நீ வந்து தங்கிய நெஞ்சில் 27.1

அத்தியாயம் 27

யாமினியின் நடை சட்டென்று நின்றுபோயிற்று. இதயம் ஒரு கணம் நின்று மீண்டும் வேகமாகத் துடித்தது. தொண்டை அடைத்துக் கண்களில் நீர் திரள அவனையே பார்த்து நின்றாள்.

நிரோஜனும் அவளை அங்கே எதிர்பார்க்கவில்லை. தடுமாறிப்போனான். அதுவும் அவள் தோற்ற மாற்றம் அவனைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று.

அவன் திகைத்து நிற்கையிலேயே அவனை நெருங்கி வந்தாள் யாமினி.

எத்தனையோ முறை மனத்தில் அவனைச் சந்தித்துப் பேசியிருக்கிறாள். தன் வேதனைகளை, அவன் இல்லாமல் தான் அனுபவிக்கும் துன்பங்களை, அவனை மறக்க முடியாமல் படுகிற பாடுகளை எல்லாம் சொல்லி அழுதிருக்கிறாள்.

இன்று அத்தனைக்கும் சொந்தக்காரன் கண் முன்னே நிற்கிறான். அவளால் ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்க முடியவில்லை. வாயைத் திறந்தால் கட்டுப்பாட்டை இழந்து, அழுதுவிடுவோமோ என்று பயந்தாள்.

ஆனாலும், “எப்பிடி இருக்கிறீங்க?” என்றாள் அடைத்த குரலில்.

அவனால் அது கூட முடியவில்லை. நன்றாக இருக்கிறேன் என்பதுபோல் தலையை மட்டும் அசைத்தான். “நீ?” என்றான் பெரும் சிரமத்திற்கு மத்தியில்.

புன்னகைக்க முயன்றவாறே அவளும் அவனைப் போலவே தலையை ஆட்டினாள்.

அடுத்து? இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவேயில்லை. எதுவானாலும் அவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்று அஜந்தா விலகி வந்திருந்தாள்.

“கூகிள் மீட் இருக்கு.” என்றான் அவன்.

இந்த இரண்டு மாத இடைவெளி, அந்த இடைவெளிக்குப் பிறகான இந்தச் சந்திப்பு, அவள் என்று எதுவுமே அவன் முடிவை மாற்றவில்லையாம். உள்ளே உள்ளத்தில் ஒரு வலி ஊடுருவ, சிறிதாய்த் தலையசைத்து அவனுக்கு விடைகொடுத்தாள்.

அவன் அங்கிருந்து நகர முற்பட்ட நொடியில், “உங்களோட கதைக்கோணுமே.” என்றாள் யாமினி. “இஞ்சயே, இண்டைக்கு பின்னேரம்… வேலை முடிஞ்ச பிறகு?” மறுத்துவிடாதே என்கிற தவிப்புடன் அவள் குரல் இலேசாகக் கெஞ்சிற்று.

அப்படி, கண்களில் இறைஞ்சலைத் தேக்கி அவள் கேட்ட பிறகு எப்படி மறுப்பான்? அவன் என்ன இன்னொன்றைத் தேடிவிட்டுப் பிரிவைச் சொன்னவனா, இல்லை, அவளை வெறுத்துப் பிரிவைச் சொன்னவனா? அவன் தலை அவன் அனுமதி இல்லாமலேயே சரி என்று ஆடிற்று.

கண்களில் திரண்டுவிட்ட கண்ணீருடன், “தேங்க்ஸ்.” என்றுவிட்டுப் போனாள் அவள்.

மலையானது. அவள் கண்ணீரை, கெஞ்சலை, மன்னிப்பை இன்னொரு முறை பார்க்கும் தைரியம் நிரோஜனுக்கு இல்லை. அப்படி அவள் உடையும் நிலையே உருவாகாமல் தடுப்பது எப்படி என்று யோசித்துவிட்டு, “டேய், நான் போறன். ரெண்டு நிமிசம் கழிச்சு நீங்களா வாற மாதிரி வாங்கடா ப்ளீஸ். எனக்கு இன்னொரு சண்டை வேண்டாம்.” என்றான் நண்பர்களிடம் கெஞ்சலாக.

“லூசா நீ? நாங்க எப்பிடி?”

