நீ வந்து தங்கிய நெஞ்சில் 26.2

அஜந்தாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அதே நேரத்தில் நிரோஜனையும் அறிந்தவள் அவள். அத்தனை இலகுவாக யாமினியை விட்டுவிடுவான் என்று தோன்றவில்லை. காயங்களும் கசப்புகளும் ஆறுவதற்குக் காலம் கொடுத்தாலே மாறும் என்று நினைத்தாள்.

அதே நேரத்தில் நம்பிக்கை கொடுக்கப் பயந்தாள். அவள் நினைப்பதுபோல் நடந்தால் மகிழ்ச்சி. தப்பித் தவறி யாமினி சொன்னது போன்று நிரோஜன் முற்றிலுமாக இதைக் கடந்து போய்விட்டாள்?

அதில், “எப்பவும் இப்பிடி அழுதுகொண்டு இருக்காத யமி. கொஞ்ச நாள் போகட்டும். என்ன செய்றது எண்டு பாக்கலாம் சரியா?” என்றாள் ஆறுதலாக.

ஆம் என்று கேட்டுக்கொண்டாலும் யாமினிக்கு சிறு நம்பிக்கை கூட இல்லை. கொஞ்ச நேரம் அவளோடு இருந்துவிட்டு, நில் என்று சொன்னவள் பேச்சைக் கேளாமல் புறப்பட்டாள்.

*****
இதற்குமேல் இதைத் தன்னால் கையாளவே முடியாது என்கிற நிலையில்தான் பிரிவைச் சொன்னான் நிரோஜன்.

ஆனால், காற்றே இல்லாத சிறைக்குள் அடைபட்டிருந்தவன் வெளியே வந்தால் எப்படி உணர வேண்டும்? சுதந்திரமாக, விடுதலையாக உணர வேண்டும். நெஞ்சு நிறையக் காற்றை இழுத்துச் சுவாசிக்க வேண்டும். எந்தத் தடைகளும் இல்லாமல், இந்தப் பரந்த வானத்தில் சிறகு விரித்துப் பறப்பதற்கான மனநிலையில் இருக்க வேண்டும்.

அவனுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. மாறாக, தன்னிலிருந்து மிக மிக முக்கியமான ஒன்றை இழந்துவிட்டது போன்றதொரு வலி மட்டுமே அவனை ஆட்கொண்டது.

பைக்கைக்கூட ஓட்ட முடியவில்லை. சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கருமேகங்கள் வந்து வானத்தை மூடுவதுபோல், கண்ணீர் அவன் பார்வையை மறைத்தது.

அத்தனை நாள்களும் மூச்சு முட்டுவதுபோல் உணர்ந்தவன் அதன் பிறகெல்லாம் வெறுமையை மட்டுமே உணர்ந்தான். யாரோடும் மனம் விட்டுப் பேசவோ, வாய்விட்டுச் சிரிக்கவோ முடியவில்லை. ஏதோ ஒரு அழுத்தம் நெஞ்சைப் பற்றிப் பிடித்திருந்தது. இரவுகள் கண்ணோரம் கசியும் கண்ணீரிலும் பகல்கள் சதா அல்லலுறும் மனதோடும் கழிந்தன.

நண்பர்களிடம் பிரிந்துவிட்டோம் என்று மட்டுமே சொன்னான். அவர்களுக்கும் அதிர்ச்சி. காரணம் கேட்டவர்களிடம் எதையும் பகிர மறுத்தான்.

அதே நேரத்தில் இதையெல்லாம் நெஞ்சுக்குள் வைத்திருந்து கையாளவும் முடியவில்லை. சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குப் புறப்பட்டுப் போனவன் அன்னை மல்லிகாவின் மடியை விட மறுத்தான்.

அவர் மட்டுமே அவனுக்கிருந்த சிறு ஆறுதல். ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்டவரிடம் அதிக வேலை என்று சொல்லிச் சமாளித்தான்.

*****

ஒரு வாரம் கடந்து கொழும்பு வந்த அஜந்தா யாமினியைக் கண்டு பயந்துபோனாள். அந்தளவில் பாதியாகியிருந்தாள் யாமினி.

“லூசாடி நீ? அவர் மட்டுமே வாழ்க்கை இல்ல. எல்லாத்தில இருந்தும் வெளில வா. கொஞ்சம் தைரியமா இதை ஹாண்டில் பண்ணப் பார்!” என்று அதட்டினாள்.

அவளால் அது முடியவேயில்லை. முதலில் நேரம் கேட்டானே, கொஞ்ச நாள் போக அவசரப்பட்டுச் சொல்லிவிட்டேன் என்று சொல்லிவிட மாட்டானா என்று ஏங்கினாள்.

