நீ வந்து தங்கிய நெஞ்சில் 29.2

*****

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்திருந்தன. அஜந்தா எப்போதோ பேப்பர் போட்டுவிட்டு வவுனியாவுக்கு நிரந்தரமாகச் சென்றிருந்தாள்.

யாமினியைத் தனியாக விட்டுவிட்டுப் போவது கவலைதான். ஆனால், திருமணத்திற்கு முதலே திவாகரைக் கொண்டு வவுனியாவில் இருந்த நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தாள். அது கிடைத்துவிட்டதில் அவளால் ஒன்றுமே செய்ய இயலாமல் போயிற்று.

யாமினி கலங்காமல் இல்லை. ஆனால், மலையாக நம்பிய துணையே இல்லை என்றான பிறகும் வாழ்கிறாளாம். இதைத் தாங்க மாட்டாளா என்கிற மனநிலையோடுதான் தோழியை அனுப்பி வைத்தாள்.

ஆனால், ஒரு வாரம் கூட அவளால் தனியாகத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மழை நின்ற பின்னும் தீராமல் தூறும் தூறல் போன்று, எல்லாம் முடிந்துவிட்டது என்றான பின்னும் நீங்காமல் நின்று அவளை வதைக்கும் நிரோஜனின் நினைவுகளை ஒன்றுமே செய்ய இயலவில்லை.

கடைசியில் தனக்கும் அங்கே வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு அஜந்தாவிடம் சொல்லிவிட்டு, இங்கே பேப்பர் போட்டுவிட்டாள். இப்போது கடைசி ஒரு மாதத்திற்கு, ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ வாங்கிக்கொண்டு மொத்தமாகக் கொழும்பை விட்டே புறப்பட ஆயத்தமாகினாள்.

ஒரு காலத்தில் இங்கிருந்து போகும் நிலை வந்துவிடுமோ, அவனைப் பிரிந்திருக்க வேண்டி வந்துவிடுமோ என்றுதான் அவர்களின் காதலைப் பற்றி வீட்டில் சொல்லாமல், என்னென்னவோ காரணங்கள் சொல்லித் திருமணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தாள்.

ஆனால் இன்று அவளாகவே புறப்படுகிறாள்.

“யாமினி!”

ஆதவனின் குரல் கேட்டு வேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு, “ஓம் அத்தான்!” என்றபடி அறையை விட்டு வெளியே வந்தாள்.

மாதங்கி பெறுமாதத்தை நெருங்கும் நிலை என்பதில் அவளும் நாகேஸ்வரியும் வரவில்லை. ஆதவன் மட்டுமே இவளின் பொருள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போக வந்திருந்தான்.

“இது என்னம்மா ஒரு பேக் மட்டும் தனியா கட்டி வச்சிருக்கிறீங்க?”

“அது தேவை இல்லாத உடுப்புகள் அத்தான். ஏதாவது இல்லத்துக்குக் குடுத்திட்டுப் போகலாமே எண்டு எடுத்து வச்சனான்.” என்று அவள் பதில் சொல்லும்போதே வீட்டின் அழைப்புமணி ஒலித்தது.

கதவைத் திறந்தவள் சத்தியமாக நிரோஜனையும் நவீனையும் எதிர்பார்க்கவில்லை. இதயம் தன் துடிப்பை நிறுத்திவிட அவனையே பார்த்து நின்றாள்.

தெரிந்தே வந்தபோதிலும் அவளைக் கண்ட கணத்தில் நிரோஜனும் தடுமாறிப்போனான். அதைவிட அந்த வீடு? அவளோடான முதல் தனிமை, முதல் நெருக்கம், முதல் முத்தம் என்று எல்லாம் அங்கேதான் நிகழ்ந்திருக்கின்றன. முதல் காதலின் முதல் பிரிவு கூட அங்கேதான் நிகழ்ந்தது. தொண்டைக்குள் எதுவோ சிக்கிக்கொள்ள, “ஆதவன் அண்ணா?” என்று கேள்வியாய் இழுத்தான்.

அவள் பதில் சொல்லும் அவசியமே இல்லாமல், “வாங்கோ நிரோஜன், வாங்கோ நவீன். சொறி உங்களுக்குத் தொந்தரவு தந்திட்டேனா தெரியாது. ஆனா நீங்க வந்தது பெரிய ஹெல்ப்.” என்றபடி வந்தான் ஆதவன்.

அங்கே என்ன நடக்கிறது என்று கிரகிக்கக் கூட முடியாமல் சிலையாகி நின்றிருந்தாள் யாமினி.

முதல் நாள் மாலை ஆதவன் நிரோஜனுக்கு அழைத்திருந்தான். ஏனோ என்று ஒரு கணம் யோசித்துவிட்டுத் தயக்கத்துடன்தான் அழைப்பை ஏற்றிருந்தான்.

