அவர்களின் முகங்கள் எதுவும் இயல்பாக இல்லை. அவள் புறம் திரும்பவோ, அவளோடு பேசவோ விரும்பவில்லை என்று அவர்களது முகபாவனைகளே சொல்லின.

அவளுக்கு எதுவும் புரியவில்லை. அவள் என்ன தவறு செய்தாள்? அறைந்தது கூட அவர்களின் நண்பனாயிற்றே. மனத்தில் எழுந்த வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஒவ்வொருவரையும் தன் குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தினாள்.

“இன்னொருத்தரும் இருந்தாரே.” கற்கண்டு அய்யாவின் பிறப்பின்போது உதவியதும் நினைவில் இருக்கக் கேட்டான் ஆதவன்.

“ஓம் அது நிரோ… நிரோஜன்.” என்றவள் தவிப்புடன் நவீனைப் பார்த்தாள்.

“அது… அவனுக்கு கோல் வந்திட்டுது. அதான். வருவான்.” என்று சமாளித்தான் நவீன்.

ஆதவன் அவர்களோடு பேசிக்கொண்டிருக்க, யாரும் கவனிக்கா வண்ணம் நிரோஜனுக்கு அழைத்து அழைத்துத் துண்டித்தாள். அவன் வந்த பாடாக இல்லை.

மெதுவாக விலகி வந்து, “ப்ளீஸ் நிரோ, எங்களுக்க என்ன சண்டை இருந்தாலும் பிறகு பேசித் தீர்க்கலாம். இப்ப வந்து ஒரு ஹலோ சொல்லிப்போட்டுப் போங்க. உங்கட அம்மா அப்பாக்கு நான் இப்பிடிச் செய்தா உங்களுக்கு எப்பிடி இருக்கும்? அத்தான் உங்களுக்காக வெய்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார். வாங்க ப்ளீஸ்!” என்று தழுதழுத்த குரலில் பேசி அனுப்பிவிட்டாள்.

கொஞ்ச நேரத்தில் வந்த நிரோஜன், “ஹாய் அண்ணா, சொறி ஒரு கோல் வந்திட்டுது. நான் நிரோஜன்.” என்று ஆதவனுக்குக் கை கொடுத்தான்.

அதைத் தாண்டி அவள் வீட்டினரோடு சுமூகமாகவோ, நல்ல விதமாகவோ பேச எந்த முயற்சியும் அவன் எடுக்கவில்லை. எல்லோரும் ஒரு இடத்தில் சுற்றியிருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவனாகத் தானும் அமர்ந்துகொண்டான். அவ்வளவுதான். ஆதவன் ஏதாவது கேட்டால் மட்டும் பதில் சொன்னான்.

அவனுக்கும் சேர்த்து நவீனும் மித்ரனும் சேர்ந்து பேசிச் சமாளித்தார்கள். திலினி சிங்களப் பெண் என்பதில் நாகேஸ்வரிக்கும் மாதங்கிக்கும் குறுகுறுப்பு. அதுவும் அவள் தமிழர்கள் அணிவதுபோல் சேலை வேறு அணிந்திருக்க, அவளைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டனர்.

அப்போதுதான் அவள் அணிந்திருக்கும் சேலை நிரோஜன் வீட்டினர் கொடுத்தது என்பதும், அவள் தங்கியிருப்பதும் அங்குதான் என்பதும் தெரிய வந்தன. அதிர்ந்து நிரோஜனைப் பார்த்தாள் யாமினி. ஒரு வார்த்தை சொல்லவில்லையே.

மாதங்கி வேறு அவர்கள் போனதும், “அந்த நிரோஜன் இந்தச் சிங்களப் பெட்டையை விரும்புதோ?” என்று இவளிடம் சந்தேகம் கேட்டாள்.

அதிர்ந்துபோன யாமினி, “அக்கா, நாங்க எல்லாரும் ஒரே இடத்தில ஒண்டா வேலை செய்ற ஆக்கள். அப்பிடி எல்லாம் இல்ல. தேவை இல்லாம எதையாவது கதைச்சு வைக்காதீங்க.” என்று அவளை அடக்கினாலும் இப்படி ஒரு பேச்சு எழுவதற்கு வழி செய்துவிட்டானே என்றெண்ணி வேதனையுற்றாள்.

கேட்டுக்கொண்டு போனால் அதற்கும் அவள்தான் காரணம் என்று ஏதாவது ஒரு கதை சொல்லுவான். உள்ளே உள்ளம் விரக்தியில் துவள அவனைப் பார்த்தாள். அவன் இவள் புறம் திரும்பவே இல்லை.

அறைந்தபோதுதான் கோபத்தில் அறைந்துவிட்டான் என்றால் அதற்குப் பிறகும் கூடவா தான் செய்தது பெரும் தவறு என்று அவனுக்குப் புரியவில்லை? அல்லது, அடித்தது சரி என்று நினைக்கிறானா?

ரிசப்ஷன் ஆரம்பித்தது. அன்று கணவன் மனைவியாகிப்போனவர்கள் மோதிரம் மாற்றி, கேக் வெட்டி மகிழ்ந்தார்கள். இன்னொரு முறை எல்லோரும் அவர்களுடன் நின்று புகைப்படங்கள் எடுத்து முடிய, மாப்பிள்ளையும் பெண்ணும் மேடையை விட்டு இறங்கி வந்து, திருமணத்திற்கு வந்தவர்களை ஒவ்வொரு மேசையாகச் சந்தித்துப் பேச ஆரம்பித்தனர்.

அங்கே மணமேடையில் ஆடல் பாடல் என்று கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது. இதற்காகத்தானே அவன் நண்பர்கள் காத்திருந்தார்கள். அவனையும் இழுத்துக்கொண்டு மேடையேறினார்கள்.

