நீ வந்து தங்கிய நெஞ்சில் 23.2

என்னவோ ஆசிரியை மாணவனை நிற்க வைத்துக் கேள்விகளாகக் கேட்பது போன்று, அவள் கேள்வி கேட்க அதற்கு அவன் விளக்கம் சொல்வதை அறவே வெறுத்தான்.

அதில், “வேற ஏதும் கேக்கோணுமா உனக்கு?” என்றான் இறுக்கமாக.

இப்படிக் கேட்கிறவனிடம் என்ன சொல்வாள்? “இல்லை” என்றாள் அடைத்த குரலில்.

“ஓகே. நான் வைக்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன்.

அப்படியே அமர்ந்துவிட்டாள் யாமினி. என்ன நடந்துகொண்டிருக்கிறது அவர்களுக்குள்? ஒன்றுமே புரியமாட்டேன் என்றது. ஆனால் ஒன்று, அன்று அவள் அவர்கள் முத்தமிட்டுக் கொண்டதைப் பற்றிப் பேசிய பேச்சுப் பெரும் தவறு என்று மட்டும் நன்றாகப் புரிந்தது.

அங்கே நிரோஜனுமே கொதிப்புற்ற மனநிலையில்தான் இருந்தான்.

அஜந்தாவின் திருமணத்திற்கு நேராக வவுனியா வந்துவிடுவதாகத்தான் திலினி முதலில் சொல்லியிருந்தாள்.

ஒருமுறை அலுவலக கேண்டீனில் அமர்ந்திருந்து, காணொளி அழைப்பில் அன்னையோடு பேசிக்கொண்டிருந்தான். அப்படியான பொழுதுகளில் அவன் நண்பர்களோடும் மல்லிகா இரண்டு வார்த்தை பேசுவார். அவருக்கு அவர்கள் எல்லருமே பிள்ளைகள் போல்தான். அப்படித்தான் திலினியோடும் கதைத்தார்.

அப்போது, “தமிழ் ஆக்கள் இருக்கிற ஊர் பக்கம் நான் வந்ததே இல்ல அன்ட்ரி. அதுதான் ஆவலா வெய்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறன். கோணேஸ்வரர் கோயில் பாக்கோணும் எண்டு எனக்கு ஆசை.” என்று திலினி சொன்னதைக் கேட்டுவிட்டு,

“அப்ப ரெண்டு நாள் முதலே வெளிக்கிட்டு இஞ்ச வாங்கோம்மா. திருகோணமலையைச் சுத்திப் பாத்துக்கொண்டு, கோணேஸ்வரர் கோயிலுக்கும் போயிற்று அப்பிடியே கலியாணத்துக்குப் போகலாம்.” என்று அழைத்தது அவர்தான்.

அதைப் பற்றிக்கொண்டு அவள் புறப்பட்டுவிட்டபோது நிரோஜனால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று. திருமணத்திற்கு என்று அவள் கொண்டுவந்த சேலை, சிங்களப் பெண்கள் அணியும் வகையிலான, தமிழர் திருமணம் ஒன்றுக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கவும், பெண் பிள்ளையை வைத்திருக்கும் மல்லிகாவுக்கு மனம் கேட்கவில்லை. காவ்யாவின் புதுப் புடவை ஒன்றைக் கட்டிவிட்டிருந்தார்.

இதையெல்லாம் அறிகிறபோது யாமினி தன்னைச் சரியாகப் புரிந்துகொள்வாளா என்கிற கலக்கம் அவனுள் இல்லாமல் இல்லை. எப்போதுமே பிரச்சனைகளை, சண்டை சச்சரவுகளை விரும்பாதவன், அதுவும் அப்போதுதான் ஒரு பெரும் சண்டை நடந்துமுடிந்து, சமாதானமாகிவிட்டார்களா இல்லையா என்று தெரியாத நிலையில் இருக்கையில் இதை உடனடியாகச் சொல்லி, இன்னொரு பிரச்சனை வேண்டாம் என்று தள்ளிப்போட்டிருந்தான்.

