அத்தியாயம் 32
காவியாவின் திருமண நாள் மிக மிக அழகாய் விடிந்திருந்தது. அவர்கள் வீட்டின் தலைமகனாய், பட்டு வேட்டி சட்டையில் தயாராகி, பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தான் நிரோஜன்.
எங்கு என்ன வேலையைப் பார்த்தாலும், வருகிறவர்களோடு இன்முகமாகப் பேசினாலும், அவர்களுக்குத் தேவையானதை, தந்தை சொல்கிறவற்றை என்று ஓடி ஓடிச் செய்தாலும் அவன் விழிகள் இரண்டும் மண்டப வாசலிலேயே தவம் கிடந்தன.
அவன் அனுப்பிய குறுந்தகவலுக்குக் கடைசிவரை பதில் வரவேயில்லை. ஆனாலும், தாய், தங்கையின் அழைப்பைத் தட்டமாட்டாள் என்கிற நம்பிக்கை இருந்தாலும் அவளைப் பார்க்கும் வரையில் வருவாளா என்கிற அந்தப் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அவனை விட்டு அகலுவதாக இல்லை.
“என்ன தோழர், பார்வை பலமா இருக்கு?” அவ்வளவு நேரமாக அவனையே கவனித்திருந்த மித்ரன் உற்சாகமாக நண்பனைச் சீண்டினான்.
“ஒரு காதலன் தன் காதலியை அப்படித்தான் தேடுவான். அது தெரியாதா தோழர் உங்களுக்கு?” பெரும் நாடக பாணியில் சொன்னான் நவீன்.
“கழட்டிவிட்ட காதலியையுமா?” கண், புருவங்களை எல்லாம் அளவுக்கதிகமாக அசைத்து மித்ரன் கேட்ட விதத்தில் அவன் முதுகிலேயே ஒன்றைப் போட்டுவிட்டுப் போனான் நிரோஜன்.
இத்தனை நாள்களினதும் தவிப்பைத் தாண்டியதாய் இருந்தது அன்றைய நாளின் தவிப்பு. அது எங்கே அவர்களுக்குப் புரியப்போகிறது?
கொஞ்ச நேரத்தில் திவாகர் அஜந்தாவோடு அவளும் வந்தாள். அப்படியே நின்றுவிட்டான் நிரோஜன். அவனால் அசையக்கூட முடியவில்லை. இந்த ஒற்றை நொடிக்காக அவன் உறக்கம் தொலைத்த இரவுகள் எத்தனை?
நன்றாக மெலிந்திருந்தாள். அலைபோல் தோளைத் தழுவி விழுந்திருந்த மஜெந்தா வண்ணப் பட்டுச் சேலை, அவள் மேனியை மிக அழகாய் அலங்கரித்திருந்தது. ஷோக்கர் ஸ்டைல் நெக்லஸில் பெண்டன் அணிந்து, ஸ்ரீனிவாச கலியாண ஜூம்கா அணிந்திருந்தாள். கையிலும் அதே ஸ்ரீனிவாச கலியாணக் காப்புகள் இரண்டு சோடிகள்.
சுதந்திரமாய் விட்டிருந்த கூந்தல் கற்றைகளை பக்கத்தில் நடந்து வந்துகொண்டிருந்த அஜந்தாவுடன் பேசியபடியே அவள் காதோரம் ஒதுக்கிவிட்டபோது, அந்தப் பெரிய ஜும்க்கா ஆடிய ஆட்டத்தில் அவன் உள்ளம் ஆடிற்று.
ஓடிப்போய், “வா யமி… ம்க்கும் யாமினி!” என்று வரவேற்றான்.
இப்படி ஓடிவந்து, அதுவும் திவாகரும் அஜந்தாவும் பக்கத்தில் நிற்கையில் தன்னை மட்டும் வரவேற்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. கண நேரம் திகைத்து நின்றுவிட்டு, உதட்டளவில் மாத்திரம் புன்னகைத்து, வரவேற்பில் இருந்த திருநீறு சந்தனத்தை வைத்துக்கொண்டு உள்ளே நடந்தாள்.
போகிறவளையே பார்த்தான். பெரும் அமைதி ஒன்று அவளை சூழ்ந்தாற்போல் ஒரு தோற்றம். முக்கியமாக அது அவனும் அவளுமாகச் சென்று எடுத்த சேலை இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஏற்கனவே அவள் அணிந்த ஒன்று. ஊமை வலியாக ஏதோ ஒன்று உள்ளே இறங்க அப்படியே நின்றான்.
