நீ வந்து தங்கிய நெஞ்சில் 30.2

“எனக்கு… எனக்கு…”

“என்ன உனக்கு? சொல்லு.” அவள் தடுமாறுவதைக் கண்டு அவனுக்குச் சிரிப்பு உண்டாயிற்று.

“இல்ல. அது யாமினிய நீங்க மறந்திட்டீங்களா?

உணவை அள்ளி வாயிலிடப் போனவன் ஒருகணம் தன் அசைவை நிறுத்தினான். மறந்துவிட்டானா என்ன? அவள் அருகில் இருந்தபோது கூட இந்தளவில் அவள் நினைவாகவே சுற்றியதில்லை. ஆனால் இப்போதெல்லாம்… கண்ணை எட்டாத சிறு முறுவலோடு, “ம் மறந்தாச்சு!” என்றான்.

திலினியின் முகம் மலர்ந்துபோயிற்று.

“சூப்பர் நிரு. இதுதான் உங்களிட்ட எனக்குப் பிடிச்சதே.”

“ம்ஹூம்!” என்றான் என்னவென்று பிரித்தறிய முடியா பாவத்தோடு.

“உங்களிட்ட ஒண்டு சொல்லோணும்.”

இவள் எதற்கு இத்தனை பீடிகை போடுகிறாள் என்று பார்த்தான் அவன்.

“அது… எனக்கு வீட்டில கலியாணத்துக்குப் பாக்கினம்.”

“ஹேய் உண்மையாவா? அப்ப அடுத்த டும் டும் உனக்குத்தான்.” என்றான் அவன் உற்சாகமாய்.

“அது சிங்களம், தமிழ் எண்டு பாகுபாடெல்லாம் எங்கட வீட்டில பாக்காயினம்.”

“நல்ல விசயம்.”

“அதான் நிரு. நீங்க வந்து வீட்டுல கதைக்கிறீங்களா?”

“நான் ஏன்…” என்று கேட்க வந்தவன் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். தான் புரிந்துகொண்டதைத்தான் அவள் சொன்னாளா என்று ஒரு சந்தேகம். அதே நேரத்தில் ஒரு கோபம் சுர்ர் என்று உச்சிக்கு ஏறிக்கொண்டு வந்தது.

“அது நிரு…” என்று அவள் சொல்ல ஆரம்பிக்கையிலேயே வேகமாய் எழுந்து வெளியே வந்துவிட்டான்.

யாரிடம் வந்து என்ன சொல்கிறாள்? யார் இடத்தில் யார்? என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் அவனைப் பற்றி? அவனுக்கு அவனைச் சமாளித்துக்கொள்ளச் சிலபல நிமிடங்கள் தேவையாயிற்று.

திலினிக்கு உள்ளே நடுங்கியது. திரும்பி நவீனைக் கலக்கத்துடன் பார்த்தாள். இவர்களில் கவனமாக இருந்த அவனும், ‘போ!’ என்று தலையாட்டினான்.

அவன் தந்த தைரியத்தில் வெளியே வந்து பார்த்தாள். அங்கே அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான் அவன்.

“நிரு.”

அவன் திரும்பவில்லை.

“எனக்கு உங்களப் பிடிக்கும். நீங்க யாமினிய லவ் பண்ணின விதம் பிடிக்கும். உங்கட லவ் பிரேக் அப் ஆகிற வரைக்கும் இப்பிடி யோசிச்சதே இல்ல. ஆனா இப்ப அந்த லவ்வ எனக்கே எனக்கு எண்டு எடுக்க ஆசையா இருக்கு.” என்று சொல்லி முடிக்க முதலே, “வாயை மூடு!” என்றிருந்தான் அவன்.

அவள் நடுங்கிப்போனாள். இதுவரை அவன் கோபத்தை அவள் எதிர்கொண்டதில்லை.

“அசிங்கமா இல்லையா உனக்கு? ஒரு ஃபிரெண்டா பழகினவனிட்ட வந்து இப்பிடிச் சொல்லுறாய்?” என்றதும் அவளுக்கு விழிகள் கலங்கிப்போயிற்று.

“ஆனா உன்னில பிழை இல்ல. அவள் அப்பவே சொன்னவள். நான்தான் கேக்கேல்லை. ஆருக்கு எந்தளவுக்கு இடம் குடுக்கோணும் எண்டு தெரியாம ஆடினதுக்கு இதையெல்லாம் கேக்கத்தான் வேணும் போல!” என்றவனுக்கு அவன் மீதுதான் அத்தனை கோபமும்.