ஆனால், அவன் தள்ளிப்போட்டதே ஒரு பிரச்சனையாக வந்து நிற்கிறது.

இப்படி எரிச்சல்பட்டு, ஆத்திரப்பட்டு, சீறிச் சினப்பது அவன் குணமில்லை. என்னவோ தன் சுயத்தைத் தான் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருப்பதாகப் பட்டது.

நிம்மதி இல்லை, சந்தோசம் இல்லை, பழைய மாதிரி யாரோடும் மனத்திலிருந்து பேசிச் சிரிக்க முடிவதில்லை. ஒருவித எரிச்சலும் சினமும் அவனோடு கூடவே சுற்றிக்கொண்டிருந்தன.

*****

இரண்டு நாள்கள் கடந்திருந்தன. அவன் பக்கமிருந்து எந்தச் சத்தமும் இல்லை. யாமினி தன் மொத்த நிம்மதியையும் இழந்திருந்தாள். கைப்பேசியைப் பார்த்துப் பார்த்தே ஓய்ந்தாள்.

ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அவனுக்கு அழைத்தாள். அவன் எடுக்கவில்லை. குறுந்தகவல் அனுப்பினாள். பதில் இல்லை.

நாளாக நாளாக அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. பயமும் பதற்றமும் அவளைப் போட்டு ஆட்டின. இரவினில் உறங்க முடியவில்லை. கண்டபாட்டுக்குச் சிந்தனைகள் சிதறி ஓட விழித்தே கிடந்தாள். பகல்கள் அழுது வடிந்தன.

திவாகர் வீட்டில் ஏதோ விசேசம் என்று அஜந்தா வேறு ‘வேர்க் ஃப்ரம் ஹோம்’ வாங்கிக்கொண்டு போயிருந்தாள். ஆறுதலுக்குக் கூட யாருமில்லாமல், எப்படியாவது நிரோஜனோடு பேசிவிட மாட்டோமா என்று அல்லும் பகலும் துடித்தாள்.

இப்படி இருக்கையில்தான் அஜந்தா சில புகைப்படங்களை அனுப்பியிருந்தாள். எங்கோ அருவிக்கரை ஒன்றுக்கு நிரோஜன் குழு போயிருந்தார்கள். அதைத் திலினி முகப்புத்தகத்தில் குறிப்பிட்ட நட்பு வட்டம் மாத்திரம் பார்ப்பதுபோல் பகிர்ந்திருந்தாள்.

அதை அவர்களின் அலுவலகத்திலேயே பணிபுரியும், அஜந்தாவோடு நல்லமாதிரிப் பழகும் ஒருத்தி எடுத்து அஜந்தாவிற்கு அனுப்பியிருந்தாள்.

அத்தனையிலும் நிரோஜனின் மகிழ்ச்சிக்கு குறைவேயில்லை. இங்கே அவள் அவனை எண்ணிக் கண்ணீர் உகுத்துக்கொண்டிருக்க, அங்கே அவன் எப்போதும்போல் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறான்.

அதைவிட வலித்தது, அத்தனையிலும் அவன் அருகில் திலினி இருந்தாள். சுற்றவர வேறு ஆட்களும் இருந்தாலும் அவள் அவளும் இருந்தாள். அவர்கள் நண்பர்கள்தான் என்று அறிவுக்குப் புரிந்தாலும் இப்படி அவனை இன்னொரு பெண்ணோடு பார்க்க முடியவில்லை.

இதற்கு மேலும் பேசாமல் இருக்க முடியாமல் அவனைத் தேடிக்கொண்டு அலுவலகத்துக்கே போனாள்.

நிரோஜன் இதை எதிர்பார்க்கவில்லை. அவளை அதிர்ந்து பார்த்தான். “உன்னை ஆர் இஞ்ச வரச் சொன்னது?” வேகமாய் எழுந்து வந்து சத்தமில்லாமல் சீறினான்.

