திருமண நாள் நெருங்கிவிட்ட நிலையில் இனியும் நம்பிக்கொண்டு இருக்க முடியாமல், அது வருகிற நேரம் வரட்டும் என்று, வீட்டுப் பாத்திரத்தின் மீது கடன் வாங்கப் போயிருக்கிறார் என்று அறிந்து இன்னுமே அதிர்ச்சி.
“இதையெல்லாம் முதலே சொல்ல மாட்டீங்களா?” என்று இருவரையும் அதட்டினான்.
“அது நீ மாதம் மாதம் தந்த காசப்பு. அப்பா எண்டு நம்பித் தம்பி தந்த காசை இப்பிடிக் குடுத்துப்போட்டு நிக்கிறனே எண்டு அப்பாக்கு கவலை. அதான் சொல்லேல்ல.”
“உங்களுக்கு என்ன விசராம்மா? எனக்கு சொல்லுறதை விட வீட்டை அடமானம் வைக்கிறது ஈஸியா போயிற்றா உங்களுக்கு?” என்று அவரைக் கடிந்துகொண்டுவிட்டு தந்தைக்கு அழைத்து வீட்டுக்கு வரச் சொன்னான்.
வந்தவருக்கு அவன் முகம் பார்க்கப் பெரும் சங்கடம். இதுவரையில் இப்படி ஒரு நிலை அவருக்கு உருவானதில்லை. அவன் உழைக்க ஆரம்பித்திருந்த போதிலும் அப்பாவாகத் தன் கடமையை இரண்டு பிள்ளைகளுக்கும் செய்ய அவர் தவறியதில்லை. இப்போது அவன் பணத்தையும் சேர்த்து மக்களுக்குச் செய்ய நினைத்தாலும் அதைக் கணக்கில் வைத்து இருக்கிற சொத்தில் சரியாகப் பிரித்து அவனுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தவர்.
ஆனால் இப்போது… மகன் முகம் பார்க்க முடியாமல் அவர் அமர்ந்திருக்க, அவரை அப்படிப் பார்க்க அவனால் முடியவில்லை.
“என்னப்பா நீங்க? என்னட்ட கௌரவம் பாப்பீங்களா? அப்ப நாளைக்கு எனக்கு ஒரு கஷ்டம் எண்டு வந்தாலும் உங்களிட்ட வரக்கூடாது எண்டு சொல்லாம சொல்லுறீங்க என்ன?” என்று கேட்டுவிட்டு அப்போதே இணையவழி நுழைந்து தன் சேமிப்பை ஆராய்ந்தான்.
கணிசமான தொகை சேர்ந்திருந்தது. வங்கியில் லோன் எடுக்கலாம். அலுவலகத்திலும் கேட்கலாம். என்ன, முதலே சொல்லியிருக்க இந்தப் பதட்டங்களுக்கு அவசியம் இருந்திராது என்று நினைக்கும்போதே, இதற்கெல்லாம் நீ காரணமில்லை, வேறு ஒருத்தி என்று உரைத்த உண்மையில் ஒருகணம் அப்படியே அமர்ந்துவிட்டான்.
உன் வீட்டில் ஒரு பிரச்சனை வந்தால் என் வீட்டிலும் வருமா என்று கேட்டான். இதோ வந்துவிட்டதே. இன்று என்ன தைரியத்தில் தந்தைக்குத் தைரியம் சொன்னான்? அவனிடம் சேமிப்பு இல்லாது இருந்திருந்தால்? லோன் வாங்கும் நிலையில் அவன் இல்லாமல் இருந்திருந்தால்?
என்னவோ அவள் போன பிறகு அவள் சொன்னதுபோல் நடப்பதில் அவனுக்குள் ஒரு ஆத்ம திருப்தி. செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் போல் அவற்றைக் கடைப்பிடித்தான்.
நவீனுக்கு எடுத்துக்கொடுத்த லோன் முடிந்தபிறகு எதற்கும் லோன் எடுப்பதை விட்டுவிட்டான். ஏதாவது வாங்குவதாக இருந்தாலும் பணம் சேர்த்தே வாங்கினான்.
வீட்டுக்கு வெளியே வந்து மகேஸுக்கு அழைத்து கொடுத்த பணத்தைக் கேட்டான்.
“என்னடா நீ? திடீரெண்டு கேட்டா நான் என்ன செய்ய? வீடு கட்டிக்கொண்டு இருக்கிறம் எண்டு தெரியுமெல்லா உனக்கு.” என்றான் அவன், என்னவோ அவன் அப்படித் திடீரென்று கேட்டது தவறு என்கிற தொனியில்.
“வீடு கட்டுறத ஒரு மாதம் தள்ளிப்போட்டா ஒண்டும் நடக்காது மச்சான். ஆனா கவின்ர கலியாணத்தத் தள்ளி வைக்கேலாது. அதைவிட அந்தக் காசை நானா கேக்க முதல் நீயா தந்திருக்கோணும். நான் கேக்கிற அளவுக்கு நீ வச்சதே பிழை.” இது எப்போதோ யாமினி அவனிடம் சொன்னது. அப்போது அவனுக்கு அவள் மீது கோபம். ஆனால் இன்று அவனே சொன்னான். அந்தளவில் மகேஷ் பேசிய விதம் அவனைக் கோபப்படுத்தியிருந்தது.