அவர்கள் எல்லோரினதும் நலனையும் விசாரித்துவிட்டு, யாமினி வேறு வேலைக்கு மாறிக்கொண்டு வவுனியா வரப்போகிறாள் என்றும், அவள் வீட்டை ஒதுக்கி, பொருள்களை ஏற்றுவதற்கு உதவி செய்ய முடியுமா என்றும் கேட்டிருந்தான் ஆதவன்.

அஜந்தா இங்கிருந்து போனது நிரோஜனுக்குத் தெரியும். அப்போதே இதை ஏதோ ஒரு வகையில் அவன் எதிர்பார்த்தான். என்றாலும் அவள் புறப்படுகிறாள் என்று தெரிந்தபோது ஊமையாக ஒரு வலி உள்ளே ஊடுருவிற்று.

இன்று போகிறவள் இனி அப்படியே போய்விடுவாள். தொடர்புகள் முற்றிலுமாக அறுந்துவிடும். கைப்பேசி எண்கள் மாறும், காலம் ஓடும், வேறு ஊர், வேறு நண்பர்கள், வேறு அலுவலகம், அப்படியே வேறு வாழ்க்கை, அந்த வாழ்க்கையில் வேறு… மேலே யோசிக்க முடியாமல் எழுந்துவிட்டான்.

என்னவோ மூச்சடைத்து இதயம் வெடித்துவிடும் போன்று ஒரு அழுத்தம்.

“சொறி நிரோஜன், உங்களுக்கு வேலை இருக்கு எண்டால் சொல்லுங்கோ. எனக்கு விளங்கும்.” என்று ஆதவன் சொன்னபோதுதான் அவனுக்குப் பதிலே சொல்லாமல் இருந்திருக்கிறோம் என்று உரைத்தது

“சேச்சே! அப்பிடி எல்லாம் இல்லை அண்ணா. நாங்க வாறம்.” என்று சொன்னவன் இதோ இன்று வந்து நிற்கிறான்.

மகேஸும் மித்ரனும் வந்துவிட விறுவிறுவென்று கொண்டுபோகும் அத்தனை பொருள்களையும் அதற்கென்று ஏற்பாடு செய்த வாகனத்தில் ஏற்றினார்கள்.

தேவை இல்லாத உடுப்புகள் என்று யாமினி சொன்ன பையைக் காட்டி, “இஞ்ச உங்களுக்குத் தெரிஞ்ச இல்லம் ஏதும் இருக்கா நிரோஜன்?” என்ற ஆதவனின் கேள்வியில் அந்தப் பையைப் பார்த்தான் நிரோஜன்.

அதிலிருந்தவை அனைத்தும் அவன் அவளுக்கு வாங்கிக்கொடுத்தவை. அவன் பார்வை மிகுந்த மனத்தாங்கலுடன் யாமினியிடம் சென்றுவர, “இத இஞ்சயே விட்டுட்டுப் போங்க அண்ணா. நானே பாத்துக் குடுத்துவிடுறன்.” என்று சொன்னான்.

“இல்ல, நானே போற வழில போடுறன்.” என்றுவிட்டுத் தானே எடுத்துக்கொண்டு சென்று வாகனத்தில் ஏறியிருந்தாள் யாமினி.

ஆதவனின் புருவங்கள் சுருங்கி மீள, நிரோஜனும் யாமினியும் அவன் பார்வையைச் சந்திக்காமல் தவிர்த்தனர்.

ஏற்கனவே யாரிடமும் பகிர முடியாத, நெஞ்சு வெடிக்கும் துயருடன் நடமாடிக்கொண்டிருந்தவள், அதற்குப் பிறகு நிரோஜன் முன்னே நிற்க முடியாமல் அறைக்குள் புகுந்துகொண்டாள். அவள் நிற்பது அறியாமல் அங்கு இன்னும் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க வந்த நிரோஜன், அவளைக் கண்டுவிட்டு நின்றான்.

அப்படி அறைக்குள் அவன் வருவான் என்று எதிர்பாராதவள் அங்கிருந்து வெளியேற முனைய, “யாமினி, ஒரு நிமிசம்!” என்றான் அவசரமாக.

“நிறையச் சொல்லோணும் மாதிரி இருக்கு. அதே நேரம் என்ன கதைக்க எண்டும் தெரியேல்ல. ஆனா, அண்டைக்கு அறைஞ்சதுக்கு, அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு விட்ட வார்த்தைகளுக்கு, உன்னை அழ வச்சதுக்கு, நோகடிச்சதுக்கு எல்லாம் சொறி யாமினி. ஆனா ஒரு நாள் கூட உன்னை காயப்படுத்தோணும் எண்டு நினைச்சு எதையும் நான் செய்யேல்ல.” என்றான் பரிதவிப்புடன்.

அதற்கு ஒன்றும் சொல்லாமல் அறையிலிருந்து வெளியேறியவள் மொத்தமாகக் கொழும்பிலிருந்தும் புறப்பட்டிருந்தாள்.

error: Alert: Content selection is disabled!!