நீ வந்து தங்கிய நெஞ்சில் 32.2

“அது… இது நீ சொன்ன மாதிரிக் கவிக்கு வாங்கினனான். ரெண்டு மாத ப்ராஜெக்ட்க்கு சிங்கப்பூர் போன நேரம் கொஞ்சம் காசு கிடச்சது. இப்ப எனக்குச் சம்பளமும் கூட. அதான்… இனி அவள் விருந்து, சொந்தக்கார வீடுகள், கோயில் குளம் எண்டு போற நேரம், தடிப்பான நகைகளை விட இப்பிடி செட்டா இருந்தா போட நல்லாருக்கும் எண்டு நீ சொன்னதை நினைவு வச்சு வாங்கினனான். போதும்தானே?”

வீட்டுப்பாடத்தைச் சிறு பிழையில்லாமல் சரியாகச் செய்துவிட்டு, தனக்குப் பிடித்த ஆசிரியரின் பாராட்டுக்குப் பெரும் ஆவலுடன் காத்திருக்கும் மாணவனின் நிலையில் அவள் முகம் பார்த்து நிற்க, “உங்கட தங்கச்சிக்கு நீங்க வாங்கினத எனக்கு ஏன் காட்டுறீங்க?” என்று கேட்டுவிட்டுப் போனாள் அவள்.

அங்கிருந்த கட்டிலில் அப்படியே அமர்ந்துவிட்டான் நிரோஜன். யாரோ ஒருத்தியாக நின்று அவள் கேட்டுவிட்டுப் போன கேள்வியின் தாக்கத்திலிருந்து அவனால் வெளிவரவே முடியவில்லை. முகத்தை இரண்டு கைகளாலும் துடைத்துவிட்டு எழுந்து, நகைப்பெட்டியை எடுத்து வைத்துவிட்டு வேலைகளைப் பார்க்கப் போனான்.

அங்கே அஜந்தாவின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள் யாமினி. எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாதபோதும் நிரோஜன் அழைத்துப்போனதும், விசாரித்த நலனும், நகைகளைக் காட்டிவிட்டுத் தன் முகம் பார்த்து நின்றதும் திரும்ப திரும்ப வலம்வந்துகொண்டேயிருந்தன.

அது எல்லாவற்றையும் விட, கண்ணில் சிரிப்புடன் அவளைப் பார்த்தவனின் தோற்றம், கண்ணீரை உற்பத்தி செய்ய முயன்றுகொண்டிருந்தது.

எந்தக் குறையும் இல்லாமல் மிகச் சிறப்பாகக் காவ்யாவின் திருமணம் நடந்து, விருந்து எல்லாம் சிறப்பாகவே முடிந்தன. தன் பங்கு நகையைப் பரிசாக நிரோஜன் கொடுத்தபோது, நம்ப முடியா ஆனந்த அதிர்ச்சியில் காவ்யா கண் கலங்கிவிட்டாள் என்றால், ஏகாம்பரம், மல்லிகாவுக்குப் பெருமை பிடிபடவில்லை.

இக்கட்டில் நின்றபோது தோள் கொடுத்தது மாத்திரமல்லாமல், தமையன் என்கிற பொறுப்புடன் தன் பங்குக்கு நகையும் போட்டு, சபையில் வைத்து அவர்களையும் சேர்த்துப் பெருமைப்பட வைத்துவிட்டானே.

“தாங்க்ஸ் அண்ணா. நல்ல வடிவா இருக்கு.” அவன் தோளில் சாய்ந்து கண்ணில் நீருடன் தடுமாறிய காவ்யாவால், ரகுவையும் வைத்துக்கொண்டு பணம் எப்படிக் கிடைத்தது என்று கேட்க முடியவில்லை. அவள் அவனைப் பார்க்க, ஒரு கரத்தால் அவளை அணைத்துத் தைரியம் கொடுத்தவனின் பார்வை, அங்கே மண்டபத்தில் அமர்ந்திருந்தவளிடம்.

அவள் சொல்லாவிட்டால் இதை அவன் யோசித்தே இருக்க மாட்டான். ஆனால் இன்று, அது எத்தனை பெரிய நெகிழ்ச்சிக்குரிய காரியமாக மாறிப்போயிற்று.

இதனால்தான் சொல்லியிருக்கிறாள். அவன்தான்…

காவ்யாவுக்கு யாமினி வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. பிரத்தியேகமாகக் கூப்பிட்டு அவளைக் கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்து, ஆசையாகப் புகைப்படமும் எடுத்துக்கொண்டாள்.

எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட ஆயத்தமானாள் யாமினி. மல்லிகா விடுவதாக இல்லை. அதை விடவும் அவர்கள் பயந்ததுபோல் அல்லாமல், மகளின் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்ததில் பூரித்துப்போயிருந்தவர், “தம்பியாலதானம்மா இவ்வளவு சந்தோசமா இருக்கிறம். இவ்வளவு நாளும் இவ்வளவு வயசாகியும் பக்குவம் இல்லாம இருக்கிறானே எண்டு எனக்கும் இவருக்கும் கவலையா இருந்தது. ஆனா… விளையாட்டா இருந்தாலும் பொறுப்பாவும் இருந்திருக்கிறான்.” என்று மகனைத் தன் கைக்குள் வைத்துக்கொண்டு, நடந்தவற்றைச் சொல்லி, பணச் சிக்கலை அவன் அவர்களுக்கு எப்படித் தீர்த்து வைத்தான் என்று அவர் சொன்னபோது, நிரோஜன் சங்கடப்பட்டுப்போனான்.