மகேஸுக்கு ஒரு மாதிரியாகிற்று. “குத்திக் காட்டுறாய் என்ன? பரவாயில்ல. தாறன் வை!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.
நவீன், மித்ரன் இருவரிடமும் கைமாற்றாகக் கேட்டான். நவீன் உடனேயே தருவதாக ஒப்புக்கொண்டுவிட, இரண்டு மாதங்களில் திருப்பித் தருவாயா என்று கேட்டு மித்ரன் சம்மதித்தபோது, தான் எந்தளவில் இளிச்சவாயனாக இருந்திருக்கிறோம் என்று அவனுக்கே புரிந்தது.
அடுத்து வந்த நாள்களில் சேமிப்பில் இருந்ததை, நண்பர்களிடம் பெற்றதை எல்லாம் வாங்கிக் கொடுத்தபோது ஏகாம்பரம் மிகவுமே நெகிழ்ந்துபோனார். ஒரே மகளின் திருமணம். அவள் பெரியபிள்ளை ஆனதிலிருந்தே திட்டம் போட்டு ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்துவந்திருக்கிறார். அப்படி இருக்க கடைசி நேரத்தில் இப்படியாகவும் மிகவுமே கலங்கிப்போனார். அந்த நேரத்தில் மகன் வந்து தோள் கொடுத்து, நான் இருக்கிறேன் அப்பா என்று சொன்னபோது மனிதர் மிகவுமே நெகிழ்ந்துபோனார்.
கலங்கிய விழிகளும் சிரித்த முகமுமாய் அவர் மகனை அணைத்துக்கொண்டபோது நிரோஜனுக்குமே தொண்டைக்குள் என்னவோ வந்து சிக்கிக்கொண்டது. உங்கள் மகன் அந்தளவில் பொறுப்பானவன் இல்லை அப்பா என்று சொல்ல முடியாமல், “இதெல்லாம் ஒரு பிரச்சினையாப்பா? போங்க போய் என்ன செய்யோணும் எண்டு பாருங்க.” என்று அவரை அனுப்பிவிட்டான்.
அடுத்து வந்த நாள்களில் லோனும் கிடைத்துவிட, அவர்கள் வீட்டில் நடக்கப்போகிற முதல் கலியாணத்தை பூரிப்பு, சந்தோசம், உற்சாகம் எல்லாம் அவர்கள் முகத்தில் தொற்றிக்கொண்டது.
அப்படிப் பூரித்து மலர்ந்திருந்த அவர்கள் முகங்களைப் பார்க்கிற ஒவ்வொரு பொழுதிலும் கண்ணீர் சுமந்து அவனிடம் புன்னகைத்த இன்னோர் முகம் நெஞ்சில் வந்து நின்றது.
தன் வீட்டினர் அவளையும் அஜந்தாவையும் திருமணத்திற்கு அழைத்தது அவனுக்குத் தெரியும். தானும் அவளை அழைக்க வேண்டுமா என்கிற கேள்வியோடு இரண்டு நாள்கள் சுற்றியவன் மூன்றாம் நாள் அவளுக்கு அழைக்க முடிவு செய்தான்.
முடிவு செய்த நொடியிலிருந்து அவனுக்குள் பெரும் பதற்றம். என்னவோ மேலதிகாரியிடம் போக முதல் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்ப்பதுபோல் அவளோடு எப்படி, என்ன பேச வேண்டும் என்று பலமுறை ஒத்திகை பார்த்தான்.
அப்படி அவளுக்கு அழைத்துவிட்டுக் காத்திருந்த நொடிகளில் அவன் இதயத்துடிப்பு அதிகரித்துப்போயிற்று.
பெரும் படபடப்புக்கு மத்தியில் அவன் காத்திருக்க அவள் அழைப்பை ஏற்கவில்லை. அவன் மனம் சுருண்டு போனது. அவனை வெறுத்தேவிட்டாளா? அவனிடமிருந்து முற்றிலுமாக விலகிவிட்டாளா?
இன்னொரு முறை அழைக்கத் தைரியம் வரவில்லை. கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு குரல் வழி செய்தி அனுப்ப நினைத்தான். ஆனால், தன் குரல் ஒத்துழைக்கும் என்கிற நம்பிக்கை இல்லை.
அதில், “ஹாய் யாமினி, எப்பிடி இருக்கிறாய்? உனக்கு கோல் பண்ணினனான். நீ பிஸி போல. எடுக்கேல்ல. கவின்ர கலியாணத்துக்கு கட்டாயம் வா. இது நீயும் சேர்ந்து அரேஞ்ச் பண்ணின கலியாணம். அதில நீயும் நிக்கோணும். அப்பதான் அது முழுமை அடையும். வருவாய் எண்டு நம்புறன். வா ப்ளீஸ்!” என்று எழுதி அனுப்பிவிட்டான்.
அந்த நிமிடத்திலிருந்து அவன் அவனாகவே இல்லை. ஏதாவது பதில் வருமா என்று காத்திருந்தான். கடைசிவரையில் வரவேயில்லை.

