“யாமினிக்கும் தம்பிக்கும் என்னம்மா பிரச்சினை?”
இப்படி முதல் கேள்வியிலேயே அவளைத் திணற வைப்பார் என்று எதிர்பாராதவள், “அப்பிடி என்ன பிரச்சினை அன்ட்ரி? ஒண்டும் இல்லையே.” என்று சமாளிக்கப் பார்த்தாள்.
“இல்லையம்மா. என்னவோ இருக்கு. நீங்களும் மறைக்கிறீங்க. கவின்ர கலியாணத்துக்கு அவன் செய்ய வேண்டிய எல்லா வேலையையும் யாமினியோட சேர்ந்துதான் செய்தவன். இன்னும் சொல்லப்போனா எங்கட வீட்டுப் பிள்ளை மாதிரி நிண்டு செய்தது முழுக்க அவாதான். சரி ஓகே, ஆம்பிளைப் பிள்ளைகளுக்கு இதெல்லாம் பெருசா தெரியாது, அதான் அவாட்ட கேக்கிறான் போல, இந்தக் காலத்தில ஆம்பிளை பொம்பிளை பாக்காமத்தானே பழகிறீங்க எண்டு நினைச்சாலும் என்னவோ வித்தியாசம் தெரிஞ்சது. நீங்களும்தான் அவனுக்கு பிரெண்ட். உங்களிட்டயோ இல்லை உங்களையும் யாமினியையும் சேர்ந்து பாத்துத் தரச் சொல்லியோ அவன் சொல்லேல்லையே.” என்றவரை திகைப்புடன் பார்த்தாள் யாமினி.
இந்தப் பெண்மணி எத்தனை தூரத்திற்கு கவனித்திருக்கிறார் என்று அவளுக்குப் பெரும் அதிர்ச்சி.
“ஆனா ஒரு நாள் என்னட்ட வந்து ஒரு உயிரைக் காயப்படுத்திப்போட்டன் அம்மா, சரி எண்டு நினச்சுத்தான் செய்தனான், அப்பிடி அது சரியா இருந்தா எனக்கு வலிக்கக் கூடாதேம்மா எண்டு குழந்தைப் பிள்ளை மாதிரி அழுதவன் அம்மா.” என்றவரை அதிர்ந்த விழிகளோடு நோக்கினாள் அவள்.
“யோசிச்சுப் பாருங்கோம்மா. தகப்பனை விட உயரமா வளந்து நிக்கிற ஆம்பிளைப் பிள்ளை அப்பிடி அழுதா பெத்தவள் என்ன நினைக்க? எவ்வளவு கேட்டும் வாயைத் திறக்கவே இல்ல. அதில இருந்து யாமினியோட அவன் பெரிய ஒட்டு இல்லையோ எண்டு எனக்கு ஒரு சந்தேகம். ஆரையும் விரும்பிறியோ தம்பி எண்டு மறைமுகமா கேட்டும் பாத்திட்டன். சத்தமே போடேல்ல அவன். சரி, அவாவும் வவுனியா போயிற்றா, அதுதான் போல எண்டு நினைச்சா இண்டைக்கு எனக்கு அந்தச் சந்தேகம் வலுத்ததே ஒலியக் குறையில்லை.” என்று சொன்னவரின் புத்தி கூர்மையை அவளால் மெச்சாமல் இருக்கவே முடியவில்லை.
“இண்டைக்கு முழுக்க தம்பி பெருசா அவாவோட கதைக்கவும் இல்ல. அவாவும் அமைதியாவேதான் இருந்தவா. ஆனா தம்பின்ர பார்வை முழுக்க அவாவையே சுத்தி சுத்தி வந்தது. அவா அவனைக் கவனிக்காத மாதிரியே இருக்கிறா. அவேக்க என்னவோ இருக்கு எண்டு மட்டும் எனக்கு வடிவா தெரிஞ்சுபோச்சு. அது என்ன எண்டு மட்டும் நீங்க சொல்லுங்கோ.” என்று கேட்டார் அவர்.
உண்மையில் அவளுக்கு வாயடைக்க நிலை.
“எங்களுக்கு யாமினிய பிடிக்கும். அப்பிடி அவே ஒருத்தரை ஒருத்தர் விரும்பினா கூட எங்களுக்கு சந்தோசம்தான். அவான்ர வீட்டுல பேசி, கட்டி வைக்கலாம்.” என்றவரை இறுக்கி அணைத்துக்கொண்டாள் அஜந்தா.