“ப்ளீஸ் மச்சான். சரியோ பிழையோ போதும் போதும் எண்டுற அளவுக்கு ரெண்டு பேருமே காயப்பட்டாச்சு. இன்னொருக்கா அவளை அழ வச்சுப் பாக்கேலாது. காப்பாத்துங்கடா.” என்றான் கெஞ்சலாக.

“அவா என்ன கதைக்க நினைக்கிறவரோ தெரியாதேடா.”

“முடிஞ்சுபோன உறவுக்க இன்னும் என்னடா கதைக்க இருக்கு?”

“அப்ப நீ அவாவைக் கடந்து வந்திட்டியா?”

கண்ணில் கூர்மையுடன் நவீன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் அமைதியானான் நிரோஜன்.

“சொல்லு நிரோ!”

அப்படி எப்படி அவளைக் கடப்பான்? அது அவனால் முடிகிற காரியமேயில்லை. அதற்கென்று சேருவதிலும் உடன்பாடில்லை. அவனுக்கு அவன் நிலைப்பாட்டிலும் அவளுக்கு அவள் நிலைப்பாட்டிலும் மாற்றமில்லை என்கையில் சேருவதால் என்ன மாற்றம் வந்துவிடும்?

மறுபடியும் முதலில் இருந்து சண்டை, ஒருவரை மற்றவர் காயப்படுத்துவது என்று வந்து நிற்கும். அதில், “நீங்க வாறீங்க!” என்று முடித்துக்கொண்டான் அவன்.

அவர்களுக்கும் வேறு வழியற்றுச் சரி என்றார்கள்.

அதேபோல் அவள் எதிரில் அவன் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே நவீன், மகேஷ், மித்ரன் மூவரும், “ஹாய்டா, ஹாய்மா!” என்றுகொண்டு வந்து, அவன் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்கள்.

இதை எதிர்பாராத யாமினி தவிப்புடன் அவனைப் பார்த்தாள். ஐயோ என்றிருந்தது அவனுக்கு. அவன்தான் இந்த ஏற்பாட்டைச் செய்தான். அவள் அப்படிப் பார்த்தபோது இப்படிச் செய்திருக்க வேண்டாமோ என்று நினைத்தான்.

“என்னம்மா, எப்பிடி இருக்கிறீங்க?” என்றான் நவீன்.

நன்றாக இருக்கிறேன் என்பதுபோல் தலையசைத்து அவள் சிந்திய முறுவலின் பின்னே, அழுகையின் நடுக்கத்தை அடக்க முயல்வது அப்படியே தெரிந்தது. கண்டனத்துடன் நண்பனைப் பார்த்தான் நவீன்.

நிரோஜனுக்கும் இந்த நிமிடங்களைக் கடப்பது இலகுவாய் இல்லை. அவளைப் பார்க்க வராமல் இருந்திருக்கலாமோ, அவள் கேட்டபோதே மறுத்திருக்கலாமோ என்று அல்லாடினான்.

அவனையே பார்த்தாள் யாமினி. அவன் போராட்டத்தை அவளால் படிக்க முடிந்தது. விழிகளில் கண்ணீர் அரும்ப இதழ்களில் மெல்லிய முறுவல். கேண்டீன் நடத்துகிறவரை நோக்கி, “அண்ணா, எல்லாருக்கும் டீயும் ரோல்ஸும் தாறீங்களா?” என்று கேட்டுவிட்டு, அவளே எழுந்துபோய் எல்லோருக்கும் எடுத்து வந்து தந்தாள்.

தன்னைச் சமாளித்துக்கொள்ளவே இத்தனையையும் செய்கிறாள் என்று அங்கிருந்த எல்லருக்குமே புரிந்தது. தவறு செய்கிறோமோ என்கிற குற்றவுணர்ச்சி எல்லோர் மனத்திலும்.

எல்லோரும் சாப்பிட்டு, பால் தேநீரையும் அருந்தி முடித்தார்கள். அப்போதும் அவர்கள் புறப்படுவதாக இல்லை. அதுவே சொல்லாத பலவற்றை அவளிடம் தெளிவாய்ச் சொல்லிற்று. அவள் இதழோரம் வலி நிறைந்த மென் புன்னகை.

error: Alert: Content selection is disabled!!