நீ வந்து தங்கிய நெஞ்சில் 29.1

அத்தியாயம் 29

ஒரு வாரம் கடந்திருந்தது. நைட் கிளப் ஒன்றுக்கு நண்பர்கள் எல்லோருமாக வந்திருந்தார்கள். முதலில் நிரோஜனுக்கு வர விருப்பமில்லை. என்னவோ அவனுக்கு எதிலுமே பற்றற்ற நிலை. நவீன் விடவில்லை. வரச் சொல்லி வற்புறுத்தினான்.

எல்லாமே முடிந்துபோயிற்று, இனி அத்தனைலிருந்தும் வெளிவந்துதான் ஆக வேண்டும் என்று அறிவு எடுத்துச் சொன்னதில், இப்படித் தனக்குப் பிடித்த ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று போனாலாவது மெல்லிய ஆறுதல் கிடைக்குமா, தெளிவு கிடைக்குமா, இதிலிருந்து வெளியே வர முடியுமா என்று எண்ணித்தான் வந்தான்.

உள்ளே வந்ததும் மொத்தச் செலவையும் எலோருமாகச் சேர்ந்து பங்கு போட வேண்டும் என்று நவீன் அறிவித்தான். யாரும் ஒன்றும் சொல்லாதபோதும் எல்லோர் பார்வையும் ஒருமுறை நிரோஜனைத் தொட்டு வந்தது.

அவன் ஒன்றுமே சொல்லவில்லை. என்னவோ சொல்லத் தோன்றவில்லை.

விளக்குகள் அணைக்கப்பட்டு, வர்ணஜாலமாய்ப் பலவர்ண விளக்குகள் சுற்றிச் சுழன்று எரிய, டீஜே பாடல்கள் அதிரடியாக ஒலிக்க ஆரம்பித்தன. துள்ளலான இசைக்கு ஏற்ப மொத்த கிளப்பும் ஆட ஆரம்பித்தது.

நிரோஜன் மட்டும் கிடைத்த இருக்கை ஒன்றில் சென்று அமர்ந்துகொண்டான். எங்குப் போனாலும் இதயத்தை இறுக்கிப் பிடித்திருந்த அந்த இறுக்கம் மட்டும் அகலுவதாக இல்லை. அவனுள் பரவிவிட்ட வெறுமை அவனை விட்டு நீங்குவதாக இல்லை. சதா சிந்தனை அவளிடமே ஓடிக்கொண்டிருந்தது.

கிடைக்கிற நேரங்களில் எல்லாம் அவளோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்பாட்டுக்குக் கைகள் தட்டி தட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தன. அவ்வபோது அவளின் சிரித்த முகத்தை, அழகிய விழிகளை, அவனுக்குப் பிடித்த ஜும்காவை, அந்த நீண்ட கூந்தலை, அதில் அவன் விளையாடிய பொழுதுகளை எல்லாம் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இது பிரயோசனமற்ற வேலை என்று புரியாமல் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பிரிவைச் சொன்னபிறகு இப்படி அவளை பார்ப்பது தவறு என்றும் தெரியாமல் இல்லை. ஆனால், அவளுடன் பிணைக்கப்பட்டிருந்த உணர்வுகள் அத்தனையும் அவற்றிலிருந்து வெளிவரமாட்டோம் என்று சண்டித்தனம் செய்தன.

அவன் தோளில் ஒரு கை படிந்தது. நிமிர்ந்து பார்த்தான். நவீன் பக்கத்தில் வந்து அமர்ந்தான். “இப்பிடி அவளையே நினைச்சுக்கொண்டு இருக்கிறதுக்கு அவளோட கதையடா.” என்று சொன்னான் அவன்.

கொஞ்ச நேரம் அப்படியே இருந்துவிட்டு மறுப்பாகத் தலையை அசைத்தான் நிரோஜன்.

“அவளை வெறுத்திட்டியா?”

அப்படித்தான் நினைத்திருந்தான். பிறகு எதற்கு இரண்டு மாதங்களாகியும் இந்த நரக வேதனை என்று அவனுக்குப் புரியவேயில்லை.

“என்ன மச்சான்?”

“விடுடா!” என்றான் ஒரு வகை விரக்தியுடன்.

“அவளும் சந்தோசமா இல்லையடா. அண்டைக்கு எப்பிடி அழுதாள் எண்டு பாத்தாய்தானே?”

அந்த அழுத முகம்தானே அவனைத் துரத்திக்கொண்டேயிருக்கிறது.

“நாங்க ஆரும் கதைக்கவா? இல்ல, அசோகன் அண்ணாவை விட்டு எண்டாலும் கதைக்கலாம்.” நண்பன் தனக்குள் படுகிற பாட்டைப் பார்க்க முடியாமல் கேட்டான் நவீன்.

“என்ன கதைக்கப்போறீங்க?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

நவீன் பதிலற்றுப் பார்க்க, “இஞ்ச சமாதானமாகிறது முக்கியம் இல்ல மச்சான். அதுக்குப் பிறகு சண்டை சச்சரவு இல்லாம ரெண்டு பேரும் சந்தோசமா வாழோணும். அவளை நானோ என்னை அவளோ காயப்படுத்தக் கூடாது. அது நடக்குமா சொல்லு?” என்று கேட்டான்.

