நீ வந்து தங்கிய நெஞ்சில் 25.1

அத்தியாயம் 25

அங்கே யாமினி அப்படியே அமர்ந்துவிட்டாள். கண்ணிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. நேரம் தா என்றால் எப்போது வரை என்று சொல்ல வேண்டாமா?

ஆனாலும் இரண்டு நாள்கள் பொறுத்திருந்துவிட்டு, “இப்ப நீங்க ஓகேயா?” என்று கேட்டு அனுப்பினாள்.

பார்த்தவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவ்வளவு தெளிவாகச் சொல்லிவிட்டு வைத்தும் இப்படிக் கேட்கிறவளை என்ன செய்ய? அவனிடமிருந்து பதில் இல்லாமல் போகவும் மறுபடியும் அவனுக்கு அழைக்கவும் குறுந்தகவல் அனுப்பவும் ஆரம்பித்தாள்.

ஏனோ ரோசம் மானம் பார்க்க முடியவில்லை. விடாமல் அழைப்பது, குறுந்தகவல் அனுப்புவது என்று அவள் இருக்க, ஒரு கட்டத்துக்கு மேல் நிரோஜனால் முடியவில்லை. அவளை முற்றிலுமாகத் தடை செய்தான். நவீனையும் அழைத்து அவள் அழைப்பை ஏற்க வேண்டாம் என்றான்.

“நான் எப்பிடியடா?” என்றவனை முறைத்துவிட்டு அவன் கைப்பேசியைப் பறித்து அவனே தடை செய்துவிட்டான்.

“டேய் மச்சான்?”

“நீயாவது என்னை விளங்கிக்கொள்ளு மச்சான். சத்தியமா என்னால முடியேல்ல. தலை வெடிக்கும் போல இருக்கு. என்ர கழுத்தப் பிடிச்சு நெரிக்கிற மாதிரியே இருக்கடா. அண்டைக்குக் கிளிப்பிள்ளைக்குச் சொல்லுற மாதிரி எனக்கு டைம் வேணும், என்னைக் கொஞ்சம் என்ர பாட்டுக்கு விடு எண்டு சொல்லிப்போட்டுத்தான் வச்சனான். விடுறாளே இல்ல. எப்ப பாரு நொய் நொய் எண்டுகொண்டு. ச்சேய்! எங்கயாவது கண் காணாத தேசத்துக்கு ஓடினா என்ன எண்டு இருக்கு.” என்று புழுங்கித் தள்ளியவனைக் கண்டு பயந்துபோனான் நவீன்.

“ஓகே ஓகே! நீ ரிலாக்ஸ் ஆகு!” என்று சொல்லிவிட்டுப் போனான் அவன்.

ஒரு நாள் கடந்திருந்தது. பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தாள் திலினி. புருவங்களைச் சுளித்துக் கேள்வியாகப் பார்த்தவனிடம், “அது… யாமினி…” என்று தடுமாறினாள் அவள்.

“அவளுக்கு என்ன?” என்னவோ சரியில்லாமல் நடந்துவிட்டது என்று மனம் சொல்லிவிட, சட்டென்று தொற்றிக்கொண்ட படபடப்புடன் வினவினான்.

“இல்ல. அது… அவா… என்னைக் கண்டுட்டு வந்து மன்னிப்புக் கேட்டவா. அண்டைக்குக் கதைச்சது பிழையாம். அவசரப்பட்டுக் கோபப்பட்டுட்டாவாம்.” அவள் சொல்ல சொல்ல இவனுக்கு அவமானத்திலும் ஆத்திரத்திலும் முகம் கன்றிப்போயிற்று.

“நீ போ!” என்றான் அவளை பாராமல்.

“நிரு?”

“போ திலினி!” பல்லைக் கடித்தபடி வார்த்தைகளைத் துப்பினான்.

அவள் போனதும் தாடை இறுக அமர்ந்திருந்தவன் கைப்பேசியை எடுத்து, அவள் மீதான தடையை அகற்றிவிட்டு அவளுக்கு அழைத்தான்.

