அத்தியாயம் 23
தன் இருப்பிடத்தில் வந்து அமர்ந்துகொண்ட யாமினிக்குக் கொஞ்ச நேரத்திற்கு எதையும் சிந்திக்கக் கூட முடியவில்லை.
பின்னாலேயே வந்து அவள் தோளை ஆதரவாகத் தொட்ட அஜந்தாவிடம், “நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கோணுமடி.” என்றாள் அவளை பாராமல்.
“சண்டை எண்டு வந்திட்டா ப்லொக் பண்ணுறது, ஆன்சர் பண்ணாம இருக்கிறது, பாஸ்வேர்ட் மாத்திறது எல்லாம் நடக்கிறதுதான். பெருசா எடுக்காத சரியா?” என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு விலகிச் சென்றாள் அஜந்தா.
யாமினிக்கு அதை அப்படி எடுக்க முடியவில்லை. அப்படித்தான் என்றால் முதல் வேலையாக அவளைக் கைப்பேசியில் தடை செய்திருப்பான். இது அதுவன்று. அவளைத் தள்ளி நிறுத்த முயல்கிறான் அவளின் நிரோ. அது மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்தது. எது வரை? இது எதன் அறிகுறி? இதன் மூலம் என்ன சொல்ல வருகிறான்? மேலே எதையும் சிந்திக்க முடியாமல் அவள் உள்ளம் நடுங்கியது.
வேறு ஏதும் காரணத்திற்காக மாற்றியிருந்து, அவர்களைச் சுற்றி ஆள்கள் இருந்ததனால் சொல்லாமல் விட்டிருந்தால் கூட, இவ்வளவு நேரத்திற்குள் அழைத்து, இதுதான் நடந்தது, இதனால்தான் மாற்றினேன், இதுதான் புதுக் கடவு இலக்கம் என்று சொல்லியிருப்பான்.
அவள் வந்து இத்தனை நேரமாகியும் அவனிடமிருந்து சிறு குறுந்தகவல் கூட இல்லை. மனத்தை பெரும் பயம் கவ்விப் பிடிக்கக் கைகால்கள் எல்லாம் நடுங்கின.
உடனேயே கைப்பேசியை எடுத்து அவனுக்கு அழைத்தாள். அவன் ஏற்கவில்லை. “மீட்டிங்ல இருக்கிறன்.” என்று குறுந்தகவல் அனுப்பிவிட்டான்.
உள்ளூர ஒரு வலி பரவ, “எனக்கு உங்களோட கதைக்கோணும் நிரோ. நீங்க எப்ப ஃபிரீ?” என்று கேட்டு அனுப்பினாள்.
சில கணங்கள் அமைதியில் கழிய, “பின்னேரம் அஞ்சு மணிக்குப் பிறகு?” என்று கேட்டு அனுப்பினான் அவன்.
“ஓகே!”
அப்போதானால் அவளும் அறைக்குத் திரும்பிவிடுவாள். இதுவரையில் நடந்ததுபோல் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடாமல், கதைப்பதை நிதானமாகவும் தெளிவாகவும் கதைக்கலாம் என்று எண்ணிக்கொண்டு வேலையில் கவனம் செலுத்தினாள்.
இங்கே நிரோஜனுக்கு எந்த மீட்டிங்கும் இல்லை. அவளோடு கதைப்பதைத் தள்ளிப்போடும் நோக்கில்தான் அப்படிச் சொன்னான்.
அன்று திவாகர் அஜந்தாவிற்கு நடந்த பார்ட்டியில் வைத்து அவனின் வங்கிக் கணக்கை அவள் ஆராயப்போய்த்தான் அத்தனையும் நடந்தன. அந்தக் கோபத்தில் அடுத்த நாளே கைப்பேசியின் கடவு இலக்கத்தை மாற்றியிருந்தான்.
இருவரிடமும் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது, அதனால் அவர்களுக்குள் ஒரு பிரச்சனை வரக்கூடாது என்றுதான் இருவருமே எல்லாவற்றையும் பரிமாறிக்கொண்டார்கள். இது நாள் வரையில் அவன் அவளுடையதை வாங்கிப் பார்த்ததும் இல்லை, எந்தக் கணக்கு வழக்கையும் கேட்டதும் இல்லை.
கடைசியில் அப்படி ஒளிவு மறைவில்லாமல் இருப்பதாலேயே பிரச்சனை வருகிறது என்றால் அது வேண்டாம் என்று நினைத்தான்.