இந்தளவு கடுமை காட்டத்தான் வேண்டுமா என்று பார்த்தாள் அவள். கண்கள் கசிந்தன. “நீங்க ஏன் நிரோ ஃபோன் பண்ணினா எடுக்கிறீங்க இல்ல, மெசேஜஸ்க்கு ஆன்சர் பண்ணுறீங்க இல்ல? என்னை வெறுத்திட்டீங்களா?” என்றாள் தழுதழுத்த குரலில்.

“யாமினி, தயவுசெய்து எல்லாருக்கும் முன்னாலயும் அழுது என்னைக் கேவலப்படுத்தாத.” என்று பல்லைக் கடித்தான் அவன்.

கேவலப்படுத்துகிறாளா? அவள் தவிப்பு, துடிப்பு எதுவும் அவனுக்குப் புரியவில்லையா என்ன?

“எனக்கு உங்களோட கதைக்கோணும் நிரோ.”

“என்ன கதைக்கப்போறாய்?” என்று கேட்டுச் சீறப்போனவன் தம்மைச் சுற்றிப் பார்த்தான். பேசுவது கேட்காத தூரம்தான் என்றாலும் உடல்மொழியும் அவள் கண்ணீரும் கண்ட கற்பனைக்கும் வழிவகுக்கும். “வா கீழ!” என்று அழைத்துக்கொண்டு போனான்.

“என்ன கதைக்கோணும்?” தரைத் தளத்தில் ஒரு பக்கமாய் வந்து நின்றுகொண்டு கேட்டான்.

பார்வையில் சின்ன இளக்கம் கூடக் காட்டாமல் கேட்பவனிடம் என்ன சொல்வாள்? கண்ணீருடன் அவனையே பார்த்து நின்றாள்.

“என்ன கதைக்கோணும் எண்டு கேட்டனான் உன்னை?”

“ஏன் என்னை அவொய்ட் பண்ணுறீங்க நிரோ? என்னைப் பிடிக்கேல்லையா? வெறுத்திட்டீங்களா?” அதைக் கேட்கும்போதே குரல் நடுங்கியது. கன்னத்தில் கண்ணீர் உருண்டு ஓடிற்று.

அந்தக் கண்ணீர் அவனையும் சுட்டது. தன்னை மீறி அவளை ஆற்றுப்படுத்தத் துடித்தான். ஆனால், அவன் நெருங்க அவள் அதற்கு எதையாவது சொல்லிவிட்டால்? “வேலை.” என்றான் பார்வையைத் திருப்பிக்கொண்டு.

“எப்பவும் இதே வேலைதான் இருந்திருக்கு நிரோ.”

“அப்ப என்ன நான் பொய் சொல்லுறன் எண்டு சொல்லுறியா?”

“கோபப்படாதீங்க நிரோ ப்ளீஸ்!” என்றாள் கண்ணீருடன்.

முகம் திருப்பித் தலையைக் கோதித் தன்னை நிதானப்படுத்தினான் அவன்.

அந்தக் கேசத்தோடு எத்தனை நாள்கள் விளையாடியிருப்பாள்? விளையாட்டுக்கு வலிக்குமளவுக்கு அவள் பிடித்து இழுத்தாலும் தந்துவிட்டுப் பேசாமல் இருக்கிறவன் இன்று யாரோவாகத் தள்ளி நிற்கிறான்.

அவளிடம் சத்தமே இல்லை என்றதும் திரும்பி அவளைப் பார்த்தான். கண்ணீரில் மிதந்த மீன் விழிகளும், அவள் பார்வை தன் கேசத்தில் படிந்திருப்பதையும் கண்டவன் தடுமாறிப்போனான். மீண்டும் கேசம் கோத எழுந்த கையை அடக்கிக்கொண்டு, “எனக்கு வேலை இருக்கு யாமினி.” என்றான்.