“என்ர நிலைப்பாட்டில் எனக்கு மாற்றமில்லை. அவளின்ர நிலைப்பாட்டில அவளுக்கு மாற்றமில்லை. அப்பிடி இருக்க நாங்க திரும்பவும் சேந்தாலும் அது சண்டை பிரிவு எண்டுதான் வந்து நிக்கும்.”

“இந்தளவுக்குத் தெளிவா இருக்கிறவன் பிறகும் எதுக்கடா அவளையே நினைச்சுக்கொண்டிருக்கிறாய்?” நவீனுக்குக் கோபமே வந்தது.

பழகி இருக்கிறானே. உயிராக நேசித்திருக்கிறானே. அந்த நாள்களை எல்லாம் என்ன செய்ய?

“சரி, இனி என்ன செய்யப்போறாய்? அதையாவது சொல்லு.”

அது தெரியாமல்தானே கிடந்து தினம் தினம் சாகிறான்.

“ஒரு பியர் சொல்லவா?” அவனைக் கொஞ்சம் குளிர்விக்க எண்ணி வினவினான்.

மறுப்பாகத் தலையசைத்தான்.

“குடி மச்சான். நல்லாருக்கும்.”

“ப்ச் விடு!”

“ஏன்?”

“அவளுக்குப் பிடிக்காது.” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.

*****

என்னவென்று பிரித்துணர முடியாத ஒருவிதமான மனநிலையில் திலினி நடமாடிக்கொண்டிருந்தாள். அவள் பார்த்து ஆசைப்பட்ட காதல் முறிந்துபோயிற்று. அதைவிடவும் அவளைப் பாதித்தது, அந்தக் காதலன் முற்றிலுமாக உடைந்து நிற்கும் விதம்.

துள்ளலும் துடிப்புமாக இருந்த ஒருவனை ஒரு காதல் இப்படி மாற்றுமா என்று அவளால் நம்ப முடியவில்லை. அந்தளவில் ஒரு வகை இறுக்கம், சிரிப்பற்ற முகம், சுளித்தே கிடக்கும் புருவங்கள் என்று நிரோஜன் ஆளே மாறியிருந்தான்.

அவர்கள் இருவரும் ஒரு இடத்தில் இருந்தால் அவள் விழிகள் அவர்களையே சுற்றி வரும். ஏன் என்று அவளுக்குத் தெரியாது. அத்தனை அழகாய், நேர்த்தியாய் அந்தக் காதலைக் கையாள்வார்கள்.

ஒட்டி, உரசி என்று சுற்றியிருக்கிறவர்கள் சங்கடப்படும் விதமாய் ஒரு நாள் கூட நடந்ததில்லை. அதே நேரத்தில் இருவருக்கிடையிலான அந்த அன்பு பிரத்தியேகமாகத் தெரியும்.

அதுவும் நிரோஜன் கண்களில் சிரிப்புடன் அவளிடம் பரிமாறும் அந்தப் பார்வைகளும், போகிற போக்கில் இலேசாய்த் தோளால் அவளைத் தட்டிவிட்டுப் போவதும், அவள் எதிர்பாரா நேரத்தில் வாய்க்குள் எதையாவது அடைந்துவிட்டுப் போவதும், அவளையே சுற்றி சுற்றி வந்து ஆடும் அழகையும் காண கண் கோடி வேண்டும் என்று நினைப்பாள்.

பல நேரங்களில் தன்னை மறந்து அவர்களையே பார்த்துவிட்டு, யாராவது கவனித்திருப்பார்களோ என்று அவசரமாய்ப் பார்வையை அகற்றிக்கொண்டிருக்கிறாள். அந்தளவில் அவர்கள் நேசத்தின் மீது ஒரு ஈர்ப்பு, இப்படி ஒரு காதல் எனக்கு இல்லையே என்கிற ஏக்கம் என்று அவளுக்குச் சொல்லத் தெரியாது. ஆனால், அவர்களின் சின்ன சின்ன அசைவுகளைக் கூடக் கவனிப்பாள்.

அன்றும் அலுவலகம் வரை யாமினி தேடி வந்தபோது அவர்களைத்தான் கவனித்துக்கொண்டிருந்தாள். யாமினி அழுதது, அவளை அழைத்துக்கொண்டு நிரோஜன் கீழே போனதை எல்லாம் பார்த்துவிட்டு அவளும் இறங்கி வந்தாள்.

சும்மா அந்தப் பக்கமாகப் போவது போல் போய், என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்பதுதான் அவள் திட்டமாக இருந்தது.

யாமினி அப்படிச் சத்தமாக அழைத்துத் திட்டுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்ட செய்தி அவள் காதையும் எட்டியிருந்தது.

இரகசியமான சந்தோச ஊற்று அவளுள். ஏன் என்று அவளுக்கே தெளிவில்லை. மெல்ல மெல்ல நிரோஜனுக்கு இதமாக நடக்க முயன்றாள். அலுவலக வேலையில் அவன் சொல்வதை உன்னிப்பாகக் கவனித்தாள். தனக்கான ப்ராஜெக்டுகளை, அசைமெண்டுகளை மற்றவர்களிடம் உதவி கேட்டாவது அவன் சொல்லும் நேரத்திற்குள் முடித்துக் கொடுத்தாள். சந்தர்ப்பம் அமைந்தால் அவனோடு பேசினாள். அவனுக்கு இதமாக நடக்க முயன்றாள்.

error: Alert: Content selection is disabled!!