நீ வந்து தங்கிய நெஞ்சில் 26.1

அத்தியாயம் 26

சில்லு சில்லாக நொறுங்கிப்போயிருந்தாள் யாமினி. கோபப்படுவான், சண்டை பிடிப்பான், கதைக்காமலேயே இருப்பான் என்றெல்லாம் எண்ணினாளே ஒழிய, பிரிவைச் சொல்வான் என்று நினைக்கவில்லை.

முதலில் அவர்கள் எப்படி அப்படிப் பிரிய முடியும்? பிரிகிற பிணைப்பில்லையே இது? ஓருயிர் ஈருடலாக வாழவும், அவர்கள் இருவரும் ஒன்றுதான் என்று உலகத்திற்கு அறிவிக்கவும் அவள் கழுத்தில் ஒரு தாலி இல்லை. அதைத் தவிர்த்து அவர்கள் இருவரும் உணர்வுகளாலும் உள்ளத்தாலும் இரண்டறக் கலந்தவர்கள். பிறகு எப்படிப் பிரிய முடியும்?

அவன் சொல்வதுபோல் தவறு முழுக்க அவள் பக்கமே இருக்கட்டுமே. அவன் அன்னை ஒரு தவறு செய்தால் இப்படித்தான் தூக்கி எறிந்துவிட்டுப் போவானா? அவன் தங்கை தவறு செய்தாலும் பிரிவைச் சொல்லிவிடுவானா? அவன் நண்பர்கள்? அவர்களை விடவுமா அவள் ஒன்றுமில்லாமல் போனாள்?

தாங்க முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் யாமினி.

இரண்டு நாள்கள் கடந்திருந்தன. உயிர் குடிக்கும் நோயொன்று உடல் முழுவதும் பரவி, மொத்தமாய் உருக்குலைப்பது போல், உள்ளத்தைத் தொற்றிய அந்த வலி, உடலின் மூளை முடுக்கெல்லாம் நுழைந்து, அவளை உருக்குலைக்க ஆரம்பித்திருந்தது.

யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. உண்ண முடியவில்லை. உறங்க முடியவில்லை. பொருள்கள் கை தவறின, முக்கியமானவற்றை மறந்தாள், கண்ணீர் கன்னத்தில் வழிவதை உணரக்கூட மாட்டாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

ஒரு கட்டத்துக்கு மேல் அவளைச் சூழும் இந்த வெறுமையைத் தாங்க முடியாமல் புறப்பட்டுக் கிளிநொச்சிக்குப் போனாள். அங்கே அவள் தமக்கை, ஆதவன் இல்லாத நேரத்தில் பல முகங்கள் காட்டினாள். அன்னை ஓராயிரம் குறை படித்தார். நிம்மதியாக அழக்கூட முடியவில்லை. அங்கே இன்னும் இறுக்கமாய் உணர்ந்தாள். அவள் ஆழ்மனம் தேடும் ஆறுதலைத் தர யாருக்கும் தெரியவில்லை. எதையும் வாய்விட்டுச் சொல்லும் நிலையில் அவளும் இல்லை.

தந்தையின் இழப்பை இன்னும் பாரதூரமாக உணர்ந்தாள். அவர் இருந்திருக்க இதெல்லாம் நடந்திராதே என்று நினைத்து நினைத்து மருகினாள். புறப்படும் முன், “கொஞ்ச நாளைக்கு வந்து என்னோட இருக்கிறீங்களா அம்மா?” என்று கண்ணீரை அடக்கிக்கொண்டு கேட்டாள்.

“சின்ன பிள்ளை மாதிரி கதைக்கக் கூடாது பிள்ளை. அக்கா இந்த நிலைல இருக்கேக்க கவிக்குட்டியையும் விட்டுப்போட்டு எப்பிடி அங்க வருவன்?” என்று அவளைக் கடிந்துகொண்டார் அவர்.

அவருக்கு இரண்டு மகள்களும் ஒன்றுதான். இருவர் மீதான அவர் பாசமும் சமம்தான். ஆனாலும் கூட அந்த வீட்டோடான அவரின் பிணைப்பு என்பது மிக ஆழமானது.

அது அவர் வீடு. அவரும் கணவரும் வாழ்ந்த வீடு. அதைத்தான் மூத்தவளுக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தார்கள். கூடவே, நாளாந்தம் பேரனுக்கானதைக் கவனித்து, மகளுக்கும் மருமகனுக்குமானதைப் பார்த்து பார்த்துச் செய்து என்று, ஒரு ரிதத்தில் அங்கே இயங்கிப் பழகிவிட்டார். அதனாலோ என்னவோ அந்த வீட்டை விட்டுவிட்டு அவரால் இருக்க முடியாது.

கூடவே, யாமினி முதன் முதலில் கொழும்புக்குத் தனியாக வேலைக்குப் போகப் போகிறாள் என்றதும் கணவரிடம் பெரிதாகப் போர்க்கொடி தூக்கிய அவரே, காலவோட்டத்தில் சின்னவள் தைரியசாலி, கொழும்பிலேயே தனியாக இருக்கிறாள், கெட்டிக்காரி, சமாளிப்பாள் என்று தானாகவே எண்ணிக்கொண்டார்.

