நீ வந்து தங்கிய நெஞ்சில் 27.2

“என்னம்மா விசேஷம்? டீ, ரோல்ஸ் எண்டு இந்த இடமே அல்லோலகல்லோலப்படுது?” தாம் செய்துகொண்டிருக்கும் தவறைப் பூசி மெழுக மீண்டும் பேச்சுக் கொடுத்தான் நவீன்.

“பெருசா ஒண்டும் இல்லை அண்ணா. ரெண்டு மாதத்துக்கு முதல் அவர் பிரேக் அப் சொன்னவர். இண்டைக்கு நானும் அதச் சொல்ல வந்தனான். அழகா ஆரம்பிச்ச ஒரு விசயத்த அதே அழகோட முடிச்சு வைக்கேக்கதானே அது இன்னும் வடிவா இருக்கும்.” என்றவள் கேள்வியில் நிரோஜன் விழுக்கென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான் என்றால், அவன் நண்பர்களுக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று.

“ஓ சொறிமா. நாங்க போறம், நீங்க கதைங்க.” என்று அவர்கள் எழுந்துகொள்ள முயல,

“இல்லை அண்ணா. அப்பிடி இனியும் நானும் அவரும் தனியா கதைக்க ஒண்டுமே இல்லை. அதவிட… எப்பவுமே அவரோட கதைக்க நான் வாறதைக் கண்டாலே விலகிப் போயிடுவீங்க. இண்டைக்கு இவ்வளவு நேரமாகியும் நீங்க எல்லாரும் இந்த இடத்தை விட்டுப் போகாம இருக்கிறதிலேயே இது அவரின்ர ஏற்பாடு எண்டு விளங்குது.” என்று சொல்லி அவள் முறுவலித்தபோது எல்லோர் முகத்திலும் பெரும் சங்கடம்.

“அந்தளவுக்கு உங்கள நான் மூச்சடைக்க வச்சிருக்கிறன் போல. இல்லாம இப்பிடி நீங்க நடந்திருக்க மாட்டீங்க. உண்மையா இதையெல்லாம் நான் உணரவே இல்ல. லூசு மாதிரி… நல்லதுக்குத்தான் எண்டு நினைச்சுக்கொண்டு… என்னென்னவோ எல்லாம் செய்திட்டன்.” என்று நிரோஜனைப் பார்த்துச் சொல்லிவிட்டுக் கண்ணீருடன் புன்னகைக்க முயன்றாள்.

முடியவேயில்லை. உள்ளே அழும் இதயம் கண்ணீரை வெளியே தள்ளியிருந்தது. “சொறி! அழக்கூடாது எண்டுதான் நினைக்கிறன். அது தானா வருது.” என்றபடி வேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு திரும்பவும் முறுவலிக்க முயன்றாள்.

“மூச்சு முட்டுது, என்னைக் கொஞ்சம் ஃபிரீயா விடு, எனக்கான ஸ்பேஸ தா எண்டு நீங்க நிறையத் தரம் சொல்லித்தான் இருக்கிறீங்க. நான்தான்… எனக்குத்தான்… ப்ச்! ஒருத்தரை ஒருத்தருக்குப் பிடிச்சா மட்டும் காணாது. புரிதல் வேணும் எண்டு சொல்லுவினம். அப்பதான் அந்த உறவு கடைசி வரை நிலைக்குமாம். இஞ்ச ஒருத்தரை ஒருத்தருக்குப் பிடிச்ச அளவுக்கு எங்களுக்க புரிதல் இல்லை போல.” என்று சொன்னவளை உள்ளம் வலிக்கப் பார்த்திருந்தான் நிரோஜன்.

“ஆனா எப்பவுமே உங்களை நோகடிக்கோணும் எண்டு நினைச்சு நோகடிச்சதே இல்ல. நிதானமாக் கதைக்கோணும், சமாதானமாப் போகோணும், இனியும் நீங்க கோபப்படுற மாதிரி நடக்கக் கூடாது எண்டுதான் ஒவ்வொரு முறையும் நினைப்பன். ஆனா அது நடந்ததே இல்ல.” என்று புன்னகைத்தாள் அவள்.