“நிரோக்குக் கிடைச்ச அருமையான அம்மா நீங்க.” என்றாள் அவள் நெகிழ்ந்த குரலில்.
“அம்மா எண்டாலே அப்பிடித்தான் குஞ்சு. பிள்ளைகள் சந்தோசமா வாழுறதை பாக்கிறது மட்டும்தானே எங்கட கனவு ஆசை எல்லாம். நீங்க சொல்லுங்கம்மா, என்ன நடக்குது அவேக்குள்ள?” என்று அவர் தன் காரியத்திலேயே குறியாக இருப்பதைக் கண்டு அவள் புன்னகைத்தாள்.
அவளுக்கும் எல்லாவற்றையும் சொல்ல ஆசைதான். ஆனால், அவர்கள் இருவரினதும் தற்போதைய நிலை என்னவென்று விளங்காமல் சொல்லவும் பயந்தாள்.
“அம்மா குறையா நினைக்காதீங்கோ. அத நான் சொல்லலாமா தெரியாது. ஆனா, யமிய உங்களுக்குப் பிடிச்சிருந்தா நிரோவோட கதைச்சுப்போட்டு முறையா கலியாணத்துக்கு அவளின்ர வீட்டுல கதைங்கோ.” என்றாள் அவள்.
“அப்ப அவே விரும்பி இருக்கினம் என்னம்மா. இடைல என்னவோ சண்டை வந்து பிரிஞ்சிட்டினம் போல.” என்றார் அவர்.
அவள் சிரிப்பு விரிந்தது. “நீங்க பே கில்லாடி அன்ட்ரி.” என்றுவிட்டு அவரிடமிருந்து கிட்டத்தட்ட தப்பித்து ஓடியிருந்தாள் அஜந்தா.
அவளைக் கண்டுவிட்டு அங்கே வந்துகொண்டிருந்த நிரோஜன் நின்றான். அவனுக்கு யாமினி குறித்து அவளிடம் நிறையப் பேசவேண்டும். பேசுவாளா என்று பார்த்தான்.
அஜந்தாவுக்கும் இனி மல்லிகா அம்மா பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கை உருவாகியிருந்ததிலும், அவர் சொன்னதிலிருந்து அவனும் அவளை விட்டு சந்தோசமாக விலகி வரவில்லை என்பதும் புரிந்துபோனதிலும் நின்று அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
இவ்வளவு நேரமாகக் கண்ணுக்கு தெரியாத ஒதுக்கத்தை யாமினியோடு சேர்ந்து காட்டியவள் புன்னகைக்கவும் நிரோஜனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்றாலும் அவளை விட யாமினியின் நிலை முக்கியமாகப் பட, “யமி எப்பிடி இருக்கிறாள்?” என்றான் நிரோஜன் கொஞ்சம் திணறி
“அண்டைக்குக் கேட்ட அதே கேள்விதான். அவளோட சேருற பிளான் இருந்தா சொல்லுங்க. அவளைப் பற்றிக் கதைக்கலாம்.” என்றாள் அவள் இன்றும் தெளிவாக.
“இப்ப அது என்ர கைல மட்டுமே இல்லை எண்டு நினைக்கிறன் அஜந்தா. ஆனா, சாகிற வரைக்கும் என்ர வாழ்க்கைல இன்னொருத்தி இல்ல. இது இண்டைக்கு இல்ல, அண்டைக்கே எனக்குத் தெரியும்.” என்று அவனும் அவள் கண்களைப் பார்த்துத் தெளிவாகவே சொன்னான்.
“பிறகும் ஏன் இந்தத் துன்ப துயரமெல்லாம் நிரோ?”
இன்று இருந்து யோசிக்கையில் அவனுக்கும்தான் ஒன்றும் புரியவில்லை. நன்றாகத்தான் இருந்தார்கள். ஒருவர் மற்றவரின் பொறுப்பாகி, ஒருவர் வீட்டுப் பிரச்சனைகளை மற்றவரிடம் பகிர்ந்து, அவள் கையால் சாப்பிட்டு, இருவருமாகச் சென்று அவள் வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கி, வரவு செலவுகள் பற்றி பேசி, எதிர்காலம் குறித்துத் திட்டமிட்டு என்று ஒரு கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னியோன்யம் அவர்களுக்குள்ளும் இருந்தது. அப்படித்தானே காவியாவின் திருமணத்தை அவள் பொறுப்பெடுத்துக்கொண்டதும் அவள் தந்தை இறந்தபோது போய் எல்லாம் முடிகிற வரைக்கும் அங்கேயே நின்றுவிட்டு வந்ததும்.