ஆனால் என்ன, அவள் பணம் செலுத்த முடியாமல் அத்தனை பேருக்கு முன்னால் தடுமாறி நிற்கையில் தன்னை மீறி, பழக்கதோசத்தில் கைப்பேசியை நீட்டிவிட்டான்.
அதுதான் அவன் செய்த தவறு. அறை வாங்கிய குழந்தையாக அவள் தன்னை வெறித்த காட்சி இப்போதும் மனத்தை என்னவோ செய்தது.
நிச்சயம் அதைப் பற்றிப் பேசத்தான் அழைக்கிறாள். இது அடுத்த சண்டைக்கு அடிகோலப்போகிறது. அதுதான் அந்தச் சண்டையைத் தள்ளிப்போட்டான். கூடவே அவன் முத்தமிட்டதைத் தரமற்ற செய்கையாக அவள் சொன்ன பிறகு அவளோடு பேசப் பிடிக்காமல் போயிற்று. என்னவோ தான் அவளிடம் தப்பாக நடந்துவிட்டது போன்ற உணர்வை அவனுக்குத் தந்துகொண்டேயிருந்தது.
ஒரு காலத்தில் அவளோடு பேசுவதற்குத் தவம் கிடந்திருக்கிறான். சில நொடிகள் பேசினாலும் நாள் முழுக்க அதையே நினைத்து மகிழ்ந்திருக்கிறான். ஆனால் இன்று அத்தனையும் கசந்தன. இப்படி அவளிடமிருந்து விலகி ஓடுகிறோம் என்பதும், அவளைத் தள்ளி நிறுத்துகிறோம் என்பதுமே வலித்தன.
சரியாக ஐந்து மணிக்கு யாமினி அழைத்தாள்.
“ஹலோ!” என்றான் அவன் அழைப்பை ஏற்று.
“எப்பிடி இருக்கிறீங்க நிரோ?” என்றாள் கமறிய குரலில்.
“இருக்கிறன்.”
“ஆனா நான் நல்லாவே இல்ல நிரோ. பயமா இருக்கு. பதட்டமா இருக்கு. என்னவோ நடக்கக் கூடாதது எல்லாம் நடக்கப்போற மாதிரி இருக்கு.” என்றவளுக்கு வார்த்தைகளை முந்திக்கொண்டு கண்ணீர்தான் முணுக்கென்று வந்தது.
“உனக்கு என்ன விசரா? அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல.” அவளின் பயங்கள் அவனையும் பதற வைக்காமல் இல்லை. அதற்கென்று பழைய பற்றுதலோடு பேச வரமாட்டேன் என்றது. அவனாலேயே உடைக்க முடியாத ஒரு இடைவெளி அவர்களுக்குள் உண்டாகிவிட்டாற்போல் தோன்றிற்று.
“பிறகு ஏன் என்னோட கதைக்காமயே இருக்கிறீங்க? இண்டைக்கு அவ்வளவு பக்கத்தில பாத்தும் வந்து கதைக்கேல்லையே நீங்க.”
“நீயும்தான் வந்து கதைக்கேல்ல.”
“நான் வந்து கதைச்சிருந்தா நீங்க கதைச்சிருப்பீங்களா?”
“கதைச்சுத்தான் இருப்பன்.” என்றான் அவன்.
அவளுக்கு வலித்தது. ஒட்டாமலேயே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறானே.
“ஏன் நிரோ ஒட்டாமயே கதைக்கிறீங்க. என்ர நிரோ என்னட்ட எப்பிடிக் கதைப்பார் எண்டு எனக்குத் தெரியாதா? இது ஆரோ ஆரோடயோ கதைக்கிற மாதிரி இருக்கு நிரோ. என்னவோ என்னை விட்டு நீங்க தள்ளி தள்ளிப் போற மாதிரியே இருக்கு.”
உடைந்து கரகரத்த குரலில் அவள் சொன்னபோது அவனால் பதில் சொல்ல இயலாமல் போயிற்று.
“நிரோ?”
“நான் தள்ளிப்போகேல்ல யாமினி. நீ தள்ளிப்போக வச்சிட்டாய். நெருக்கமாவோ உரிமையாவோ நான் கதைக்க, நீ அதை சீப்பா நடக்கிறன் எண்டு சொல்லிட்டா?” என்றவனின் கேள்வியில் விக்கித்து நின்றுவிட்டாள் யாமினி.
