எல்லோரும் தம்மையே பார்ப்பது போலிருக்கவும் அவளை அழைத்துக்கொண்டு கேண்டீனுக்குப் போனான். இருவரும் அமர்ந்ததும், “சொல்லு!” என்றான்.
“உங்களைக் கேவலப்படுத்த நினைக்கேல்ல நிரோ. அசிங்கப்படுத்த நினைக்கேல்ல. அப்பிடி எப்பிடி நினைப்பன் சொல்லுங்க? அண்டைக்கு நான் உங்களத் திலினியோட சந்தேகப்பட்டிருக்கக் கூடாதுதானே? அவளிட்ட கோபப்பட்டிருக்கவும் கூடாது. அதான் மன்னிப்புக் கேட்டனான். நீங்க என்னை விட்டுடு எண்டு சொல்லவும் பயந்திட்டன் நிரோ. என்ன அர்த்தத்தில அப்பிடிச் சொன்னனீங்க எண்டு தெரியேல்ல. அதுதான் கதைக்க வந்தனான்.” கண்ணீர் வழிய வழியச் சொன்னாள் அவள்.
“வேற ஏதும் சொல்லோணுமா உனக்கு?” பொறுமையாகவே கேட்டான்.
ஒரு கணம் திகைத்துப் பார்த்தாலும், இல்லை என்று தலையசைத்தாள் அவள்.
“சரி போ. பின்னேரம் வீட்டை வாறன்.” அதே பொறுமையோடு சொன்னான்.
நொடியில் முகம் பிரகாசமாக, “நிரோ!” என்றாள் அவள் நம்பமாட்டாமல். “உண்மையாவா?” என்றாள் பரபரப்புடன்.
“உண்மையாத்தான்.”
“கட்டாயம் வருவீங்கதானே?”
“கட்டாயம் வருவன். எனக்கு இதுக்கு ஒரு முடிவு காணோணும்.” என்றான் அவன்.
அவள் புருவங்கள் சுருங்கின. ஆனாலும் வீட்டுக்கே வருகிறேன் என்றவனிடம் எதையும் கேட்க அவள் விரும்பவில்லை.
“வெய்ட் பண்ணிக்கொண்டு இருப்பன் நிரோ.” என்று சொல்லிவிட்டுப் போனாள்
ஆனால், பெரும் ஆவலுடன் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்ததற்கு மாறாக, அன்று மாலை அவள் வீட்டிற்கு வந்தவன் மிகுந்த இறுக்கத்துடன் சோஃபாவில் அமர்ந்திருப்பதைக் கண்டு, பயத்துடன் பார்த்தாள் யாமினி.
அவனுக்குள்ளும் பெரும் போராட்டம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.
கையில் இருந்த கைப்பேசியைச் சுழற்றினான்.
“நிரோ…” அந்த நொடிகள் தரும் கனத்தைத் தாங்க முடியாமல் நடுங்கும் குரலில் அவள் ஆரம்பிக்கும்போதே நிமிர்ந்து, “இது சரி வராது எண்டு நினைக்கிறன் யாமினி.” என்றான் அவன்.
எது சரி வராது என்று கேட்கும் தெம்பைக் கூட இழந்து நின்றாள் அவள்.
“இந்த உறவு… எனக்கும் உனக்குமான ரிலேஷன்ஷிப்… இது நாளாக நாளாக நரமாகிக்கொண்டே போகுது. ஒருத்தரை ஒருத்தர் வெறுத்து, ஏனடா காதலிச்சோம் எண்டு சலிச்சுப் போறதுக்கிடையில ஒரு முடிவுக்கு வாறதுதான் நல்லது.” ஆரம்பிக்கிற வரையில்தான் அவனும் சிரமப்பட்டான். அதன் பிறகு தெளிவாகவே பேசினான்.
இதற்குத்தானே பயந்தாள். இது நடந்துவிடக் கூடாது என்றுதானே பதறினாள். கடைசியில் அதுவே நடந்துவிட்டது. யாமினியால் சுவாசிக்கக்கூட முடியவில்லை. அவனையே பார்த்து நின்றாள்.
“தனியா இருந்து யோசிச்சா இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல மாதிரி இருக்கு. சமாளிக்கலாம் எண்டும் நினைப்பன். ஆனா அதைப் பற்றி நானும் நீயும் கதைச்சா சண்டைல மட்டும்தான் முடியுது. நான் பிழை விடுறேனா, இல்ல உன்னில பிழையா எனக்குத் தெரியேல்ல. ஆனா… நாளாக நாளாக இந்த உறவு நரகமாகுது யாமினி.” என்று சொல்லிக்கொண்டு வந்தவன் அவளிடமிருந்து பார்வையை அகற்றிக்கொண்டு, “பிரேக் அப் பண்ணலாம் யாமினி.” என்றான் கடைசியாக.
ஒரு நொடி அதிர்ந்து நின்றவளின் தலை வேகவேகமாய் மறுப்பாய் ஆடிற்று. விழிகள் கரகரவென்று கண்ணீரைச் சொரிந்தன. அவன் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவள் இதயம் அல்லாடியாது.
“இதச் சொல்லத்தான் வந்தனான்.” என்று அவன் எழுந்துகொள்ளப் போக, ஓடிவந்து அவன் காலடியில் அமர்ந்தாள் யாமினி.