கணவர் இருந்த காலத்தில் அவள் இருக்கும் அறைக்கு அடிக்கடி சென்று வந்ததில் அது பாதுகாப்பான இடம் என்றும் அவருக்குத் தெரியும். பொருத்தமான ஒருவனாகப் பார்த்து அவளுக்கும் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்பது மட்டுமே அவருக்கு இருந்த அவள் பற்றிய ஒரே கவலை.

அதைத் தாண்டி பெரிய மகளின் வாய்க்குப் பயந்து அவளுக்குச் சாதகமாகவும் இவளுக்குப் பாதகமாகவும் நடக்கிறோம் என்பதை அவர் உணரவில்லை. அதனால் சின்ன மகள் பெரியளவில் தனக்குள் உடைந்துபோயிருக்கிறாள் என்பதை அறியவில்லை. அவள் அறியச் செய்யவும் இல்லை.

அங்கிருந்து புறப்பட்டு அஜந்தா வீட்டிற்கு வந்தாள் யாமினி. மெலிந்து, வாடி வதங்கி, அழுத விழிகளோடு நின்றவளைக் கண்டு அஜந்தா பயந்துபோனாள்.

தனியாக அழைத்துச் சென்று நடந்தவற்றை அறிந்தவளுக்குப் பெரும் திகைப்பு. கொஞ்ச நேரத்திற்கு அவளால் பேசவே இயலாமல் போயிற்று.

அதிர்ச்சி நீங்கியதும், “அவர் டைம் கேட்டவரெல்லா? குடுத்துப்போட்டுக் கொஞ்ச நாளைக்குப் பேசாம இருந்திருக்கலாமே. முதல் ஏன் நீ இதையெல்லாம் முதலே என்னட்ட சொல்லேல்ல. சொல்லியிருக்க சமாளிச்சிருக்கலாம். பிரேக் அப் வரைக்கும் வந்திருக்காது. நடந்த எல்லாத்துக்கும் பாதிக் காரணம் நீயும்தான் எண்டு உனக்கு விளங்குதா இல்லையா?” என்று படபடவென்று அதட்டினாள் அவள்.

அவளுக்கு மனம் ஆறவேயில்லை. அந்தளவில் நிரோஜன் மிக மிக நல்லவன். அப்படியானவனை இழந்து நிற்கிறாளே என்கிற ஆற்றாமையோடு, “உன்ர அக்கா உன்னட்ட இருந்து காசு பிடுங்கிறா எண்டு உனக்கே தெரியும். அவாக்கு வளஞ்சு குடுக்காத, ஆதவன் அண்ணாவோட கதை, அப்பதான் அடங்குவா எண்டு நிரோ சொன்னவாரா இல்லையா? அதை நீயும் கேக்கேல்லைதானே? இன்னும் சொல்லப்போனா இப்ப வரைக்கும் உன்ர அக்கா கேக்கிறதை எல்லாம் குடுத்துக்கொண்டுதானே இருக்கிறாய். இதை நிப்பாட்டு எண்டு அவர் உன்னோட சண்டை பிடிச்சா உனக்கு எப்பிடி இருக்கும்?” என்றாள் கோபத்தோடு.

யாமினியால் அவளின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. கண்ணீர் மட்டுமே வந்தது.

“ஏன் நீயும்தானே அண்டைக்கு அவர் உன்ர வீட்டு ஆக்களைப் பற்றிக் கதைச்ச பிறகு அவரிட்ட ஒண்டையும் சொல்லாம மறைச்சு வச்சிருக்கிறாய். அதைப் பற்றி அவர் ஏதும் கேட்டா உன்ர மூஞ்சியக் கொண்டுபோய் எங்க வைப்பாய்? உன்ர ஃபோன் எண்டைக்காவது அவர் செக் பண்ணி இருக்கிறாரா? இல்ல, உன்னச் சந்தேகப்பட்டுக் கேள்வியா கேட்டுச் சாகடிச்சிருக்கிறாரா? என்னடி இதெல்லாம்? நாங்க எல்லாரும் ஒரே இடத்தில வேலை செய்ற ஆக்கள். அப்பிடி இருக்க அவரின்ர ஒபீசுக்கே போய், அங்கயே சண்டை பிடிச்சு கேவலம் எல்லா யமி?” என்றவளுக்கு அவள் சொன்னவற்றை எல்லாம் நினைக்க நினைக்க ஆத்திரமும் ஆற்றாமையும்தான் பெருகின.

மௌனமாகக் கண்ணீர் உகுத்தபடி இருக்கிறவளிடம் ஒரு அளவுக்கு மேல் கடியவும் முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துவிட்டு, “அவரோட நான் ஒருக்கா கதைக்கவா?” என்று இதமான குரலில் கேட்டாள்.

அதற்கு மட்டும் மறுப்பாய்த் தலையை அசைத்தாள் அவள்.

“ஏன்?”

“உண்மையாவே அவர் என்னை வெறுத்திட்டார் எண்டு நினைக்கிறன் அஜூ.” என்று சொல்லும்போதே உடைந்து அழுதாள் அவள்.

error: Alert: Content selection is disabled!!