பேச்சற்றுப்போய் அவளையே பார்த்திருந்தான் நிரோஜன்.

“தேங்க்ஸ் எல்லாத்துக்கும். முதல் முதல் அழகான ஒரு காதலை எனக்கு அறிமுகப்படுத்தினது நீங்கதான். நிறைய இடங்கள் உங்களோடதான் சுத்திப் பாத்திருக்கிறன், நிறையச் சாப்பாடு வித்தியாசம் வித்தியாசமா ட்ரை பண்ணினதும் உங்களோடதான். மறக்கவே ஏலாத அழகான நாட்களை எனக்கு நீங்க தந்திருக்கிறீங்க. நிறைய ஃபன், நிறைய கொண்டாட்டம், நிறையப் பயணங்கள், நிறையச் சிரிப்பு, நிறையச் சந்தோசம், இன்னும் சொல்லப்போனா அவ்வளவு காலமும் ஒரு கூட்டுக்க மட்டுமே வாழ்ந்தவள் நான். அப்பிடியான எனக்கு வாழ்க்கையின்ர அழகான பக்கங்களை முதல் முதல் காட்டினவர் நீங்க. அது எல்லாத்துக்கும்… எல்லாத்துக்குமே தேங்க்ஸ்.” என்று சொன்னவளை அழும் உள்ளத்துடன் பார்த்திருந்தான் அவன்.

“இந்த நிமிசம் உங்களில எனக்கு எந்தக் குறையும் இல்ல. கோபமும் இல்ல. எனக்கு நீங்க எந்தப் பிழையான விசயங்களச் செய்யவும் இல்ல. என்னை நோகடிக்கவும் இல்ல. அதால நம்ப்பிக்கையக் குடுத்தோமே, இடையில விட்டுட்டோமே எண்டு என்னைப் பற்றி நீங்க யோசிக்கவே வேண்டாம்.” என்றபோது நிரோஜன் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு, தன்னைச் சமாளிக்க முயன்றான்.

“லைஃப்ல நீங்க ஆசைப்படுற எல்லாம் நடக்கோணும். நீங்க சந்தோசமா மட்டுமே இருக்கோணும். என்னை மாதிரி இல்லாம, உங்களுக்குப் பிடிச்ச மாதிரி, உங்களுக்கு ஏற்ற மாதிரியான லைஃப் பாட்னர் கட்டாயம் கிடைப்பா. பியூச்சர் இன்னுமின்னும் அழகா உங்களுக்கு அமையும். அதுக்கு என்ர மனம் நிறைஞ்ச வாழ்த்துகள்.” என்றபோது அவன் முற்றிலுமாக நிலைகுலைந்துபோனான்.

வேகமாகத் தன் கண்களைத் துடைத்துக்கொண்டவனுக்கு அவள் முகம் பார்க்கவே முடியாமல் போயிற்று.

அவன் நண்பர்கள் புறம் திரும்பி, “இவ்வளவு காலமும் என்ன செய்றன் எண்டு தெரியாமயே உங்கட ஃபிரண்டை பிடிச்சு வச்சிருந்திட்டன். இப்ப அவரை அவராவே திருப்பித் தந்திட்டன். ஏதாவது ஒரு வகைல உங்க ஆரையாவது நான் காயப்படுத்தியிருந்தா சொறி.” என்று இலேசாகப் புன்னகைத்தாள்.

“என்னம்மா நீங்க?” என்று மகேஷ் தடுமாறினான். அவனுக்கே கண்கள் கலங்கிவிடும் போலாயிற்று.

அதற்கு ஒன்றும் சொல்லாமல் தன் கைப்பையிலிருந்து பொட்டலம் போன்று கைக்குட்டையால் சுற்றியிருந்ததை எடுத்துப் பிரித்து, மேசையின் மேல் வைத்தாள் யாமினி.

அதில் அவன் அவளுக்கென்று வாங்கிக்கொடுத்த நகைகள் அத்தனையும் இருந்தன. “யாமினி பிளீஸ்.” என்றான் தாங்க முடியாமல்.

