நீ வந்து தங்கிய நெஞ்சில் 38.2

“நல்லாருக்கிறன் அன்ட்ரி. நீங்க?” அடைப்பு நீங்காத குரலிலேயே வினவினாள்.

“எங்களுக்கு என்னம்மா. சந்தோசமான விஷயம் கேள்விப்பட்ட சந்தோசத்தில் இருக்கிறம்.” என்று காவியாவைப் பற்றி அவரும் பகிர்ந்துகொண்டார்.

அவள் சொல்லாமல் கொள்ளாமல் போனதைப் பற்றி எதுவும் பேசாமல் அவள் நலத்தை, அங்கே பொருந்திக்கொண்டாளா என்பதை, அந்த ஊரைப் பற்றி என்று பொதுவாகக் கேட்டுப் பேச்சை நகர்த்தினார்.

அதுவே யாமினியைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிற்று.

“சொறி அன்ட்ரி. சொல்லாம வந்திருக்கக் கூடாது. ஆனா வேணுமெண்டு செய்யேல்ல.” என்றாள் சங்கடமும் கண்ணீருமாக.

ஒன்றுமே சொல்லாமல் அவளையே பார்த்தவர் சிறு புன்னகையை மட்டுமே சிந்த, அதுவே அவளுக்குப் பெரும் தண்டனையாகிப் போயிற்று. அவள் விழிகள் மளுக்கென்று கண்ணீரைத் தள்ள, “உண்மையாவே சொறி அன்ட்ரி.” என்றாள் மறுபடியும்.

“அம்மாச்சி என்னம்மா?”

ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தபடி கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டு அழுத விழிகளோடு அவரை பார்த்துப் புன்னகைக்க முயன்றாள்.

“இந்தத் துன்பம் தேவையாம்மா?” என்றார் பொறுக்க முடியாமல்.

மறுபடியும் அவளுக்குக் கண்ணீர் பொங்கி வழிந்தது. இப்படி அழுவது அவளுக்கே பிடிக்கவில்லை. ஆனால், கண்ணீரைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

மொத்தமாகத் தனியாக வந்துவிட்டதும், மூன்று மாதங்களின் பின் அவன் உறவுகளோடு பேசுகிறோம் என்கிற நினைப்பும், அவனும் அங்கேதான் இருக்கிறான் என்பதும் அவளை முற்றிலுமாக உடைத்திருந்தன.

“என்னட்ட ஏதாவது சொல்லோணுமம்மா?”

நொடியில் அவளுக்குள் ஓராயிரம் உணர்வலைகள் பொங்கி எழும்பின. தொண்டையைக் கவ்விக் பிடித்த துக்கத்தை விழுங்கிக்கொண்டு, இல்லை என்பதுபோல் குறுக்காகத் தலையை அசைத்தாள்.

“தம்பியப் பற்றிச் சொல்லவும் ஒண்டும் இல்லையா?”

“அன்ட்ரி!” அவளுக்குப் பேச்சே வரவில்லை. ஒருவித அதிர்ச்சி தாக்க, அவர் விழிகளைச் சந்திக்க முடியாமல் தடுமாறினாள்.

“ஆனா எனக்கு அவனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லோணுமாச்சி. ஒரு நாள் என்னட்ட வந்து, ஒரு உயிரை நோகடிச்சிட்டன் அம்மா எண்டு அழுதான். இப்ப வரை என்ன நடந்தது, ஆரை நோகடிச்சான் எண்டு சொல்லவே இல்ல. கலியாணத்தையும் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறான். எனக்கு விளங்குற மாதிரிக்கு அவன் ஆரோ ஒருத்தரின்ர மன்னிப்புக்காக காத்திருக்கிறான் எண்டு நினைக்கிறன். மன்னிப்புக் கிடைக்குமா எண்டுதான் தெரியேல்ல.”

அவர் சொல்ல சொல்ல வெடித்த விம்மலை அடக்க முடியாமல், கைப்பேசியைக் கவிழ்த்து வைத்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு விசும்பி அழுதாள் அவள்.

“அம்மாச்சி யாமினி!” அவள் அழும் சத்தம் மட்டுமே கேட்க பரிதவிப்புடன் அழைத்தார் மல்லிகா.

