அவனுக்கு அதிர்ச்சி. “உனக்கு என்னத்துக்கடா எடுத்தவள்?” என்றான் கோபத்துடன்.
“நீ எடுக்காட்டி அவா என்ன செய்வா?”
“அதுக்கு உனக்கு எடுப்பாளா?” என்று ஆத்திரப்பட்டான்.
நவீனுக்கும் அதில் ஒப்புதலே. என்னவென்றாலும் அவர்களுக்குள் வைத்துக்கொள்வதுதானே சரி. அதைச் சொல்லாமல், “இப்ப என்ன, எனக்குத்தானே எடுத்தவா. நீ கொஞ்சம் பொறுமையா கதைச்சுப் பிரச்சினையை முடி.” என்றுவிட்டுப் போனான்.
பேசி பேசிப் பிரச்சனைகளும் வெறுப்பும் மட்டுமே வளர்ந்துகொண்டிருக்கையில் இன்னொருமுறை எதைப் பேசித் தீர்ப்பது? அவனை அவன் பாட்டிற்குக் கொஞ்ச நாள்களுக்கு விடமாட்டாளா என்றிருந்தது.
நவீன் நிரோஜனின் உயிர் நண்பன். அது மட்டுமல்லாது அவன் சொன்னால் நிரோஜன் கேட்பான். அதில் அழைப்பான் என்கிற பெரும் நம்பிக்கையோடு காத்திருந்தாள் யாமினி.
ஆனால், அதன் பிறகும் அவன் அழைக்கவில்லை. மீண்டும் நிரோஜனுக்கு அழைத்தாள். அவன் எடுக்காமல் இருக்கவும் திரும்பவும் நவீனுக்கு அழைத்தாள்.
இப்போது அவள் அழைப்பை ஏற்க நவீனும் தயங்கினான். இதற்குள், “ப்ளீஸ் அண்ணா, நீங்களும் இப்பிடிச் செய்யாதீங்க. ஒரேயொருக்கா அவரை என்னோட கதைக்கச் சொல்லுங்க. ப்ளீஸ்!” என்று குறுந்தகவல் அனுப்பிவிட்டாள்.
“சொல்லிட்டேன்மா. வேலையா இருக்கிறான். எடுக்கிறன் எண்டு சொன்னவன்.” என்று நவீனும் பதில் அனுப்பினான்.
“ஆயிரம், லட்சம் முறை நன்றி அண்ணா!” கும்பிடும் எமோஜிகளையும் சேர்த்து அனுப்பியிருந்தாள்.
அதைப் பார்த்தவனுக்குப் பாவமாயிற்று. “மச்சான், இதைப் பார். பாவமடா. ஒருக்கா எடுத்துக் கதை. என்ன எண்டு கேளு. நீயா ஒண்ட நினைச்சுக்கொண்டு தவிர்க்காத.” என்று அவள் அனுப்பியவற்றைக் காட்டி நிரோஜனிடம் சொன்னான்.
நிரோஜனுக்கு இப்படி விடாமல் துரத்துகிறவளின் பால் சினம்தான் உண்டாயிற்று. உண்மையில் அவனை மூச்சு முட்ட வைத்துக்கொண்டிருந்தாள் யாமினி.
என்னவோ வரவர அவள் மீதிருந்த மதிப்பு மரியாதையுடன் சேர்ந்து பிரியமும் கரைந்துகொண்டு போவது போலொரு தோற்றம்.
அவர்களுக்குள் சண்டை வந்த ஒவ்வொரு முறையும் சில நாள்கள் போனால் எல்லாம் சரியாகிவிடும், அதுவரை அமைதியாக இருப்போம் என்றுதான் நினைப்பான். அதற்கு அவளும் ஒத்துழைக்க வேண்டுமே.
“நீ போ நான் கதைக்கிறன்.” என்றான்.
நவீன் நம்பாமல் அவனையே பார்த்து நிற்க, “நீயும் சேர்ந்து உயிரை வாங்காம போடா!” என்று ஆத்திரப்பட்டான்.
அவன் போன பிறகு அவளோடான பேச்சுக்குத் தயாராகிறவன் போன்று கொஞ்ச நேரம் அப்படியே இருந்துவிட்டு அவளுக்கு அழைத்தான். அழைப்பை ஏற்றவள் அவனைப் பேச விடவேயில்லை.
“நிரோ ப்ளீஸ் நிரோ, இப்பிடி என்னோட கதைக்காம இருக்காதீங்க. அண்டைக்கு நான் கதைச்சது, நடந்துகொண்டது எல்லாம் பிழைதான். அதுக்கு சொறி நிரோ. இது சும்மா சொல்லுற சொறி இல்ல. உண்மையா உணாந்து சொல்லுறன். இனி உங்களுக்குப் பிடிக்காத எதுவும் செய்ய மாட்டன். ஆனா நீங்க என்னட்ட இருந்து விலகிப் போகாதீங்க ப்ளீஸ்.”