அவசரப்பட்டுப் பேசியதன் விளைவு இன்று அவர்களின் உறவையே ஆபத்தான நிலையில் கொண்டுபோய்விட்டிருந்தது.
“சொறி நிரோ. நான் அண்டைக்குக் கதைச்சது பிழைதான். அப்பிடிச் சொல்லியே இருக்கக் கூடாது. எனக்கே அது விளங்கிட்டுது. சொறி நிரோ.” என்றாள் கண்ணீருடன்.
என்னவோ அந்த மன்னிப்பு அவன் உள்ளத்தைச் தொட மறுத்தது. “இந்த சொறிய கேட்டு கேட்டு அலுப்பா இருக்கு யாமினி. நீ சொல்லுற இந்த சொறிக்கு எந்த அர்த்தமும் இல்லை. உணாந்து கேட்டா அடுத்த முறை அந்தப் பிழை நடக்கக் கூடாது. இது, கதைக்கிற எல்லாத்தையும் கதச்சுப்போட்டு ஒரு மன்னிப்பில அதையெல்லாம் முடிக்கிற மாதிரி இருக்கு.”
“அப்ப அப்பிடித்தான் என்னை அறஞ்சிட்டு நீங்க கேட்ட மன்னிப்புமா?”
அவ்வளவு நேரமாக நிதானமாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தவனின் பொறுமை அந்தக் கேள்வியில் பறந்துபோயிற்று.
“இதுதான் நீ. நான் ஒண்டு சொன்னா அதுக்கு இன்னொண்டு தூக்கிக்கொண்டு வருவாய். இதாலதான் எனக்கு இப்ப எல்லாம் உன்னோட கதைக்க விருப்பம் வாறதே இல்ல.” என்றதும் உடைந்துபோனாள் அவள்.
“இப்பிடி எல்லாம் சொல்லாதீங்க நிரோ.”
“நான் உண்மையைத்தான் சொல்லுறன் யாமினி. அப்போத எனக்கு எந்த மீட்டிங்கும் இருக்கேல்ல. அடுத்த சண்டைக்குத்தான் நீ கோல் பண்ணுறாய் எண்டு தெரிஞ்சது. அதுதான் மீட்டிங் இருக்கு எண்டு சொன்னனான்.”
“நான் என்ன கதைக்க வந்தாலும் கோவப்பட்டுச் சண்டையா மாத்திறது நீங்க. ஆனா இப்ப என்னைப் பிழை சொல்லுறீங்க.”
“அதானே பாத்தன். என்னடா எடுத்து இவ்வளவு நேரமாச்சே, இன்னும் நீ என்னில பழியப் போடேல்லையே எண்டு நினச்சு முடிக்க முதலே சொல்லிட்டாய். இன்னும் என்ன பிழை எல்லாம் என்னில சொல்லோணுமோ சொல்லு!” என்று கோபப்பட்டான் அவன்.
“நிரோ!”
“சொல்லு யாமினி!”
“பிழை சொல்ல நினைக்கேல்ல நிரோ. தெரிஞ்சுகொள்ளத்தான் கேக்கிறன், ஏன் ஃபோன் பாஸ்வேர்ட் மாத்தினனீங்க?” என்று அமைதியாகவே கேட்டாள்.
“எனக்கு என்ர பிரைவசி வேணும்.” பட்டென்று சொன்னான் அவன்.
அவளுக்குப் பதில் பேச முடியாமல் தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கிக்கொண்டன.
“சரி, அத விடுங்க. திலினி உங்கட வீட்டில வந்து தங்கினத நீங்க எனக்குச் சொல்லேல்லத்தானே? அண்டைக்கு உங்களிட்டச் சொல்லாம நரேனை நான் சந்திக்கப் போனதுக்குக் கோவப்பட்டீங்க.”
“எரிச்சலைக் கிளப்பாத யாமினி. நான் ஒண்டும் அவளோட தனியா தங்கேல்ல. அம்மா, அப்பா, தங்கச்சி எண்டு இருக்கிற என்ர வீட்டுக்குத்தான் கூட்டிக்கொண்டு போனனான். இன்னும் சொல்லப்போனா அம்மாதான் கூட்டிக்கொண்டு வரச் சொன்னவா. இதெல்லாம் உனக்கு விளங்காது. எதைப் பிடிச்சுக்கொண்டு சண்டை பிடிக்கலாம் எண்டு நிக்கிற ஆள் நீ.” என்றவனுக்கு இதற்கு மேல் இந்தப் பேச்சை வளர்க்கப் பிடிக்காமல் போயிற்று.