“நிரோ நான் திலி…” என்று ஆரம்பித்தவளைப் பேச விடாமல், “கொஞ்சம் கூட அறிவே இல்லையாடி உனக்கு? என்னைக் கேவலப்படுத்திய ஆகோணும் எண்டு கங்கணம் கட்டிக்கொண்டு அலையிறியா? எனக்குக் கீழ வேலை செய்றவள் அவள். அவளிட்டப் போய்… உன்னை ஆர் திலினிட்ட மன்னிப்புக் கேக்கச் சொன்னது? என்ன ட்ரை பண்ணுறாய் யாமினி? என்னை அசிங்கப்படுத்தோணுமா உனக்கு?” என்றவனின் கேள்வியில் பதறிப்போனாள் அவள்.

“ஐயோ நிரோ இல்ல. அவளிட்ட மன்னிப்புக் கேட்டாலாவது உங்கட கோவ…” என்றவளை இடைமறித்து,

“லூசா நீ? எவ்வளவு சொன்னாலும் விளங்காதா உனக்கு? வெறுக்குது யாமினி. இப்பிடி ஒரு வாழ்க்கை வாழோணுமா எண்டுற அளவுக்கு மனதே விட்டுப் போகுது. ஏன் என்னைப் போட்டு இந்தப் பாடு படுத்திறாய்? உன்னைக் கெஞ்சிக் கேக்கிறன். என்னை விட்டுடு. சத்தியமா இதுக்கு மேல என்னால ஏலாது.” என்றுவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்துவிட, அப்படியே அமர்ந்துவிட்டாள் யாமினி.

என்னை விட்டுவிடு என்றால் என்ன பொருள்? இதற்கு மேல் முடியாது என்றால்? உள்ளம் பதறித் துடிக்கத் திருப்பி அவனுக்கு அழைத்தாள்.

பார்த்தவனுக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது. பிடிவாதமாக அழைப்பை ஏற்காமல் இருந்தான். அவள் விடவில்லை. அப்படி விட்டுவிட்டு இருக்கும் நிலையில் அவள் இல்லை. அந்தளவில் அவன் சொன்னவை அவளைப் பதற வைத்தன. கைப்பொருள் களவு போகப்போவதைப் போன்று உள்ளம் நடுங்கியது.

அவன் சொன்னதன் பொருள் என்னவென்று தெரிந்தால் மாத்திரமே அவளால் மூச்சுக்கூட விடலாம் போலிருக்க விடாமல் திருப்பி திருப்பி அழைத்தாள். ஒரே விடயத்தையே பைத்தியக்காரியைப் போல் செய்துகொண்டிருக்கிறோம் என்பதை உணராமல் அவனுக்கு அழைத்துக்கொண்டேயிருந்தாள்.

ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் மறுபடியும் அவளை முற்றிலுமாகத் தடை செய்தான் நிரோஜன்.

கொஞ்ச நேரம் கூட ஆகியிராது. அவன் அலுவலக அறையின் கதவைத் திறந்துகொண்டு வந்த அசோகன், “என்ன பிரச்சினை உனக்கும் யாமினிக்கும்? அங்க அவள் அழுதுகொண்டிருக்கிறாள். உன்னோட கதச்சே ஆகோணுமாம். என்ன எண்டு கேளு.” என்று சொல்லிவிட்டுப் போனான்.

அவன் போன கையோடு காவியா அழைத்து, “அண்ணா, உங்களை ஒருக்கா தன்னோட கதைக்கட்டாம் எண்டு யாமினி அக்கா சொன்னவா. நீங்களே எடுத்துக் கதைக்கிறதுதானே எண்டு கேட்டதுக்கு என்னவோ சொல்லுறா. அழுறா மாதிரியும் இருக்கு. நான் கேட்டதுக்கு ஒன்றுமே சொல்லுறா இல்ல. ஒருக்கா என்ன எண்டு எடுத்துக் கேக்கிறீங்களா?” என்று சொல்லிவிட்டு வைத்தாள்.

தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான் நிரோஜன். அவன் உள்ளம் இனியும் முடியாது என்று திரும்பவும் சொல்ல ஆரம்பித்திருந்தது. அதை அவனாலே ஜீரணிக்க முடியவில்லை. அழகழகாக வரைந்த கோலம் கண்முன்னேயே அழிவதைப் போன்ற ஒரு வாதை அவன் தொடையைக் கவ்விப்பிடித்தது.

கொஞ்ச நேரம் யோசித்துவிட்டுக் கைப்பேசியில் இருந்த தடையை மீண்டும் அகற்றிவிட்டு, “யாமினி ப்ளீஸ்! இன்னும் எத்தினை தரம் உனக்குச் சொல்லுறது எண்டு எனக்குத் தெரியேல்ல. குறைஞ்சது ஒரு ஒரு மாதமாவது என்னை என்ர பாட்டுக்கு விடு. நானே உனக்கு கோல் பண்ணுறன். அதுவரைக்கும் என்னை டிஸ்டப் பண்ணாத. எனக்குக் கொஞ்சம் இந்த ஸ்ட்ரெஸ் எல்லாத்தில இருந்தும் வெளிவரவேண்டியிருக்கு. ஆருக்கும் கோல் பண்ணாத. மற்றவையேயும் தொந்தரவு செய்யாத. ஏன் இப்பிடி எனக்கும் உனக்கும் நடுவில இருக்க வேண்டிய பிரச்சினையை எல்லாருக்கும் தெரியிற மாதிரிச் செய்றாய்? ப்ளீஸ் என்னைக் கொஞ்சம் விளங்கிக்கொள்ள ட்ரை பண்ணு!” என்று தன்னால் முடிந்தவரையில் பொறுமையாகப் பேசி அனுப்பிவைத்தான்.

சில நொடிகள்தான் கடந்திருந்தன. உடனேயே அவனுக்கு அழைக்க ஆரம்பித்திருந்தாள் யாமினி. அது போதாது என்று குறுந்தகவல்களும். கடைசியில் முடியாமல் மீண்டும் அவளைத் தடை செய்துவிட்டு மீட்டிங்க்கு சென்றுவிட்டான்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள். மண்டை சூடாகி வெடித்துவிடுமோ என்கிற நிலையில் அவன் இருந்தபோது, அவர்கள் இருந்த மீட்டிங் ஹோலின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த அவனோடு பணியாற்றுகின்ற ஒருவன், “யாமினி வந்து வெய்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறா நிரோ. நீ மீட்டிங்க்கு வந்த நேரமே வந்திட்டா. மீட்டிங் எண்டு சொல்லியும் கேக்கேல்லை. அழுதுகொண்டே இருக்கிறா. ஏதும் சீரியசான விசயமா தெரியா. என்ன எண்டு போய்க் கேளு.” என்று அவன் காதுக்குள் கிசுகிசுத்துவிட்டுப் போனான்.

நிரோஜனுக்கு முகமே மாறிப்போயிற்று. எல்லோரிடமும் மன்னிப்புக் கூறிவிட்டு உடனேயே வெளியே வந்தவன், இவனைக் கண்டதும், “நிரோ!” என்று ஓடி வந்தவளைக் கண்டு அப்படியே நின்றுவிட்டான்.

அந்தளவில் அழுதழுது கண்முகமெல்லாம் வீங்கி அவளைப் பார்க்கவே முடியவில்லை. மற்றும்படி தன் தோற்றத்தில் எவ்வளவு கவனமாக இருப்பாள், நேர்த்தியாக இருப்பாள் என்று அவனுக்குத் தெரியுமே.

என்ன யாமினி இது என்றான் பொறுக்க முடியாமல்.

“நிரோ ப்ளீஸ் நிரோ. நான் சொல்லுறதை ஒரேயொரு நிமிஷம் கேளுங்க ப்ளீஸ்!” என்று அப்போதும் கண்ணீருடன் கெஞ்சினாள் அவள்.

error: Alert: Content selection is disabled!!