அன்று அஜந்தாவைச் சென்று பார்த்துவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் யாமினி. அவள் இறங்கவேண்டிய தரிப்பிடம் வந்ததும் ஏதோ யோசனையில் அவள் இறங்கினாளா, இல்லை, கடைசியாக இறங்கிய அவளை ஓட்டுநர் கவனிக்காமல் பஸ்ஸை எடுத்துவிட்டாரா தெரியவில்லை.

கால் தடக்கித் தரையில் விழுந்தாள். முழங்கால் சிரட்டை நேராகச் சென்று வீதியில் கிடந்த கல்லில் மோத, கையும் எங்கோ சென்று தாக்கிற்று.

துடித்துப்போனாள் யாமினி. காலை அவளால் அசைக்கவே முடியாமல் போயிற்று. பார்த்துக்கொண்டிருக்க வீங்கிக்கொண்டு வந்தது.

சுற்றியிருந்தவர்கள் அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு ஓடினார்கள். கன்னத்தில் சிராய்ப்பு, தோள்பட்டையின் மூட்டு விலகியதில் கையைத் தொட்டில் போன்று(Arm Sling) கட்டியிருக்க, காலிலும் பேண்டேஜ்.

விழுங்கிய மாத்திரைகளையும் மீறிக்கொண்டு வலியில் உயிர்போனது அவளுக்கு. உள்ளத்தின் காயத்திற்கு இணையாக உடலின் காயங்களும் வலி கொடுக்க, “நான் என்னவோ பெரிய பாவம் செய்திருக்கிறன் போல அஜூ. அதான் எனக்கு மட்டும் எல்லாமே பிழையாவே நடக்குது.” என்று, விடயமறிந்து ஓடிவந்த அஜந்தவைதாம் சொல்லிப் புன்னகைக்க முயன்றாள் யாமினி.

“லூசாடி நீ? இதெல்லாம் நடக்கிறதுதான். அதுக்குப் போய் இப்பிடி எல்லாம் கதைப்பியா?” என்று அதட்டி அவளை அடக்கினாள் அஜந்தா.

கூடவே அவள் வீட்டினருக்கு நடந்த விபத்தைப் பற்றிச் சொன்னாள். உடனேயே புறப்பட்டு வந்த ஆதவனோடு அவளைக் கிளிநொச்சிக்கு அனுப்பிவைத்தாள்.

சரியாக ஒரு மாதம். முதல் இரண்டு வாரங்கள் முழுமையான ஓய்விலும், பிறகு, ‘வெர்க் ஃப்ரம் ஹோம்’மிலும் இருந்துவிட்டுக் கொழும்புக்குப் யாமினி.

கன்னத்துக் காயங்கள் ஆறியிருந்தன. கைக்கட்டும் தேவையாய் இல்லை. முழங்காலுக்கு மட்டும் இன்னுமே பாண்டேஜ் போட்டிருந்தாள். ஆனாலும் நடக்க, தன் வேலைகளைத் தானே செய்துகொள்ள முடிந்தது.

கொழும்பில் வந்து இறங்கிய கணத்திலேயே துக்கம் தொண்டையை அடைத்தது. எங்காவது தென்பட்டுவிட மாட்டானா என்று தன்னை மீறி விழிகளால் தேடினாள்.

ஆனால், இத்தனை நாள் இடைவெளியில் உண்மை புலப்பட ஆரம்பித்திருந்ததில் சிறு வலியோடு அதைக் கடந்தாள்.

முதல் நாள் அந்த அலுவலக வளாகத்தினுள் கால் வைக்கையில் நடுங்கிப்போனாள். என்னென்னவோ நினைவுகள் எல்லாம் ஒன்றாக வந்து சுழற்றி அடித்தன. இதே இடத்தில்தான் சற்றுத் தூரத்தில் அவனும் இருக்கிறான் என்கிற நினைப்பைக் கடக்கவே முடியவில்லை.

மெல்ல மெல்ல இந்த வேதனைகளை எல்லாம் தாங்கிக்கொண்டு அலுவலகம் சென்று வர ஆரம்பித்திருந்தாள்.

அன்று மழை நன்றாக அடித்து ஊற்றிவிட்டு ஓய்ந்திருந்தது. நல்லதொரு டீக்கு நாக்கு ஆசைப்படவும் தோழிகள் இருவருமாக கேண்டீனுக்கு வந்தார்கள்.

எதிரில் நிரோஜன் நடந்து வந்துகொண்டிருந்தான்.

error: Alert: Content selection is disabled!!