தன் கைப்பேசியில் இருந்த புகைப்படங்களைக் காட்டி, “என்ன இது?” என்று கேட்டாள்.

அவன் முகம் கடினமுற்றது. அவனை வேவு பார்க்கிறாளா என்ன? “போன சனி குளிக்கப் போனனாங்க. அதில உனக்கு என்ன பிரச்சினை?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

“ஏன் எனக்குச் சொல்லேல்ல.”

“அங்கேயும் வந்திருந்து என்னைக் கேவலப்படுத்தவா?” என்றான் அவன் சுள்ளென்று.

விக்கித்துப்போய் அவனைப் பார்த்தவள், “உண்மையாவே அது காரணமா, இல்லை, திலினியப் பிடிக்க ஆரம்பிச்சிட்டுதா உங்களுக்கு?” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, “சீ நிப்பாட்டு!” என்று சீறியிருந்தான் அவன்.

“இதுதான் நீ. இந்தளவுதான் நீ. இப்பிடிக் கேக்க நாக்குக் கூசேல்லையா உனக்கு? உன்னைப்போய்…” என்று நெற்றியில் அறைந்துகொண்டான் அவன்.

“என்ன என்னைப்போய்? என்ன நிரோ, சொல்லுங்க?” அந்த வார்த்தை, அதைச் சொல்லும்போது முகத்தில் அவன் காட்டிய வெறுப்பு, அந்தச் செய்கை அவளையும் அதிகமாய்ச் சுட்டுவிட்டதில் ஆத்திரப்பட்டாள்.

அவன் பதில் சொல்லாமல் முகம் திருப்பி நின்றான்.

“என்ன சொல்ல வந்தனீங்க நிரோ. எனக்கு இப்ப தெரியோணும். சொல்லுங்க.” அவள் குரல் உயரவும், “தயவு செய்து இஞ்சையும் என்ர மானத்த வாங்காம போ யாமினி!” என்றான் அவன் பல்லைக் கடித்துக்கொண்டு.

“என்ன சொல்ல வந்தனீங்க. அதச் சொல்லுங்க முதல். நான் போற…” என்றவள் கண்ணில் திலினி பட்டாள். “ஏய் இஞ்ச வாடி!” என்று சத்தமாக அழைத்தாள்.

யாரை அழைக்கிறாள் என்று திரும்பிப் பார்த்த நிரோஜன் ஒரு கணம் அதிர்ந்துவிட்டான். திலினி வேறு அவர்களிடம் வருவதா, என்ன செய்வது என்று நிரோஜனையும் யாமினியையும் மாறி மாறிப் பார்த்து நின்றாள். “நீ போ!” என்று அவளிடம் சொல்லிவிட்டு, “மரியாதையா இஞ்ச இருந்து போ!” என்று பல்லைக் கடித்தான்.

அவள் அதைக் கேட்பதாக இல்லை. “நானும் இவரும் விரும்பிறது உனக்குத் தெரியுமெல்லா? பிறகும் இவரோட போய் நிண்டு குளிச்சுக் கூத்தடிக்க வெக்கமா இல்லையா உனக்கு?” என்றவளை நம்பமாட்டாமல் வெறித்தான் நிரோஜன்.

யாமினி இந்தளவில் தரமிழந்து பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட பத்துப் பேருக்குக் கிட்ட குளிக்கப் போயிருந்தார்கள். அதில் அவனையும் அவளையும் வைத்து இணைத்துப் பேசுகிறாள் என்றால்?

அவளை இழுத்துக்கொண்டு வந்து வெளியே விட்டு, “என்னை மிருகமாக்காம போயிடு இஞ்ச இருந்து!” என்று வார்த்தைகளைப் பற்களுக்குள் இருந்து கடித்துத் துப்பினான்.

திகைத்து நின்றாள் யாமினி.

error: Alert: Content selection is disabled!!