திடீரென்று இருவருக்கும் அப்படி என்ன நடந்தது? அவள் சொல்வதை அவன் புரிந்துகொள்ளத் தயாராக இருக்கவில்லை. அவனை விளங்கிக்கொள்ள அவள் மறுத்தாள். கடைசியில் ஒருவர் மாற்றி இன்னொருவர் குற்றம் சாட்டி, வார்த்தைகளால் குத்திக்குதறி, ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு என்று எத்தனையை அனுபவித்துவிட்டார்கள்.
இன்று யோசிக்கையில் இன்றிருக்கும் இதே நிதானத்தோடும் தெளிவோடும் அவற்றை எல்லாம் அணுகியிருக்க தூசாகத் தட்டிவிட்டுப் போயிருக்கலாம் என்று தோன்றிற்று.
“அவள் நல்லாவே இல்லை நிரோ. நல்லாவே இல்ல. உள்ளுக்க முழுசா சிதைஞ்சுபோய் இருக்கிறாள். நீங்க பிரேக் அப் சொல்லியிருந்தாலும் உங்களை அந்த இடத்துக்குக் கொண்டுவந்தது அவள் எண்டு எனக்கும் விளங்குது. நடந்த எல்லாத்துக்கும் நீங்க ரெண்டு பேரும்தான் காரணமும். ஆனா, உங்களுக்கு அமைஞ்ச மாதிரி அருமையான அப்பாவோ, மகன் சந்தோசமா இருக்கோணும் எண்டு மட்டுமே நினைக்கிற அம்மாவோ, அருமையான சகோதரமோ அவளுக்கு அமையேல்ல நீரோ. ஊருக்கு வேணுமெண்டா அவளுக்கு ஒரு அம்மா, அக்கா குடும்பம் இருக்கிற மாதிரி இருக்கலாம். ஆனா எல்லாருமே இருந்தும் யாருமே இல்லாம அனாதையா நிக்கிறாள். அதுதான் உண்மை.” என்று அவள் சொல்லவும் வேகமாகத் திரும்பித் தன் கண்களைத் துடைத்துக்கொண்டான் அவன்.
“இத அவள் அவளின்ர அப்பா இறந்த நேரமே உணந்திருக்கோணும். அதான் அவளுக்கே அவளுக்கு எண்டு இருந்த உங்களை இறுக்கிப் பிடிக்க நினைச்சிருக்கிறாள். கடைசில அவளின்ர பயமே அவளிட்ட இருந்து உங்களைப் பிரிச்சிட்டுது.” என்றதும் சட்டென்று அங்கிருந்து வெளியே வந்தவனுக்கு நெஞ்சு வெடித்துவிடும் நிலை.
கைகளை இடுப்புக்குக் கொடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்தான். வாயைக் குவித்துக் காற்றை ஊதித் தள்ளினான். அவனுக்கு அவனைச் சமாளிக்க நேரம் தேவையாக இருந்தது.
பின்னால் வந்த அஜந்தா, “அவள் ஜெர்மன் போரால் நிரோ.” என்று சொன்னாள்
தெரியும் என்பதுபோல் தலையை அசைத்துவிட்டுத் திரும்பி, “சொன்னவள்.” என்றான்.
“கதைச்சனீங்களா?” ஆவலாக வினவினாள்.
ஆம் என்று தலையசைத்தான்.
“என்னவாம்?”
“மனம் திறக்கிறாளே இல்ல.”
“இப்ப அவள் அப்பிடித்தான். என்னோடையும் ஒண்டும் கதைக்க மாட்டாள். அதுக்காக அப்பிடியே விட்டுடாதீங்க ப்ளீஸ்.” என்றுவிட்டு அவள் தமக்கை தாயை முன்னிறுத்தி அவளிடமிருந்து பணம் பிடுங்கும் விதத்தைச் சொல்லி, “அவளுக்கு இஞ்ச இருக்க விருப்பமே இல்ல. ஆனந்தன் அண்ணாவோட இதைப் பற்றிக் கதைச்சா அவள் போக எண்டு இருக்கிற அந்த வீடும் இல்லாம போயிடுமோ எண்டு பயப்பிடுறாள். அதான் ஜெர்மனுக்கு போறாள். இஞ்ச எல்லாரிட்டயும் ரெண்டு வருஷம் எண்டு சொன்னாலும் திரும்பி வாற ஐடியா இல்லையடி எண்டுதான் என்னட்டச் சொன்னவள்.”என்றவளை அதிர்ந்து பார்த்தான் நிரோஜன்.

