அத்தியாயம் 34
அன்று இரவு வீட்டுக்கு வந்து, மணமக்களுக்கான சடங்குகள் எல்லாம் முடிந்து, அவர்களை அவர்கள் பகுதிக்கு அனுப்பிய பிறகு, தன் அறைக்கு வந்த கணமே யாமினிக்கு அழைத்தான் நிரோஜன். அந்தளவில் அஜந்தா சொன்னவை அவன் உள்ளத்தைப் போட்டுப் பாடாகப் படுத்தின.
முன்னர் போன்று அவளோடு பேசுவதற்கு அவனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தன் மனத்தை உணர்த்துவதில் தடுமாற்றமும் இல்லை. அவள் எவ்வளவு கோபப்பட்டாலும் பரவாயில்லை, எந்தளவு தூரம் தன்னைத் தள்ளி வைத்தாலும் பரவாயில்லை, உனக்கு நான் இருக்கிறேன் என்று காட்டிவிடுவதில் மிகுந்த உறுதியோடு இருந்தான்.
எத்தனையோ முறை அவன் அழைத்தும் அவள் ஏற்கவில்லை. பொழுது வேறு நடுச்சாமம் என்பதில் புலனம் சென்று, “யமிம்மா, நடந்த எல்லாத்துக்கும் சொறியடி. நான் கொஞ்சம் பொறுத்துப் போயிருக்கலாம். நீ சொன்ன மாதிரி நிதானமா இருந்து, பிரச்சினைகளப் பேசித் தீத்திருக்கலாம். விட்டுட்டன். அதுக்காக உன்னை மொத்தமா விட்டுடுவன் எண்டு நினைக்காத. நீ என்ர யமிதான்.” என்று, மண்டபத்துக்கு வெளியே வைத்து அவள் சொன்ன ‘நான் யாமினி’ என்பதற்கும் சேர்த்துப் பதில் சொல்லி அனுப்பிவிட்டுக் காத்திருந்தான்.
அவள் பதில் போடவில்லை.
அடுத்த நாள் காலையிலேயே எழுந்து மறுபடியும் முயன்றபோது அழைப்புப் போகவில்லை. அவனைத் தடை செய்திருந்தாள்.
அவன் செய்ததை அவனுக்கே திருப்பிச் செய்கிறாள். அந்த நிலையிலும் அவன் உதட்டில் வேதனையுடன் கூடிய சிறு புன்னகை. கூடவே இப்படிக் கோபத்தைக் காட்டியாவது தன் மன அழுத்தத்தை அவள் குறைத்துக்கொள்ளட்டும் என்று நினைத்தான்.
திருமணத்திற்கு வந்து தங்கிய உறவினர்களை, திருமணத்தன்று வராமல் அடுத்தடுத்த நாள்கள் வந்தவர்களைக் கவனிக்க, கோயில்குளம், உறவினர் வீடுகளுக்குப் போய்வர என்று அடுத்த மூன்று நாள்களும் மணமக்களோடே நிரோஜனுக்குக் கழிந்துபோயிற்று.
அவர்கள் இருக்கும் அந்த வீட்டினைத்தான் காவ்யாவுக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தார்கள். தற்போதைக்கு அவர்களை மாடியில் தனியாகக் குடி வைப்பதாக ஏற்பாடு.
முதலில் சமைக்கும் வசதி அங்கு இருக்கவில்லை. இப்போது சமையற்கட்டு, அதற்குண்டான பொருள்கள், புதிதான வீட்டுத் தளபாடங்கள் என்று அனைத்தையும் ஒழுங்கு செய்து, புதுத் தம்பதியினரைக் குடி வைத்து என்று அனைத்தையும் பார்த்து முடிக்கவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது.
மல்லிகா அம்மா மகளையும் மருமகனையும் சிறு குறையில்லாமல் கவனித்துக்கொண்டாலும் மகனையும் அவதானித்துக்கொண்டுதான் இருந்தார். யாமினி வந்து போனதிலிருந்து அவன் அவனாகவே இல்லை என்று அப்படியே தெரிந்தது.
நான்காம் நாள் கொழும்பு புறப்பட்டுக்கொண்டிருந்தவனின் அறைக்கு வந்தார் மல்லிகா.
“யாமினிய உனக்குப் பிடிக்குமா தம்பி?”
நேரடியாக வந்த அவர் கேள்வியில் அவன் கொஞ்சம் அதிர்ந்துதான் போனான்.
“அவாவை உனக்குக் கலியாணத்துக்குக் கேப்பமா?”
தொடர் குண்டுகளாக வீசும் அன்னையைக் கண்டு முறுவலித்து, “என்ன திடீரெண்டு?” என்றான் பதில் கேள்வியாக.
அவன் மறுக்கவில்லை என்பதைக் குறித்துக்கொண்டு, “இனி உன்ர கலியாணம்தானே.” என்றார் அவர்.
“அதுக்கு ஏன் அவள்?”
“ஏன், அவாக்கு என்ன குறை?”
“குறை எண்டு எங்க சொன்னனான்?”
“அஜந்தாவும்தான் உனக்கு ஃபிரெண்ட். அவாவை நீ அவள் இவள் எண்டு கதைக்கிறேல்லையே.”
ஒருகணம் தடுமாறினாலும், “இந்தக் காலத்தில இதெல்லாம் ஒரு விசயமாம்மா.” என்று சமாளித்தான் அவன்.