நிரோஜனுக்குத் திவாகரையும் அஜந்தாவையும் எதிர்கொள்வதில் மெல்லிய சங்கடம். இவர்களுக்குள் நடந்தவை திவாகருக்கு எந்தளவில் தெரியும் என்று தெரியாது. அஜந்தா அவனிடம் எப்படி நடப்பாள் என்றும் சொல்ல முடியாது. ஆனாலும் சமாளித்து இருவரையும் வரவேற்று அழைத்துப்போனான்.
அஜந்தாவுக்கும் அவனிடத்தில் மெல்லிய தடுமாற்றம்தான். ஆனாலும் அவள் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
யாமினியை அவன் அன்னையே தன் கைப்பிடியில் அழைத்துப்போயிருந்தார். இவனால் பக்கத்தில் போக முடியவில்லை. வேலை இருப்பவன் போல் விலகி வந்துவிட்டாலும் தூரத்தில் இருந்து அவளையேதான் பார்த்திருந்தான்.
மல்லிகாவோடு அவள் மணப்பெண்ணின் அறைக்குப் போவது தெரிந்தது. அவளுக்கான பலகாரத் தட்டை எடுத்துச் சென்று அவளிடம் நீட்டினான். ஒரு நொடி தடுமாறினாலும் அவனைப் பாராமல் வாங்கிக்கொண்டாள்.
தங்கையைப் பார்த்தான். மிக அழகாய் இருந்தாள். அந்தளவில் மிகையில்லாமல் அவளுக்கு அலங்காரம் செய்துகொண்டிருந்தார்கள். “உங்களை அரேஞ்ச் பண்ணித் தந்தது இவாதான்.” என்று யாமினியைக் காட்டி அந்தப் பெண்களிடம் சொன்னான்.
“ஓ! தேங்க்ஸ் சிஸ்!” என்றாள் அதில் ஒருத்தி.
அடுத்து… அவனுக்கு அங்கே நிறைய நேரம் நிற்க முடியாது. வேகமாக யோசித்து, “என்னோட ஒருக்கா வா!” என்றான் துணிந்து.
யாமினி இதை எதிர்பார்க்கவில்லை. தடுமாறி மல்லிகா, காவ்யா என்று மாறிமாறிப் பார்த்தாள். “என்னம்மா பாக்கிறீங்க? என்ன எண்டு கேட்டுக்கொண்டு வாங்கோ!” அவள் பார்வையைக் கவனித்துவிட்டுச் சொன்னார் மல்லிகா.
அவர் பேச்சைத் தட்ட முடியாமல் எழுந்து அவனோடு வந்தாள்.
வெளியே வந்ததும், “எப்பிடி இருக்கிறாய்?” என்றான் அடைத்த குரலில்.
ஒரு முறை அவன் பார்வையைச் சந்தித்துவிட்டு நன்றாக இருக்கிறேன் என்பதுபோல் தலையை அசைத்தாள் அவள்.
“பிறகு ஏன் இப்பிடி மெலிஞ்சிருக்கிறாய்?” என்றதும் அவள் முகம் இலேசாக மாறிற்று.
“இல்ல… அது பாத்ததும் அப்பிடியே தெரியுது. அதான். உன்னை நீ கவனிக்கோனும்தானே.” என்றான் மிகுந்த வருத்தத்தோடு.
இதற்குள் யாரோ வருவது தெரியவும் பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றான். அவள் உள்ளே வந்ததும் அவன் கதவைச் சாற்றித் தாழிடவும் அவள் பயந்துபோனாள்.
மற்றவை எல்லாம் மறக்கக் கண்ணில் சிரிப்புடன் என்ன என்றான் புருவங்களை உயர்த்தி.
யாமினி தடுமாறிப்போனாள். அதுவும் அந்தச் சிரிக்கும் கண்களும், நெற்றியில் புரண்டு விளையாடும் சுருண்ட குழல்களும் அவள் இதயத்தைப் பந்தாட, ஒரு நொடி பார்வையை அவனிடமிருந்து அகற்ற முடியாமல் நின்றுவிட்டுத் திருப்பிக்கொண்டாள்.
‘யம்மு!’ என்றபடி ஓரடி அவளை நோக்கி எடுத்து வைத்தவன் நின்று நிதானித்தான்.
ஒரு நெடிய மூச்சுடன் திரும்பிச் சென்று, அங்கே மறைத்து வைத்திருந்த நகைப்பெட்டி ஒன்றை எடுத்துத் திறந்து காட்டினான். தோடு, கழுத்தாரம், மோதிரம், காப்பு என்று பொலிவான நகை செட் ஒன்று அதற்குள் இருந்து கண்ணைப் பறித்தது. கூடவே ஆண்களுக்கான கைச் செயின் ஒன்றும்.

