“யமி அக்காக்கு எடுத்துக் கேப்பமா அம்மா?” அவள் என்னவோ சாதாரணமாகத்தான் கேட்டாள்.
ஆனால், “அவளுக்கு எடுக்கிறேல்ல.” என்ற அவனுடைய அவசரமான பதிலில் பெண்கள் இருவரும் சந்தேகமாக அவனை நோக்கினர்.
“அது அவள் ஆக்சிடென்ட் ஆகி ஏலாம இருக்கிறாள்.”
அவர்களைச் சமாளிக்கத்தான் சொன்னான். ஆனால், நடந்ததைக் கேட்டு அறிந்துகொண்ட பெண்கள் இருவரும் பதறிப்போயினர். மகனை முறைத்துவிட்டு உடனேயே யாமினிக்கு அழைத்தார் மல்லிகா.
அங்கே அழைப்புப் போக இங்கே இவன் இதயத்தின் துடிப்பு அதிகமாயிற்று. “ஹலோ கவி!” அது காவியாவின் கைப்பேசி என்பதில் நலிந்து மெலிந்து ஒலித்த அவள் குரலில் அவன் முகம் திருப்பி எங்கோ பார்த்தான்.
“அம்மாச்சி, பஸ்ஸால விழுந்து காயப்பட்டு இருந்தனீங்களாமே. எங்களுக்குத் தெரியாது பிள்ளை. தெரிஞ்சிருக்க அப்பவே எடுத்துக் கதைச்சிருப்பன். குறை நினைக்காதீங்கோ. தம்பி சொல்லாம விட்டுட்டான். இப்ப எப்பிடி இருக்கிறீங்க?” என்று விசாரித்தார் மல்லிகா.
“இதுல குறை நினைக்க ஒண்டும் இல்லை அன்ட்ரி. நான் விழுந்ததும் நேரா வீட்டை போயிட்டன். அதால இஞ்ச கொழும்பில அஜூவைத் தவிர்த்து வேற ஆக்களுக்குத் தெரியாது. நேற்றுத்தான் அவருக்கும் தெரியும். தெரியாம எப்பிடிச் சொல்லுவார்?”
அதற்குமேல் அங்கே இருக்க முடியாமல் எழுந்து தோட்டத்துக்கு நடந்தான். நேற்றும் அவனை அவள் குறை சொல்லவில்லை. பாராட்டினாள். அது மட்டுமல்லாமல் அவளை விட அவனுக்குப் பொறுத்தமான வாழ்க்கைத் துணை கிடைப்பாளாம்.
மேலே யோசிக்கக் கூட முடியாமல் ஆழ மூச்சை இழுத்து வாயால் வெளியேற்றினான் அவன். அப்போதும் உள்ளத்தின் பாரம் குறைவதாக இல்லை. அதிகரித்துத்தான் போனது.
அவள் சொன்னது போன்று, அவளிடம் பிரிவைச் சொல்லிவிட்டு, விட்டது தொல்லை என்று அவன் இருக்கவில்லை.
இப்போதே அவரவர் அவரவர் இயல்பைத் தொலைத்துவிட்டு மற்றவருக்குப் பிடிக்காதவராக மாற ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியிருக்க இது தொடர்ந்து, வெறுப்பையும் கசப்பையும் மட்டுமே மனத்தில் சேர்த்து, அடி நெஞ்சிலிருந்து வெறுத்து, ‘சீ போ!’ என்று ஒருவர் மற்றவரை உதாசீனப்படுத்தும் நிலைக்குப் போக முதலே ஒரு முற்றுப்புள்ளியை வைத்து, சமூகமாகவே இதிலிருந்து வெளியேற விரும்பினான்.
அதற்கென்று அவளில் அக்கறை இல்லை என்று அர்த்தமா? அவள் நலத்தில் கவனம் இல்லை என்று அர்த்தமா?
அவன் பிரிவைச் சொன்ன பிறகு அவள் இரண்டு நாள்கள் கொழும்பிலேயே இருந்தது, பிறகு கிளிநொச்சிக்குப் போனது, திரும்பி வந்தது எல்லாமே அவனுக்குத் தெரியும்.
ஏன், கடைசியாக இரண்டு வாரங்கள் அவள் மெடிக்கல் விடுமுறையில் இருந்தது கூடத் தெரியும். காரணம்தான் அவனால் அறிய முடியாமல் போயிற்று. அவர்களின் அலுவலகத்தில், வேறு ஒரு டீமில் இருந்த ஒருவன் மூலம் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தான்.
அப்படி அவள் மெடிக்கல் விடுமுறையில் இருக்கிறாள் என்று அறிந்ததும் பயந்துபோய் அஜந்தாவிற்கு அழைத்து விசாரித்திருந்தான்.
அதற்குப் பதில் சொல்லாமல், “திரும்பச் சேருற பிளான் இருக்கா உங்களுக்கு?” என்று திருப்பி ஒரு கேள்வி கேட்டாள் அவள்.
இவன் அமைதியாக இருக்க, “இல்லை என்ன? பிறகு என்னத்துக்கு அவளைப் பற்றி விசாரிக்கிறீங்க நிரோஜன்? முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். அவள் உங்களை மறந்து வெளில வரட்டும். தயவு செய்து அவள் எப்பிடி இருக்கிறாள், என்ன செய்றாள் எண்டு கேட்டுக்கொண்டு வராதீங்க. இனி நீங்க எடுத்தா நான் எடுக்க மாட்டன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
இத்தனை பேசிய அஜந்தா, யாமினிக்கு உண்மையில் ஒன்று என்றால் அவனைச் சும்மா விட்டிருக்க மாட்டாள். ஆக, அவள் வேறு எதற்கோதான் அந்த விடுமுறையை எடுத்திருக்கிறாள் என்று அவன் எண்ணியிருந்தான்.