என்ன சொல்வாள் என்று அவளையே பார்த்தான். அவள் ஒரு புன்னகையோடு அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டாள். அவ்வளவுதான்.

அவளின் அந்த அமைதி, ஒட்டவைத்த புன்னகை, அவன் புறமே திரும்பாத பார்வை, அப்படியே திரும்பினாலும் எந்த உணர்வுகளையும் காட்டாத அந்த விழிகள் எல்லாமே காலில் ஏறிய முள்ளாய் அவன் நெஞ்சைக் குத்திக்கொண்டேயிருந்தன.

திவாகரின் உறவுக்காரர் ஒருவரை அங்கே எதேற்சையாகக் கண்டதும் அவரோடு பேச அஜந்தாவும் திவாகரும் போய்விட, “ஹாய் மா! எங்களை எல்லாம் மறந்தாச்சுப் போல.” என்றுகொண்டு நவீன் கும்பல் அங்கே வந்தது.

வியப்புடன் திரும்பியவள் அழகாய்ச் சிரித்தாள். “அப்பிடி மறப்பனா? கவனிக்கேல்ல அண்ணா.” என்றவள் நல்ல முறையிலேயே அவர்கள் எல்லோர் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

இப்போது பணிபுரியும் அலுவலகம், செய்துகொண்டிருக்கும் ப்ராஜெக்ட், தமக்கை குடும்பம், அன்னையின் நலன் என்று அவர்கள் கேட்டபோது, சிரித்த முகமாகப் பதிலும் சொன்னாள்.

நவீனின் தோளைச் சுற்றி ஒரு கையைப் போட்டபடி அவளையேதான் பார்த்திருந்தான் நிரோஜன்.

மாலையாகிவிட்டதில் வட்டிலப்பம் வந்தது. “உனக்கு விருப்பம் எல்லா?” என்று அவளுக்கு ஒரு கிண்ணம் எடுத்துக் கொடுத்தான். சட்டென்று அவன் நண்பர் கூட்டம் புருவங்களை உச்சி மேட்டுக்கே உயர்த்தின. அப்போதுதான் என்ன செய்தோம் என்று புத்தியில் உறைக்க, எல்லோருக்கும் தானே எடுத்துக் கொடுத்துச் சமாளித்தான்.

இதற்குள் வேறு சில உறவினர்களைக் கவனிக்க மல்லிகா அங்கிருந்து அகன்றிருந்தார். திவாகரும் அஜந்தாவும் எங்கே என்று யாமினி பார்க்க, “பிறகு, பியூச்சர் பிளான் என்னம்மா?” என்றான் நவீன், நண்பனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு.

கையில் இருந்த வட்டிலப்பத்தில் ஒரு கரண்டி அள்ளி வாயில் வைத்துவிட்டு, “இப்போதைக்குப் பெரிசா ஒண்டும் இல்லை அண்ணா. இன்னும் ரெண்டு கிழமைல ஜெர்மன் போறன். அடுத்த ரெண்டு வருசம் அங்கதான். அத முடிச்சுப்போட்டு வந்துதான் என்ன எண்டு பாக்கோணும்.” என்று சொன்னவளை அதிர்ந்துபோய்ப் பார்த்தான் நிரோஜன்.

அவன் நண்பர்களும் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் திகைத்து நிற்கையில் திவாகரும் அஜந்தாவும் திரும்பி வந்தனர்.

“நேரமாகுது. இனி வெளிக்கிட்டாத்தான் சரி.” எல்லோருக்கும் பொதுவாகச் சொன்னான் திவாகர்.

வட்டிலப்பக் கிண்ணத்தை அப்படியே மேசையில் வைத்துவிட்டு, மணமக்களிடம் சொல்லிவிட்டு வருவதற்காக அவர்களோடு மணமேடைக்குப் போனாள்.

அப்படி அவர்கள் போனதும், “ஏதாவது உனக்குக் கதைக்கோணும் மாதிரி இருந்தா இப்பவே கதைச்சிடு மச்சான். எனக்கு என்னவோ என்னதான் வலிச்சாலும் இதான் ரியாலிட்டி எண்டு உணந்து, வாழ்க்கைல அடுத்த கட்டத்தை நோக்கி நகர அந்தப் பிள்ளை தயாராயிட்டா மாதிரி இருக்கு. இப்பவும் இந்தப் பிரிவுதான் சரியான முடிவு எண்டு நினைச்சா, நீயும் எல்லாத்தையும் மறந்திட்டு வெளில வந்து அடுத்தது என்ன எண்டு பார்.” என்று தீர்க்கமாகச் சொன்னான் நவீன்.

நிரோஜன் எதையும் பேசும் நிலையிலேயே இல்லை. இரண்டு வருடங்கள் இனி இங்கே இருக்க மாட்டாள் என்பதிலேயே சிக்குப்பட்டு நின்றான் அவன்.

error: Alert: Content selection is disabled!!