“அப்ப இப்பவும் எதையும் மனம் விட்டுக் கதைக்க நீ ரெடியா இல்லை என்ன?” என்றார் கோபத்துடன்.
ஒன்றும் சொல்லாமல் ஒரு மாதத்துக்கும் மேலே இங்கே நின்றுவிட்டதில் தன் உடைகளை ட்ராவலிங் பாக்கினுள் அடைய ஆரம்பித்தான் அவன்.
“தம்பி, எல்லா நேரமும் இப்பிடிப் பேசாமயே இருக்கலாம் எண்டு நினைக்காத. பதில் வேணும். நீ என்ன எண்டு சொன்னாத்தான் அப்பாவோட கதைச்சு, அப்பா மூலம் அவான்ர வீட்டில கதைக்கலாம்.” என்று கொஞ்சம் அதட்டிச் சொன்னார் அவர்.
அவனுக்கு மனம் கனிந்துபோயிற்று. அவரை அழைத்து வந்து கட்டிலில் அமரவைத்தான். அவர் காலடியில் தான் அமர்ந்து, “என்ன கோவம் இப்ப உங்களுக்கு?” என்றான் சின்ன புன்னகையோடு.
“என்னத்துக்கு எண்டு உனக்குத் தெரியாது? இத நான் நம்போணும். போடா!” தான் இத்தனை தூரம் கேட்டும் மனம் திறக்கிறான் இல்லையே என்கிற ஆதங்கத்தில் சளித்தார் அவர்.
“இப்பதானேம்மா கவின்ர கலியாணம் முடிஞ்சிருக்கு. கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருங்கோ. உங்கட மகள் குடும்பம் நடத்திற வடிவப் பாத்து ரசிங்கோ. அதுக்குப் பிறகு எனக்குப் பாக்கலாம். சரியா?” என்று அவர் கன்னம் தட்டிச் சொல்லிவிட்டு எழுந்துகொண்டான்.
அவள் மனத்தைத் தான் நோகடித்துவிட்டு அன்னை மூலம் கலியாணத்திற்குக் கேட்க அவனுக்கு விருப்பமில்லை. அது அவள் உணர்வுகளை மதிக்காமல் நடப்பதுபோலாகிவிடும் என்று எண்ணினான்.
இரு வீட்டிலும் மறுப்பிருக்கப் போவதில்லை. அவர்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொண்டது அவர்கள் இருவர் மட்டுமே. அதில் தாமே சீராக்கிக்கொண்டு வீட்டில் சொல்லவே பிரியப்பட்டான்.
கொழும்பு வந்த அடுத்த நாளே அஜந்தாவுக்கு அழைத்து, இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்தவற்றை எல்லாம் முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, மாதவனுக்கு அழைத்தான்.
*****
கற்கண்டு ஐயா இறந்த நேரம், வேலை என்று மற்றவர்கள் புறப்பட்ட பின்னரும் கடைசிவரை அவன் நிண்டது, நரேனோடான யாமினியின் திருமண மறுப்பு, அஜந்தாவின் திருமணத்தின்போது யாரோ ஒருவனைப்போல் காட்டிக்கொண்ட நிரோஜனின் வித்தியாசமான நடவடிக்கை என்று இன்னதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபோதும் யாமினி, நிரோஜன் இருவர் மீதும் ஒரு நெருடல் ஆதவன் மனத்தில் இருந்துகொண்டேதான் இருந்தது.
அதில் அவனாகவேதான் அவர்கள் எல்லோரினதும் கைப்பேசி இலக்கங்களை யாமினியிடம் கேட்டு வாங்கி வைத்திருந்தான்.
யாமினி மொத்தமாக கொழும்பு விட்டுப் புறப்பட்ட நேரம், அவனால் தனியாகவே சமாளித்துக்கொண்டிருக்க முடியும். அவர்களை ஆழம் பார்க்கத்தான் நிரோஜனை அழைத்து உதவி கேட்டான்.
அங்கேயும் அவனறியாத ஏதோ ஒன்று அவர்களுக்குள் இருப்பதாகவே பட்டது. அவனோடு ஒரு வார்த்தை கூடப் பேசாத யாமினி, அவள் பாரா நேரங்களில் மாத்திரம் அவளைக் கவனித்த நிரோஜன் என்று அவன் சந்தேகம் வலுத்துக்கொண்டு போயிற்று.
திருமணத்திற்கு கேட்கிற பொழுதுகளில் முறையான காரணம் சொல்லாமல், கொஞ்ச நாள் போகட்டும், வவுனியாவுக்குப் புதிதாக வந்திருக்கிறேன், அங்கே முதலில் பொருந்திக் கொள்கிறேன், மாதங்கிக்குக் குழந்தை பிறக்கட்டும் என்று அவள் சொன்ன காரணங்களும் அவனுக்கு சரியாகப் படவில்லை.
ஆனாலும் மனைவியின் தாய்மை நிலை, குழந்தை பிறந்தது, துடக்குக் கழிவு என்று அவனாலும் வரன் பார்ப்பதில் முழுக் கவனம் செலுத்த முடியாமல் போயிற்று. எல்லாம் முடிந்த பின், மறுபடியும் அவன் திருமணப் பேச்சை ஆரம்பித்தபோது, ப்ராஜெக்ட் விடயமாக ஜெர்மன் சொல்லப்போகிறேன் என்று சொல்லி, பெரும் குண்டு ஒன்றைப் போட்டிருந்தாள்.