இதையெல்லாம் அவளிடம் சொல்ல விருப்பம் இல்லை. பிரிவைச் சொன்ன பிறகும் உன்மீது நான் அக்கறையாக இருக்கிறேன் என்று காட்டி, அவள் மனத்தில் மறுபடியும் எதிர்பார்ப்பை எப்படி விதைப்பான்?
யாமினியோடு பேசிவிட்டு மகனைத் தேடிக்கொண்டு வந்த மல்லிகா, “அந்தப் பிள்ளையோட ஏதும் சண்டையா தம்பி?” என்று நேராகவே கேட்டார்.
“அப்பிடி அவளோட எனக்கு என்ன சண்டை வர இருக்கு?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
“பிறகு ஏன் எழும்பி வந்திட்டாய்?”
“எனக்கு இருந்த வேற பிரச்சினைகளால அவளை விசாரிக்காம விட்டுட்டன். அதான் கொஞ்சம் மனம் சரியில்ல.” என்று சமாளித்தான்.
இருக்கலாமோ என்று உள்ளே ஓடினாலும், “வேற பிரச்சினை எண்டா என்ன பிரச்சினை உனக்கு?” என்று பழைய கேள்விக்கே வந்தார்.
அன்று மட்டுமில்லை அதன் பிறகு அங்கே அவன் நின்ற இரண்டு நாள்களும் கூட அதைப் பற்றி மட்டும் அவன் வாயைத் திறக்கவேயில்லை.
ஆனால், தள்ளிவிட்டாலும் தாயின் காலடியையே சுற்றி சுற்றி வரும் குழந்தையைப் போல, அவரையே ஒட்டிக்கொண்டு திரிந்தான். அவரைக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போனான். கோயிலுக்கு அவனும் சென்றான். முடிந்தவரை அவருடனேயே இருந்தான். அவர் சமைக்கும்போது அருகில் நின்று சிறுசிறு வேலைகளைத் தானாகவே செய்து உதவினான்.
என்னவோ அவரின் அண்மையில் ஒரு தைரியத்தையும், ஆறுதலையும் உணர்கிறானோ என்றெண்ணி, மேலும் வற்புறுத்தாமல் அவனை அரவணைத்துக்கொண்டார் மல்லிகா.
அவன் புறப்பட்ட அன்று காவ்யாவை வெளியே அனுப்பிவிட்டு, “பெரிய பிழை ஏதும் செய்திட்டியா தம்பி?” என்றார் அவன் அருகில் வந்து அமர்ந்துகொண்டு.
கொஞ்ச நேரம் பேசாமல் இருந்துவிட்டு, “தெரியாம்மா.” என்றான் கரகரத்த குரலில்.
“தெரியா எண்டா எப்பிடி?”
“சரி எண்டு நினைச்சுத்தான் செய்தனான். அப்பிடி அது சரியாயிருந்தா எனக்கு ஃப்ரீயாத்தானே ஃபீல் ஆகோணும். இது என்னோ பெரிய பிழை செய்த மாதிரி, செய்யக் கூடாததைச் செய்த மாதிரி நெஞ்சுக்க என்னவோ எல்லாம் அடைக்குதம்மா. என்ன செய்ய எண்டு தெரியவே இல்லை. ஆனா வேணுமெண்டோ, நோகடிக்கோணும் எண்டு நினைச்சோ செய்யேல்ல.” என்ற மகன் பேச்சைக் கேட்டு அவருக்குக் கண்ணீர் அரும்பிப் போயிற்று.
“அப்பிடி என்னப்பு செய்தனீங்க? அதச் சொன்னாத்தானே இனியாவது என்ன செய்யலாம் எண்டு யோசிக்கலாம்.” என்று இதமாகவும் கேட்டுப் பார்த்தார்.
அவன்தான் அதைப் பற்றிக் கேட்டால் மட்டும் வாயைத் திறக்க மாட்டானே.
“ஆனாலும் உனக்கு இருக்கிற பிடிவாதம் இருக்கே…” என்று கோபப்பட்டவருக்குத் தான் கோபப்படுவதைக் காட்டிலும் அவனை நிலைப்படுத்துவதே முக்கியமாகப் பட்டது.
அதில், “தம்பி, இப்போதைக்கு எதைப் பற்றியும் யோசிக்காத. கொஞ்ச நாள் போகட்டும் விடு. பிறகும் எதையும் எமோஷனலா யோசிக்காத. அறிவால யோசி. அப்பதான் நீ எடுத்த முடிவு சரியா பிழையா எண்டு உனக்கே விளங்கும். சரியா இருந்தா அப்பிடியே இரு. பிழையா இருந்தா அதை நேராக்க என்ன செய்யலாம் எண்டு யோசி.” என்று எடுத்துச் சொன்னார்.
இனியும் எதையும் நேராக்க முடியுமா என்று அவனுக்குத் தெரியவில்லை. முதலில் நேராக்குவது என்றால் என்ன செய்ய வேண்டும்? எதையும் தெளிவாக யோசிக்கவோ முடிவெடுக்கவோ அவனால் முடியவில்லை. அறிவைக் காட்டிலும் உணர்வுகளின் எழுச்சிதான் அவனிடம் மேலோங்கி நின்றன.