“ஒன்றுமில்லை அன்ட்ரி. ஒரு நிமிஷம்.” என்றுவிட்டு ஓடிப்போய் முகத்தை அடித்துக் கழுவித் துடைத்துக்கொண்டு வந்து, கைப்பேசியை மறுபடியும் நிமிர்த்தி வைத்தாள்

அவளைப் பார்த்த அவருக்கும் விழிகள் கலங்கின. ஆனாலும் விடாமல், “மன்னிக்கக் கூடிய பிழைகள், மன்னிக்கவே கூடாத பிழைகள் எண்டு இருக்கம்மா. மன்னிக்கக் கூடியது எண்டா மன்னிச்சு விட்டுடலாம். ஆருக்குக் குடுக்கிறோமோ அவேக்கு மட்டும்தான் தண்டனை வலிக்கோணும். குடுக்கிற எங்களுக்கும் வலிக்குது எண்டா அந்தத் தண்டனைல எங்களுக்கே உடன்பாடு இல்லை எண்டு அர்த்தம். அவேய நாங்க அந்தளவுக்கு நேசிக்கிறோம் எண்டு அர்த்தம். யோசிங்கோ என்னம்மா.” என்று சொல்லிவிட்டு வைத்திருந்தார் அவர்.

அவள் குரலைக் கேட்க வேண்டாம், அவளைப் பார்க்க வேண்டாம் என்று விலகி வந்திருந்தாலும் நிரோஜனால் நிறைய நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இப்போது விட்டால் இனி எப்போது அவள் குரலைக் கேட்போம் என்கிற தவிப்பில் வந்து நின்றிருந்தவன், அவள் அழுததில் இருந்து அன்னை அவளோடு பேசிய அனைத்தையும் கேட்டிருந்தான்.

அவன் கண்களிலும் கண்ணீர். இப்போது என்னைப் பார்க்காமல், என்னோடு கதைக்காமல் அவளால் இருக்க முடிகிறதுதானே என்று கோபம் கொள்ள முடியவில்லை. அன்னை சொன்னதுபோல் அவனுக்குத் தண்டனை என்றுவிட்டு அதன் வேதனையை அவள் அனுபவிப்பது புரிந்தது.

இதற்கு என்ன செய்ய என்றுதான் தெரியவில்லை. நடுவில் இந்த இரண்டு வருடங்கள் நரகமாய்த் தெரிந்தது.

காவ்யாவுக்குப் பழக்கலவை செய்துகொண்டிருந்த மல்லிகாவின் அருகில் வந்து நின்றான். அவர் வெட்ட என்று எடுத்து வைத்த பழங்களை எடுத்து, தானே வெட்ட ஆரம்பித்தான். அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த வேலைகளைத் தான் பார்த்தார் மல்லிகா.

“அம்மா!”

“ம்!”

“அம்மா!”

“என்ன தம்பி!”

“அவளிட்ட கோபப்படாதீங்க.”

“எவளிட்ட?”

அவர் கேட்ட தொனியில் திரும்பி முறைத்தான்.

“என்ன பார்வை?” அவர் அவனுக்கு மேலால் அதட்டினார்.

“அது யமி… யாமினிட்ட.” சட்டென்று தணிந்து தன்மையாகச் சொன்னான்.

“ஓ சரி!”

“அது… பிழை என்னிலதான்.”

“ஓ!”

“அம்மா!” என்று பல்லைக் கடித்தான் அவன்.

“அம்மாவை ஏலம் விடாம விசயத்த சொல்லு!” என்றார் அவர்.

“அவளோட ஒவ்வொரு நாளும் எடுத்துக் கதைங்க!” என்றவனைத் திரும்பி நன்றாக முறைத்தார் மல்லிகா.

“ஜெர்மன் போகப்போறன் எண்டு ஒரு வார்த்தை சொல்லேல்ல. போன பிறகும் எடுத்து கதைக்கேல்ல. இப்பவும் கவியா எடுத்ததால கதைச்ச பிள்ளையோட ஒவ்வொரு நாளும் எடுத்துக் கதைக்க, நான் என்ன சோத்தில உப்புப் போடாம சாப்பிடுறனே?” என்றவரை படு பயங்கரமாக முறைத்தான் அவன்.

“என்ன பார்வை? ஒழுங்கா வேலையப் பார்! அவா ஒரு ஆள் எண்டு அவாக்கு எடுத்துக் கதைச்சுக்கொண்டு இருக்கிறன் நான்!” என்றதும் தன் கோபத்தை வெட்டும் பழங்களில் காட்டிக்கொண்டிருந்தான் அவன்.

கொஞ்ச நேரம் சென்றது. மீண்டும், “அம்மா!” என்றான்.

“இப்ப என்ன?”

