அத்தியாயம் 24
யாமினி இத்தனை அநாகரிகமாக நடந்துகொள்வாள் என்று நிரோஜன் எதிர்பார்க்கவேயில்லை. திலினியை பிடிக்க ஆரம்பித்துவிட்டதா என்றால் என்ன அர்த்தம்? அன்று அவன் நடத்தையைக் கேவலப்படுத்தினாள். இன்று அவனையே கேவலப்படுத்திவிட்டாள். வர வர ஏன் இப்படி மோசமாக நடக்கிறாள் என்று புரியவும் மாட்டேன் என்றது.
“நிரு!” திலினி அவன் பின்னால் வந்து நின்று அழைத்தாள். நிரோஜன் ஒருமுறை கண்களை மூடித் திறந்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டு அவள் புறம் திரும்பினான்.
“ஏதும் பிரச்சினையா?”
“இல்ல… அது சொறி. அவள் ஏதோ கோபத்தில…” என்று தடுமாறினான்.
“பரவாயில்ல. ஆனா ஏன்?” அவளுக்கும் யாமினியின் கோபத்திற்கான காரணம் புரியவில்லை.
சொல்லத்தான் வேண்டுமா என்று ஒரு கணம் யோசித்தான். பின் சொல்லாமல் விடுவதும் கண்ட கண்ட கற்பனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் சொன்னான். கூடவே அந்தப் புகைப்படங்களை அவளிடம் வாங்கிப் பார்த்தான்.
தவறாக எதுவும் இல்லைதான். அப்படித் தவறாக இருப்பதற்கு அவன் முதல் தவறாக நடந்திருக்க வேண்டுமே. ஆனால், அத்தனையிலும் அவனும் அவளும் இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் அவன் இல்லாத ஒரு புகைப்படம் கூட அதில் இல்லை.
எப்போதும் ஒரு மாதிரியாகவே அவன் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு நண்பர்கள்தான் அந்தப் பிகினிக்குக்கு அழைத்துப்போனார்கள்.
இருந்த மனநிலைக்கு ஒரு புகைப்படம் கூட அவன் எடுக்கவில்லை. அவளானால் இந்த வேலை பார்த்து வைத்திருக்கிறாள்.
“என்ன திலினி இது?” என்றான் மெல்லிய கோபத்துடன்.
“நிரு, உண்மையா நான் வேணுமெண்டு எதையும் செய்யேல்ல.” பதறிச் சொன்னாள் அவள்.
மெய்யாகவே அவள் அதை வேண்டுமென்று செய்யவில்லை. நன்றாக இருக்கிறது என்று மனத்திற்குப் பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தாள். என்ன, அவனோடு நின்ற புகைப்படங்கள்தான் அவளுக்குப் பிடித்திருந்தன.
நிரோஜனுக்கும் புரிந்தது. இவன் அந்தப் பிகினிக்கைப் பற்றி யாமினியிடம் சொல்லவில்லை. இதில் ஏற்கனவே அவன் வீட்டுக்கு அவளை அழைத்துப்போனதையும் சொல்லவில்லை. அப்படியிருக்க புகைப்படங்களைப் பார்த்தவள் மனநிலை எப்படி இருக்கும் என்று விளங்கிக்கொள்ள முடிந்ததுதான். அதற்கென்று இப்படியா நடப்பாள்?
இத்தனை வருடங்களாகக் காதலிக்கிறார்கள். பல்கலை தொடங்கி இன்றுவரை ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்துதான் பழகுகிறார்கள். அப்படியிருக்க ஒரு சில புகைப்படங்கள் போதுமா அவளுக்கு அவனைச் சந்தேகப்படவும், அலுவலகம் வரை தேடி வந்து இப்படிக் கத்திக் கூச்சல் போடவும்?
திலினி அவனைப் பற்றி என்ன நினைப்பாள், அவள் மூலம் நாலு பேருக்கு அலுவலகத்தில் செய்தி போகையில் அவர்கள் என்ன நினைப்பார்கள்?
*****
யாமினி முற்றிலுமாக இடிந்துபோயிருந்தாள். எதையும் பிரித்தறிந்து ஆராயும் தெளிவோ, திடமோ அவளை விட்டு அகன்றிருந்தன. நிதானமாக, பொறுமையாகக் கதைக்க வேண்டும் என்று போய்விட்டு, திலினியைக் கண்டு கோபப்பட்டுக் கத்திய தன் மடத்தனத்தை எண்ணியெண்ணி நொந்தாள். மறுபடியும் அவன் கோபத்திற்கு ஆளாகிவிட்டோம் என்று மட்டும் புரிந்தது.