அங்கே நவீன் வரவும், “இவளை மரியாதையா போகச் சொல்லு மச்சான். இனி என்னோட இவள் கதைக்கவே கூடாது. நாளைக்கே டீமை மாத்துறன்.” என்று ஆத்திரப்பட்டான்.

என்னவோ யாமினிக்குத் துரோகம் செய்வதுபோல் உள்ளமெல்லாம் பதறிப்போயிற்று. அந்த நொடியில் அவளை அவளின் இல்லாமையை மிகப் பெரிதாய் உணர்ந்தான்.

“ஓம் எண்டா ஓம் எண்டு சொல்லு. இல்லை எண்டா இல்லை எண்டு சொல்லு. அத விட்டுட்டு என்னத்துக்கு உனக்கு இவ்வளவு கோபம்?” என்று கேட்டான் நவீன்.

சட்டென்று அவன் புறம் திரும்பினான் நிரோஜன். “அப்ப உனக்கு இது ஏற்கனவே தெரியும்.” என்றான் பார்வையில் கூர்மையோடு.

“ஓம், என்னட்டத்தான் வந்து சொன்னவள். நான்தான் உன்னோட கதைக்கச் சொன்னனான்.” என்றவனைக் கொஞ்சம் அதிர்ச்சியோடு பார்த்தான் நிரோஜன்.

“என்ன பார்வை? காலம் முழுக்க இப்பிடியே இருக்கப் போறியா? இப்ப நீ சிங்கிள்தானே?” என்றான் அவன்.

சிங்கிளா? அவன் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி. அவன் உணர்வுகளும் உள்ளமும் எப்போதோ ஒருத்தியோடு பிணைக்கப்பட்டுவிட்டன. இன்றைக்கு அவர்கள் பிரிந்திருக்கலாம். அவள் அவனை விட்டு மொத்தமாகவே போயிருக்கலாம். அதற்கென்று அவன் தனியனா என்ன?

நிலைகுலைந்துபோனவன் நவீனிடம் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து விலகி நடக்க ஆரம்பித்தான்.

அடுத்தடுத்த நாள்களிலேயே திலினியை டீம் மாற்றிவிட்டிருந்தான். நவீனிடம் முகம் கொடுக்கவும் இல்லை. ஒரு கோபம்.

“டேய் இஞ்ச பார்! நீ முகத்தைத் திருப்பிக்கொண்டு போறதால நான் செய்தது பிழை ஆகாது. இஞ்ச இருந்து போயிருந்தாலும் அவள் வவுனியாவிலதான் இருக்கிறாள். நீ நினைச்சா இப்பவும் போய்ப் பாக்கலாம், கதைக்கலாம், சமாதானமாகலாம். ஆனா நீ அது எதையும் செய்யாம பேசாம இருக்கிறாய். அப்ப உன்ர முடிவில மாற்றம் இல்லை போல எண்டு நினைச்சுச் சொன்னன். இதுல என்ன பிழை இருக்கு?” என்று கோபப்பட்டான் நவீன்.

அவன் சொன்னதில் இருந்த நியாயம் புரிந்தாலும் கோபம் போவதாய் இல்லை.

“இல்ல தெரியாமக் கேக்கிறன், நீயும் அவளும் என்ன காலம் முழுக்க இப்பிடியே இருக்கப்போறீங்களா? ஏதோ ஒரு கட்டத்தில அவள் ஒருத்தனையும் நீ ஒருத்தியையும் கட்டத்தானே போறீங்க. இடுப்பில ஒண்டு கைல ஒண்டு எண்டு தூக்கிக்கொண்டு திரியாத்தானே போறீங்க. இதுக்க அவருக்குக் கோபமாம். போடா டேய்!” என்றுவிட்டு அவன் போய்விட, நிரோஜன் அப்படியே அமர்ந்துவிட்டான்.

அவன் சொன்னதில் இருந்த உண்மையை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. அன்றிலிருந்து அவனுள் பெரும் அலைப்புறுதல். அவளை இன்னொருவனோடு கற்பனை செய்யவே முடியவில்லை.

error: Alert: Content selection is disabled!!