“அவள் பாவம் அம்மா. அவளிட்ட நீங்களும் கோபப்படாதீங்க.” என்று சொல்லும்போதே அவனுக்கு குரல் இலேசாக அடித்துக்கொண்டது.

அவ்வளவு நேரமாக அவனோடு விளையாடிப்பார்த்தவர் கை வேலையை நிறுத்திவிட்டுத் திரும்பி அவனைப் பார்த்தார். நீங்களும் என்றால்? கேட்டாலும் சொல்ல மாட்டானே. அதில் அவனாகவே பேசட்டும் என்று காத்திருந்தார்.

“அவள் ஏன் ஜெர்மன் போயிருக்கிறாள் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, அவள் தந்தை இறந்தது, அதன் பிறகு அவள் தமக்கை, தாயினது மாறிவிட்ட குணங்கள், அதனால் பாதுகாப்பற்ற தனிமையை அவள் உணர்ந்தது, அது தந்த பயத்தில் குறைந்த பட்சமாக பணமாவது கையில் இருக்க வேண்டும் என்று போனது என்று சொல்லவும் அழுதுவிட்டார் மல்லிகா.

காவியாவை விட ஒரு வயது மட்டுமே பெரியவள். இங்கே இன்னுமே காவியா சின்ன குழந்தை போல் மொத்த வீட்டுக்கும் செல்லப்பிள்ளையாக இருக்க, அங்கே அவள் தனக்கானதைத் தானே சேர்க்கப் போயிருக்கிறாள்.

சுய சம்பாத்தியமும் சொந்தக்காலில் நிற்பதும் பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விடயங்கள்தான். அது வேறு. ஆனால், அனாதரவற்ற நிலையில் அப்படி ஒரு முடிவை எடுப்பது என்பது?

“அப்பிடி இருந்த பிள்ளையத்தான் நீயும் நோகடிச்சியா தம்பி?” என்று கெட்டவரிடம் தனக்கும் அவளுக்கும் நடந்தவைகளை சொல்ல மனமற்றுப் பேசாமல் நின்றான்.

அவனின் அந்த அழுத்தமான மௌனம் தந்த கோபத்தில் அவன் தோளில் ஒரு அடியைப் போட்டுவிட்டு, “எனக்குத் தெரியாது. இந்த வீட்டுக்கு அவாதான் மருமகள். அது நடக்கேல்லையோ எனக்கு மகனே இல்லை எண்டு இருந்திடுவன் சொல்லிட்டேன்!” என்றார் கோபத்தோடு.

அவனோ பாய்ந்து அவரைக் கட்டிக்கொண்டான். கன்னத்தில் வேறு முத்தமிட்டு, “தேங்க்ஸ் அம்மா!” எனவும் அவருக்கு வெக்கமாயிற்று.

“வெக்கம் கெட்டவனே! கட்டினவளுக்கு குடுக்கிற வயசில வந்து அம்மாக்கு குடுத்துக்கொண்டு. போடா!” என்று அவனைப் பிடித்து தள்ளிவிட்டாலும் அவர் முகம் சிரிப்பில் மலர்ந்திருந்தது.

“பார்றா மல்லிகாக்கு வெக்கத்தை. ஒவ்வொரு நாளும் அவளோட எடுத்துக் கதைக்கிறீங்க. முக்கியமா இண்டைக்கு மாதிரி இல்லாம பாசமா, அக்கறையா, உனக்கு நாங்க இருக்கிறம் எண்டு அவளுக்குக் காட்டுற மாதிரி கதைக்கோணும். அப்பப்ப உங்கட மகனைப் பற்றியும் நல்லவன் வல்லவன் பாசமானவன் எண்டு நாலு பிட்ட போடுறீங்க. இல்லையோ உங்களை நான் டிவோர்ஸ் பண்ணிடுவேன்!” என்று உற்சாகமாகச் சொல்லிவிட்டு ஓடினான் அவன்.

ஒரு சின்ன விடயம். அதற்கே எத்தனை மகிழ்ச்சியாகப் போகிறான். அதுவே அவன் அவள் மேல் வைத்திருக்கும் பாசத்தைச் சொல்ல, இத்தனை அன்பிருந்தும் தம் வாழ்க்கையைச் சிக்கலாக்கி வைத்திருக்கும் இருவரையும் என்ன செய்வது என்று மல்லிகா அம்மாவிற்கு மெய்யாகவே விளங்கவில்லை.

error: Alert: Content selection is disabled!!