“இல்ல. எனக்குச் சொந்தமில்லாத எதையும் என்னால வச்சிருக்கேலாது. அது முறையும் இல்ல.”

அதுதான் அவனையும் அவனுக்கே திருப்பித் தந்துவிட்டாளா? அவள் சொன்ன அந்த வார்த்தைகளின் கனத்தை அவன் உள்வாங்கி முடிப்பதற்குள் அவன் கைப்பேசிக்குக் குறுந்தகவல் ஒன்று வந்து விழுந்தது. எடுத்துப் பார்த்தான். அவன் கொடுத்த பணம் அவன் வங்கிக்கு வைப்புச் செய்யப்பட்டிருந்தது. வேகமாய் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

‘இந்தக் காசைத் திருப்பித் தந்து எனக்கும் உனக்குமான உறவை முறிக்க நினைக்கிறியா?’ என்று அன்று அவன் கேட்ட கேள்விக்கு இன்று பதில் சொல்லியிருந்தாள் அவள்.

எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அவள் புறப்பட்டபோது அவனால் அசையக்கூட முடியாமல் போயிற்று.

“என்னம்மா, ஏன் ஒரு மாதிரி நடக்கிறீங்க? காலுக்கு என்ன?” என்ற நவீனின் குரலில்தான் வேகமாக நிமிர்ந்து அவளையும் அவள் காலையும் மாறி மாறிப் பார்த்தான்.

அவள் பார்வையும் அவனிடம் ஒரு முறை சென்று வர, “சின்னதா ஒரு ஆக்சிடென்ட் அண்ணா.” என்றாள் பெயரளவு முறுவலோடு.

அவன் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி.

“எப்ப நடந்தது? எனக்குத் தெரியாதே.” என்றான் அவசரமாக

“ஒரு மாதம் முதல்.”

“ஆனா இப்ப வரை கால் உனக்குச் சரியாகேல்லையே?”

“ஆறு மாதம் ஆகும் எண்டு சொன்னவே.”

அதுவா அவளுக்குச் சின்ன விபத்து? அவள் தொடர்ந்து நடக்க ஆரம்பித்திருக்க அவன் எழுந்து அவளிடம் ஓடி வந்தான்.

திடீரென்று தன் முன்னே வந்து நின்றவனைத் திகைத்துப்போய்ப் பார்த்தாள் யாமினி.

“எனக்கு உண்மையா இது தெரியாது யாமினி.”

“தெரியும்.” என்றாள் அவள்.

அவனுக்கு மேலே என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் தன்னை நம்பவில்லையோ என்று பரிதவித்தான்.

“நீங்க அந்தளவுக்கு மோசமான ஆள் இல்ல. தெரிஞ்சிருந்தா கட்டாயம் பாக்க வந்திருப்பீங்க. குறைஞ்சபட்சமா என்ன நடந்தது எண்டு ஃபோன்லயாவது கேட்டிருப்பீங்க.” என்றவளை மிகுந்த வலியோடு பார்த்து நின்றான்.

“ஆனா இதுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கு. இந்த ஒரு மாதமும் என்னை நீங்க தேடேல்ல. தேடி இருந்தா அஜந்தாட்ட கேட்டிருப்பீங்க. கேட்டிருந்தா இது தெரிய வந்திருக்கும். நான் நினைச்ச மாதிரிக் கோபத்திலையோ அவசரப்பட்டோ அந்தப் பிரிவை நீங்க சொல்லேல்ல எண்டுறதும், எடுத்த முடிவில நீங்க உறுதியாத்தான் இருக்கிறீங்க எண்டுறதும் அப்பதான் எனக்கு கிளியரா விளங்கினது. அதுதான் நான் ஆசைப்பட்ட மாதிரி சேந்து வாழ எங்களுக்குக் கிடைக்கேல்ல. நீங்க ஆசைப்பட்ட பிரிவையாவது தந்து உங்களைச் சந்தோசப்படுத்திப் பாக்கலாமே எண்டு நினைச்சன்.” என்றதும் சட்டென்று முகம் திருப்பித் தன் உணர்வுகளை அடக்கப் போராடினான்.

error: Alert: Content selection is disabled!!