வீட்டுக்கு வந்த அடுத்த நிமிடமே, “நிரோ, சொறி நிரோ! திலினிட்ட நான் அப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது. அதுக்காக என்னை வெறுத்திடாதீங்க ப்ளீஸ்!” என்று குறுந்தகவல் அனுப்பினாள்.
அவனிடமிருந்து பதிலே இல்லை. அப்படி மௌனமாய்க் கழியும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் அவள் நெஞ்சை அறுத்தன. அவன் கோபப்பட்டால் கூடப் பரவாயில்லை என்று தோன்றிற்று. இப்படி மௌனமாக இருந்து, அவளை மொத்தமாகத் தள்ளி வைக்கும் அவன் செய்கையைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
“நிரோ ப்ளீஸ், இப்பிடி என்னைத் தவிர்க்காதீங்க. ஆன்சர் பண்ணுங்க. இனி அப்பிடி எல்லாம் நடக்க மாட்டன். வேணுமெண்டா திலினிட்ட கூட மன்னிப்புக் கேக்கிறன்.” என்று திரும்பவும் எழுதி அனுப்பினாள்.
அப்போது மட்டுமல்ல இரவிரவாக என்னென்னவோ எழுதி அனுப்பினாள். அவர்கள் கொண்ட காதலை, இனிமையாகக் கழித்த பொழுதுகளை, பரிமாறிக்கொண்ட அழகிய நிகழ்வுகளை எல்லாம் அவனுக்கு நினைவூட்ட முயன்றாள்.
எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, நேசம் சொட்டும் குரலில் எப்போதோ அவன் அனுப்பிய செய்திகளைத் திரும்ப அவனுக்கே அனுப்பினாள். “இப்பிடித்தான் நிரோ நீங்களும் நானும் இருந்தனாங்க. இப்ப ஆர் கண் பட்டது எண்டு தெரியேல்லையே. ஏன் என்னை விட்டுத் தள்ளி தள்ளிப் போறீங்க? பிளீஸ் நிரோ என்னோட கதைங்க.” என்று அனுப்பினாள்.
ஆனால், ஒரு காலத்தில் இரண்டு வழிச் சாலையாய் இருந்து, பின் ஒரு வழிப் பாதையாய் மாற்றப்பட்ட வீதியைப் போன்று, அவர்களின் சேட்டில் இப்போது அவளின் குறுந்தகவல்கள் மட்டுமே போய்க்கொண்டிருந்தன.
நிரோஜன் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். அவன் மனத்தையும் பெரும் வேதனை ஒன்று அரிக்காமல் இல்லை. இரவிரவாக விழித்திருந்து அவள் அனுப்புகிறவை அவனையும் துன்புறுத்தின. அதே நேரத்தில் முன்னர் போன்று அவள் கண்ணீரோ, கவலையோ மனத்தைத் தொட மறுத்தது. அவ்வளவில் வெறுப்பா, கோபமா, கசப்பா என்று தெரியாத உணர்வொன்று அவனைப் போட்டு ஆட்டிற்று.
அவன் காட்டும் இந்தத் தொடர் மௌனம் யாமினியைப் பதற வைத்தது. ஆற்றுவாரும் இல்லாமல், தேற்றுவாரும் இல்லாமல் நடு இரவில் கட்டிலில் எழுந்து அமர்ந்துகொண்டு அழுதாள்.
“நிரோ, கோல் மீ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!” என்று அந்த நேரத்திலும் அனுப்பிவிட்டாள்
முதல் முறை போன்று அவனுடைய அலுவலகத்திற்கே சென்று அவனைச் சந்திக்கப் பயந்தாள். வழமையாக அவன் வரும் கேண்டீனில் போய் அமர்ந்துகொண்டு தவம் கிடந்தாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் நவீனுக்கு அழைத்தாள். “அண்ணா, நிரோ என்னோட கதைக்கிறாரே இல்ல. ஒருக்கா எனக்கு கோல் பண்ணச் சொல்லுங்க. ஒரேயொருக்கா ப்ளீஸ்!” என்று அவனிடமும் அழுதாள்.
யார் யாரிடமோ எல்லாம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே அவளுக்கு இல்லை. எப்படியாவது அவனோடு பேச முடிந்துவிட்டால் போதும் என்கிற நிலையில் இருந்தாள்.
நவீனுக்கு மிகவுமே கஸ்டமாகிப்போயிற்று. நடந்தவற்றைத் திலினி சொல்லி, நிரோஜனிடம் கேட்டு அறிந்துகொண்டிருந்தான். அவனுக்கும் இப்படி நிரோஜனைப் போட்டு நெருக்கும் யாமினி குறித்து என்ன முடிவுக்கு வருவது என்று தெரியவில்லை. ஆனாலும், நிரோஜனிடம் வந்து சொன்னான்.