அவன் எத்தனையோ முறை இடையிட்டுப் பேச முயன்றும் விடவில்லை அவள். மனத்தில் உள்ளதை எல்லாம் ஒரே மூச்சில் சொல்லி முடிக்கிறவள் போன்று சொன்னாள். ஒரு கட்டத்துக்கு மேல் இடையிடப் போகாமல் அமைதியாகிப்போனான் நிரோஜன்.
“நான் உங்களச் சந்தேகப்பட்டிருக்கக் கூடாது. திலினியோட அப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது. அது எதையும் நீங்க சொல்லேல்ல எண்டுற கோவமும், அவள் போட்ட ஃபோட்டோ எல்லாத்துலயும் நீங்க நிண்டதும் நிதானத்தை இழந்திட்டன் நிரோ. உங்கட யமிய இந்த முறை மட்டும் மன்னிக்க மாட்டீங்களா?” என்று கடகடவென்று சொல்லிக்கொண்டு வந்தவள் பிறகுதான் அவனிடமிருந்து சத்தமே இல்லை என்று உணர்ந்தாள்.
அழைப்பைத் துண்டித்துவிட்டானோ என்கிற பயத்துடன், “நிரோ?” என்றாள் நடுங்கும் குரலில்.
“இனியாவது என்னைக் கதைக்க விடு யாமினி!” என்றான் அவன் கசந்த குரலில்.
“சொல்…லுங்க.”
“எனக்குக் கொஞ்சம் டைம் தா.”
“எ…என்…னத்துக்கு?”
அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், சுதந்திரமாகச் சுவாசிக்கவும், தெளிவாக யோசிக்கவும் நிச்சயமாக அவனுக்கு நேரம் தேவைப்பட்டது. அது மட்டும் மிக நன்றாகப் புரிய, “எனக்கு காரணம் சொல்லத் தெரியேல்ல யாமினி. ஆனா, கொஞ்ச நாளைக்கு என்னை என்ர பாட்டுக்கு விடு. இப்பிடி விடாம மெசேஜ் பண்ணுறது, கோல் பண்ணுறது எதுவும் வேண்டாம். நானும் நீ வேலை செய்ற அதே இடத்திலதான் இருக்கிறன். எங்கயும் ஓடிப் போகேல்ல. என்னைக் கொஞ்சம் ஃபிரியா விடு. எனக்கு யோசிக்கோணும்.” என்று பொறுமையாகவே எடுத்துச் சொன்னான்.
“என்ன யோசிக்கோணும் நிரோ? எதைப் பற்றி யோசிக்கக் கேக்கிறீங்க? அதான் நான் மன்னிப்புக் கேட்டுட்டனே.” உள்ளத்தோடு சேர்ந்து குரலும் நடுங்க வினவினாள்.
அவன் ஒருமுறை விழிகளை மூடித் திறந்து தன் பொறுமையை இழுத்துப்பிடித்தான் நிரோஜன்.
“நான் வேணுமெண்டா திலினிட்ட மன்னிப்புக் கேக்கவா?”
“தயவுசெய்து அப்பிடி எந்தத் தேவை இல்லாத வேலையும் பாத்திடாத!” என்றான் அவன் வேகமாக.
“பி…றகு ஏ…ன் டைம்?”
“தெரியா யாமினி. எப்ப நானும் நீயும் கதைச்சாலும் அது சண்டைலதான் முடியுது. இது இப்பிடியே போனா வெறுப்பிலதான் முடியும். அது வேண்டாம். கொஞ்ச நாளைக்கு நீ உன்ர வேலையப் பார். நான் என்ர வேலையப் பாக்கிறன்.” என்றான் அவன்.
அவன் சொல்வதே அவளுக்கு மலைப்பைத் தந்தது. ஆனாலும் அவன் கோபம் தீரட்டுமே என்று எண்ணி, “சரி, எப்ப வரை டைம் வேணும்?” என்றாள் கமறிய குரலில்.
“தெரியா.”
“இப்பிடிச் சொன்னா எப்பிடி நிரோ?”
“தெரியா எண்டா தெரியா யாமினி. இன்னும் உனக்கு எத்தினை தரம் சொல்லுறது? எனக்கு டைம் வேணும் டைம் வேணும் டைம் வேணும்! என்னைக் கொஞ்சம் என்ர பாட்டில இருக்க விடு!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அவனுக்குக் கண்மண் தெரியாத அளவுக்குக் கோபம். அழைப்பைத் துண்டித்த கணத்திலேயே கைப்பேசியைத் தூக்கி எறிந்துவிட்டுத் தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
கொஞ்சம் கொஞ்சமாக அவன் உள்ளம், ‘இல்லை, என்னால் முடியாது’ என்று சொல்ல ஆரம்பித்திருந்தது. அதை யோசிக்கவே பயந்து கண்களை இறுக்கி மூடிக்கொண்டான்.