“ப்ளீஸ் நிரோ. ஒரேயோருக்கா நான் சொல்லுறதக் கேளுங்க ப்ளீஸ். நீங்க கோவமா இருக்கிறீங்க. எனக்கு விளங்குது. காரணம் நான்தான். அதுக்காக இப்பிடிக் கதைக்கலாமா? எப்பிடி நிரோ நானும் நீங்களும் பிரியிறது? இது பிரியிற உறவில்ல. நீங்க இல்லாத ஒரு வாழ்க்கை எனக்கு இல்லையே நிரோ? பிறகு எப்பிடி நிரோ?” என்றாள் கண்ணீருடன்.
அவன் முகம் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“நிரோ, என்னைப் பாருங்க ப்ளீஸ்.” அவன் தாடை பற்றித் தன்னைப் பார்க்க வைத்தாள்.
“என்னைப் பாத்துச் சொல்லுங்க, உங்கட யமி உங்களுக்கு வேண்டாமா? அவள் இல்லாம நீங்க இருப்பீங்களா? நடந்த எல்லாத்துக்கும் நான் மன்னிப்புக் கேக்கிறன் நிரோ. நான்தான் பிழை. நான் கதைச்சது, கோவப்பட்டது, உங்களோட சண்டை பிடிச்சது எல்லாமே பிழைதான். அதுக்காக இவ்வளவு பெரிய முடிவு வேண்டாம் நிரோ.” என்று அழுதவளையே இமைக்காது பார்த்தவனின் இதயத்திலும் பெரும் வலிதான்.
இந்த முடிவை அவனும் இலகுவாக எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த முடிவை அவனாக எடுக்கவேயிலை. எடுக்கும் நிலைக்கு அவள் அவனைத் தள்ளியிருக்கிறாள்.
அதைப் பற்றிச் சொல்லப்போனால் மன்னிப்புக் கேட்டு இனி நடக்காது என்பாள். பிறகு அதையேதான் செய்வாள். அதில் அதைப் பற்றிப் பேசாமல், “நீ எல்லாத்தையும் எமோஷனலா பாக்கிறாய். நிதானமா யோசி, உனக்கே இதுதான் நல்ல முடிவு எண்டு விளங்கும்.” என்று சொன்னான்.
“இல்ல நிரோ. எண்டைக்குமே எனக்கு இது நல்ல முடிவு இல்ல. அப்பா திடீரெண்டு இல்லாம போன அதிர்ச்சில கொஞ்சம் தடுமாறிட்டன். கொஞ்சம் டைம் தாங்க. நான் என்னை மாத்திக்கொள்ளுறன்.”
அவன் மறுப்பாகத் தலையசைத்தான். “இல்ல யாமினி. உனக்கு விளங்கேல்ல. எல்லாம் ஸ்மூத்தா போய்க்கொண்டு இருக்கேக்க எங்களுக்க எல்லாம் நல்லமாதிரி இருந்தது. ஆனா, ஒரு பிரச்சினை எண்டு வரேக்க எனக்கும் உனக்கும் ஒத்துப்போகுதே இல்ல. நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் சமாளிச்சுப் பாத்திட்டன். இதுக்கும் மேல என்னால ஏலாது. ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. ஒரு கோபம் எப்பவும் இருந்துகொண்டே இருக்கு. நீ சொல்லுறதப் பொறுமையா கேக்கிற நிலைல நானோ, நான் சொல்லுறத விளங்கிக்கொள்லூற இடத்தில நீயோ இல்ல.” என்றான் அவன் உறுதியான குரலில்.
“ப்ளீஸ் நிரோ. இப்பிடிச் சொல்லாதீங்க. இனி உங்களை எந்தக் கேள்வியும் கேக்கேல்லை. உங்களோட சண்டை பிடிக்கேல்ல. உங்கட பிரைவஸிக்க நான் வரேல்ல. நீங்க சொல்லுற எல்லாத்தையும் கேக்கிறன். இது மட்டும் வேண்டாம் ப்ளீஸ்.”
“ஓ நான் என்ன செய்தாலும் கேக்க மாட்டாய். நான் குடிச்சா உனக்கு ஓகேயா? ஃபிரெண்ட்ஸ், பார்ட்டி எண்டு இருந்தா ஓகேயா? காசு பற்றின கதை எங்களுக்க வரக் கூடாது. ஓகேயா உனக்கு?” அவன் கோபப்பட்டான்.
“அதெல்லாம் உங்கட நல்லதுக்காக…”
“இப்ப விளங்குதா? அதைச் செய்ய மாட்டன், இதைச் சொல்ல மாட்டன் எண்டு வாக்குகளை அள்ளி வீசுறாய். ஆனா அத்துப்படி உன்னால நடக்கேலாது. என்ர நல்லது எண்டு சொல்லி சொல்லி என்னை நெருக்கிறாய் நீ. என்னவோ மூச்செடுக்கவே ஏலாத கூட்டுக்க போட்டு அடச்சு மாதிரி இருக்கு. இப்பவே இப்பிடி எண்டா நாளைக்குக் கலியாணம் ஒண்டு நடந்த பிறகு இன்னும் மோசமாயிடும். கலியாணம், டிவோர்ஸ் எண்டு பெருசா எதுவும் நடக்க முதல் இந்த முடிவை எடுக்கிறதுதான் நல்லம்.”
“ப்ளீஸ் நீரோ…” என்றவளைத் தடுத்து, “எனக்கு ஏதாவது நல்லது செய்ய நினைச்சா என்னை விட்டுடு யாமினி. எனக்கு உன்னட்ட இருந்து விடுதலை வேணும். உன்னைக் கெஞ்சிக் கேக்கிறன். என்னைக் கொஞ்சம் நிம்மதியா வாழ விடு!” என்றுவிட்டு அவன் போய்விட்டான்.
இடிந்துபோய் அமர்ந்திருந்தாள் யாமினி.