அவன் இருந்த மனநிலைக்கு ஆட முடியவில்லை. அவர்கள் விடாமல் அவனைச் சுற்றி சுற்றி ஆட, ஒரு கட்டத்துக்கு மேல் அவனும் சேர்ந்துகொண்டான்.

மண்டபத்தில் இருந்த அத்தனை பேரும் நுணுக்கமான நேர்த்தியான அவனின் நடன அசைவுகளைக் கண்டு கை தட்டி ஆர்ப்பரித்தனர். யாமினியால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.

அவன் ஆட்டத்தில் ஒரு ஆத்திரம் வெளிப்பட்டது. ஒரு விதப் பிடிவாதத்துடன் விடாமல் ஆடிக்கொண்டேயிருந்தான். அதுவும் ஒரு இடத்தில் திலினியின் தோள்கள் இரண்டையும் பற்றிக்கொண்டு அவன் ஆட, “பாத்தியா கூத்த? நான் சொல்ல அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்லை எண்டு சொன்னாய்? இப்ப என்ன சொல்லுறாய்?” என்று திலினியையும் அவனையும் காட்டிக் கேட்டாள் மாதங்கி.

யாமினிக்கு ஆத்திரமும் அழுகையும் அடக்க முடியாமல் பொங்கின. அது சாதாரணத் தொடுகைதான். தன் முன்னே நிற்பது திலினி என்று கூட அவன் கவனித்திருக்க மாட்டான். இன்னும் சொல்லப்போனால் இது அவள் மீதான கோபத்தின் வெளிப்பாடு. ஆனாலும் வலித்தது.

அஜந்தா வேறு அழைத்து, “என்னடி நடக்குது?” என்று கேட்டாள்.

என்ன சொல்லுவாள்? கலங்கிய விழிகளைக் கட்டுப்படுத்த முயன்றவாறே, “நான் இஞ்ச இருக்கிற வரைக்கும் இது முடியாது அஜூ. நாங்க வெளிக்கிடவாடி? குறை நினைக்காத ப்ளீஸ்.” என்றாள் கெஞ்சலாக.

“என்னடி பிரச்சினை?”

“ப்ளீஸ்டி. இப்ப ஒண்டும் கேக்காத. நீ கொழும்புக்கு வா. எல்லாம் கதைப்பம்.” என்றவள் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு தன் குடும்பத்தினரோடு புறப்பட்டுவிட்டாள்.

இரண்டு நாள்கள் வீட்டினரோடு இருந்துவிட்டுக் கொழும்பு புறப்பட்டு வந்திருந்தாள் யாமினி. ஆனால், அஜந்தாவின் திருமணத்திற்கு மறுநாள் நிரோஜனிடமிருந்து குறுந்தகவல் ஒன்று வந்திருந்தது.

“என்ன நடந்திருந்தாலும் உனக்கு நான் கை நீட்டியிருக்கக் கூடாது யாமினி. சொறி அதுக்கு. ஆனா, நீ அப்பிடிக் கதச்சிருக்கக் கூடாது. எனக்கு என்ர நிலைப்பாட்டில மாற்றம் இல்ல. உனக்கும் உன்ர நிலைப்பாட்டில மாற்றம் இல்லை எண்டேக்க, அதப் பற்றி எப்ப கதச்சாலும் அதுவும் இன்னொரு சண்டைலதான் வந்து நிக்கும். அதுதான் அதக் கதைக்காமயே தவிர்த்தனான். அதுக்கும் அண்டைக்கு உன்ர அறைல வச்சு நடந்ததுக்கும் சம்மந்தமே இல்ல. அது ஆத்மார்த்தமா நடந்த ஒண்டு. அதை நீ தரக்குறைவா கதைச்சிருக்கக் கூடாது. அதுவும் என்னவோ நான் பிளான் பண்ணிச் செய்த மாதிரிச் சொன்னியே ஒரு வார்த்தை, இண்டைக்கு அப்பிடி நடந்ததுக்காக வெக்கப்படுறன். ஏன்டா அந்த வேலை பாத்தாய் எண்டு என்னை நானே கேக்கிற அளவுக்குக் கொண்டுவந்திட்டாய். ஆனாலும் கை நீட்டினது பிழைதான். அத நான் எத வச்சும் நியாயப்படுத்த விரும்பேல்ல. அதுக்கு சொறி!” என்று வாயால் பேசி அனுப்பியிருந்தான்.

இத்தனை நாள் இடைவெளிக்குள் அவளுக்கும் தன் தவறு புரிந்துதான் இருந்தது. அதைப் பற்றி அவள் பேசியே இருக்கக் கூடாது. அன்றைய நிலையில் பெரும் ஆறுதலையும் மன அமைதியையும் தெம்பையும் அவளுக்குத் தந்த முத்தம் அது. அப்படியிருக்க அவள் அதை அப்படிப் பேசியது பெரும் தவறுதான்.

ஆனால், அவன் குரலில், வார்த்தைகளில், பேசிய தொனியில் தன்னை உயிராக நேசிக்கும் ஒருத்தியை அறைந்துவிட்டோமே என்கிற பரிதவிப்போ, அவளைச் சமாதானம் செய்துவிடத் துடிக்கிற தவிப்போ இல்லை. அந்நியத்தனம்தான் அப்பட்டமாகத் தெரிந்தது.

அதற்கு அவள் பதில் போடப் போகவில்லை. முதலில் இதற்கு என்ன பதில் அனுப்புவது என்று அவளுக்குத் தெரியவில்லை.
அதன் பிறகு அவனிடமிருந்தும் எந்தவிதமான குறுந்தகவலும் இல்லை.

error: Alert: Content selection is disabled!!